கட்டுரைகள்
Published:Updated:

இயங்கிக்கொண்டிருப்பதுதான் கலை!

பிரளயன்
பிரீமியம் ஸ்டோரி
News
பிரளயன்

சென்னைக் கலைக் குழு

பிரளயன் தமிழின் குறிப்பிடத்தக்க நாடக ஆளுமை. அடர்த்தியான கதைக்களமும், நுட்பான கலையம்சமும் நிறைந்தவை இவருடைய நாடகங்கள். சென்னைக் கலைக் குழு என்ற நவீன நாடக மையத்தைத் தொடங்கி 70க்கும் மேற்பட்ட நாடகங்களை நிகழ்த்தியுள்ளார்.

கல்லூரிகள், நாடகக் கருத்தரங்கங்கள் எனப் பல தளங்களில் நவீன நாடகங்கள் குறித்துத் தொடர்ச்சியாக உரையாடிவருகிறார். மக்கள் போராட்டங்களில் இவருடைய நாடகங்கள் பலவும் மேடையேற்றப்பட்டுள்ளன. 35 ஆண்டுகளுக்கும் மேலாக நாடகத்துறையில் இயங்கிவருபவருடன் பேசினோம்.

“நாடகத்துறையில் இயங்கவேண்டும் என்ற எண்ணம் எப்போது வந்தது?”

“நாடகத்துறைக்கு வரவேண்டும் என்ற எந்தவொரு முன்திட்டமிடலும் எனக்கு இருந்ததில்லை. கல்லூரி நாள்களில் கவிதைகள் எழுதி, மேடைகளில் வாசிப்பேன். கல்லூரி நிகழ்ச்சிகளில் நாடகங்கள் இயக்கி அரங்கேற்றுவோம். அதை நான் முன்னின்று நடத்தியிருக்கிறேன். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய தஞ்சை நாடக விழாவில் நான் இயக்கிய நாடகத்துக்கு பெரிய அளவில் பாராட்டும் அங்கீகாரமும் கிடைத்தன. கர்நாடகாவைச் சேர்ந்த நாடக ஆளுமை பிரசண்ணா எங்கள் நாடகத்தை வியந்து பாராட்டினார். அதன்பிறகு தொடர்ந்து நாடகங்கள் இயக்க ஆரம்பித்தோம். நாடகத்துறைக்கான தொடக்கம் நிகழ்ந்தது.”

பிரளயன்
பிரளயன்

“ ‘சென்னைக் கலைக் குழு’வை எப்போது தொடங்கினீர்கள்?’’

“பட்டப்படிப்பாகக் கணிதம் படித்தபிறகு சென்னைக்கு கம்ப்யூட்டர் புரொகிராம் படிப்பதற்காக வந்தேன். ‘Third generation computer’ மட்டுமே இருந்த காலகட்டம் அது. படித்துக்கொண்டே ‘Trainee Progammer’ ஆக வேலை செய்துகொண்டிருந்தேன். அப்போது மயிலாப்பூரில் நான் தங்கியிருந்த மேன்சனில் நிறைய இடதுசாரி தோழர்கள் தங்கியிருந்தார்கள். அவர்கள் நல்ல வேலையில் இருப்பார்கள். ஆனால் மக்களுக்கான, உழைப்பாளர்களுக்கான போராட்டம் என்றால் வேலையைப் பற்றி யோசிக்காமல் களமிறங்கிவிடுவார்கள். அந்தச் சமயத்தில் ஒரு கார்மென்ட்ஸுக்கு எதிரான போராட்டத்தின்போது நான் நாடகம் நிகழ்த்த முயன்று முடியாமல்போனது. பின், 1984-ல் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் மாநில நாடக விழாவை ஏற்பாடு செய்திருந்தது. கோமல் சாமிநாதன் விழாப் பொறுப்பாளராக இருந்தார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சென்னைக் கிளை சார்பில் என்னை ஒரு நாடகம் இயக்கச் சொன்னார்கள். நண்பர்கள், ஆர்வமுடையவர்கள் இணைய ‘சென்னைக் கலைக் குழு’ உருவானது. முதல் நாடகமாக அன்றைய காலகட்டத்தில் காவல்துறையின் கஸ்டடியில் நடக்கும் அடக்குமுறையை மையப்படுத்தி நான் எழுதி இயக்கிய ‘நாங்கள் வருகிறோம்’ என்ற நாடகத்தை மேடையேற்றினோம். மக்களின் ஆதரவு, பாராட்டுகளால் தொடர்ந்து இயங்க ஆரம்பித்தோம்.”

