
வெவ்வேறு இயக்கங்களைச் சேர்ந்த பேச்சாளர்களிடம் ‘உங்களால் மறக்க முடியாத மேடை எது?' என்று கேட்டேன். அவர்களிடமிருந்து சூடாக வந்த பதில்கள்...
சுப வீரபாண்டியன் (திராவிட இயக்கத் தமிழர் பேரவை)
‘`கலைஞர் கொண்டுவந்திருந்த ‘சமச்சீர் கல்வி’க்கு எதிரான வழக்கில், ‘சமச்சீர் கல்வி முறையே தொடர வேண்டும்’ என நீதிமன்றத் தீர்ப்பு கிடைத்தது. இதையடுத்து தி.மு.க சார்பில் நாடுமுழுக்கக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

சென்னையில், மயிலை மாங்கொல்லை பகுதியில் கூட்டம். கலைஞர் பங்கேற்ற அந்தக் கூட்டத்தில் எனக்கும் பேச வாய்ப்பு கிடைத்தது மறக்கமுடியாத நிகழ்வு. ‘15 நிமிடங்கள் நான் பேசிக்கொள்ளட்டுமா ஐயா’ என்று கலைஞரிடம் கேட்டேன். அவரோ, ‘அரைமணி நேரம் பேசு’ என்று சொல்லிவிட்டார். என் வாழ்க்கையில் எத்தனையோ கூட்டங்கள் பேசியிருந்தாலும் இப்போதும் பேசிக்கொண்டிருந்தாலும் என்னால் மறக்கமுடியாதது கலைஞர் முன்னிலையில் நான் பேசிய அந்தக் கூட்டம்தான். ஏனெனில், இறந்துபோன என் தந்தை ராமசுப்பையா, கலைஞர்மீது மிகவும் ஈடுபாடு கொண்டவர்.
கூட்டம் முடிந்து, காரில் வீடு திரும்பும்போது, ‘நீ என்னோடு ஒரே மேடையில் அமர்ந்து பேசியதை மட்டும் ராமசுப்பையா அண்ணன் பார்த்திருந்தால் ரொம்பவும் பூரித்துப் போயிருப்பார்’ என்று நெகிழ்ந்த கலைஞர், ‘சரி... நாம் ஆசைப்படுவதெல்லாம் நடப்பதற்கு இயற்கை அனுமதிக்குமா என்ன...’ என்று அவரே சமாதானம் சொல்லவும்... எனக்குக் கண்கள் கலங்கிவிட்டன.”
குமரி அனந்தன் (காங்கிரஸ்)
‘`தவத்திரு குன்றக்குடி அடிகளாரோடு நெருங்கியிருந்தவன் நான். பல மேடைகளில் அவரோடு சொற்பொழிவாற்றியிருக்கிறேன். கூட்டம் முடிந்தவுடன் சாப்பாட்டுப் பொட்டலத்தை வாங்கிக்கொண்டு காரில் கிளம்பிவிடுவோம். வழியில் ஆற்றங்கரையில் நிலவொளி வெளிச்சத்தில் அமர்ந்து, அந்தப் பொட்டலங்களைப் பிரித்துவைத்து, அளவளாவியபடியே சாப்பிட்டு மகிழ்வோம்.

