நெடுந்தொடர் எழுதும் திட்டம் எல்லாம் எனக்கில்லைதான். ஆனால் ஒரு நகரத்திற்குள் செல்ல வேண்டும், அந்த நகரம் எங்கெல்லாம் அழைக்கிறதோ அங்கெல்லாம் செல்ல வேண்டும் என்றே பயணிக்கத் தொடங்கினேன். இந்த நகரம் ஏற்படுத்தி வைத்திருக்கும் நினைவுகளுள் நீந்தத் தொடங்கினேன், அந்த நீச்சல் என்னை மிகத் தாழ்வில் உள்ள வரலாற்றின் அடுக்குகளுக்குள் அழைத்துச் சென்றது, மதுரையின் பாறை ஓவியங்களில் தொடங்கிய இந்தப் பயணம் இன்று சுதந்திரப் போராட்டத்தை எட்டிப்பிடித்திருக்கிறது.
இன்னும்கூட இதே காலகட்டத்திற்குள் மீண்டும் கூர்ந்து பார்க்கிறேன். பீட்டர் பாண்டியன் என்று மக்களால் அழைக்கப்பட்ட ரௌஸ் பீட்டர் (Rous Peter) நகைக்கடை பஜார் நேதாஜி ரோடு சந்திப்பில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தின் அடித்தளத்தில் உறங்கிக்கொண்டிருக்கிறார். மதுரை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பதவிகளை வகித்த கிழக்கிந்திய கம்பெனி அலுவலரான அவர், மேற்குத் தொடர்ச்சி மலைகளிலிருந்து கம்பம் பகுதிக்கு வந்த காட்டு யானைகளை விரட்டியடித்து மக்களை நிம்மதியடையச் செய்ததற்கும், மீனாட்சியம்மன் கோயில் கள்ளழகர் கோயிலுக்குக் கொடைகள் வழங்கியதற்கும் பாராட்டு தெரிவிக்கும் வகையில் பீட்டர் பாண்டியன் அம்மானை என்கிற நாட்டுப்புறப் பாடல் இன்றும் வழங்கிவருகிறது. பீட்டர் பாண்டியன் மீனாட்சி அம்மனுக்கு மாணிக்கக் கற்கள் பதித்த தங்க அங்கவடிகளைக் கொடையாக அளித்தார்.
நேதாஜி ரோட்டில் இருந்து மேல மாசி வீதி வழியாக வடக்கு வெளி வீதிக்கு நடந்து செல்கிறேன். அங்கே ஸ்பென்சர் சூப்பர் மார்க்கெட் நவீனத்தின் பெரிய அடையாளமாக கம்பீரமாக நிற்கிறது. மதுரா கோட்ஸ் மில்லின் அதிகாரிகள், பிரிட்டிஷ் அதிகாரிகள், ரயில்வே ஊழியர்கள்-அதிகாரிகள், அமெரிக்க மிஷனரிகளுக்குக்காகவே ஸ்பென்சரின் கிளை மதுரைக்கு வந்தது.
ஸ்பென்சர் சுருட்டுகளுக்கு என்றே வண்டிப்பெரியாறில் பீர்மேட்டில் புகையிலை விளைவித்தார்கள், ஸ்பென்சர் சுருட்டுகளுக்கு உலகம் முழுவதுமே ரசிகர்கள் இருந்தார்கள். ஸ்பென்சர் சுருட்டை ஒரு முறையேனும் வாழ்நாளில் புகைத்துவிட வேண்டும் என்கிற லட்சியத்துடன் பணம் சேமித்தவர்களை மதுரையில் பார்த்திருக்கிறேன்.
பென்சில்கள், ரப்பர்கள் முதல் பதப்படுத்தப்பட்ட பன்றி இறைச்சி, மாட்டிறைச்சி, பாலாடைக் கட்டி என எல்லாம் ஐரோப்பா, ஆஸ்திரேலியாவில் இருந்து கப்பல் ஏறி சென்னைத் துறைமுகம் வழியே மதுரைக்கு வந்து சேரும். பெர்மிட் வைத்திருக்கும் வெள்ளை அதிகாரிகளுக்கு மட்டுமே அங்கு மது விற்பனை செய்யப்பட்டது.

