Published:Updated:

திருச்சி ஊறும் வரலாறு 20 : ராணி மங்கம்மாளின் கதை

இராணி மங்கம்மாள்

அரசியல் அறிவும், உலகியல் புரிதலும், ஆட்சித்திறனும் கொண்டவராக ராணி மங்கம்மாள் இருந்தார். இது எதற்கும் பெண்ணாக இருப்பது தடையல்ல என்பதை தென்னிந்தியாவில் நிரூபித்த அரசி, ராணி மங்கம்மாள்.

Published:Updated:

திருச்சி ஊறும் வரலாறு 20 : ராணி மங்கம்மாளின் கதை

அரசியல் அறிவும், உலகியல் புரிதலும், ஆட்சித்திறனும் கொண்டவராக ராணி மங்கம்மாள் இருந்தார். இது எதற்கும் பெண்ணாக இருப்பது தடையல்ல என்பதை தென்னிந்தியாவில் நிரூபித்த அரசி, ராணி மங்கம்மாள்.

இராணி மங்கம்மாள்

இன்று அருங்காட்சியகமாக மாறியுள்ள அன்றைய டவுன் ஹால்தான் ராணி மங்கம்மாவின் அரண்மனை மற்றும் “தர்பார் ஹால்”. காவிரி பாலம் தாண்டி ஶ்ரீரங்கம் போகும் வழியில் காவிரிக்கரையில் உள்ள “அம்மா மண்டபம்” இவர் கட்டியதுதான். மலைக்கோட்டையிலிருந்து இலுப்பூர் வழியாக மதுரை செல்லும் சாலையை மங்கம்மா சாலை என்று அழைக்கின்றனர். இந்த சாலையில் உள்ள கீழக்குறிச்சி கிராமத்தில் பயணிகள் வசதிக்காக ராணியால் கட்டப்பட்ட மங்கம்மா சத்திரம் இன்றும் உள்ளது. ஓயாமரி சாலையில் காவிரிக் கரையில் உள்ள ராணி மங்கம்மாள் குளித்த அறையை, படிக்கட்டை அரசு புதுப்பித்து கட்டியுள்ளது. குழுமாயி அம்மன் கோயில் அருகில் உய்யக்கொண்டான் ஆற்றில் கட்டப்பட்டுள்ள ஆறு கண் “நீர் தடுப்பில்” மங்கம்மா காலத்து தெலுங்கு கல்வெட்டு இருந்ததாக பொறியாளர்கள் சொல்கிறார்கள். அதுபோலவே நவல்பட்டுக்கு அருகேயுள்ள சோழமாதேவியில் “மங்கம்மா பாலம்” இன்றும் உள்ளதாம். முசிறி காவேரி ஆறு பரிசல் துறையில் ராணி மங்கம்மாள் கட்டிய வாய்க்கால் பாலம் உள்ளது. அதில் கல்வெட்டுகள் இருப்பதை இன்றும் பார்க்கலாம்.

ராணி மங்கம்மாள்
ராணி மங்கம்மாள்
DIXITH

பழைய மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள எண்கோண வடிவத்திலான கட்டடம் மங்கம்மாள் காலத்து விருந்தினர் அரண்மனையாக கருதப்படுகிறது. வெளிப்புற வாசலில் இருந்து முதல் தளத்தில் உள்ள எண்கோண கட்டிடம் வரை யானை மீதே செல்லக்கூடிய வகையில் தனித்த பாதை அமைந்த கட்டிடமாக இது உள்ளது. மதுரை திருமலை நாயக்கர் மஹால் கட்டுமானமும் இதன் கட்டுமானமும் ஒரே மாதிரி உள்ளன. உய்யக்கொண்டான் கரையில் அமைந்துள்ள இந்த மாளிகையின் தனித்துவம் கருதி அரசு 9.40 கோடியில் பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணிகளை செய்து வருகிறது.

