சினிமா
ஆன்மிகம்
பேட்டி - கட்டுரைகள்
இலக்கியம்
Published:Updated:

கலை: வட்டத்தாமரை, செடிப்பூ, சொக்கட்டான்... - அரண்மனைகளுக்கே அழகூட்டும் ஆத்தங்குடி டைல்ஸ்!

ஆத்தங்குடி டைல்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆத்தங்குடி டைல்ஸ்

கைகளால் உருவாகும் விதவிதமான பதிப்பு ஓடுகள்!

பாரம்பர்யக் கலைப்பொருள்கள் மற்றும் சமையற்கலை ஆகியவற்றுக்கு மட்டும் பெயர்போன ஊர் அல்ல காரைக்குடி. பாரம்பர்யக் கட்டடக்கலைக்கும் பெயர்போன ஊர் இது. இங்கிருக்கும் வீடுகளில் பலவும் கிட்டத்தட்ட அரண்மனைதான். அந்த அளவுக்கு பிரமாண்டமான வீடுகளைக்கொண்ட ஊர் காரைக்குடி. இந்த பிரமாண்டமான காரைவீடுகளின் தரையை அலங்கரிப்பவை இந்த மண்ணிலேயே உருவாகும் `ஆத்தங்குடி டைல்ஸ்’ வகைகள். வகை வகையான டைல்ஸ், மார்பிள்கள், கிரானைட்டுகள் எனக் காலத்துக்கேற்ப நவீன வகையில் தரைகள் அலங்கரிக்கப்பட்டாலும், அவற்றுக்கு ஈடுகொடுக்கும் வகையில் இன்றளவும் சிறந்து விளங்குகின்றன, கைகளால் உருவாக்கப்படும் ஆத்தங்குடி டைல்ஸ் வகைகள்.

கைகளால் உருவாகும் விதவிதமான பதிப்பு ஓடுகள்!
கைகளால் உருவாகும் விதவிதமான பதிப்பு ஓடுகள்!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடிக்கு அருகில் செட்டிநாட்டு மணம் வீசும் ஒரு கிராமம் ஆத்தங்குடி. இந்த கிராம மக்களின் முக்கியத் தொழில் டைல்ஸ் தயாரிப்பு. குடிசைத் தொழில்போல, கிட்டத்தட்ட 25 இடங்களில் டைல்ஸ் தயாரிக்கும் தொழிலகங்கள் இயங்கிவருகின்றன. இந்த கிராம மக்களின் வாழ்வாதாரமாக விளங்குகிறது, டைல்ஸ் தயாரிப்புத் தொழில்.

`` ‘மல்லிகை மொட்டு’ மாடல் டைல்ஸைத்தான் அதிகளவில் செஞ்சிருக்கேன். ஆனா, எனக்குச் சொக்கட்டான் மாடல்தான் ரொம்பப் பிடிக்கும்.''

கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கு மேலாக இந்தத் தொழிலில் ஈடுபட்டுவரும் நாச்சியப்பனிடம் பேசினோம். “அப்பா ஆரம்பிச்ச தொழில் இது. இப்போ நான் பார்த்துட்டிருக்கேன். எங்க ஊர்ல பல தலைமுறையா இந்தத் தொழிலைச் செய்றவங்களும் இருக்காங்க. சிமென்ட் கண்டுபிடிக்கப்பட்ட காலத்திலிருந்தே எங்க ஊர்ல இந்தத் தொழில் நடக்குது. எந்த இயந்திரமும் இல்லாமல் கைகளாலேயே செய்றதுதான் இந்த டைல்ஸோட சிறப்பு. எங்க ஊரைத் தவிர வேற எங்கேயும் இது கிடைக்காது. இந்த டைல்ஸ் பதிச்ச தரைகள்ல, கோடைக்காலம்னாலும் குளிர்காலம்னாலும் ஒரே வெப்பநிலைதான் நிலவும். இதைப் பதிச்ச தரையில் படுத்தால் கைகால் வலி வராது.

அரண்மனைகளுக்கே அழகூட்டும் ஆத்தங்குடி டைல்ஸ்!
அரண்மனைகளுக்கே அழகூட்டும் ஆத்தங்குடி டைல்ஸ்!

அதனாலதான் நிறையபேர் இதை விரும்பி வாங்கிட்டுப் போறாங்க. காரைக்குடியில் இருக்கும் பெரும்பாலான வீடுகள்ல ஆத்தங்குடி டைல்ஸ்தான் பதிச்சிருப்பாங்க. இதை, ‘கண்ணாடிப்பூ டைல்ஸ்’னும் சொல்வாங்க. ஆய்வுப் படிப்பு படிக்கும் மாணவர்கள், வெளிநாட்டுப் பயணிகள் எல்லாரும் தேடி வந்து ஆத்தங்குடி டைல்ஸை ஆவணப்படுத்தியிருக்காங்க.