வடக்கு வெளியிலிருந்து ரயில் நிலையம் வருகிறேன். மங்கம்மா சத்திரம் அருகில் இருக்கும் டி.வி.எஸ் நிறுவனத்தின் பெரும் கல் கட்டடம் என்னை ஈர்க்கிறது. ஒரு தகப்பனார் தன் மகனை ஒரு குமாஸ்தாவாக்கி அழகு பார்க்க வேண்டும் என்று நினைத்தபோது டி.வி. சுந்தரம் ஐயங்கார் வழக்கறிஞர் நார்ட்டனின் கருத்தால் ஈர்க்கப்பட்டு, தொழில் தொடங்குவது என்று முடிவு செய்தார். டி.வி. சுந்தரம் ஐயங்கார் அவர்கள் காதர் நயாஸ் அவர்களுடன் இணைந்து மதுரையில் மொபசல் பேருந்து சேவையைத் தொடங்கினார், இந்தத் தொழில்தான் அவரது வெற்றிக்குப் பெரும் தொடக்கமாக அமைந்தது. இன்று டி.வி.எஸ் இந்தியாவின் நட்சத்திர நிறுவனங்களில் ஒன்றாக மிளிர்கிறது. இரண்டாம் உலகப்போரில் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டபோது, நிலக்கரியால் இயங்கும் பேருந்துகளின் உதவியோடு தடையில்லாப் பேருந்து சேவையை டி.வி.எஸ் மதுரையில் நிகழ்த்திக் காட்டியது.
ரயில் நிலையத்திலிருந்து மதுரா கல்லூரியைக் கடந்து ஆண்டாள்புரம் வருகிறேன். அங்கே மீனாட்சி மில்லின் சங்கொலி என் காதில் விழுகிறது. கருமுத்து தியாகராஜன் செட்டியார் அவர்கள் 1925 ஆம் ஆண்டில் மதுரையில் மீனாட்சி மில் என்ற தொழில் நிறுவனத்தை நிறுவுகிறார். தனித்தமிழ்மீது பற்றுடையவராக இருந்த இவர் சோமசுந்தர பாரதியாரும், பெரியார் ஈ.வெ.ராவும் இந்தி எதிர்ப்பு இயக்கம் நடத்தியபோது அவர்களுக்கு உறுதுணையாக இருந்தார். ஏராளமான கல்லூரிகள், பள்ளிகள் தொடங்கி கல்விப் பணியாற்றினார். ‘தமிழ்நாடு’ என்ற நாளிதழைப் பல ஆண்டுகள் நடத்தினார். தியாகராஜர் குழுமம் நடத்திய பஞ்சாலைகள், பொறியியல் கல்லூரிகள், கலைக்கல்லூரிகள் மதுரையின் அடையாளமாகத் திகழ்கின்றன.
கோச்சடை பக்கம் செல்கிறேன், அங்கே உலகின் புகழ்பெற்ற கட்டடக்கலை நிபுணர் ஜெப்ரீ பாவாவின் கைவண்ணத்தில் கட்டப்பட்ட மதுரா கோட்ஸ் அதிகாரிகளின் விருந்தினர் விடுதியும் கிளப்பும் என் கண்களில் படுகின்றன, மதுரையில் உள்ள ஆக முக்கியக் கட்டடங்களில் ஒன்று. இன்று அது ஹெரிட்டேஜ் ஹோட்டலாகச் செயல்பட்டுவருகிறது.
மஞ்சணக்காரத் தெருவில் இருந்து ஆடிமாசம் மகாலிங்கம் மலைக்குச் செல்ல சாரைசாரையாக மக்கள் லாரி செட்டுகளின் வாசல்களில் காத்திருக்கிறார்கள். ஒவ்வொரு லாரி நிரம்பியதும் அடுத்த லாரிகள் ஆட்களை ஏற்றத் தயாராக நிற்கின்றன. கரகாட்டம், பம்பை, உருமி என மகாலிங்கம் மலையடிவாரமே கதிகலங்கி நிற்கிறது, தாணிப்பாறையில் எங்கு திரும்பினாலும் விருந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
சித்திரைத் திருவிழாவில் 18ஆம் படி கருப்பிற்குக் கிடா வெட்டி விட்டு அழகர் கோவிலிலிருந்து மதுரைக்கு வரும் மாட்டு வண்டிகளில் சீரியல் செட்டு போல் உப்புக்கண்டம் தொங்குகிறது. எதிர்சேவை தோப்பரையில் இருந்து பீய்ச்சியடிக்கப்படும் நீர் வெளி எங்கும் நிரம்புகிறது.