ஒருமுறை, ‘நான் பேசுவதை எல்லோரும் கேட்கிறார்களே தவிர, அதன்படி நடக்க யாரும் முன்வருவதில்லை. எனவே இனி நான் பேசப்போவதில்லை’ என்று முடிவெடுத்து அறிவித்துவிட்டார் அடிகளார். இதைக்கேட்டு நாங்கள் எல்லாம் உடைந்துபோனோம்.
கொஞ்சநாளில், குன்றக்குடியிலேயே ஒரு விழா நடைபெற்றது. அந்த விழா மேடையில் அடிகளாரும் இருந்தார். நான் பேச ஆரம்பித்தபோது, குன்றக்குடி மலையையும் குமரன் கோயிலையும் பார்த்துக் கும்பிட்டபடியே, ‘குன்றக்குடி முருகா, குன்றக்குடி பெரியீர், குமரனுக்கும் தமிழ் தருவீர் என்று பாடினார் கண்ணதாசன். ஊமையாகப் பிறந்த குமரகுருபரனைப் பேசவைத்தாய் நீ. பேசிக்கொண்டிருந்த எங்கள் அடிகளாரை ஊமையாக்கிவிடுவாயா...’ என்று கேட்டுக் கண்ணீர் வடித்தேன். இதைக் கேட்டுக்கொண்டிருந்த அடிகளார், தன் கையை வாயில் வைத்து ‘இனி நான் பேசுவேன்’ என்று சைகை செய்தார்.
அழுதால் இறைவனை அடையலாம் என்பார்கள். என் கண்ணீர் அடிகளாரின் அகம் புகுந்தது; தமிழ் சுகம் பெற்றது!’’
தமிழருவி மணியன்
‘`திருநெல்வேலி, நெல்லையப்பர் கோயில் பிரகாரத்தில், தவத்திரு குன்றக்குடி அடிகளார் தலைமையில் பட்டிமன்றம். ‘சமூகப் பிரச்னைகளுக்கு சமயம் தீர்வு தருமா, தராதா’ என்பதுதான் தலைப்பு. சாதாரணமாக இந்தத் தலைப்பில் அரங்கத்தில் பேசிவிடலாம். ஆனால், ஒரு கோயில் பிராகாரத்தில் நின்றுகொண்டு இதைப் பேசுவதென்பது, ஊசிமுனையில் நிற்பது போன்றது; கம்பிமேல் நடப்பது போன்றது. ‘சமயம் தீர்வு தராது’ என்ற தலைப்பில் நான் பேசினேன். இறுதியில், ‘தீர்வு தராது’ என்றே அடிகளாரும் தீர்ப்பு வழங்கினார்.

கோயில் வளாகத்தினுள் அதுவும் அத்தனை பக்தர்களுக்கு மத்தியில் நடைபெற்ற பட்டிமன்றத்தில் இப்படியொரு தீர்ப்பை வழங்கினார். எனவே, மறக்கவியலாத மேடை அது!’’
பழ கருப்பையா (அரசியல்வாதி)
‘`35 வருடங்களுக்கு முன்பு, காரைக்குடியில் காவல் நிலையத்திலேயே ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். அவமானம் தாங்காமல் சில நாள்களில் அந்தப் பெண் தற்கொலையும் செய்துகொண்டார். காவல்துறையினருக்குப் பெரும் இழுக்கை ஏற்படுத்துவதாக இச்சம்பவம் இருந்ததால், ‘அந்தப் பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், குளக்கரையில் வழுக்கிவிழுந்து இறந்து விட்டதாகவும்’ வழக்கை முடித்துவைத்துவிட்டனர்.

தமிழ்நாடு முழுக்கப் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவம், சட்டசபை வரையிலும் எதிரொலித்தது. ஆட்சியாளர்களைக் கண்டித்துக் காரைக்குடியில் ஒரு கண்டனக் கூட்டத்தை ஜனதா கட்சி சார்பில் நடத்தினோம். அதில், பேசிய நான், ‘காவல் நிலையங்களே இதுபோல் காம நிலையங்களாக மாறிவிட்டால், நாடு என்னவாகும்...’ என்றேன். அவ்வளவுதான், பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸாரே, திபுதிபுவெனக் கூட்டத்துக்குள் புகுந்து அனைவரையும் அடித்து விரட்டினர். மேடையில் இருந்தோரையும் தாக்கினர். இதில் என் கை எலும்பு முறிந்தது. 4 மாதம் எங்களைச் சிறையிலும் அடைத்துவிட்டார்கள். சிறையில் எங்களைச் சந்திக்க வரும் அரசியல்வாதிகளின் பேட்டிகளால் நாடு முழுக்க பிரச்னையின் தீவிரம் கூடவே, வழக்கை வாபஸ் பெற்று, எங்களை விடுதலை செய்தது அரசு. எனவே, மறக்கமுடியாத மேடைப்பேச்சு அது!’’
திருமுருகன் (மே 17 இயக்கம்)
‘`பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு சார்பில் 2018-ல் திருச்சியில் நாங்கள் நடத்திய கருஞ்சட்டைப் பேரணிதான் என் வாழ்நாளில் மறக்கமுடியாத நிகழ்வு. அதிகபட்சமாக எட்டாயிரம் பேர் வரையிலும் கூடுவார்கள் என்றுதான் நாங்கள் எதிர்பார்த்துத் திட்டமிடல்கள் எல்லாம் செய்திருந்தோம். ஆனால், ஐம்பதாயிரத்துக்கும் அதிகமானோர் வந்திருந்தனர். கூட்டம் ஆரம்பித்த பிறகும்கூட பேரணி வந்துகொண்டே இருந்தது.

