சினிமா
Published:Updated:

தொலைவு - சிறுகதை

தொலைவு - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
தொலைவு - சிறுகதை

10.12.2020 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் வெளியான சிறுகதை...

அந்த முதல் நாள் அப்படி அறிமுகமாகும் என்று சாருமதி கொஞ்சமும் நினைக்கவில்லை. பணியிட மாறுதலுக்கு ஆளாகி வந்த அலுவலகத்தில் பிற்பகல் பொழுதில் கோப்புகளைப் பார்த்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராத செய்தி ஒன்று வந்து சேர்ந்தது. நேர்முக உதவியாளர் பதற்றத்துடன் ஓடி வந்து சொன்னார்.

“மேடம், பொன்வயல்பட்டியில ரெண்டு எலிமெண்டரி ஸ்கூல் பிள்ளைங்க பாம்பு கடிச்சி எறந்துட்டாங்களாம்.”

“அந்த ஊர்எங்கஇருக்கு?”

“இங்கிருந்து இருபது கிலோமீட்டர் மேடம்.”

“உடனே கெளம்பலாம்.”

பதற்றமாக இருந்தது. தன்னை உறுதியாக வைத்துக்கொள்வதற்கு சாருமதி முயன்றாள். அவளைத் தொலைபேசியில் அழைத்த மாவட்ட ஆட்சியர், சம்பவ இடத்துக்கு உடனே போகும்படி சொன்னார்.

தொலைவு - சிறுகதை
தொலைவு - சிறுகதை

காடும் வயல்களுமாக நெடுந்தூரம் போவதுபோல் தோன்றியது. ஜீப்பில் போய்க்கொண்டிருக்கையில் பலவகையான எண்ணங்கள் அலைமோதின. நேற்றைய பகல்பொழுதில்தான் அவளும் அவளுடைய அம்மாவும் அந்த நகரத்துக்கு வந்து சேர்ந்தார்கள். இரண்டு படுக்கை அறை களையுடைய பி டைப் அரசாங்கக் குடியிருப்பு அவளுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. வீட்டுக்கு முன்னால் சிறிய தோட்டம். பலவகையான செடிகளை வைத்துப் பராமரித்திருந்தார்கள். வீட்டின் முன்னாலும் பின்னாலுமாக மூன்று மாமரங்கள் தாட்டிமமாய் வளர்ந்து கிளை பரப்பியிருந்தன. சுற்றுச்சுவரைத் தாண்டி ஓடும் பெரிய கழிவு நீர்க்கால்வாயை மட்டும் அவளுக்குப் பிடிக்கவில்லை. இரவில் சாருமதிக்கு உறக்கம் வரவில்லை. அந்த அறையில் மங்கலான வெளிச்சம் நிரம்பியிருந்தது. புதிதாக வெள்ளையடித்த நெடி. கட்டிலுக்கு மேல் ஓய்வுபெறும் தளர்ச்சியுடன் சுழலும் மின்விசிறி. இப்படி உறக்கம் வராமல் புரளுகிறவளல்ல அவள். படுக்கையில் விழுந்த சிறிது நேரத்துக்கெல்லாம் அநேகமாய் உறங்கிவிடுவதாக உதயன் அவளிடம் சொல்வதுண்டு. “உம்மனசுக்கு என்ன கமாண்ட் குடுத்து வச்சிருக்க சொல்லு சாருமதி. நானும் ட்ரை பண்ணுவேனில்ல!”உதயன் மட்டுமல்ல. அவள் அம்மாவும் சொல்வார். சில நாள்களில் அவள் கொஞ்சம் அதிகமாகத் தூங்கும்போது இதையே திட்டுவதற்கும் அவர் பயன்படுத்துவதுண்டு.

ஊரில் தெருவிலிருக்கும் பெண்களோடு அம்மா பேசிக்கொள்வதைப் பார்க்க வேண்டும். தங்கள் உடல் உபாதைகளைச் சொல்லிப் புலம்புகிறவர்களிடம் அவர் தூக்கத்தைப் பற்றியே முதலில் விசாரிப்பார்.“நல்லாத் தூங்கறீங்களா? நல்லா சாப்பிட முடியுதா? நல்லாத் தூங்கினா அது ஆரோக்கியமான ஒடம்பு.” கேட்கிறவர்களும் தன் அம்மாவைப் பெரிய மருத்துவராக நினைத்துக்கொண்டு பேசுவதை சாருமதி பல சந்தர்ப்பங்களில் பார்த்திருக்கிறாள். ஆனால் இப்போது அவள் அம்மாவும் பக்கத்து அறையில் உறக்கமின்றிப் புரண்டுகொண்டிருக்கிறார்.

