
கொரோனாவுக்கு எதிரான மானுட யுத்தத்தில் சேவை வீரர்களான இந்த முன்களப் பணியாளர்கள் அத்தனை பேருக்கும் ‘2020 ஆனந்த விகடன் நம்பிக்கை விருது’களை சிரம் தாழ்ந்து சமர்ப்பிக்கிறோம்.
நம்பிக்கை விதைத்தவர்களுக்கு நம்பிக்கை விருதுகளை சமர்ப்பிக்கிறோம்!
ஒவ்வோர் ஆண்டின் தொடக்கத்திலும் ஆனந்த விகடன் விருதுகள் குறித்த எதிர்பார்ப்புகள் தொடங்கிவிடும். இந்த ஆண்டு ஆனந்த விகடனின் ‘நம்பிக்கை விருதுகள்’ பெறுபவர்கள் யார் யார், எந்தப் புத்தகம் விருது பெறுகிறது, எந்த எழுத்தாளர் விருது வெல்கிறார், எந்தத் திரைப்படம் சிறந்த சினிமாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது, எந்தப் படைப்பாளி சிறந்த இயக்குநர் என்றெல்லாம் ஒட்டுமொத்தத் தமிழகமும் ஆவலுடன் எதிர்நோக்கும். அதிலும் குறிப்பாக ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழா, ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் விழா என இரண்டும் திறமைக்கு மரியாதை தரும் திருவிழாக்கள்.
ஆனால், 2020-ம் ஆண்டு நமக்குப் பல புதிய அனுபவங்களைத் தந்திருக்கிறது. கொரோனா என்னும் பெருந்தொற்று உலகளவில் மனிதர்களின் சமூக, பொருளாதார, பண்பாட்டு வாழ்க்கையை மிகப்பெரிய அளவில் மாற்றியிருக்கிறது. கூட்டமாகக் கூடிக் கொண்டாடும் நிகழ்வுகள் தவிர்க்கப்படுகின்றன. திருவிழாக்கள் தொடங்கி தனிநபரின் திருமணங்கள் வரை பல நிகழ்வுகள் மிக மிக எளிய முறையில் சில நபர்கள் மட்டுமே பங்கேற்கும் வகையில் நடத்தப்படுகின்றன. இப்போது தளர்வுகள் இருந்தாலும், ‘கொரோனா முற்றிலும் அகலவில்லை’ என்ற எச்சரிக்கை உணர்வுடன்தான் எதையும் திட்டமிட வேண்டியுள்ளது.
இந்த மாற்றங்கள் ஆனந்த விகடன் விருதுகளிலும் பிரதிபலித்துள்ளன. 2020-ம் ஆண்டு கிட்டத்தட்ட திரைத்துறையே முடங்கிப்போனது. படப்பிடிப்புகள் நடைபெறவில்லை. திரையரங்குகள் மூடப்பட்டன. வெளியிடத் திட்டமிடப்பட்ட திரைப்படங்கள் ஒத்திவைக்கப்பட்டன. சில திரைப்படங்கள் ஓ.டி.டி தளங்களில் வெளியாகின. ஆனால், ஓராண்டுக்கான விருதுகளைப் பரிசீலிக்கும் அளவுக்கு திரைப்படங்கள் வெளியாகவில்லை என்பதால் இந்த ஆண்டு ஆனந்த விகடன் சினிமா விருதுகள் அறிவிக்க இயலாத சூழல்.

இலக்கியத் தளத்திலும் இதே நிலை. மிகக்குறைவாகவே புத்தகங்கள் வெளியாகியுள்ளன. சென்னைப் புத்தகக் காட்சியை ஒட்டி ஏராளமான புத்தகங்கள் வெளியாகும். ஆனால், இந்த முறை சென்னைப் புத்தகக் காட்சி நடைபெறுமா, எப்போது நடைபெறும் என உறுதியான தகவல்கள் இல்லை. எனவே ஆனந்த விகடன் இலக்கிய விருதுகளும் இந்த ஆண்டு அறிவிக்கப்படவில்லை. கொரோனா காரணமாகப் படப்பிடிப்பு நடத்த முடியாத சூழலால் பல மாதங்கள் தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் பழைய நிகழ்ச்சிகளையும் நெடுந்தொடர்களையும் ஒளிபரப்ப வேண்டிய நிலை என்பதால், ஆனந்த விகடன் ஊடக விருதுகளும் இந்த ஆண்டு வழங்கப்படவில்லை.