இப்படி அழியாத நினைவுகளால் திருச்சி மக்களோடு கலந்தவர் ராணி மங்கம்மாள். மதுரை நாயக்க மன்னர்களில், ஆட்சிச் சிறப்பால் நிலைத்தவர்கள் திருமலை நாயக்கரும் ராணி மங்கம்மாவும்தான். மதுரை நாயக்க மன்னர்களைப் பற்றி விரிவாக எழுதியுள்ள அ.கி.பரந்தாமனார் சொல்லும் ஒரு விஷயம் கவனிக்கத்தக்கது. “இன்றும் சொக்கநாத நாயக்கர், ராணி மங்கம்மாள், விஜயரங்க சொக்கநாதர், மீனாட்சி அரசி ஆகியவர்கள் திருச்சியிலிருந்து ஆட்சி செய்தவர்கள் என்பது பலருக்கு தெரியாது. பலரும் இவர்கள் மதுரையிலிருந்து ஆண்டதாகவே இன்றும் எண்ணி வருகிறார்கள்.” என்கிறார் அ.கி.ப. இதற்குக் காரணம், மேலே குறிப்பிட்ட 4 மன்னர்களையும் சேர்த்து மொத்தம உள்ள 12 நாயக்க மன்னர்களையும் “மதுரை நாயக்க மன்னர்கள்” என்றே வரலாறு பாடம் நடத்துகிறது. “நாயக்கர்” என்பது முதலில் தலைவன் என்ற பொருளிலும் பிறகு படைத்தலைவன், அரசுப்பிரதிநிதி என்ற பொருளிலும் நிலைத்தது.

ராணி மங்கம்மாள்
ராணி மங்கம்மாள்
DIXITH

வாய்ப்பு கிடைத்தால் பெண்ணும் ஜொலிப்பாள் என்பதன் மன்னர் கால சான்றுதான் ராணி மங்கம்மாள். மங்கம்மாளின் வரலாற்றில் ஒரு செருப்பின் கதை வித்தியாசமானது. மங்கம்மாவின் மகன் ரங்க கிருஷ்ண முத்து வீரப்ப நாயக்கன். அவன் அரச பதவி ஏற்றபோது வயது 15 என்று நம்பப்படுகிறது. தந்தை சொக்கநாத நாயக்கர் 23 ஆண்டுகள் ஆட்சி செய்து 1682 ல் காலமானார். நாடு எதிரிகளால் சூழப்பட்டு இருந்தது. மகன் ரங்க கிருஷ்ண முத்து வீரப்பனை தாய் மங்கம்மாள்தான் ஆளாக்கினாள். பதவி ஏற்ற மூன்றே ஆண்டுகளில் பகைவர்களுக்கிடையே இருந்த மோதலைப் பயன் படுத்தி தந்தை இழந்த பகுதிகளை தாயின் யோசனையை ஏற்று முத்து வீரப்பன் மீட்டான்.

இப்போது சிக்கல் ஒரு செருப்பு வடிவத்தில் வந்தது. முகலாய அரசர் அவுரங்கசீப் தனது பாதுகை எனப்பட்ட செருப்பை யானை மீது வைத்து சிறு படையோடு அனுப்பியிருந்தார். அதை சிம்மாசனத்தில் வைத்து மரியாதை செய்து காணிக்கையும் திறையும் செலுத்தி பணிந்தால் அரசு தப்பிக்கும், இல்லை என்றால் போர்தான். நாட்டின் எல்லைக்கு வந்த முகலாயப்படைக்கு அரசருக்கு உடல் நலமில்லை என்று தகவல் போய் சேர்ந்தது. சில நாட்கள் காத்திருந்த முகலாயப் படை திருச்சி அரண்மனைக்கு நேரே வந்தது. தங்கத் தட்டில் செருப்பு. மூடிய பட்டுத்துணி. பாதுஷாவின் பாதுகை எங்கே காணிக்கை என்றது. மங்கம்மாவின் மகன் முத்து வீரப்பன் உருவிய வாளோடு “ கீழே வை தட்டை. எடு துணியை” என்று கர்ஜித்தான். வாளால் செருப்பை தன் காலடியில் போட்டு வலது காலை நுழைத்து எங்கே மற்றொரு செருப்பு என்றான். “மனிதனுக்கு இரண்டு செருப்புகள் வேண்டும் என்பதுகூட தெரியாத முட்டாளா உங்கள் பாதுஷா? போ எடுத்து வா. நாங்கள் திறை செலுத்துவதாகத்தான் ஒப்பந்தம். ரங்கனின் பாதம் தவிர வேறு பாதங்களை வணங்கிப் பழகாதவர்கள் நாயக்கர்கள்” என்ற மகனை மங்கம்மாள் உப்பரிகையிலிருந்து ரசித்துக்கொண்டிருந்தாள்.