உதயன் வார விடுமுறையில் வந்து செல்வதாக அவளிடத்தில் சொல்லியிருக்கிறான். பொதுக் கருத்துகள் ஒன்றும் விதிகள் அல்ல. சூழலுக்கும் இடத்துக்கும் ஏற்ப அவை மாறுபடலாம். ஒரே ஒரு ஊரில் நிலைத்திருக்காமல் அடிக்கடி இப்படி தட்டுமுட்டுச் சாமான்களை தூக்கிக்கொண்டு அலைவதாக இருந்தால் எந்த மனமும் கட்டளைகளை மீறத்தான் செய்யும். ஆண்டுக்கு ஒருமுறை என்றாலும் பரவாயில்லை. ஆண்டுக்கு இருமுறைகூட மாறுதல். அல்லது, விதிகளில் இடமில்லாததும் முடக்கி வைப்பதற்காகவே கண்டுபிடிக்கப்பட்டதுமான கட்டாயக் காத்திருப்புப் பட்டியல். காத்திருப்புக் காலங்களில் ஊதியம் பெற போராடியாக வேண்டும். இதற்கெல்லாம் வீட்டில் இருப்பவர்கள் அவளைப் பாராட்டப்போவதில்லை. சாருமதி பாராட்டுகளையோ, வசைகளையோ பொருட்படுத்துகிறவள் அல்ல என்பது அவர்களுக்குத் தெரியும். ஆனாலும் அண்மைக் காலமாக அம்மா அவளைக் கடிந்துகொள்கிறார்.“ஒரு கொழந்தை ஆச்சின்னா, இப்பிடியெல்லாம் அலைய முடியாது தெரிஞ்சிக்க.”காதலித்துக்கொண்டு இருந்த சமயத்திலும், பின்னர் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்த போதும் சாருமதி தெளிவாக உதயனிடமும் சொல்லிவிட்டாள்,

“நான் இப்படித்தான் இருப்பேன்.”

“ஓக்கே. இட்ஸ் எ சேலஞ்! ஆனா நாம சேர்ந்து வாழப்போறமில்ல? அதான் முக்கியம்!”

ஐந்தாண்டுகளுக்கு முன்னர் மாவட்ட அதிகாரியாக அவள் வேலையில் சேர்ந்த முதல்நாள், பெற்றவர்களுக்குக் கொண்டாட்டத் தினமாகத்தான் இருந்தது. அவளோ அதை வெகுவாக மட்டுப்படுத்த பிரயத்தனப்பட்டாள். குடும்பமே அவளுடன் வருவதாக முந்தைய நாள் மாலையில் விவாதம் செய்துவிட்டுப் படுத்துத் தூங்கியது. ‘ஒருவரும் வரத்தேவையில்லை’ என்று அவள் சொல்லிவிட்டாள். ‘குடும்பம் சூழ போய் நாற்காலியில் அமர்வதற்கு நடப்பது ஒன்றும் திருமணமல்ல. வேண்டுமானால் சில புகைப்படங்களை எடுத்து வந்து காட்டுகிறேன், பார்த்துக்கொள்ளுங்கள்’ என்றாள். அவள் அறிந்த பல செய்திகள் இருந்தன. ஒன்று விநோதமானது. அலுவலர் ஒருவர் சக அலுவலர்களோடு உணவுவேளையில், ஓய்வறையில் வாழையிலை போட்டு, பல்வகை உணவுகளைச் சாப்பிடும்போது ஒரு புகைப்படத்திற்குக் காட்சி தந்தார். அன்று அவருக்குப் பிறந்த நாள். மறு நாள் படம் பத்திரிகைகளில் வந்தது. கூடவே விசாரணையும். அவர் இப்போதெல்லாம் வாழையிலையைப் பார்த்தால்கூட நடுங்குகிறாராம். குளோரோபோபியா! மாலையையும் சால்வையையும் ஏற்றுக்கொண்டு புகைப்படத்துக்குக் காட்சி தரும் வைபவங்கள் அலுவலகத்தில் இருப்பவர்களுக்கும், வெளியில் இருப்பவர்களுக்கும் சில செய்திகளைச் சொல்லும். அல்லது, அவர்களாகவே அதை விருப்பத்துக்கு ஏற்றாற்போல மொழிபெயர்த்துக் கொள்வார்கள். அதிலிருந்து சில கருத்துகள் உருவாகும். அக்கருத்துகள் சில செயல்களில் முடியும். தேவையில்லை. அலுவலகம் வேறு. வீடு வேறு.