மதுரை பொன்னகரத்திற்குள் நுழைகிறேன் அங்கே புதுமைப்பித்தன் தன் பொன்னகரம் கதையை ஒரு ஜன்னல் அருகில் அமர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறார். பாரதியார் தன் தலைப்பாகையுடன் எதையோ கற்பனை செய்தபடி கிருஷ்ணராயர் தெப்பம் பக்கம் நடந்து செல்கிறார், பா.சிங்காரம் சிலருடன் பேசிக்கொண்டே மேலமாசி வீதிப் பக்கம் தேநீர் அருந்தச் சென்றுகொண்டிருக்கிறார். டவுன் ஹால் ரோட்டில் ஒருவர் நடந்துவருகிறார். வேறு யார், ஜீ.நாகராஜன்தான், அன்றைய அவரது பகிர்வைக் கேட்க அவர் நண்பர்கள் குழுவே காத்திருக்கிறது.
*****
கடந்த முப்பது ஆண்டுகளாக தமிழ் சினிமா தொடர்ந்து மதுரையை ஒரு வன்முறையின் நகரமாகச் சித்திரித்து வருகிறது. மதுரையை அறியாதவர்களுக்கு மதுரை என்றாலே வன்முறை என்கிற ஒரு பிம்பம் தொடர்ந்து ஊட்டப்பட்டு வருகிறது. இங்கே அனைவரும் காலை எழுந்ததும் டீ குடிக்கவே அரிவாளுடன் செல்வார்கள் என்கிற ரீதியில் சென்னை வாசிகள் நம்மிடமே விசாரிக்கும்போது மனதில் பெரும் வலி ஏற்படும். மதுரை என்கிற நகரம் பற்றி எத்தனை பொய்யான பிம்பம் இது, மதுரை என்றாலே அனைவரையும் தனதாக்கிக்கொள்ளும் ஒரு அன்பான ஊர் தானே. மதுரைக்கு ஒரு முறை வந்த அனைவரையும் அது மீண்டும் மீண்டும் அழைக்கும் ஊர்தானே, வசீகரம் செய்யும் ஊர்தானே. வரலாறு நெடுகிலும் உலகத்தவர்களை ஈர்த்த ஊரின் மீது இப்படி ஒரு அபாண்டமான வன்முறை பிம்பத்தைச் சுமத்த நாம் அனுமதிக்கலாமா?

மதுரை என்றாலே வரலாறுதானே, மதுரை என்றாலே பண்பாடு தானே, மதுரை இந்த உலகத்தில் தொடர்ச்சியாக மனிதர்கள் வசித்து வரும் மிக அபூர்வமான நகரங்களில் ஒன்றுதானே. பின் ஏன் மதுரையின் வரலாறு முறையாக ஆவணப்படுத்தப்படவில்லை? அது தமிழர்களுக்கும் உலகத்தவர்களுக்கும் ஏன் கொண்டு சேர்க்கப்படவில்லை?
மதுரை குறித்த நூல்களின் தேடல் இந்தப் புள்ளியில் இருந்துதான் தீவிரப்பட்டது. மதுரை குறித்து இதுவரை வெளிவந்துள்ள 100க்கு மேற்பட்ட நூல்களைத் தேடித் தேடி வாசிக்கத் தொடங்கினேன், ஒவ்வொரு நூலும் ஒரு துறை சார்ந்த நூலாக இருந்தது. தொல்லியல், கல்வெட்டியல், வரலாறு, பிரித்தானிய ஆவணங்கள், பயணக்குறிப்புகள், தலவரலாறு, நாவல், சிறுகதை, சிறுபான்மையினர் வரலாறு எனப் பல தலைப்புகளில் மதுரையின் வரலாறு பொதிந்திருந்தது. இவற்றை வாசிக்க வாசிக்க, மக்களிடம் கள ஆய்வுக்குச் செல்லச் செல்ல வரலாற்றை ஆழமாக உள்வாங்க என்னை அழைத்துச் சென்றது. கடல் உள்வாங்கும்போது அதன் அடித்தளம் நம் கண்களில் படுவது போல, மதுரை என்னைத் தன்னுள் அழைத்துச் சென்றது, அதன் ரகசியங்களை எனக்குக் காட்டியது.

தமிழகத்தில் ஆண், பெண் ஆகிய இருபால் துறவிகட்கும் சமணப் பள்ளிகள் அமைக்கப்பட்டிருந்த செய்திகளைச் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் கூறுகின்றன. பெண் ஆசிரியர்கள் 1200 ஆண்டுகளுக்கு முன்பே மதுரையில் இருந்திருக்கிறார்கள் என்பது எத்தனை நவீனமான செய்தி.