பெரியாரோடு இயக்கப் பணிகளில் ஈடுபட்டிருந்த மூத்த தொண்டர் ஒருவர், ‘எங்களோடு இந்த இயக்கப் பணிகளெல்லாம் முடிவடைந்துவிடும் என்று நினைத்திருந்தோம். ஆனால், திரண்டிருக்கும் இந்தக் கூட்டத்தைப் பார்த்தால் இன்னும் நூறாண்டு நம் பணி தொடரும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது’ என்று நெகிழ்ந்துபோய்ச் சொன்னார். கருஞ்சட்டைகளும், சிவப்பு, நீலநிறச் சட்டைகளும் ஒருங்கே நின்று எதிரிகளை நிலைகுலையச் செய்த அந்தப் பேரணி என் வாழ்நாளில் குறிப்பிடத்தக்க நிகழ்வு!’’
லியோனி (தி.மு.க)
‘`கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாடு அது. ‘செம்மொழி வளர்ச்சிக்குப் பெரிதும் துணை நிற்பது திரைப்படமா, தொலைக்காட்சியா, பத்திரிகையா’ என்பது தலைப்பு. ஐயா சாலமன் பாப்பையாதான் நடுவர். நான் ‘தொலைக்காட்சி’ தலைப்பின்கீழ் பேசினேன். பார்வையாளர்கள் வரிசையில் முதல்வர் கலைஞர், துணை முதல்வர் ஸ்டாலின் என எல்லோரும் அமர்ந்திருந்தனர். அப்போது பேச்சின்போது, ‘இங்கே அரங்கில், ஒரு ஓரமாகத்தான் துணைமுதல்வரே அமர்ந்திருக்கிறார். அதுவும் கழுத்தில் ஐ.டி கார்டுடன் அமர்ந்திருக்கிறார். காவலர்கள் அவரை சல்யூட் அடித்து வரவேற்பார்கள். ஆனாலும்கூட, தமிழின் முன் அனைவரும் சமம் என்பதை எடுத்துக்காட்டுவதற்காகத்தான் அவர் ஐ.டி கார்டு அணிந்திருக்கிறார்’ என்று சொன்னேன். இதைக் கலைஞரும் கேட்டு ரசித்தார்.

மறுநாள், கலைஞரும் ஐ.டி கார்டு அணிந்தபடி விழா அரங்கினுள் வந்துவிட்டார். இதுகுறித்து அவரிடம் எல்லோரும் கேட்க, ‘நேற்றே துணை முதல்வர் ஐ.டி கார்டு அணிந்து வந்திருந்தார். ‘தமிழுக்கு முன் அனைவரும் சமம்தான்’ என்று லியோனியும் சொல்லிவிட்டார். இன்றைக்கும் நான் ஐ.டி கார்டு அணியாமல் வந்துவிட்டால், என்னையும் லியோனி ஏதாவது சொல்லிவிடுவார்’ என்று சொல்லியிருக்கிறார். என் பேச்சையும் நுட்பமாகக் கவனித்து அவர் நடந்துகொண்ட விதம் என்னை நெகிழச் செய்துவிட்டது.’’

புரட்சித்தம்பி (அ.தி.மு.க)
‘`1994-ம் வருடம் சென்னையில், அ.தி.மு.க பேச்சாளர்களுக்கு இடையிலான பேச்சுப்போட்டி நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதிலுமிருந்து 200 பேச்சாளர்கள் கலந்து கொண்டனர். மேடையேறிய பிறகுதான் பேச வேண்டிய தலைப்பே கொடுப்பார்கள். அப்படி எனக்குக் கொடுக்கப்பட்ட தலைப்பு, ‘துணிவுடமை.’ அம்மா (ஜெயலலிதா) தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், ஐந்தே நிமிடம் பேசி, இரண்டாவது பரிசான ‘தங்க மெடல்’ பரிசு பெற்றது என் வாழ்க்கையில் மறக்கமுடியாத தருணம்!’’
மதுக்கூர் ராமலிங்கம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்)
‘`கலைஞர் கைக்குழந்தையாக இருந்தபோது, குலதெய்வத்துக்கு முதல் மொட்டை போடுவதாக அவரின் தந்தை வேண்டியிருந்தாராம். ஆனால், சில சூழ்நிலைகளால் கோயிலுக்குப் போக முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. குழந்தைக்கோ முடி அதிகமாக வளர்ந்துவிட்டது. எனவே, முதலில் உள்ளூரிலேயே குழந்தைக்கு முடி எடுத்துவிடுவோம். அந்த முடியை அப்படியே பத்திரப்படுத்தி வைத்திருந்து, பின்னர் கோயிலுக்குப் போகும்போது காணிக்கையாக்கிவிடுவோம் என்று முடிவெடுத்திருக்கிறார் அவர் தந்தை.