சாருமதி, கடந்த காலங்களை நினைக்க முற்பட்டாள். உண்மையைச் சொல்லவேண்டும் என்றால், அவளுடைய அப்பாவுக்கோ அம்மாவுக்கோ அவளைப்பற்றிய பெரிய கனவுகளெல்லாம் எப்போதுமே இருந்ததில்லை. மகள் ஏதோ படிக்கிறாள் என்று நினைத்துக் கொள்வார்கள். ஆனால் அவர்களின் கனவோ அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பற்றியதாக இருந்தது. அது அப்படித்தான் இருந்திருக்க வேண்டும். ஓரளவாவது சாப்பிட வேண்டும். கௌரவமாக உடுத்திக்கொள்ள வேண்டும் என அவர்கள் நினைத்தார்கள். அதனால்தான் பிள்ளைகளால் படிக்க முடிந்தது. அவர்களால் கனவு காணவும் முடியாது. பகல் கனவு உழைப்பைக் கெடுக்கும். கடும் உழைப்புக்குப் பிறகு இரவில் ஆழ்ந்து உறங்குவதுதான் இயல்பு. அதனால் பெற்றோரின் கனவுகளைப் பிள்ளைகள் கண்டார்கள். இன்று சாருமதியும், அவளுடைய அண்ணனும், தம்பியும் வேலைகளில் இருக்கிறார்கள். தன் பெற்றோர் உழைக்கிற போதுகொண்டிருந்த அதே புத்த மனநிலையோடு இப்போதும் இருந்துவிடுவதுதான் நல்லது என்றே சாருமதி விரும்பினாள்.

குறுகிய காலத்துக்குள்ளாகவே அவளுக்கு இது மூன்றாவது மாறுதல். முதல் மாறுதலுக்கான காரணத்தை அவளால் மறக்க முடியாது. ஒரு பள்ளியில் ஆய்வுக்காகச் சென்றிருந்தாள். துப்புரவற்ற பள்ளி. அலுவலகத்தில் நுழைந்ததும் அதிர்ச்சி காத்திருந்தது. தகவல் பலகையில் ஆசிரியர்களின் சாதியைக் குறிப்பிட்டுப் பட்டியல்.

“தகவல் பலகையில் இப்படி எழுதத் தேவையில்லை. தன் பிள்ளையோட படிப்பைப் பத்தித் தெரிஞ்சிக்க வர்ற ஒருத்தர் இந்தப் பலகையைப் பார்த்த பிறகு, உங்களோடு இயல்பா பேசமுடியுமா? ஒரு வகையான மன விலகல் ஏற்படாதா?”

அன்று அவள் செய்த ஆய்வுகள் எல்லாவற்றிலும் முதல் உரையாடலின் உரசல் இருந்தது. கடும் விதிமீறல்களும் கையாடல்களும் தெரிந்தன. அங்கிருந்து கிளம்புகையில் தலைமையாசிரியர் மெல்லப் பேசியது காதில் விழுந்தது.

“இவளெல்லாம் எனக்கு ரூல்ஸ் சொல்லிக் கொடுக்கிறா!”

மறுநாள் சாருமதி அவரை அலுவலகத்துக்கு வரச்செய்து கண்டறியப்பட்ட முறை கேடுகளுக் காக இடைநீக்க ஆணையை நீட்டினாள்.

“நேத்து முணுமுணுத்த, அந்த இவளோட ஆர்டர் இது! இதுக்குக் கீழ்ப்படிஞ்சாகணும் என்பது விதி!”

சாருமதிக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒரு தலையீட்டால் அவள் போட்ட இடைநீக்கம் ரத்தானது. தனது முதல் பணியிட மாறுதலைச் சந்தித்தாள். தான் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் தலைவர் ஒருவருக்காக நெடுநேரம் காத்திருந்து சலித்து வெளியேறினாள். மாவட்டத்தின் முக்கிய பிரமுகரை மரியாதை நிமித்தமாகப் புத்தாண்டு தினத்தில் சென்று சந்திக்காமல் இருந்தாள். அடுத்தடுத்த மாறுதல்களுக்கான காரணங்கள் அவள் நினையாத வடிவங்களில் இப்படி வந்து சேர்ந்தன. அந்த ஒவ்வொரு முறையும் சாருமதி துறை முன்னோடிகளின் கருத்துகளை அசைபோட்டுக் கொண்டாள். நிலவுகிற அமைப்புடன் சேர்ந்துதான் வேலை செய்ய வேண்டும், அந்த அமைப்பை ஆதரிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும். அப்படி நாம் இல்லையென்றால் மன உளைச்சல், பழிவாங்கும் நடவடிக்கை எல்லாமே உண்டு. அவமானம் ஏற்படலாம். யாராவது ஒருவர் கூப்பிட்டு, தொலைத்துவிடுவதாகப் பேசுவார். அவர் தொலைக்கிறாரோ இல்லையோ, அந்த வார்த்தையே தொலைத்துவிடும். ஒரு விலங்கை அடிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால், அது கொடூரமானது என்ற செய்தி முதலில் பரப்பப்படுவதைப் போலத்தான் நிகழ்கின்ற எல்லாமே. எல்லாவற்றையும் சந்திப்பது ஒன்றே சிறந்தவழி.