கொரோனா அச்சமும் ஊரடங்கு முடக்கமும் சூழ்ந்த பொழுதுகளில் நம்மை உயிர்த்திருக்கச் செய்தது நம்பிக்கையே. இந்தக் கொரோனாக் காலகட்டத்திலும் தத்தமது துறைகளில் தனித்துவமிக்க சாதனை படைத்தவர்களும் இருக்கிறார்கள். அவர்களை அடையாளப்படுத்துவதும் அங்கீகரிப்பதும் எந்தச் சூழலிலும் தவிர்க்கக்கூடாத பணி என்பதை ஆனந்த விகடன் உணர்ந்திருக்கிறது. அதனால் 2020 ‘டாப் 10 மனிதர்கள்’ மற்றும் ‘டாப் 10 இளைஞர்கள்’ ஆகியோருக்கு விருதுகள் தருகிறோம். பிரமாண்ட விழாக்கள் நடத்த முடியாத சூழலை உணர்ந்து, காலத்துக்கேற்ற வகையில் தொழில்நுட்பத்தின் உதவியோடு எளிமையாக அதேநேரத்தில் மிகச்சிறப்பாக ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் விழா நடைபெறும், ‘டாப் 10 மனிதர்கள்’ மற்றும் ‘டாப் 10 இளைஞர்கள்’ விருதுகள் பெறுபவர்கள் உரிய முறையில் கௌரவிக்கப்படுவார்கள். வரும் ஆண்டுகளில் எப்போதும்போல் அனைத்து ஆனந்த விகடன் விருதுகளும் அறிவிக்கப்பட்டு, பிரமாண்ட விழாக்கள் நடைபெறும்.
2020-ல் ‘நம்பிக்கை’ என்னும் சொல்லுக்கே அர்த்தம் தந்து உயிரூட்டியவர்கள் கொரோனாத் தடுப்பு முன்களப் பணியாளர்கள். மருத்துவமனைகளில் குவிந்த மக்களுக்கு நம்பிக்கையாக நின்றார்கள் மருத்துவர்கள். அச்சமில்லாமல் தொற்றாளர்களைப் பராமரித்தார்கள் செவிலியர்கள். தொற்றாளர்களுடனே வாழ்ந்தனர் மருத்துவப் பணியாளர்கள். கவச உடை இல்லை, கையுறை இல்லை, தடுப்பு மருந்துகள் இல்லையென எவரும் அஞ்சி ஒதுங்கவில்லை. இவர்களில் சிலர் மக்களைக் காக்கும் பணியில் தங்கள் இன்னுயிரை இழந்திருக்கின்றனர். பலர் தாங்களும் நோய்த்தொற்றுக்கு ஆளாகி மீண்டிருக்கிறார்கள். குடும்பம் மறந்து, மனச்சோர்வு கடந்து மாதக்கணக்கில் மக்களுக்காக நின்றார்கள். பல்லாயிரம் பேரின்் நோயும் அச்சமும் தீர்த்து, இன்றும் அதே தீவிரத்தோடு இயங்கிக்கொண்டிருக்கும் எல்லோருக்கும் தலைவணங்குகிறது ஆனந்த விகடன்.
இன்னும், தயக்கமின்றி முகமறியா மனிதர்களுக்குக் கரம் கொடுத்த தன்னார்வலர்கள், எல்லா சிரமங்களையும் தாங்கிக்கொண்டு மக்களுக்காக நின்ற காவலர்கள், எப்போதும் போற்றப்பட வேண்டிய தூய்மைப் பணியாளர்கள்... என முன்களத்தில் நின்று கடமையாற்றிய அத்தனை பேரின் சேவையும் காலத்தில் நிலைத்திருக்கும்.