ராணி மங்கம்மாள்
ராணி மங்கம்மாள்
DIXITH

இந்த வீரனின் ஆட்சி ஏழு ஆண்டுகளே நடந்தது. பொதுவாக மன்னர்கள் பல பெண்களை மணப்பார்கள். அந்தப்புரம் சமயத்தில் பாரம் தாங்காமல் “குடை”சாயும். ஆனால் முத்து வீரப்பனை நல்ல மகனாக மங்கம்மாள் வளர்த்திருந்தாள். முத்தம்மாள் என்கிற பேரழகியை அவன் மணந்தான். அரச குலத்தில் இல்லாத புதுமையாக “ஒரு மனைவி” என்ற கற்போடு வாழ்ந்தான். யார் கண் பட்டதோ, அவனுக்கு பெரியம்மை கண்டது. 1689 ல் அவன் காலமானான்.

கணவர் சொக்கநாத நாயக்கரை இழந்து நின்ற மங்கம்மா இப்போது ஒரே மகனையும் இழந்துவிட்டாள். மருமகள் முத்தம்மாள் நிறைமாத கர்ப்பிணி. கணவனில்லாமல் வாழமறுத்து உடன்கட்டை ஏறத் துடித்தாள். நாயக்கர் வம்சம் வாரிசில்லாமல் போகுமே என்ற வேதனையால் மன்றாடித் தடுத்தாள் மங்கம்மா. ஆனாலும், ஓரு ஆண்பிள்ளையை பெற்று, மங்கம்மாள் கைகளில் தந்த முத்தம்மாள், குளிப்பதற்காக வைத்திருந்த பன்னீரை அளவில்லாமல் குடித்து ஜன்னி கண்டு செத்துப்போனாள்.

ராணி மங்கம்மாள்
ராணி மங்கம்மாள்
DIXITH

தாயும் தந்தையுமில்லாத சிசு மங்கம்மா கைகளில். இவன்தான் நாயக்கர் வாரிசு. அவனுக்கு கணவர் பெயரையும் மகன் பெயரையும் இணைத்து “விஜய ரங்க சொக்கநாதன்” என்று பெயர் வைத்தாள் மங்கம்மா. மதுரை நாயக்கர் அரசின் மன்னனாக அந்தக் குழந்தைக்கு முடிசூட்டினார்கள். அவன் அரசுப் பொறுப்பை ஏற்கும் வரை ஆட்சியை மங்கம்மாள் நடத்த வேண்டும் என்றது சபை. மங்கம்மாள் அன்று முதல் “ராணி மங்கம்மாள்” ஆனார். மதுரை நாயக்கர் வரலாற்றில், 1689 ல் ஒரு பெண்ணரசி திருச்சி அரசியானார்.

மாவீர்ர் சிவாஜி மறைந்தார், போட்டியில்லாத முகலாய மன்னர் அவுரங்கசீபின் ஆதிக்கம் தென்னிந்தியாவிலும் புகுந்தது. வலிமையான மைசூர் அரசன் சிக்க தேவராயனும் தஞ்சை மராட்டிய வேந்தனும் முகலாய பேரரசுக்கு திறை செலுத்தி பணிந்தனர். மங்கம்மாள் யோசித்தார். தன் வலி உணர்ந்து, மாற்றான் வலி அறிந்து--திறை செலுத்த சம்மதித்தார். “தென்னைதனைச் சாய்க்கும் புயலிலும் அமைதியாக ஒதுங்கி நிற்கும் புல் வாழும்” என்ற “ஆண்டவன் கட்டளை” அரசிக்கும் தெரியும்.

