மதுரையின் மையப்பகுதியில் இருக்கிறது கரும்பாலை. மருத்துவக்கல்லூரி, மாநகராட்சி அலுவலகம், ஷாப்பிங் மால், அபார்ட்மென்ட்கள் என நான்கு பக்கமும் பல அடுக்குமாடி கட்டடங்கள்... அதன் நடுவே நெருக்கமான குடிசைகளுடன் அடித்தட்டு மக்களால் சூழப்பட்ட பகுதி இது. அந்த நெருக்கடி மிகுந்த தெருக்களின் நடுவே எப்போதும் மாணவர்கள், அவர்களின் கனவுகள் என தாங்கி நிற்கிறது மதுரை SEED அமைப்பு. மாலை நான்கு மணி வாக்கில் ஆறு வயதிலிருந்து மாணவர்கள் ஒவ்வொருவராக SEED அமைப்புக்குள் வருகின்றனர். தன்னார்வலர்கள் ஆளுக்கொரு குழுக்களாகப் பிரிந்து பாடம் நடத்த ஆரம்பிக்கின்றனர். பாட்டுப்போட்டி நடைபெறுகிறது.

”இங்கே வந்து சேருகிற எல்லோருமே முதல் தலைமுறை மாணவர்களாக இருக்கிறார்கள். எல்லாருக்குமே அரசு இலவச கல்வி கொடுக்கிறது. ஆனாலும் அவர்களுக்குத் தொடர்ந்து பயிற்சி கொடுப்பது, ஊக்கப்படுத்துவது போன்றவற்றைச் செய்ய அவர்களது குடும்ப பின்னணி ஒத்துழைப்பது இல்லை. அந்தப் பணியை இந்த தனியார் அமைப்பு தன்னார்வலர்களோடு இணைந்து இருபது வருடங்களாகச் செய்து வருகிறது. ட்ரை சைக்கிள் ஓட்டுகிற, வீட்டு வேலை செய்கிற பெற்றோர்கள் அதிகம் இருக்கின்ற பகுதி இது. கல்லூரிப் படிப்பு முடித்து நகரத்தில் வேலை கிடைக்கும்போது அவன் தன்னை ஒரு சுதந்திரப் பறவையாக உணர்கிறான். வாழ்க்கைத் தரம் உயர ஆரம்பிக்கிறது. தன்னோடு தன் குடும்பத்தையும் சேர்த்து நகரத்தை நோக்கிப் பயணிக்கத் தொடங்குகிறான்.

பொருளாதார ரீதியாகவும், சாதிய ரீதியாகவும் ஒடுக்கப்படும் ஒருவனுக்குக் கல்வி தவிர வேறு எதுவும் சிறந்த ஆயுதமாக இருக்க வாய்ப்பு இல்லை. அதற்குச் சின்ன கருவியாக நாமும் தொடர்ந்து இயங்குகிறோம் என்பதே மிகப்பெரிய மனநிறைவும் மகிழ்ச்சியும் கொடுக்கிறது" புன்னகையும் நம்பிக்கையுமாகப் பேசுகிறார் அமைப்பின் நிறுவனர் கார்த்திக் பாரதி.
ஆரம்பம் எப்படி?
"நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே இதே கரும்பாலை பகுதிதான். பெயரளவில்தான் இங்கே கிறிதுமால் நதி ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் நதி முழுவதும் சாக்கடையாக மாறி பதினைஞ்சு வருஷமாச்சு. நான் அமெரிக்கன் கல்லூரியின் தமிழ்த்துறை மாணவன். என் கல்லூரி நாள்களில், அறிவொளி இயக்கத்துல தன்னார்வலரா இருந்தேன். அதில் கிடைத்த அனுபவங்களைக்கொண்டு என் கல்லூரி நண்பர்களோடு இணைந்து, இதே பகுதியில் வார நாள்களில் பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்க ஆரம்பித்தோம். அதற்கு என் நண்பர்கள் தாஜ் மற்றும் பேராசியர் பிரபாகர் ரொம்ப துணையா இருந்தாங்க.

படிக்க விருப்பமுள்ள குழந்தைகள் யார் வேண்டுமானாலும் SEED-க்குள் வரலாம் என்கிற முன்னெடுப்போடுதான் துவங்கினோம். தெருவிளக்குகள், மருத்துவக்கல்லூரி வளாகங்கள், மொட்டைமாடிகள் என கிடைக்கிற இடங்களில் எல்லாம் மாணவர்களோடு வகுப்பெடுக்க உட்கார்ந்திருவோம். ஒவ்வொடு மாணவனுக்கும் தனிக்கவனம் கொடுத்து பயிற்சி கொடுக்கத் துவங்கினோம். துவங்கப்பட்ட காலத்தில் தன்னார்வலர்களாக இருந்த என் நண்பர்கள் எல்லோரும் அமெரிக்கா, லண்டன் என வெளியேற ஆரம்பித்தனர். SEED மூலம் பயன்பெற்ற மாணவர்களே அடுத்தபடியாக தங்களைத் தன்னார்வலர்களாக அதற்கடுத்த தலைமுறைக்குப் பயிற்சி கொடுக்க ஆரம்பித்தனர். இப்படித்தான் இருபது வருடமாக பயணித்துக் கொண்டிருக்கிறோம்."
மாணவர்கள் எவ்வாறு பயன்பெறுகிறார்கள்?

"இந்த கல்வியாண்டில் 250 மாணவர்கள் வரை SEED அமைப்போடு இணைந்திருக்கிறார்கள். இருபத்தி 5 தன்னார்வலர்கள் இருக்கிறார்கள். ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள்வரை இருக்கிறார்கள். வகுப்புகளுக்கு ஏற்றவாறு மாணவர்களைக் குழுக்களாக பிரித்து கல்வி, விளையாட்டு, கலை என தனித்தனி பயிற்சிகள் அளிக்கின்றோம். அவர்களுக்குள் சேமிப்புத் திறனை வளர்க்கும்பொருட்டு 'தேன்கூடு' எனத் திட்டம் ஆரம்பித்துள்ளோம். 'சஞ்சாயிகா' திட்டம் போலத்தான். அந்தக் கல்வியாண்டில் ஒவ்வொரு வாரமும் தங்களால் எவ்வளவு சேமிக்க முடிகிறதோ அதற்கு கூடுதல் ஊக்கத்தொகையோடு திரும்ப அவர்களுக்கே கொடுத்துவிடுகிறோம். இந்த அமைப்பின்மூலம் பயன்பெற்ற மாணவன் அருண்தான் தற்போது ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார். 'திருமணம் என்னும் நிக்கா' திரைப்பட இயக்குநர் அனீஸ், நாடகக் கலைஞர் சண்முகராஜா ஆகியோர் மாணவர்களுக்காக நாடகங்களை இயக்கி இருக்கின்றனர்.
பொதுத்தேர்வுகளுக்குத் தயாராக்குவது, கணிதம் ஆங்கிலம் என சிறப்புகவனம் செலுத்துவது, வருடந்தோறும் நாடகங்கள் இயற்றுவது, நடனம் இசை என இங்கே தனித்திறமைகளையும் ஊக்கப்படுத்திவருகிறோம்."
எதிர்கால திட்டம் என்ன?
"எதிர்கால திட்டம், கனவுகள்னு பெருசா எதுவும் இல்லை. எல்லோருக்கும் எல்லாம் கிடைச்சு எங்களுக்கான தேவைகள் இல்லைங்கிற நிலைமை வந்தால் அதுதான் உண்மையான சந்தோஷமே!"