கொரோனாவுக்கு எதிரான மானுட யுத்தத்தில் சேவை வீரர்களான இந்த முன்களப் பணியாளர்கள் அத்தனை பேருக்கும் ‘2020 ஆனந்த விகடன் நம்பிக்கை விருது’களை சிரம் தாழ்ந்து சமர்ப்பிக்கிறோம்.

அறம் - காவலர் ரேவதி
இரு அப்பாவி வணிகர்களின் ரத்தம் தோய்ந்த அதே சாத்தன்குளம் காவல்நிலையத்தில் அநீதிக்கு எதிராக ஒற்றை மனுஷியாக நின்றார் ரேவதி. மிரட்டல்கள், அழுத்தங்களுக்கு அஞ்சாமல் அவர் சொன்ன சாட்சிதான் கொடூரமாகக் கொலை செய்த காவலர்களைச் சிறைக்குள் அனுப்பியது. காவல்துறையின் இதயத்தில் ஈரமும் நேர்மையும் மிஞ்சியிருக்கிறதென்ற நம்பிக்கையை விதைத்த ரேவதியை மக்கள் காவல் தேவதையாகத்தான் கொண்டாடினார்கள். ‘பயமா இல்லையா... எப்படி தைரியமா சாட்சி சொன்னீங்க?’ என்ற இரண்டு வரி கேள்விக்கு ரேவதி சொன்ன ஒற்றை வார்த்தை பதில்... ‘மனசாட்சிப்படி!’ இதயத்தின் ஆழத்திலிருந்து உதிர்ந்த அந்தச் சொல், குற்றத்தை மறைக்கத் துடித்த அத்தனை பேரின் இதயத்தையும் உலுக்கியது. விளைவுகளுக்கு அஞ்சாமல் உண்மையைத் தாங்கி நின்ற தைரியத்துக்காகவே ரேவதியைப் போற்றிப் பாராட்டுகிறது ஆனந்த விகடன்.

சூழலைப் போற்றும் சூரர்! - பேராசிரியர் ஜெயராமன்
எரிவாயு வெம்மையிலிருந்து காவிரிப்படுகையின் பச்சையத்தை மீட்கக் களமாடும் மண்ணின் மைந்தர். மீத்தேன் திட்டத்தின் பாதிப்புகளை எளிய மொழியில் எழுதியும் பேசியும் இவர் விளக்கியபிறகே தஞ்சை விழித்தது. எரிவாயுத் துளைகளுக்கெதிராக ஜெயராமன் கட்டியெழுப்பிய போராட்டக்களங்களே காவிரிப்படுகையைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கும் நெருக்கடியை அரசுக்கு உருவாக்கின. பணி ஓய்வுக்குப் பிறகான காலங்களைச் சிறையிலும் போராட்டக்களத்திலும் கழித்துவரும் இந்தப் பேராசிரியர், மக்களுக்கான வரலாறு, புவியியல், அறிவியலை ஜோதியாக ஏந்திச்சென்று கிராமந்தோறும் அறிவு வெளிச்சம் ஏற்றுகிறார்.

தொல்குடி மக்களின் தோழர் - வி.பி.குணசேகரன்
பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்துக்காகவும் உரிமைக்காகவும் நெடுங்காலமாக ஒலித்துக்கொண்டிருக்கிறது குணசேகரனின் குரல். நாற்பதாண்டுக் காலமாக மலையிலும் வனத்திலும் பாதம்தேய நடக்கும் இவர், சர்க்கரை ஆலைப் பொறியாளர் பணியை உதறிவிட்டு பொதுவுடமைக் களத்துக்கு வந்தவர். வீரப்பன் தேடுதல் வேட்டையில் பழங்குடிகள்மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து நீதி பெற்றுத் தந்ததில் குணசேகரனின் பங்கு முக்கியமானது. கொரோனாக் காலத்தில் 50 லட்சம் ரூபாய்க்கு மேல் நிதிதிரட்டி, நிர்கதியாக விடப்பட்ட பழங்குடி மக்களின் பசியாற்றினார். பல மலை கிராமங்களில் இவர் கட்டியெழுப்பிய பள்ளிகள் பலநூறு குழந்தைகளுக்குக் கல்வி வெளிச்சம் அளித்துள்ளன. 67 வயதிலும் இடைவிடாது பழங்குடிகளின் வாழ்வுரிமைக்காக நடந்துகொண்டேயிருக்கும் தோழரை 2020-ன் நம்பிக்கை மனிதராகத் தேர்வுசெய்து கௌரவிக்கிறது ஆனந்த விகடன்.