அருங்காட்சியகம்
அருங்காட்சியகம்
DIXITH

ராணியின் பணிவை மைசூர் சிக்க தேவராயன் தப்பாக கணக்கு போட்டான். குமாரையாவின் தலைமையில் வந்த படை சேலம் கோவையை கைப்பற்றி திருச்சியை முற்றுகையிட்டது. ராணியும் தளவாய் (COMMANDER) நரசப்பையாவும் உடனடியாக போருக்கு போகவில்லை. முற்றுகையை தொடரவிட்டு குமாரையாவை பலகீனப்படுத்தினர். ராணியின் கணக்கு தப்பவில்லை. மைசூர் படை திருச்சி போனதை தெரிந்துகொண்ட மராட்டிய மன்னன் மைசூரைத் தாக்கினான். மைசூர் மன்னன் சிக்க தேவராயர் தன் படையை திருச்சியிலிருந்து திரும்பச்சொல்லி குமாரையாவுக்கு ஆணையிட்டான். திரும்பிய மைசூர் படையை மங்கம்மாள் படை ஓட ஓடத் தாக்கியது. இழந்த கோவை சேலம் எல்லாம் இப்போது மங்கம்மாள் கையில். இந்த யுத்த கணிப்பும் போர்மேக புரிதலும்தான் நா.பார்த்தசாரதி போன்ற சரித்திர நாவல் ஆசிரியர்களை “ராணி மங்கம்மா” என்று புதினம் எழுத வைத்தது.

முகலாயர்களுக்கு பணத்தட்டுப்பாடு வந்தால் தென்னாட்டின் மீது படை எடுப்பது வழக்கமாகி இருந்தது. ஜூல்பிகர்கான் 1697 ல் படையோடு வருவதாகத் தகவல். ராணிக்கு சங்கடம். கொட்டிக் கொடுக்க பொக்கிஷம் பொங்கி வழியவில்லை. எட்டி உதைக்க நாட்டில் வலிமையில்லை. கப்பத்தோடு தளபதிக்கு கடிதம் எழுதினார். “ தஞ்சை மன்னன் என் கணவர் காலத்தில் அநியாயமாக சில பகுதிகளைப் பிடுங்கிக்கொண்டான். நம் நட்பை நம்பி கேட்கிறேன். உங்கள் செல்வாக்கை பயன்படுத்தி அவைகளை திரும்ப தரச்சொல்லுங்கள்.” ஜூல்பிகர்கானுக்கு என்ன அவனையா தரச்சொல்கிறார், தஞ்சை அரசனைத்தானே? சொன்னான். தஞ்சை மன்னனும் வேறு வழியில்லாபல் தந்தான். மங்கம்மா தந்த திறைப் பணத்தைவிட கணவர் சொக்கநாதர் இழந்த மதிப்புமிகு பகுதிகள் மீண்டும் கிடைத்தன. “ராணி மகா ராணி, ராஜியத்தை ஆள வந்த ராணி” என மக்கள் மகிழ்ந்தனர்.

பழைய கலெக்டர் அலுவலகம்
பழைய கலெக்டர் அலுவலகம்
DIXITH

திருவிதாங்கூர் மன்னன் ரவிவர்மன் செய்த துரோகத்தை ராணி மங்கம்மாள் கணக்கு தீர்த்த கதை இது. பெண்தானே இவள் என்ன செய்ய முடியும் என்று கட்ட வேண்டிய திறையை கட்டவில்லை அவன். சூழலும் சரியில்லை. தஞ்சையும் மைசூரும் தலை தூக்கின. கிழவன் சேதுபதி மறவர் பூமியின் சிங்கமாக சிலிர்க்கிறார். ரவிவர்மனிடம் திறை வசூலிக்க படை எடுக்கிறார் மங்கம்மாள். “கோர்க்குலம்” (கொல்லமாக இருக்கலாம் என்று கருதுகிறார்கள்) படைகள் சந்தித்த போர்க்களம். ஆனால் ரவிவர்மன் போர் செய்யவில்லை. பதிலாக நாயக்கர் தளபதியிடம் உதவி கேட்கிறான்.