இந்த நகரத்தைப் பற்றிய பிம்பங்கள் இன்னும் என் மனதில் அலைமோதுகிறது. இருப்பினும் சுதந்திரப் போராட்டத்துடன் இந்தத் தொடரை முடிவுக்குக் கொண்டு வருகிறேன். இங்கே நான் எழுதியிருப்பது என் மதுரையை, நான் அறிந்துகொண்ட மதுரையை, நான் தேடியடைந்த என் மதுரையைத்தான்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் வசிக்கும் மக்கள் அவர்களின் மாவட்டத்தின் வரலாற்றை அறிந்துகொள்வது அவசியம்தானே? அந்த அந்த மாவட்டத்தில் பயிலும் மாணவர்கள் அவர்களின் மாவட்டத்தை அறிந்துகொள்வது அவசியம்தானே? மாவட்டங்கள் இல்லாமல் எப்படி ஒரு தேசம் மட்டும் மலர முடியும், மாவட்டங்களின் நிலப்பகுதிகளின் இனங்களின் வரலாறுதானே ஒரு நாட்டின் வரலாறாக உருப்பெறுகிறது. ஒரு நாடு கொண்டாடப்பட வேண்டும் எனில் முதலில் அதன் ஒவ்வொரு இனமும், மொழியும் நிலமும் பண்பாடும்தானே முதலில் அங்கீகரிக்கப்பட வேண்டும், கொண்டாடப்பட வேண்டும்.
நான் எழுதியிருப்பது மதுரையின் வரலாறா என்கிற கேள்வி பல நேரங்களில் மனதில் எழவே செய்தது, இது மதுரையின் வரலாறு மட்டும்தானா? இது தமிழ்நாட்டின் வரலாறும்தானே, இந்த நிலம் மொத்தத்தின் வரலாறுதானே? இந்தச் சமூகத்தில் ஏற்பட்டுள்ள முக்கிய மாற்றங்களின் வரலாறும்தானே? இந்தக் கேள்வியை உங்களிடத்தில் விட்டுவிடுகிறேன்.

இத்தாலி நாட்டைச் சேர்ந்த கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கியை (Constantine Joseph Beschi) வீரமாமுனிவராக மாற்றிய ஊர் அல்லவா இது. பிரான்சில் பிறந்த ஜார்ஜ் கஸ்த் எப்படி மதுரையால் ஈர்க்கப்பட்டாரோ அவ்வாறே என் சமகாலத்திலும் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஹெங்க் தனது பெயரையே ஹெங்க் ஒச்சப்பன் (Henk Oochappan) என்று மாற்றிக்கொண்டு மதுரையே கெதி எனக் கிடக்கிறார், வருடத்தில் ஆறு மாதங்கள் அவர் மதுரையைச் சுற்றி வருகிறார், அவர் அளவிற்கு மதுரையின் வாழ்வியலை ஆவணப்படுத்திவர்களை நான் பார்த்ததில்லை.

உலகத்துக் கலைஞர்கள் பலர் மதுரை நோக்கி வந்து கொண்டேயிருக்கிறார்கள், காலம்தோறும் பயணப்பட்டபடியே இருக்கிறார்கள். நானும் என் 14 ஆவது வயதில்தான் மதுரைக்கு வந்தேன், 21 வயது வரை தமிழ் எழுதப் படிக்கத் தெரியாமல் சுற்றித்திரிந்தேன், ஆனால் இந்த ஊரும் அதன் கல்சந்துகளும், மனிதர்களும் என்னுடன் உரையாடி உரையாடி என்னை ஒரு மதுரக்காரனாக மாற்றிவிட்டார்கள், மதுரையின் ரசவாதத்தை முற்றிலும் உணர்ந்தவன் நான், அதன் சுவையை ருசித்தவன் நான்.

மதுரையின் ஒவ்வொரு கல்லிலும் சரித்திரம் இருக்கிறது, மதுரையின் ஒவ்வொரு திருப்பத்திலும் வரலாறு பொதிந்திருக்கிறது, மதுரையின் முதியவர்கள் ஒவ்வொருவரின் நாவிலும் வரலாற்றின் விதைகள் இருக்கின்றன, மதுரை நகரத்தில் நடக்கும் உரையாடல்களின் வழியே மீண்டும் மீண்டும் வரலாறு தன்னைத்தானே எழுதிக்கொள்கிறது. மதுரை நகரம் கதைகளின் விளைநிலம், மதுரையின் வரலாறு சாசுவதமானது, தொடர்ச்சியானது, முடிவற்றது. நவீன மதுரையின் மாந்தர்களுடன் கதைகளுடன் மீண்டும் சந்திப்போம்.
(முற்றும்)
நன்றி:
கேமராக் கவிதை: ஹெங்க் ஒச்சப்பன், பெல்ஜியம்