காலையில் அம்மாவிடத்தில் சொல்லிக்கொண்டு புறப்படும்போது வழக்கமான மனநிலையே அவளுக்கு இருந்தது. ஓட்டுநர் ஜீப்பை நன்றாகத் துடைத்து வைத்துக்கொண்டு காத்திருந்தார். அலுவலக வளாகத்தில் இறங்கியபோது சாருமதிக்கு காட்டுக்குள் நுழைந்த உணர்வு ஏற்பட்டது. பலவகையான மரங்கள். வகை வகையான பூச்செடிகள். வளாகத்தின் ஏதோ ஒரு மூலையில் குயில் ஒன்று கூவிக்கொண்டிருப்பது கேட்டது.

ஒடிசலான நெடிய உருவம். தோள்வரை வெட்டப்பட்ட சிகை. மிடுக்கான நடை. அலுவலகத்தில் நுழையும் அவளைப் பார்த்ததும் வரவேற்கக் காத்திருந்தவர்கள் தடுமாறினார்கள். சில பெண் அலுவலர்கள் அவளுக்கு ரோஜாவையும் கற்கண்டையும் கொடுத்து நெற்றியில் சந்தனம் வைத்தார்கள். சிறிது நேரத்துக்குப் பிறகு அவள் அறையில் கூட்டம் நடந்தது. துறையின் மூத்த அதிகாரி பணியாளர்களை அறிமுகம் செய்தார். அங்கிருக்கும் சில சங்கப் பொறுப்பாளர்கள் தனியாகச் சிறப்புசெய்ய விரும்பியதை அவள் ஏற்கவில்லை. எல்லாம் முடிந்தபிறகு அவள் பேசினாள்.

“என் பெயர் சாருமதி. என் பெற்றோர்களைப் பற்றியோ, என் ஊரைப் பற்றியோ மேலதிக விவரங்கள் எதுவும் தேவையில்லை என்று நினைக்கிறேன், ஏனென்றால், அவை நாம் இங்கே கடமையாற்றுவதற்கு உதவப்போவதில்லை. ஆனால் நான் ஒன்றை வலியுறுத்திக் குறிப்பிட விரும்புகிறேன். இங்கு வேலை செய்வதற்குத் தேவையென அரசாங்கம் நிர்ணயம் செய்திருக்கும் அளவுக்கு நான் படித்திருக்கிறேன். நல்ல மதிப்பெண். வேலைக்கான போட்டித் தேர்வில் மாநில அளவில் முதல் பத்து இடங்களிலேயே வந்தவள்!”

பணியாளர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

“ஆணைகள், விதிமுறைகளை அறிந்துவைத்திருக்கிறேன் என்றாலும், உங்கள் அனுபவம் எனக்கு முக்கியம். நீங்கள் என்னிடத்தில் தயக்கமின்றிப் பேசி, கருத்துகளைச் சொல்லலாம். நான் தேவையற்ற சிக்கல்களை எதிர்கொள்ள விரும்புவதில்லை. ஒருவேளை அப்படி ஏதாவது வந்தால் சட்டப்படிதான் செல்வேன். இன்று பலவகையான சங்கங்கள் மரியாதை நிமித்தமாக என்னைப் பார்க்க வருவார்கள் என்று கேள்விப்பட்டேன். அப்படி யாரையும் மரியாதை நிமித்தமாக நான் பார்க்க விரும்பவில்லை.”

அலுவலகம் திடீரென இறுக்கமாகிவிட்டதாகத் தோன்றியது. நேர்முக உதவியாளரிடம் அவள் விசாரித்தபோது அவர் தயக்கத்துடன் புன்னகை செய்து ``ஆமாம்’’ என்றார்.

பொன்வயல்பட்டிக்கு உள்ளடங்கியதாக வயல்வெளிகளுக்கு அப்பால் தீவுபோலிருந்த அந்த இடத்துக்கு சரியான வழியில்லை. மாலைச் சூரியன் விடைபெறக் காத்திருந்தது. ஊருக்குள்ளேயே ஜீப்பை நிறுத்திவிட்டு அவர்கள் வயல் வரப்பில் நடந்தார்கள்.