திருவிதாங்கூரின் அதிகாரம் என்னிடம் இல்லை. நான் பொம்மைதான். “எட்டு வீட்டு பிள்ளைமார்” என்னும் மந்திரிகளே ஆளுகின்றனர். இந்த போரைப் பயன்படுத்தி அவர்களை ஒழித்து விடுகிறேன். உதவுங்கள். ஈடாக இந்த நகரத்தையும் கோட்டையையும் நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள் என்கிறான். ராணியின் தளபதி உதவ, ரவிவர்மன் அதிகார மன்னனானான். ஆனால் எதிர்பார்க்காத சந்தர்ப்பத்தில் அங்கேயே ராணியின் படைகளை நிர்மூலமாக்கினான் ரவிவர்மன். இந்த துரோகம் திருச்சியை எட்டியது. ராணி கொதித்தாள். உயிருக்கு தப்பிவந்த வீர்ர்களை சபையில் கதறவைத்தாள். இந்த நுட்பம் வேலை செய்தது. தளவாய் நரசப்பையா தானே படை கொண்டு செல்வதாக சபதம் செய்தார். 1697 ல் நடந்த போரில் நாயக்கர் படை ஜெயித்தது. ராணியின் அதிகாரம் நிலைத்தது. ரவிவர்மனிடம் கைப்பற்றிய சில பீரங்கிகளை மலைக்கோட்டையிலும் வைத்தார்கள்.

தஞ்சை மன்னன் ஷாஜிக்கு மங்கம்மாள் மீது கடும் கோபம். ஜூல்பிகர்கானின் உதவியால் சண்டையிடாமலேயே தஞ்சைப் பகுதிகளை அவள் எடுத்துக்கொண்டதை அவன் ரசிக்கவில்லை. தளவாய் நரசப்பையா திருவிதாங்கூர் போன சமயத்தில், ராணியிடம் இழந்த பகுதிகளை மீண்டும் தன் வசம் ஆக்கிக் கொண்டான். திருவிதாங்கூரிலிருந்து திரும்பிய தளவாய் ராணியின் உத்தரவை ஏற்று, கொள்ளிடத்தில் வெள்ளம் பெருக்கெடுக்கும் சரியான சந்தர்ப்பத்தில் தஞ்சைப் படையை சிதறடித்தார். அப்போது தஞ்சை மந்திரியாக இருந்த வானோஜி பண்டிதர் 5 லட்சம் வராகனை வியாபாரிகளிடம் இருந்து திரட்டி ராணிக்கு விலை உயர்ந்த பரிசுகளைக் கொடுத்தார். தளவாயின் தந்தைக்கும் பெரும் தொகையை லஞ்சமாகக் கொடுத்தார். மீண்டும் தஞ்சைப் பகுதிகள் திருச்சிக்கு கிடைத்தன. இதைப் போன்ற ஓயாத சண்டைகளால் மக்கள் படும் துன்பத்தை தனியாகப் பேசவேண்டும்.

திருச்சி தஞ்சை வயல்களை தரிசாக்க முடிவு செய்தான் மைசூர் மன்னன் சிக்க தேவராயன். காவிரியின் குறுக்கே அணை கட்டிவிட்டான். பாசனத்துக்கு தண்ணீர் இல்லாமல் மக்கள் தவித்தனர். ராணியின் ஒற்றர்கள் மைசூரில் அணை கட்டப்பட்ட ரகசியத்தை திறந்தனர். ராணி தஞ்சை மன்னன் ஷாஜியிடம் பேசி கூட்டுப் படை மைசூருக்கு புறப்பட்டது. ஆனால் இயற்கை பெய்த பெருமழை வெள்ளத்தால் கட்டியிருந்த அணை காணாமல் போனது. ஆனால் அதே இடத்தில்தான் பிற்காலத்தில் ஒரு அணை கட்டப்பட்டது. அதுதான் இன்றுள்ள “கண்ணம்பாடி அணை”.