அதன்படியே, கைக்குழந்தையான கலைஞருக்கு மொட்டையடித்து, அந்த முடியை ஒரு மண் கலயத்தில் வைத்து வீட்டில் பத்திரமாக வைத்திருந்திருக்கிறார்கள். ஆனால், திடீரென ஒருநாள் இரவில் கலைஞரின் வீட்டுக்குள் புகுந்த திருடர்கள், அந்த மண் கலயத்தில் என்ன இருக்கிறது என்பது தெரியாமலேயே களவாடிச் சென்றுவிட்டனராம். இந்தச் சம்பவத்தையெல்லாம் தனது ‘நெஞ்சுக்கு நீதி’ புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பார் கலைஞர்.
தி.மு.க-வின் அறக்கட்டளை சார்பாக நடைபெற்ற ஒரு விழாவில் நான் பேசும்போது மேற்கண்ட சம்பத்தை முன்வைத்து, ‘அன்றைக்குக் களவாணிகள் திருடிச் சென்ற முடியை இன்றைக்குக் காலமும் திருடிச் சென்றுவிட்டது...’ என்று சொன்னதோடு, சிறிய இடைவெளிக்குப் பிறகு, ‘சில சமயங்களில் உங்கள் ‘முடி’யை மத்திய அரசும் களவாடியிருக்கிறது...’ என்றும் பேசினேன். விழா அரங்கில் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த கலைஞர் ரொம்பவும் ரசித்துச் சிரித்தார்.’’
சி.பி.ராதாகிருஷ்ணன் (பா.ஜ.க)
‘`2004-ம் வருடம் தமிழக பா.ஜ.க தலைவராக நான் பொறுப்பு வகித்துவந்தபோது, ‘காவிரி - கங்கை நதிநீர் இணைப்பு மாநாடு’ நடத்தினோம். சென்னைத் தீவுத்திடலில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய், அத்வானி, இன்றைய பிரதமர் மோடி உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்துகொண்டு பேசினார்கள்.

இந்த இரண்டு நதிகளையும் இணைக்க வேண்டியதன் அவசியம் குறித்து நானும் மேடையில் பேசினேன். விழா முடிந்து தலைவர்கள் அனைவரும் கிளம்பிக் கொண்டிருந்தனர். ஆனால், வாஜ்பாய் மட்டும் காரில் ஏறாமல் நின்றுகொண்டே, ‘தலைவர் எங்கே, நான் அவரிடம் விடைபெற வேண்டும்’ எனக் கேட்டுக்கொண்டிருந்திருக்கிறார். மேடையின் படிக்கட்டுப் பகுதியில் நின்றுகொண்டு ஒவ்வொருவருக்கும் விடை கொடுத்துக்கொண்டிருந்த நான் வாஜ்பாய் கீழே காத்திருப்பதைக் கவனிக்கவில்லை. சிறிதுநேரத்தில், அத்வானியே என்னைப் பெயர் சொல்லி அழைக்கவும், பதறியடித்தபடி அவர் அருகே ஓடிச்சென்றேன். ‘உங்களிடம் விடைபெறத்தான் ஐயா காத்திருக்கிறார்’ என்று அவர் வாஜ்பாயை நோக்கிக் கைகாட்டினார். முன்னாள் பிரதமர், கட்சியின் மூத்த தலைவர் என மதிப்புமிக்க இடத்தில் இருக்கும் ஒரு மாபெரும் தலைவர், மாநிலத் தலைவரான என்னையும் மதித்து, விடைபெறக் காத்திருந்த அந்தப் பண்பு என்னை பயம்கலந்த சந்தோஷத்தில் ஆழ்த்தியது.
என் முதுகில் தட்டிக்கொடுத்த வாஜ்பாய், ‘மேடையில் நீங்கள் பேசியபடியே, நதிநீர் இணைப்பு என்பது நிச்சயம் ஒருநாள் சாத்தியமாகும்’ என்று வாழ்த்தி விடைபெற்றார். இப்போதும் நான் அடிக்கடி நினைத்துப்பார்த்து நெகிழும் சம்பவம் அது!’’