
அம்மாவுக்கும் அப்பாவுக்கும் 47 ஆண்டுக் காலத் திருமண வாழ்க்கை. ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காத காதலும் அன்பும் நிறைந்த வாழ்க்கை.
சிலமணி நேரப்பயணத்தில் உடன் பயணிக்கிற சிநேகமான முகங்கள் அவரவர் நிறுத்தத்தில் இறங்கிப் போகும்போது அசைக்கும் கைகளில் பிரிவின் ஒருதுளித் துயரம் கலந்திருக்கும். அதுவே, காலமெல்லாம் நம்மோடு வாழ்ந்தவர்கள் நிரந்தரமாக மறைந்து போகிறபோது உண்டாகும் வலி வார்த்தைகளுக்குள் அடங்காதது.

71 வயதான கமலவேணி பிரபாகரன் அப்படி ஒரு வலியில் தவிப்பதைக் கண்டு பொறுக்காத அவர் மகள் சுஜாதா, உடனடியாகத் தன் தாயை மீட்டெடுக்க வேண்டும் என்று விரும்பினார். அதற்கு அவர் தேர்ந்தெடுத்த வழி நெகிழ்வூட்டுகிறது.

“அம்மாவுக்கும் அப்பாவுக்கும் 47 ஆண்டுக் காலத் திருமண வாழ்க்கை. ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காத காதலும் அன்பும் நிறைந்த வாழ்க்கை. இருவருமே மத்திய அரசுப் பணியில் வேலைபார்த்து ஓய்வு பெற்றவர்கள். கடந்த ஏப்ரல் மாதம் மாரடைப்பு ஏற்பட்டு அப்பா பிரபாகரன் இறந்து விட்டார். திடீரென்று நிகழ்ந்து விட்ட அந்த மரணத்தை அம்மாவால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. மெள்ள மெள்ள துயரத்தில் மூழ்கும் அம்மாவை மீட்டெடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தபோது எங்களுக்குத் தோன்றியது இரண்டு விஷயங்கள். ஒன்று, அம்மாவை மீண்டும் வாசிக்க வைப்பது... இரண்டாவது, அவர் எழுதி வைத்திருக்கும் நாவலை நூல்வடிவமாக்குவது.

எங்களின் தாய்மொழி மலையாளம். ஆனால் அம்மாவின் பேச்சில் ஒருதுளி மலையாள வாடைகூட அடிக்காது. அந்த அளவுக்குத் தமிழ் அவர்களிடம் புழங்கும். தமிழ் வாசிக்கக் கற்றுக்கொண்ட காலத்திலேயே அம்மா ஆனந்த விகடனை வாசிக்கத் தொடங்கிவிட்டார். தமிழில் எழுதும் அளவுக்கு அம்மாவுக்குப் புலமையும் ஆர்வமும் அதிகரித்ததன் காரணம், ஆனந்தவிகடன்தான்.

அம்மா போனவருடம் ஒரு நாவல் எழுதினார். அதை வெளியிட அப்பா நிறைய முயற்சிகளை மேற்கொண்டார். அது நிறைவேறாமலேயே போனது. அப்பாவின் மரணம் அம்மாவை மிகவும் வாட்டியது. அதிலிருந்து மீட்க, அவர் எழுதிய நாவலை நூல் வடிவமாக்கி அவர் கையில் தர முடிவு செய்தோம். அந்த ஆசையை நிறைவேற்றினோம். ‘வாழ்க்கை ஒரு பூமராங்’ என்னும் நாவல், நோசன் பிரஸ் வெளியீடாக தற்போது வெளியாகியுள்ளது. அம்மா கொஞ்சம் தெம்பாகியிருக் கிறார். இந்த நூலை அம்மா, அப்பாவுக்குத்தான் சமர்ப்பணம் செய்திருக்கிறார். இப்போது, ஆனந்த விகடனை மீண்டும் அவர் கைகளில் கொடுத்திருக்கிறோம். வாசிப்பும் எழுத்தும் ஒருவரை மீட்டெடுக்கும் என்பதற்கு அம்மாதான் உதாரணம்” என்று கண்களின் ஓரம் நீர் துளிக்கப் பேசுகிறார் சுஜாதா.