பாலம்
பாலம்
DIXITH

உடையார்பாளையம் சிற்றரசன் முகலாயர்களுக்கு அடங்கியவன். அவன் மங்கம்மாவின் பகுதிகள் சிலவற்றை தன்நாட்டோடு சேர்த்துக் கொண்டான். ராணி சண்டைக்கு போகாமல், கர்நாடக நவாபின் தளபதி தாவூத்கானுக்கு, “நான் அவனை தாக்குவது எளிது. ஆனால் உங்கள் மரியாதைக்கு அது கேடு” என்ற தன் ராஜ தந்திரத்தால் உடையார்பாளையத்திடம் இழந்த பகுதிகளை மீட்டாள்.

1702 தொடங்கி 1709 வரை மங்கம்மாவுக்கு சோதனையான காலம். மறவர் மன்னன் கிழவன் சேதுபதி யாருக்கும் பணியாமல் சுயேச்சையாகவே இருந்துவந்தார். மறவர் நாட்டின் பூகோள அமைப்பும், மறவர் குல மக்கள் பெரும்பாலும் உறவினர்களாய் இருந்ததும், நாயக்கர் படையிலும் நிறையப்பேர் மறவர்களாய் இருந்ததும், நாயக்கர்களை வேறு நாட்டவர்களாக மக்கள் கருதியதும் கிழவன் சேதுபதிக்கு வாய்ப்பாக அமைந்தது. கிழவன் சேதுபதியின் கூர்மையான அறிவும் வீரமும் அவரை நாயக்க அரசிடமிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள வைத்தது.

“மறவர்களோடு போர்” என்பது மங்கம்மா செய்த தவறான முடிவு. தொடர்ந்து நடந்த போரால் நாயக்க வீர்ர்கள் சொர்ந்து போயிருந்தனர். நரசப்பையா நேரில் களத்துக்குப் போனார். மறவ வீரனின் ஈட்டி அவரை சாய்த்தது. தலைவனற்ற படை சிதறியது. ராணி மங்கம்மா என்ற சூரியனின் அஸ்தமனம் தொடங்கியது.

அரசியல் அதிகாரப்போட்டியில் மங்கம்மாவின் கை சற்று கீழே இறங்கியிருந்தாலும், பண்பாடு மிகுந்த தனது நடவடிக்கைகளால் அவர் உயர்வாகவே மதிக்கப்பட்டார். தஞ்சையும் மறவர் நாடும் கிறித்தவர்களை அறவே வெறுத்தன. சைவத்துக்கும் வைணவத்துக்கும் எதிராகப் பார்த்தனர். மதம் மாறியவர்கள் மீது வரி போட்டனர். பாதிரியார்களை நாட்டைவிட்டே வெளியேற்றினர். பாதிரிமார்களை நாட்டை விட்டே துரத்தச்சொல்லி தஞ்சை மன்னன் எழுதிய கடிதத்திற்கு, மங்கம்மா எழுதிய கடிதம் நவீன மொழியில் உள்ளது. இக் கடிதத்தை ஆய்வாளர் எஸ்.ராமநாதன் வெளியிட்டுள்ளார். “நாட்டில் ஒரு பகுதியினர் அரிசியை உண்ணும்போது மற்றவர்கள் மாமிசத்தை உண்ணவில்லையா? அதுபோலத்தான் ஒரு பகுதியினர் இந்து மதத்தையும் மற்றொரு பிரிவினர் கிறித்தவ மதத்தையும் சார்ந்திருக்கின்றனர். நாம் அதிகாரத்தைப் பயன்படுத்தி எல்லோரும் அரிசிதான் சாப்பிட வேண்டுமென்பது முட்டாள்த்தனதான காரியமல்லவா? அவரவர்கள் அவர் மதத்தை பிரச்சாரம் செய்து கொள்ளட்டும்.” இதுதான் மங்கம்மாவின் மதம் பற்றிய புரிதல். இதையே நாம் இன்று மதச்சார்பின்மை என்கிறோம்.