“இந்த வரப்பு வழியா பள்ளிக்கு வரும்போதுதான் அந்தப் பிள்ளைங்களைப் பாம்பு கடிச்சிருக்கு மேடம்.”

“அந்தப் பிள்ளைங்க இருக்கிற ஊர்லயே பள்ளிக்கூடம் இல்லையா?”

“இல்ல மேடம். இங்க பொன்வயலுக்கு வந்துதான் படிக்கணும்.”

“பள்ளிக்கூடம் போகையில ஒண்ணும் ஆகல மேடம். இந்தக் கொழுப்பெடுத்த புள்ளைங்க, வயல்ல எறங்கி நண்டு புடிச்சி விளாடியிருக்காங்க. அதான் வெனையாப் போச்சி” உடன் வந்த பொன்வயல்பட்டி பெரிய மனிதர்களில் ஒருவர் சமாதானப்படுத்துவதைப்போலச் சொன்னார்.

இரண்டு குழந்தைகளும் ஆழ்ந்து உறங்குவதைப்போலப் படுத்திருந்தார்கள். சாருமதியால் அழுகையைக் கட்டுப்படுத்த இயலவில்லை. வீட்டுக்குப் போனதும், ‘நன்றாகத் தூங்குவது ஆரோக்கியத்தின் அடையாளமா’ என்று அம்மாவிடம் கேட்கவேண்டும் என நினைத்துக்கொண்டாள்.

புதிய அலுவலகம் சாருமதிக்கு மெல்லப் பழகிக்கொண்டு வந்தது. அங்கு வந்தபோது முதல் நாள் கேட்ட குயிலின் குரலை அவளால் இப்போது அவ்வளவாகக் கேட்க முடியவில்லை. கோப்புகளின் புழுங்கல் வாடை அதிகமாய் வீசத்தொடங்கியிருந்தது. ஒருநாள் ஒரு சின்ன மாறுதலுக்காக ஸ்கூட்டியில் வந்த சாருமதி, அதை நிறுத்திவிட்டு அலுவலக பின்பக்க வாயில் வழியாக உள்ளே செல்வதற்கு நடந்தபோது பாம்பு ஒன்றைப் பார்த்தாள். மழை நீர் பாய்வதற்கெனக் கட்டப்பட்டிருந்த கால்வாயில் வேகமாகச் சென்று இடி பாடுகளுக்குள் நுழைந்த அது தவளைகளையும் எலிகளையும் தின்று கொழுத்துத் தெரிந்தது. பொன்வயல்பட்டிக்குச் சென்று வந்ததிலிருந்து அந்த இரண்டு பிள்ளைகளும் வாரக்கணக்கில் சாருமதியின் உறக்கத்தைக் குலைத்துக் கொண்டிருந்தனர். அவள் முன்னாலேயே அவர்கள் நீளுறக்கத்தில் கிடந்தனர். அம்மாவிடம் நடந்தவற்றையெல்லாம் அவள் பகிர்ந்துகொண்டபோது, பாம்புகளால் கடிபட்ட கதைகளை அவர் அடுக்கத் தொடங்கினார். வார இறுதியில் வந்திருந்த உதயனிடமும் சாருமதி புலம்பிடத் தவறவில்லை. ஒரு நாள் இரவு அந்தப் பிள்ளைகள் இருவரும் தனக்கு அருகிலேயே படுத்துக்கொண்டிருப்பதாய் நினைத்துத் துடித்து எழுந்தாள்.

அடுத்த நாள் காலையில் நேர்முக உதவியாளரை அழைத்த சாருமதி, இறந்துபோன பிள்ளைகளின் பெற்றோரையும், அந்தப் பகுதி மக்கள் சிலரையும் அழைத்துவரும்படி அங்கிருக்கும் பள்ளிக்கூடத் தலைமை ஆசிரியரிடத்தில் சொல்லச் சொன்னாள். சில நாள்களுக்குப் பிறகு அவர்கள் வந்திருந்தார்கள்.

“எத்தனை குடும்பம் இருக்கீங்க?”

“ஒரு இருநூறு இருக்கும்மா.”

“ஏன் நீங்க உங்க பகுதிக்குன்னு ஒரு ஸ்கூல் கேட்கல?”

“கேட்டோம்மா. சாங்சன் ஆகலன்னு சொல்லிட்டாங்க.”