“வீதி நாடகங்கள், மேடை நாடகங்கள் என இயங்கியிருக்கிறீர்கள். நாடகங்களுக்கு மக்களிடம் என்ன மாதிரியான வரவேற்பு இருந்தது?’’

“மேடை நாடகங்கள் சிலவற்றை இயக்கியபின் வீதி நாடகங்கள் நிகழ்த்தியிருக்கிறோம். பிரெக்ட் சொல்வதுபோல, ‘Show the Showing’ காண்பித்தலைக் காண்பித்தல் என்பதுதான் நாடக உத்தி. 1987ஆம் ஆண்டை யுனெஸ்கோ ‘சர்வதேச இளைஞர்கள் ஆண்டாக’ அறிவித்தது. அது வேலையில்லாத் திண்டாட்டம் கடுமையாக இருந்த காலகட்டம். சென்னை எழும்பூரில் காவல்துறைக்கான ஆள் எடுப்பின்போது கூட்டநெரிசலில் ஒரு இளைஞன் இறந்துபோனார். அதை மையப்படுத்தி ‘முற்றுப்புள்ளி’என்ற வீதி நாடகத்தை அரங்கேற்றினோம். வீதி நாடகம் என்றால் 20 நிமிடங்கள் எனக் குறுகிய அளவில் இருக்கும். நாங்கள் அந்த இளைஞனின் இருத்தல் சார்ந்த பிரச்னையை, அவன் வாழ்வியலோடு இணைத்துப் பதிவுசெய்தோம். பிரச்னையின் சாரத்தை உணரவைத்து அதற்கான தீர்வை மக்களிடமே முன்வைத்தோம். நாடகங்கள்மீது மக்களுக்கிருந்த வரவேற்புதான் ஒவ்வொரு நாடகத்தையும் பலமுறை அரங்கேற்ற வைக்கிறது. பல நாடகங்களின்போது, மக்கள் தன்னிலை ஆவேசம் பொங்கி எதிர்மறை கதாபாத்திரங்களைத் திட்டியிருக்கிறார்கள். பல நாடகக் கலைஞர்களும் இந்தச் சூழலைப் புரிந்துகொண்டுதான் இயங்குகிறார்கள். மஹாராஷ்டிரா போன்ற வட மாநிலங்களைப் போல முழுநேர நாடகக்கலைஞர்கள் இங்கு இல்லை. அதற்கான சூழலும் இங்கில்லை. ஆனால், நாடகம் எப்போதும் அதற்கான மக்கள் தரப்பினரைக் கொண்டுள்ளது. அதனால்தான் ஒரு நாடகத்தைப் பல இடங்களில் பல முறை எங்களால் நிகழ்த்த முடிகிறது.”

“80கள், 90கள் தாண்டி தற்போதுவரை இந்தத்துறையில் இயங்கிவருகிறீர்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும் நாடகத்திற்கான கதைக்களம், பேசுபொருள் என்ன மாதிரி இருந்திருக்கின்றன?’’