மங்கம்மாள் எல்லா மதத்தினரையும் சமமாக மதித்தார். இந்து கோயில்களுக்கு ஏராளமான நிலங்களை தானமாக வழங்கினார். முகமதியர்களுக்கும் வேண்டிய வசதிகளை செய்துகொடுத்தார். கிறிஸ்தவர்களுக்கும் நியாயமாக வாழ வழி செய்தார். பௌசட் பாதிரியாருக்கு ராணி காட்டிய மரியாதையே அதற்கு சான்று. சௌராட்டிரர்கள் இவர் காலத்தில்தான் திருச்சியில் குடியேறினார்கள். பட்டு நெசவில் திறமையான இவர்கள் “பட்டு நூல்காரர்கள்” என்றும் அழைக்கப்பட்டார்கள். 207 ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆண்ட நாயக்கர்கள் ஆட்சி, தமிழை போதுமான அளவு ஆதரிக்கவில்லை என்ற விமர்சனத்தை அறிஞர் அ.கி.ப. முன்வைக்கிறார்.

எல்லோரையும் அரவணைக்கும் ராணி மங்கம்மாவை பேரன் விஜயரங்க சொக்கநாதன் சந்தேகக் கண்ணால் பார்த்தான். 1706 ல் அவன் பட்டம் ஏறும் வயதை அடைந்துவிட்டான். செங்கோல் ஏந்தும் வயது வந்த பின்னும் ஏன் அரியணை தரவில்லை என்று பாட்டி ராணியிடம் கேட்டான். நாயக்கர் பூமி பல போர்களால் சலித்துப்போய் இருந்தது. அதனால் விஜயரங்கன் அரசு வேலைகளில் அதிகம் ஈடுபட்டு அனுபவங்களை பெற்ற பின்னால் முழுமையாக மன்னராகலாம் என்றார் ராணி. இதையே தளவாய் அச்சையாவும் சரியென்றார். அரசிக்கும் அச்சையாவுக்கும் உள்ள பழக்கத்தை ஆத்மார்த்த நட்பை விஷமிகள் தவறாக சித்தரித்து பரப்பிவிட்டனர். கோட்டையில் உள்ள பல ராணுவ அதிகாரிகளும் விஜயரங்கன் பக்கம் நின்றனர். அவன் ஆலயத்தில் முடிசூடிக்கொண்டான். இது என்ன விளையாட்டு? அரசனாக இருப்பது எவ்வளவு சிரம்ம் தெரியுமா? என்ற ராணியிடம், அதனால்தான் அந்த சிரமத்தை எவ்வளவு நாள்தான் நீங்களே படுவது என்று உங்களை விடுவித்துவிட்டேன் என்றான் விஜயரங்கன்.

மறுநாள் காலை மங்கம்மாள் எழுந்தபோது அவள் அறை வெளியே பூட்டப்பட்டிருப்பது தெரிந்தது. அவள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டாள். அவளை யாரும் பார்க்க முடியாது. பயித்தியம் பிடிப்பது போல் இருந்தது. விதவிதமான உணவு வகைகள் கண்ணுக்கு தெரியும்படி வைக்கப்பட்டன. ஆனால் கைகளுக்கு வராது. அதனால் ராணி சாப்பிட முடியாது. அதிகாரம் தன் கண் முன்னால் இருந்தும் அதைத் தொட விடாத பாட்டிக்கு பேரன் தந்த பரிசுதான் இந்த முழு பட்டினி. அதிகாரம் கண்ணை மறைக்கும் என்பார்கள். ஆனால் விஜயரங்கன் விஷயத்தில் அதிகாரம் கண்ணையே பிடுங்கிவிட்டது.