தொலைவு - சிறுகதை
தொலைவு - சிறுகதை

பிள்ளைகளின் பெற்றோர்களிடத்தில் பேசிக்கொண்டிருந்த சாருமதிக்கு, இழப்பீட்டைத் தவிர வேறு எதையாவது செய்யவேண்டும் என்று மனம் உந்தியது. அவர்கள் போன பின்பு அலுவலகக் கண்காணிப்பாளரை அழைத்து விசாரித்தாள்.

“அங்க ஸ்கூல் கட்டறதுக்கு பாசிபிளிட்டிஸ் இல்லம்மா.”

“ஏன் இல்ல? முழு விவரத்தையும் சொல்லுங்க.”

“அங்க சிக்கலே வேறம்மா.”

“என்ன?”

“பொன்வயல் ஊர்ல இருக்கிறவங்க அந்தப் பகுதிக்கு ஸ்கூல் வர்றதை விரும்பல.”

“எதுக்கு?”

“பொன்வயல்ல படிக்கிற பிள்ளைங்க முக்கா பாகம் அந்தப் பகுதியிலருந்து வர்றது தான். ஊர்ல இருக்கிற பிள்ளைங்க நெறைய பேரு வேற ஸ்கூலுக்குப் போறாங்க. பாக்கி கொஞ்சம் பேருதான் அரசாங்கப் பள்ளிக்கு வர்றாங்க. இப்ப இன்னொரு ஸ்கூல் அங்க வந்துட்டா இங்க ஸ்ட்ரெந்த் கொறஞ்சிடும். அப்புறம் ஊர்ல இருக்கிற ஸ்கூலை மூடிடுவாங்கனு நெனைக்கிறாங்க.”

“அதுமட்டுந்தான் காரணமா?”

“இல்லம்மா. ஒருவேளை ஸ்ட்ரெந்தை காரணம் காட்டி ஊர்ல இருக்கும் ஸ்கூலை நாளை ஒருசமயம் மூடிட்டா, இங்கயிருந்து பிள்ளைங்க அங்க போயி படிக்கிறதான்னு ஒரு எண்ணம்.” “சில பிள்ளைங்க பாம்பு கடித்துச் செத்தாலும் இங்க வந்துதான் படிச்சிட்டுப் போகணும்?”

“என்ன?”

“ரொம்ப சங்கடம்தாம்மா. வருசத்துக்கு ரெண்டு மூணு இப்படிச் செத்துடுதுங்க. பாவம்.”

“அங்க ஸ்கூல் கொண்டுவர இப்ப என்ன பாசிபிளிட்டீஸ் இருக்கு?”

“முன்ன ஒரு ஸ்கீம்ல வந்த ஸ்கூல் ஆர்டரை நிறுத்தி வச்சிட்டு, அந்த ஊர்க்காருங்க ஸ்கூலுக்குன்னு கொடுத்த எடத்துல ஒரு ரேஷன் கடையைக் கட்டிட்டாங்கம்மா. இப்ப நாம வேற எடம்தான் பாக்கணும்.”

“நாம ஏதாவது செய்வோம். அங்க வேற எடம் இருக்கான்னு பாக்கச் சொல்லுங்க. அந்தப் பஞ்சாயத்துத் தலைவரையும் அந்தப் பகுதி கவுன்சிலரையும் வரச் சொல்லுங்க. பேசுவோம்.”

தங்கள் பகுதிக்குப் புதிய பள்ளி ஒன்று வருவது குறித்து பஞ்சாயத்துத் தலைவர் வெளிப்படுத்திய மகிழ்ச்சி சாருமதியை உற்சாகம் கொள்ளச் செய்வதாக இருந்தது. ஆனாலும் அவர்களிடையே மெல்லிய தயக்கம் ஒன்று இழையோடுவதை அவளால் உணர்ந்துகொள்ள முடிந்தது. அங்கு செய்வதற்கு நிறைய வேலைகள் காத்திருப்பதாகவும் அவளுக்குத் தோன்றியது.

“பாம்பு கடித்து இறந்துபோன பிள்ளைங்க விசயத்துல நான் ரொம்பவும் அப்செட் ஆகிட்டேன். அந்தப் பிள்ளைங்க வாழற பகுதியிலயே ஒரு ஸ்கூலைக் கட்டிடலாம். என்ன சொல்றீங்க?”

இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.

“என்ன, சொல்லுங்க?”

“ஏற்கெனவே அப்படி ஒரு வாய்ப்பு வந்ததும்மா. ஆனா அத உபயோகப்படுத்திக்க முடியாமப் போச்சி. இப்ப அந்த எடத்துல ஒரு ரேஷன் கடை உளுந்துடுச்சி.”