வழக்கு நடத்தும் விளக்கு - வழக்கறிஞர் அழகுமணி
எப்போதும் எளிய மக்களின் பக்கம் நிற்கும் சட்டப் போராளி. கஜா புயல் பாதிப்புகளுக்கான நிதி ஒதுக்கீடு முதல் காவிரி மணல் கடத்தல்வரை தமிழகத்தை வஞ்சிக்கும் பிரச்னைகளுக்காக இவர் நடத்திய பொதுநல வழக்குகள் அறுநூற்றைத் தாண்டும். விசாரணை என்ற பெயரில் வதைக்கப்படும் அப்பாவிகளுக்காக ஆட்கொணர்வு வழக்குகளை நடத்தி அரணாக நிற்பவர். பள்ளிக்கல்வித்துறை முதல் சிறைத்துறை வரை இவர் பெற்றுத்தந்த தீர்ப்புகள், பல மாற்றங்களுக்கு ஆதாரம். பாதிக்கப்பட்டவர்களைத் தேடிச்சென்று அரவணைத்து சட்டப்போர் நடத்தும் அழகுமணி, நீதிமன்றத்தை மலைப்பாகப் பார்த்து ஒதுங்கிச்செல்லும் சாமான்ய மனிதர்களுக்குப் பெரும் நம்பிக்கை. பெண்ணைக் கொலை செய்ததாக தண்டனை பெற்றவர்களைக் காக்க, உயிருடன் இருக்கும் அந்தப் பெண்ணையே நீதிமன்றம் அழைத்து வந்தது; தனுஷ்கோடி கடற்கரையில் வசித்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களை அப்புறப்படுத்த நடந்த முயற்சியைத் தடுத்தது; கீழடி ஆய்வறிக்கையை, ஆய்வுசெய்த அமர்நாத் ராமகிருஷ்ணனையே வெளியிடச் செய்தது என நியாயங்களை நீதிமன்றம் வழி பெற்றுத்தந்திருக்கிறது அழகுமணியின் தர்க்கம்!

திரைவழி பெண்மொழி - இயக்குநர் சுதா கொங்கரா
இறுகிப்போயிருந்த தமிழ் சினிமாவுக்கு சுதா கொங்கரா பரிசளித்தது ஒரு மாபெரும் ஆக்ஸிஜன் வெளி. படப்பிடிப்புகள் இல்லை, வெளியீடுகள் இல்லை எனச் சுற்றிலும் நிச்சயமற்ற தன்மை சூழ்ந்திருந்த கோலிவுட்டுக்கு அவசியமாய் இருந்தது ஒரே ஒரு பெருவெற்றி. அதை சூர்யா என்னும் முன்னணி ஹீரோ வழி கொடுத்து சுதா தொடங்கி வைத்திருப்பது ஒரு புத்தம்புது அத்தியாயம். இயக்கிய எல்லா படங்களிலும் பெண் பாத்திரப்படைப்புகளில் இவர் காட்டிய கவனம் கவனிக்கத்தக்கது. காதல், பாவம் ஆகியவற்றுக்கு ஆந்தாலஜி அகராதியில் முற்றிலும் மாறுபட்ட வடிவம் கொடுத்த அர்த்தமிகு படைப்பாளி. பரீட்சார்த்த முயற்சியிலும் சரி, கமர்ஷியல் சினிமாவிலும் சரி, பால்பேதம் கிடையாது என எண்ணற்றவர்களுக்கு நம்பிக்கை விதை தூவிய வொண்டர்வுமன்.