40 நாட்கள் தனிமைச் சிறையில் உணவு இல்லாமல் மெலிந்து கிடந்தார் மங்கம்மாள். 18 வருடங்கள் நாயக்கர் ஆட்சியை நிலைக்கவைத்த பெருமாட்டி உணர்வுகூட இல்லாமல் மயங்கிக் கிடந்தார். முத்தம்மாள் தன் கையில் கொடுத்துவிட்டுப்போன சிசுதான் வளர்ந்து இன்று தன்னை சிறை பிடித்துள்ளதை அந்த பாட்டியின் மனம் நம்ப மறுத்தது. ஆனாலும் ராணி மங்கம்மாள் வாழ்க்கை மிகவும் கோரமான முறையில் முடிந்தது. ராணியின் ஆவி பிரிந்தது. ஆனாலும் இந்த சோக முடிவை சிலர் ஏற்பதில்லை. இதற்கு ஆதாரம் இல்லை. இது ஒரு நம்பிக்கை மட்டுமே என்பது அவர்கள் வாதம். எல்லா விஷயங்களையும் விரிவாக பதிந்துள்ள ஏசு சபை ஊழியர்கள் இது உண்மை என்றால் எழுதியிருக்க மாட்டார்களா என்பது அவர்கள் கேள்வி. எது எப்படியானாலும் மங்கம்மாவின் இறுதி நாட்கள் மகிழ்ச்சியாக இல்லை.

வரலாறு என்பது வெறும் டேட்டா அல்ல. ஆண்டுகளின் அணி வரிசையும் அல்ல. மாறாக அது ஒரு பாடம். நேற்றைய மனிதன் இன்றுள்ளவனுக்கு வாழ்ந்து நடத்திய பாடம். அதுவும் ப்ராக்டிகல் வகுப்பு அது. அளவுக்கு அதிகமான பாசம்தான், அதிகார வயதை எட்டிய பின்னும் விஜயரங்கனை அரசனாக பார்க்கவிடாமல் பேரனாகவே ராணியை உணரவைத்தது. இதுதான் தவறின் ஆரம்பம். அவரவர் வாழ்க்கையை அவர்களேதான் வாழ வேண்டும். “நாம இல்லேன்னா ஒன்னுமே நடக்காது” என்கிற புரிதல் எவ்வளவு பிழையானது என்பதை இப்போது வந்துள்ள சமுத்திரகனியின் “வினோதய சித்தம்” படம் மட்டுமல்ல மங்கம்மாவின் சரித்திரமும் உணரவைக்கிறது.

தான் விரும்பியபோது அதிகாரத்தைத் தராத அப்பாவின் மீது கோபிக்காமல், பொறுமை காத்ததின் நல்ல பலனை அந்த “மகன்” இன்று அனுபவிப்பதை நாடு பார்க்கிறதே. பெரியவர்களின் எல்லா செயலுக்கும் உள் நோக்கம் கற்பிப்பது எவ்வளவு பிழை என்பதை நாமும் உணர வேண்டும். விஜயரங்கன் விரைவில் புரிந்துகொண்டான். நாம் கட்டுரையின் தொடக்கத்தில் சொன்னதுபோல் வேறு எந்த மன்னரையும்விட தன் ஆட்சியின் அடையாளங்களை அதிகமாக திருச்சியில் விட்டுச் சென்றவர் ராணி மங்கம்மாள். 1687 ம் ஆண்டிலும் 1704 ம் ஆண்டிலும் உய்யக்கொண்டான் ஆற்றை செப்பனிட்டதை அவரின் சாசனங்கள் பேசுகின்றன. “மங்கம்மாள் சாலை மலை மேலே சொலை” என்று நாட்டுப்புற பாடல்களின் ராகமாகும் வகையில் ராணி சாலைகள் அமைத்தார். சாலைகளில் மரங்களும் தங்கிச்செல்ல சத்திரங்களும் கட்டிவைத்தார்.

அரசியல் அறிவும், உலகியல் புரிதலும், ஆட்சித்திறனும் கொண்டவராக ராணி மங்கம்மாள் இருந்தார். இது எதற்கும் பெண்ணாக இருப்பது தடையல்ல என்பதை தென்னிந்தியாவில் நிரூபித்த அரசி, ராணி மங்கம்மாள். அரசியல் புயல் மிகுந்த காலத்தில் தன் ஆட்சிக் கப்பலை சரியான திசையில் செலுத்திய மீகாமன் அவர். 1706 ஆம் ஆண்டு தனது 50 அல்லது 55 ம் வயதில் ராணி மங்கம்மாள் காலமானார். ஆனாலும் தன் பணிகளால் வாழ்கிறார்.

(இன்னும் ஊறும்)