“சமீபத்தில் சென்னையின் ஷாகீன்பாக்கான வண்ணாரப்பேட்டை சி.ஏ.ஏ போராட்டக்களத்தில் ‘இடம்’ என்ற நாடகத்தை நிகழ்த்தினோம். 500க்கும் மேற்பட்ட அந்த மக்கள் அந்த நாடகத்தின் நுட்பத்தை உணர்ந்து அது குறித்து எங்களிடம் தொடர்ச்சியாக உரையாடினர். ஆனால், அந்த நாடகம் 2004-ல் எழுதித் தயார்செய்தது. மக்களோடு ஒன்றியிருக்கையில் அவர்களின் பாடுகளை, தேவைகளை, கொண்டாட்டத்தை உணரமுடியும். அது கலையின் பேசுபொருளாகிறது. எதை நாடகமாக்குகிறோம் என்பதைச் சூழல்தான் தீர்மானிக்கிறது. பல தசாப்தங்களுக்குமுன் மன்டோ எழுதிய சிறுகதை 2017-ன் சூழலுக்குப் பொருந்தியது. ஜம்மு - காஷ்மீரில் இராணுவ வாகனத்தின் முன்பகுதியில் தடுப்புபோல் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இளைஞனைக் கட்டிச்சென்றனர். மன்டோவின் சிறுகதையைக் கொண்டு இந்தச் சம்பவத்துக்கு எதிராய் நாடகமாக்கினோம். சமீபத்தில் ஜம்மு காஷ்மீர்ப் பிரிவினையின்போது, இந்த நாடகத்தின் முக்கியத்துவம் அதிகமானது. புதிய கேள்விகள், ஆழமான உண்மைகள் எப்போதும் நவீனமாகவும், மக்களுக்கானதாகவும்தான் இருக்கும்.”

நாடகம்
நாடகம்

“டிவிட்டர், பேஸ்புக், யூடியூப் என சமூக வலைதளங்கள், ஆன்லைன் சினிமாக்கள் என மக்களின் உள்ளங்கைக்குள் ஊடக வெளி சுருங்கிவிட்டது. இவற்றுக்கு மத்தியில் நாடகத்தின் தேவை என்னவாக இருக்கிறது?”

“உண்மைதான் தனிமனிதன் சமூகத்துடன் தனது கருத்தைச் சிறிய மீம் வழியாக உரையாடுகிற காலம் இது. வல்லுநர்கள் எடுக்கும் ஒளிப்படங்களைவிட, அனுபவமற்றவர்கள் எடுக்கும் படங்கள் டிரெண்டாகிவிடுகின்றன. அவை சிறப்பானதாகவும் இருக்கின்றன. டி.வி, யூடியூப் என அனைத்திலும் நிறைய சேனல்கள் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் தனக்கென ஒரு மக்கள் குழுவைக் கொண்டுள்ளது. மில்லியன் பேர் பார்த்த வீடியோவைப் பார்க்காதவர்களும் இருக்கிறார்கள். இவை அனைத்தும் நம் கைகளுக்குத் தேடிவந்தவை. ஆனால், நாடகம் நடக்கும் நேரத்தில், அந்த இடத்திற்கு நாம்தான் செல்லவேண்டும். நேரில் சென்று பார்த்தால் மட்டுமே அந்தக் கலையின் சாரத்தை உணரமுடியும் என்கிற தனித்துவம் நாடகத்துக்கு உண்டு. அந்தத் தனித்துவம்தான் நாடகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. அதுதான் அதன் இருப்பை, தேவையைத் தக்கவைத்துள்ளது. புதிய இளைஞர்களை நாடகத்துறைக்கு வரவழைக்கிறது.”

“கொரோனாத் தனிமையை எப்படிக் கழிக்கிறீர்கள். அடுத்ததாக இயக்கவுள்ள நாடகம் எது?’’

“கூட்டங்கள், நாடக ஒத்திகை எனத் தொடர்ந்து இயங்குபவன் நான். எவ்வளவு வாசித்தாலும் வீட்டிற்குள் இருப்பது சிரமமான ஒன்றுதான். ஆனால், இந்தச் சூழல் கடக்கவேண்டிய ஒன்றுதான். அம்பேத்கர் எழுதிய ‘புத்தமும் அவரது தம்மமும்’ நூலை மையமாகக் கொண்டு நாடகத்தைத் தயாரித்துள்ளோம். இந்த மண்ணில் முதன்முதலாகச் சில கேள்விகளை முன்வைத்தவர் புத்தர்தான். அவர் எழுப்பிய கேள்விகள் பலவற்றுக்கான தொடக்கம். ‘முன்னவர்’ என்ற அந்த நாடகத்தை நீலம் அமைப்பின் ‘வானம்’ கலைத் திருவிழாவில் நிகழ்த்தினோம். அதை இன்னும் சற்று அடர்த்தியாக எழுதிக்கொண்டிருக்கிறேன். கொரோனா முடிந்ததும் அதை நிகழ்த்தவுள்ளோம்.”