நூல்களின் சரணாலயம் - ‘புத்தகத் தாத்தா ’ முருகேசன்
இரண்டாம் வகுப்புவரை மட்டுமே படித்த முருகேசனின் பெயர் நூற்றுக்கணக்கான முனைவர் பட்ட ஆய்வேடுகளில் இடம் பெற்றிருப்பது காலம் செய்த கௌரவம். தேய்ந்த ரப்பர் செருப்பு, வியர்வையேறிய வெள்ளை வேட்டி சட்டை, முகமெங்கும் பூத்துக்கிடக்கும் புன்னகையோடு வலம்வரும் இந்த நடமாடும் நூலகத்தை எப்போதும் சூழ்ந்தேயிருக்கிறார்கள் ஆய்வு மாணவர்கள். அரிய புத்தகங்களைச் சேகரிப்பதும், அவற்றை மாணவர்களுக்கு வழங்குவதுமாக முப்பதாண்டுகளாக இயங்கிக்கொண்டிருக்கிறார் இந்தப் ‘புத்தகத் தாத்தா.’ தன் கடைக்கு வந்த பழைய புத்தகங்களைக் காகிதமாக விற்க மனமின்றி சேகரிக்கத் தொடங்க, அதுவே வாழ்க்கையானது. கொரோனாப் பேரிடர்க் காலத்திலும் புத்தகங்களை அஞ்சலில் அனுப்பி மாணவர்களின் எதிர்காலம் காத்தார். எதிர்பார்ப்பில்லாமல் தன் போக்கில் இயங்கிக்கொண்டிருக்கும் முருகேசன், ஏராளமான மாணவர்களின் ஏந்தல்!
தூர் வாரிய தூய்மையாளர் - தியாகராஜன்
விலங்குகளும் பறவைகளும் கோடைக்காலத்தில் நீரின்றி என்ன செய்யும் என்ற அக்கறையில் விழுந்தது, ஓர் உன்னத சேவைக்கான விதை. சீமைக்கருவேல மரங்களாலும் காட்டாமணக்குச் செடிகளாலும் நிறைந்திருந்த தங்கள் கிராமத்து ஏரியை, தன் ஓய்வூதிய சேமிப்பிலிருந்த தொகையைக் கொண்டு தூர்வாரத் தொடங்கினார் விளாங்குடி தியாகராஜன். இந்த ஓய்வுபெற்ற ஆசிரியரின் பணியறிந்து அமெரிக்காவிலிருக்கும் மகளும், சில தொண்டு நிறுவனங்களும் கைகொடுக்க, விரிந்தது பணி. ஜெயங்கொண்டம் வட்டாரத்தில் 80.77 ஏக்கர் பரப்பளவுள்ள ஐந்து நீர்நிலைகள் உயிர்பெற்று மீண்டிருக்கின்றன. தனி மனிதராக இவர் தொடங்கிய பணியில் இன்று பல கரங்கள் இணைய, மாவட்டம் முழுவதுமுள்ள ஏரிகளை இலக்குவைத்து நகர்கிறார் இந்த நல்லாசிரியர்.

உயரம் தொட்ட மனிதர் - ஜெய் விஜயன்
சென்னையில் பிறந்து உலகத்தைக் கலக்கும் டெக் தமிழன். சென்னைப் பல்கலைக்கழகத்தில் புவியியல் பட்டம் பெற்றவர், கணினிதான் எதிர்காலம் என்பதைக் கணித்தது திருப்பம் தந்தது. Oracle, VMWare நிறுவனங்களில் பெரும் பொறுப்புகளை எட்டிப்பிடித்தபின், எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனத்தில் CIO-வாகி வியக்க வைத்தார். தகுந்த நேரம் பார்த்து, அமெரிக்க ஆட்டோமொபைல் விற்பனையாளர்கள் தொழில்நுட்பத்தில் பின்தங்கியிருப்பதை வாய்ப்பாகக் கணித்து ‘டெக்கியான்’ தொழில்நுட்ப நிறுவனத்தைத் தொடங்கினார். அதன்பின் வந்ததெல்லாம் ஏற்றம்தான். அதிநவீன மென்பொருள், கிளவுட் சேவைகளைத் தயார் செய்துதரும் டெக்கியானின் மதிப்பு இந்த ஆண்டு ஒரு பில்லியன் டாலரைக் கடந்து ‘யூனிகார்ன்’ ஸ்டேட்டஸை எட்டியிருக்கிறது. எதிர்காலத்தைக் கணித்து, வாய்ப்பைக் கண்டடைந்து டெக் உலகின் உச்சம் தொட்டிருக்கும் விஜயன், சாதிக்க நினைக்கும் அனைவருக்குமான நம்பிக்கை!