முன்னாடி எட்டுக்கு எட்டு அங்குல அளவில்தான் செய்வோம். இப்போ வாடிக்கையாளர்கள் விருப்பப்படுறதால, பத்துக்குப் பத்து அங்குல அளவில் தயாரிக்கிறோம். முன்னாடி சில டிசைன்கள்ல மட்டும்தான் தயாரிப்போம். காலத்துக்கேத்த மாதிரி இப்போ கிட்டத்தட்ட 250 டிசைன்கள்ல தயாரிக்கிறோம். ஆக்ஸைடு பௌடர், சிமென்ட், மணல், வொயிட் சிமென்ட், தண்ணீர் எல்லாத்தையும் கலந்துதான் இந்த டைல்ஸைத் தயாரிக்கிறோம். டைல்ஸோட மொத்த கனம் 18 மில்லி மீட்டர். அதில் 4 மில்லி மீட்டர் அளவுக்கு வண்ணக்கலவை இருக்கும்.

painting designs
painting designs

14 மில்லி மீட்டருக்கு சிமென்ட் கலவை இருக்கும். சதுரக் கண்ணாடிமேல் இரும்பு ஃபிரேம்வெச்சு, அது மேல பித்தளையால் ஆன டிசைன் ஆஸை வைப்போம். ஆஸ் கம்பிகளுக்கு இடையில் தேவையான வண்ணங்களை ஊத்தி, அதுக்குமேல சிமென்ட் கலவையைப் போடுவோம். அப்புறம் தரையில் அடுக்கி ஒரு நாள் காயவைப்போம். அப்புறம் அதை எடுத்து, இரண்டு நாள் தண்ணீரில் ஊறவைப்போம். பிறகு, 15 நாள் காயவைப்போம். அதுக்கப்புறம் விற்பனைக்கு அனுப்பிடுவோம்.

‘வட்டத் தாமரை’, ‘மரச்செடி’, ‘செடிப்பூ’, ‘ரத்தின கமலம்’, ‘சொக்கட்டான்’, ‘ரெட் பிளைன்’ மாதிரியான மாடல்கள் ரொம்ப அழகாக இருக்கும். இதில் சொக்கட்டானையும் ரெட் பிளைனையும்தான் வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்கிட்டுப் போறாங்க. தமிழ்நாட்டைச் சேர்ந்தவங்களைவிட கேரளா, கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்தவங்கதான் அதிகமா வாங்கிட்டுப் போறாங்க.

நாச்சியப்பன்
நாச்சியப்பன்

ஒரு டைல் 35 ரூபாய்னு விற்பனை செய்யறோம். 500 சதுர அடி தரைக்குக்குப் பதிக்க, கிட்டத்தட்ட 750 டைல்ஸ் தேவைப்படும்” என்றார்.

டைல்ஸ் தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டுவரும் சின்னையா, ``எனக்கு இப்போ வயசு 62. பதினஞ்சு வயசிலிருந்து டைல்ஸ் செய்யற வேலைதான் பார்க்கிறேன். இதில் இயந்திரங்களுக்கு வேலை இல்லைங்கிறதால எங்களை மாதிரி தொழிலாளிகளுக்குத் தொடர்ந்து வேலை கிடைக்குது.

கைகளால் உருவாகும் விதவிதமான பதிப்பு ஓடுகள்!
கைகளால் உருவாகும் விதவிதமான பதிப்பு ஓடுகள்!

காலையில் 8 மணியிலிருந்து சாயங்காலம் 4 மணிவரை வேலை செஞ்சா 500 ரூபாய் சம்பளம் கிடைக்கும். என்கூட ஒரு கையாள் இருந்தா தினமும் 170 டைல்ஸ்வரை தயாரிச்சிடுவேன். ‘மல்லிகை மொட்டு’ மாடல் டைல்ஸைத்தான் அதிகளவில் செஞ்சிருக்கேன். ஆனா, எனக்குச் சொக்கட்டான் மாடல்தான் ரொம்பப் பிடிக்கும். கண்ணாடிவெச்சு வேலை செய்யறதால கவனமா வேலை செய்யணும். விரல்ல ரப்பர் மாட்டிக்கிட்டுதான் வேலை செய்வேன். இல்லாட்டி கண்ணாடி கையைக் கிழிச்சுடும். காரைக்குடியில் பிரத்யேகமா இந்த ரப்பரை விற்பனை செய்றாங்க. நான் செஞ்சு கொடுத்த டைல்ஸை வீடுகள்ல பதிச்ச பிறகு பார்க்கிறப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கும்” என்றார்.

செட்டிநாட்டின் கட்டடக்கலைக்கு இன்றும் சாட்சியாக இருப்பது ஆத்தங்குடி டைல்ஸ் என்பதில் சந்தேகமேயில்லை!