“வேற இடம் எதுவுமில்லையா?”

“இருக்குமா. ஊருக்குப் பக்கமே மேச்சலுக்குன்னு கொஞ்சம் நிலம் இருக்கு. அதை எடுத்துக்கலாம்.தப்பில்ல.”

“வேற என்ன? அந்தப்பகுதி மக்கள் கிட்ட ஸ்கூல் வேணும்னு சொல்லி ஒரு மனுவை எழுதி வாங்குங்க. கிராமக் கமிட்டியில அந்தப் பகுதிக்கு ஒரு ஸ்கூல் தேவைன்னு தீர்மானம் போடுங்க. எல்லாத்தையும் எடுத்துட்டு வாங்க. செஞ்சிடலாம்.”

அவர்கள் இருவரும் தயக்கத்துடன் எழுந்து விடைபெற்றுக் கொண்டனர்.

சில வாரங்களுக்குப் பின்னர் அலுவலகத்துக்கு வந்திருந்த பொன்வயல்பட்டி பஞ்சாயத்துத் தலைவர் கொடுத்த கிராமக் கூட்டத் தீர்மானத்தைப் படித்து அதிர்ந்தாள் சாருமதி. ‘ஒரு பள்ளிக்கும் இன்னொரு பள்ளிக்கும் குறைந்தது மூன்று கிலோமீட்டர் இடைவெளி இருக்கவேண்டும் என்பது அரசாங்க விதி. ஆனால் புதிய பள்ளி ஒன்று வேண்டுமெனக் கேட்கின்ற, பொன்வயல்பட்டியில் உள்ளடங்கியிருக்கும் மற்றொரு பகுதி மூன்று கிலோ மீட்டருக்கு உள்ளேயே இருப்பதால் புதிய பள்ளி ஒன்றை அங்கே கட்டுவதற்கு சாத்தியமில்லை என்று இந்தக் கிராமக்குழு தீர்மானிக்கிறது.’

“அந்தப் பகுதிக்கு புதுசா பள்ளிக்கூடம் ஒண்ணு கட்டித் தர்றது சந்தோசந்தான். அதுக்கு நாம குறுக்கா நிக்கல. ஆனா நாமே அரசாங்க விதியை மீறக்கூடாதில்ல! அப்படின்னு ஊர்ப் பெரிய மனுசருங்க எல்லாம் சொல்றாங்கம்மா.”

“அப்ப உங்களுக்கு தூரம்தானே பிரச்னை? நானே நேர்ல வந்து பேசறேன், போங்க.” பஞ்சாயத்துத் தலைவரைப் பார்த்துச் சிரித்தாள் சாருமதி.

பொன்வயல்பட்டி தொடக்கப் பள்ளிக்குள் ஜீப் நுழைந்ததும் மக்கள் திரண்டு வந்து நின்றார்கள். சுற்றுச்சுவருடன் இருந்த அந்தப்பள்ளி துப்புரவாகப் பராமரிக்கப்படுவது நன்றாகத் தெரிந்தது. எதிரும் புதிருமான வகுப்பறைக் கட்டடங்களின் இடைப்பரப்பு சிமென்டால் பாவப்பட்டிருந்தது. பள்ளியின் பின்புறச் சுற்றுச் சுவர் ஓரத்திலிருந்து வாழை மரங்கள் எட்டிப் பார்த்தன. வளாகத்தின் ஒரு ஓரத்தில் வளர்ந்து நின்ற இலுப்பை மரத்திலிருந்து காக்கைகள் ஓயாமல் கரைந்தன. கிராமக் குழுவிலிருப்பவர்கள் மட்டும் போதும் எனப் பஞ்சாயத்துத் தலைவரிடத்தில் சாருமதி சொல்லியிருந்தாள். எல்லாரும் உட்கார்ந்த பிறகு தொடங்கிய கூட்டத்தில் பாறை போன்றதொரு இறுக்கம் உருவானது. அதைத் தகர்க்க விரும்பாததுபோல் அவர்கள் தங்களைப் பார்த்துக்கொண்டனர். தலைமை ஆசிரியரின் சம்பிரதாயமான பேச்சுக்குப் பிறகு ஒவ்வொருவராகப் பேசத் தொடங்கினர்.

தொலைவு - சிறுகதை

“பொன்வயல் ஒரு முன்னுதாரணமான பஞ்சாயத்து. நாளைக்கு மாநில அளவிலயோ, தேச அளவிலயோ பாராட்டப் படலாம். அதனால ஒரு சின்ன விதிமீறலையும் அனுமதிக்க முடியாது.”