மானுடப்பாலம் - கண்ணன் அம்பலம்
நீர் மேலாண்மையில் உலகுக்கே பாடம் எடுக்கும் தமிழர் டாக்டர் கண்ணன் அம்பலம். காவு வாங்கும் எத்தியோப்பியக் காட்டாறுகளிலிருந்து அந்நாட்டு மக்களைக் காக்கச்சென்ற ரட்சகன். எளிமையாக இவர் வடிவமைத்த பாலங்கள் இப்போது பின்தங்கிய நாடுகளின் வளர்ச்சிக்கான பாடத்திட்டங்களில் இடம்பிடித்திருக்கின்றன. ஒரேநேரத்தில் `உயிர்-நீர்' இரண்டிற்குமான செயல்திட்டங்களோடு களப்பணியில் ஈடுபடும் இந்த அலங்காநல்லூர் காளை, எத்தியோப்பிய வொல்லேகா பல்கலைக்கழகத்தின் பொது நிர்வாகத்துறைப் பேராசிரியர். உள்ளூர் வளங்களைக் கொண்டே மாணவர்களின் துணைகொண்டு 50-க்கும் அதிகமான சிறு பாலங்களையும், 30க்கும் அதிகமான குடிநீர் ஆதாரங்களையும் உருவாக்கிக்கொடுத்திருக்கிறார். ஐ.ஏ.எஸ் கனவு கைகூடாத ஏக்கத்தில் தாய்மண்ணை விட்டு அந்நிய தேசத்துக்குப் பறந்தவர், இன்று மக்கள் சேவையால் எத்தியோப்பிய தேசமே கொண்டாடும் தமிழனாய் தலைநிமிர்ந்து நிற்கிறார்!

டாப் கியர் தமிழர் - ஆர்.வேலுசாமி
மேலை நாடுகளின் ஆதிக்கம் நிலவும் ஆட்டோமொபைல் துறையில் அழுந்தத் தடம் பதித்த நாமக்கல் தமிழர். ஒரு சிற்றூரில் பிறந்து, தமிழ்வழியில் பயின்று ஹார்வார்டு, யேல் பல்கலைக்கழகங்களையெல்லாம் எட்டிப்பிடித்த வேலுசாமி, வாகன வடிவமைப்பில் தொட்டிருப்பது எவரும் தொடவியலாத மைல்கல். வேலுசாமியும் அவரது இளம் பொறியாளர் படையும் இணைந்து உருவாக்கிய மஹிந்திரா TUV 300, மஹிந்திரா தார் வாகனங்கள் பாதுகாப்பிற்கான NCAP அங்கீகாரம் பெற்றதில் தலைநிமிர்ந்தது இந்திய ஆட்டோமொபைல்துறை. இளம் பொறியாளர்களுக்கு நம்பிக்கையாக, தொழில்நுட்பத்தைக் கணிப்பதில் முன்னோடியாக இயங்கும் வேலுசாமி தான் கற்றுணர்ந்த பொறியியல் தத்துவங்களைத் தன் சகாக்களோடு பகிர்ந்துகொள்வதில் சலிப்பே அடைவதில்லை. உயர் பீடங்களில் தமிழர்கள் அதிகம் கால்பதிக்காத ஆட்டோமொபைல்துறையில் தவிர்க்கவியலாத ஆளுமை மனிதராக சாதித்துக்கொண்டிருக்கும் இந்தத் தமிழ்மகனுக்கு வந்தனங்கள்!