
இவ்விருவரின் துடிப்பைக்கண்டு இவர்களோடு உரையாடும் உள்ளூர்க்கிழவனின் வழியேதான் கதை விரிகிறது.
சூர்யாவை வைத்து வெற்றி மாறன் இயக்கப்போகும் படத்தின் தலைப்பு ‘வாடிவாசல்’ என்றும், அது எழுத்தாளர் சி.சு.செல்லப்பாவின் ‘வாடிவாசல்’ நாவலை அடிப்படையாகக் கொண்டது என்றும் ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழாவில் தெரிவித்தார் வெற்றி மாறன். அப்படி என்ன சிறப்பு அந்த வாடிவாசலில்?
“மிருகத்துக்கும் மனுஷனுக்கும் நடக்கிற விவகாரத்துக்கு இரண்டிலொரு முடிவு காணுமிடம் அந்த வாடிவாசல்” - தன் குறுநாவலுக்கான அறிமுகமாக இந்த ஒற்றை வரியைத்தான் முன்வைக்கிறார் சி.சு.செல்லப்பா. ஆறு தசாப்தங்கள் கடந்தும் திட்டிவாசலின் வழியே திமிறும் காளைகளையும் அதன் கொம்புப்பிடிக்காக அலையும் மனித கரங்களையும் நம் கண்முன் இன்றும் புதிதாய் நிறுத்தும் ‘வாடிவாசல்.’

சுற்றுவட்டாரத்திலிருக்கும் அத்தனை சீமைகளிலும் பெயர்போனது செல்லாயி சல்லிக்கட்டு. கொம்பிலிருந்து உருவியெடுப்பது சல்லிக்காசு என்றாலும் அதை செல்லாயி சல்லிக்கட்டிலிருந்து எடுத்தால் ஆயிரம் பவுனுக்கு சமானம். இதனாலேயே இந்தச் சல்லிக்கட்டுக்கு மாடுபிடி வீரர்கள் படையெடுப்பார்கள். வாடிவாசலின் அணைமரத்தை மொய்க்கும் அவர்களிடையேதான் உசிலனூரின் பிச்சியும் அவன் மச்சான் மருதனும்கூட இருந்தார்கள், ஆனால் வேறு நோக்கத்தோடு!
இவ்விருவரின் துடிப்பைக்கண்டு இவர்களோடு உரையாடும் உள்ளூர்க்கிழவனின் வழியேதான் கதை விரிகிறது. இங்கே விரிவது மானத்தின், மாடுகளின், அதிகாரத்தின் கதை!
வாடிவாசல் தாண்டிப் பாயும் அத்தனை காளைகளும் பிச்சி - மருதன் இணையின் இலக்கல்ல. குறிப்பிட்ட ஒரு காளைக்காகக் காத்திருக்கிறார்கள். பெரியப்பட்டி ஜமீனுக்குச் சொந்தமான காரி! தினவு தேக்கிய திமிலோடு நடைபோடும் காளை அரசன் காரி! உள்தொழுவத்தில் அதன் நுனிவால் தெரிந்தாலே வாடிவாசல் வெறிச்சோடிவிடும். சுற்றிலும் நிற்கும் மேடைக்கால்களோடு ஒண்டியபடி உயிரைக் காப்பாற்றிக்கொள்வார்கள் மாடு அணைபவர்கள். அடக்க ஆளின்றி காற்றில் கொம்பலைத்து ஒரு சுற்று சுற்றித் திமிராய் நடைபோட்டு வெளியேறும் மருதநில வேங்கை. உசிலனூர்க்காரர்கள் அடக்காத காளைகளே கிடையாது என்பதுதான் பேச்சு. அதை மீண்டுமொருமுறை உறுதி செய்ய அவ்வூரின் தேர்ந்த வீரரான அம்புலி, காரியை அணைய முயல்கிறார். முட்டித்தூக்கி எறிகிறது காரி. படுத்த படுக்கையாகி கடைசியாக உயிரைவிடுகிறார் அம்புலி.