“கிராமக்குழு தீர்மானத்துக்கு எதிரா யாரும் ஒண்ணும் செய்யமுடியாது.”

“நாங்க யாருக்கும் எதிராக இல்ல. ஆனா இன்னொரு ஸ்கூல் தேவையில்ல.”

“ஒருவகையில பார்த்தா படிப்பைவிட சாப்பாடுதான் ரொம்ப முக்கியம். அதனால தான் அங்க ரேஷன் கடையைக் கட்டித் தந்தோம்.”

பேச்சு வளர்ந்து போய்க்கொண்டே இருந்தது.

எல்லார் கருத்தையும் கேட்டறிந்த பிறகு எழுந்த சாருமதி, பாரதி கவிதையுடன் தொடங்கினாள்.

“அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், பின்னருள்ள தருமங்கள் யாவும் பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல், அன்ன யாவினும் புண்ணியங்கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்… இது கல்வியைப் பற்றிய பாரதியின் பார்வை. என்னைக் கேட்டால் இது புண்ணியமுமல்ல. இது மக்களுக்கான உரிமை. ஒருவர் உரிமையை இன்னொருவர் ஏன் தடுக்கணும்?”

“அதிகாரியம்மா எங்களை ஒருசாராருக்கு எதிரா நிறுத்திப் பேசறதுபோலத் தெரியுது. திரும்பவும் சொல்றோம். அங்க பள்ளி வர்றதுல எங்களுக்கு எவ்வித ஆட்சேபமும் இல்ல. ஆனா அரசாங்கத்தோட விதிமுறைகள மீறக்கூடாதில்லையா? அந்தப் பகுதி இங்கேயிருந்து மூணு கிலோ மீட்டருக்கு உள்ளதானே இருக்குது?”

“அப்போ, மூணு கிலோ மீட்டர்தான் உங்களுக்குப் பிரச்னை? அதுக்கு நான் ஒரு வழி சொல்றேன். அது சரியாயிருந்தா ஏதுக்குவீங்க இல்லயா?”

“நிச்சயமாம்மா.”

கூட்டத்திலிருந்து வெளியே வந்த சாருமதி, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு மொபெட் அருகில் போய் நின்றாள்.

“இந்த வண்டி யாரோடதோ அவங்க இங்க வாங்க. நாம அந்தப் பகுதிக்குப் போய் வருவோம். இப்ப இருக்கிற மைலேஜ் ரீடிங்கை யாராவது ஒருத்தர் குறிச்சிக்குங்க. அங்க போய் வந்த பிறகு எத்தனை கிலோமீட்டர் காட்டுதோ அதைவச்சி முடிவு செஞ்சுக்கலாம்.”

அங்கிருப்பவர்கள் குழப்பத்துடன் சாருமதியைப் பார்த்தனர். பத்து நிமிடங்களுக்குப் பிறகு திரும்பி வந்த மொபெட், ஏழு கிலோமீட்டர் ஓடியிருப்பதைக் காட்டியது.

“இதுக்கு மேல என்ன ஆதாரம் தேவை? தீர்மானத்தை மாத்தி எழுதிக் குடுங்க. நான் வெயிட் பண்றேன்.”

ஆட்கள் சிலர் கலைந்து சென்றுவிட்டனர். பள்ளியின் தலைமை ஆசிரியரும், பஞ்சாயத்துத் தலைவரும் சாருமதியிடத்தில் வந்து பவ்யமாகக் கேட்டனர்.

“அந்தப் பகுதியை என்னன்னு குறிச்சி எழுதறதும்மா? கீழத்தெரு, மேலத்தெருன்னு சொல்றதுதான் இங்க வழக்கம்.”

“பொன்வயல்பட்டி கிழக்குன்னு எழுதுங்க.”

பள்ளியில் உட்கார்ந்திருந்தபோது நடப்பது எல்லாமே அவளுக்கு அபத்த நாடகமாகத் தோன்றின. தெரிந்தேதான் எல்லாமும் நடக்கின்றன. அதைச் சுட்டும்போது அபத்த நியாயங்கள் பிறக்கின்றன. ஒருவகையில் அனைத்தையும் அறிந்துகொண்டே அறியாமல் செய்வது என்றாகியிருக்கிறது நிலைமை. சாருமதி தலையை உலுப்பி குறுநகை புரிந்தாள். அந்த ஊர் ஏனோ அவர்கள் சிறு வயதில் விட்டுப் போனதாய் அவளுடைய அம்மா சொல்லும் ஊரைப்போலவே அவளுக்குத் தெரிந்தது.

- அழகிய பெரியவன்

(10.12.2020 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)