சாவதற்கு முன், ‘நீயாவது அந்தக் காரி கழுதைய அணைஞ்சிருப்பா’ என மகனிடம் அவர் சொல்ல, அதுதான் மூன்றாண்டுகளுக்குப் பின் பிச்சியை செல்லாயிப் பொட்டலில் கொண்டுவந்து நிறுத்துகிறது. பயிற்சிக்காக ஒன்றிரண்டு பெயர்பெற்ற மாடுகளை அணைந்துவிட்டு காரிக்காகக் காத்திருக்கிறான் பிச்சி.
ஒரு கதாநாயகனுக்கான அறிமுகக்காட்சி இலக்கணப்படி வாடிவாசலுக்கு வருகிறது காரி. முதலில் அதன் மணிச்சத்தம், பின் மூச்சிரைப்பு, கூர்மையான கொம்பின் நுனி, தலை, திமில் எனத் திடலுக்குள் மெல்ல அடியெடுத்து வைக்கும்போதே சிலிர்ப்பைக் கடத்துகிறது. அதன் கொம்பில் தகப்பனின் குடலின் ஒரு பகுதியைக் காணும் பிச்சிக்கும் காரிக்கும் இடையே அதன்பின் நிகழ்வது நூற்றாண்டுகளாய் நிகழும் மோதல். நமக்குள் எங்கோ ஒளிந்திருக்கும் வேட்டைக்குணத்தின் கரிய நிழல். அதைக் குருதி கொப்பளிக்க, நமக்குப் பரபரப்பு தொற்றிக்கொள்ள தத்ரூபமாய் விவரிக்கிறார் சி.சு.செல்லப்பா. ‘வாடிவாசல்’ ஊன்றி நிற்பது இங்குதான்.
இறுதியாக அப்பனின் ஆசையைப் பிச்சி நிறைவேற்ற, புழுதியிலிருந்து உருவாகிறான் ஒரு நாயகன். ஊரே கொண்டாடுகிறது அவனை.
தூசிதுகள் பறக்கும் இக்கதை முழுக்க இழையோடுகிறது அதிகாரத்தின் சரடு பற்றிய விசாரணை. சாதிப்பெருமை பேசிக்களிக்கும் கிழவனே சுயசாதியைப் பகடியும் செய்கிறான். ‘மீசை மொளச்சவனெல்லாம் காரிய அவுத்து விட்டவுடனே பம்மிருவானுக எலியைப்போலே’ எனக் கிழவன் சொல்வதை மீசை என்பது வெறும் மயிர் எனவும் கொள்ளலாம், மனிதனின் ‘நான்தான் மேலே’ என்ற அகங்காரத்தை அவ்வப்போது உடைத்தெறியும் இயற்கையின் கைங்கரியம் எனவும் கொள்ளலாம்.
ஒரு காட்சியில், ‘மேடையில ஜமீனு, சப் கலெக்டர், சூபரிண்டு உக்காருவாங்க. வேற எந்த வெளிநாயும் மேடையை நக்கிக்கூடப் பாக்கமுடியாது’ என்கிறான் கிழவன். ‘நீ யாராக இருந்தாலும் அதிகார வர்க்கம் உன்னை ஏவலாகத்தான் பார்க்கும்’ என்பதே இதன் பொருள்!

ஊரே அஞ்சிநடுங்கும் காரியைத் திடலுக்கு அழைத்துவருவது ஒரு சிறுவன். அன்பின் பிடியிலிருந்து வாடிவாசல் வழியே அதிகாரத்தின் கரங்கள் தாண்டிப்பாய நினைக்கும் காரியும் ஒரு குறியீடுதான். மாட்டின்மேலே அதிகாரம் செலுத்தி வென்ற பிச்சியைத் தலைமேல் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறது கூட்டம். அவன் இப்போது மேடைக்கு நிகரான உயரத்திலிருக்க, சட்டெனக் கூசிப்போய்க் கீழிறங்கி, ஜமீனைப் பார்த்து, ‘மவராசா’ எனக் கும்பிடுபோட்டபடி திரும்பாமலே பின்னால் நடக்கிறான். இங்கே அதிகாரத்தின் அளவுகோல் வீரமல்ல!
இப்படித் தொழுவத்தில் நுழையும் காளையாகத் தொடங்கும் கதை வாடிவாசலைத் தாண்டி வெளியேறும் போது விரிவடைந்து பல தளங்களில் பயணிக்கிறது. அதன் கடைசி அத்தியாயம் காரி.
இறுதிக்காட்சியில் தன் வீட்டுப் பெருமையைக் குலைத்த காரிக்கு ஊர் பார்க்க கொடூர முடிவுரை எழுதிவிட்டுக் கிளம்புகிறார் ஜமீன். அப்போது கூட்டத்திலிருந்து ஒரு குரல், ‘என்ன இருந்தாலும் அது மிருகம்தானே!’ என ஒலிக்கிறது. அது காரியைக் குறித்ததல்ல என்பதை உணரும் நொடியில்தான் நாம் மனிதர்களாகிறோம்.