Published:Updated:

திருச்சி - ஊறும் வரலாறு 27: `குறிஞ்சித் தேன்' எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன்!

எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன்

எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் படைப்புகள் பல பரிசுகளைப் பெற்றன. 'வேருக்கு நீர்' நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றார். அகாதமி விருதைப் பெற்ற முதல் தமிழ்பெண் படைப்பாளர் இவர்தான். வளைக்கரம் சோவியத்லாந்து விருது பெற்றது.

Published:Updated:

திருச்சி - ஊறும் வரலாறு 27: `குறிஞ்சித் தேன்' எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன்!

எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் படைப்புகள் பல பரிசுகளைப் பெற்றன. 'வேருக்கு நீர்' நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றார். அகாதமி விருதைப் பெற்ற முதல் தமிழ்பெண் படைப்பாளர் இவர்தான். வளைக்கரம் சோவியத்லாந்து விருது பெற்றது.

எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன்
தேன் சுவையானது மட்டுமல்ல உடலை வலுவாக்கும் வல்லமை பெற்றது. அதுவும் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சிப் பூவின் 'குறிஞ்சித் தேன்' அபூர்வமானது. எழுத்தாளர்களில் ராஜம் கிருஷ்ணனும் அப்படிப்பட்ட குறிஞ்சித் தேன்தான்.

தமிழ் எழுத்தாளர்களில் அவர் அமைத்த தனிப்பாதையைப் பற்றி அவரே கூறுகிறார், “நான்கு சுவர்களுக்குள் அமர்ந்து வெறும் கற்பனையில் புனையப்படும் எழுத்துக் கோவைதான் நாவல் என்பதில் எனக்கு முழுமையான உடன்பாடு கிடையாது. நாவல் புனைகதைதான். ஆனால் மனித வாழ்க்கையில் பல்வேறு பிரச்னைகளிலும் நிலைகளிலும் உண்மை வடிவங்களைத் தரிசித்த பின்னர் அந்த அனுபவங்களைக்கொண்டு நான் இசைக்கப்புகும் புதிய வடிவமே நாவல்”.

இதுதான் ராஜம் கிருஷ்ணனின் தனி அடையாளம். தனித்த இடம். கதையின் களத்திற்கே நேரில் சென்று, அந்தப்பகுதி மக்களோடு வாழ்ந்து பழகுவார். பெற்ற அனுபவங்களைக் கதையாக்குவார். அதனால் அவரது கதையின் மனிதர்கள் காலில் புழுதிபடிய வியர்வை வடிய நம்மோடு பேசுவார்கள். இவரது நாவல்கள் உண்மைக்கு மிக நெருக்கமாக இருப்பது இதனால்தான். வாசிப்பின் வழியாகவே 'பலவிதமான வாழ்க்கையை' ஒரு வாசகன் தனக்குக் கிடைத்த ஒரு வாழ்க்கையிலேயே வாழ்ந்து பார்க்கிறான். இந்த இலக்கியப் பயன்பாட்டை முழுமையாக்கிய ஒரு படைப்பாளி ராஜம் கிருஷ்ணன்.

எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் வாழ்ந்த அக்ரஹாரம்
எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் வாழ்ந்த அக்ரஹாரம்

அகண்ட காவிரியின் கரையிலுள்ள முக்கியமான ஊர் முசிறி. திருச்சி மாவட்டத்தின் பல சிறப்புகளைக்கொண்ட சிறு நகரம் அது. இங்குதான் ராஜம் கிருஷ்ணன் 1925-ம் ஆண்டு நவம்பர் 5-ம் தேதி பிறந்தார். தந்தை யக்ஞ நாராயண சாஸ்திரி. தாய் மீனாட்சியம்மாள். இவர்களது பூர்வீகம் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மாலாமடை என்ற ஊர். தந்தை பள்ளி ஆசிரியராகப் பணி செய்தார். வடமொழியில் பண்டிதர். அப்பா கொண்டுவந்த தடிமனான ராமாயணம், பக்தி மஞ்சரி போன்ற புத்தகங்களை பாட்டியும் அம்மாவும் படிப்பார்கள். இதுவே ஒரு படிக்கும் சூழலை தனக்குத் தந்ததாக ராஜம் கிருஷ்ணன் கூறுகிறார். ஐந்தாம் வகுப்புவரையே படித்தார். அதற்குமேல் படிக்க அனுப்பவில்லை. வீட்டில் இருந்தபடியே இசை கற்றார். வடமொழியும் கொஞ்சம் படித்தார்.

அந்தக்கால வழக்கப்படி 15 வயதிலேயே திருமணம் முடிந்தது. கணவர் கிருஷ்ணன். பொறியியல் வல்லுநர். பெரிய கூட்டுக் குடும்பம் அது. தந்தை வழியாக கிடைத்த இலக்கிய அறிவும் கணவரின் ஒத்துழைப்பும் அவரை எழுத்தாளராக்கியது. மணிக்கொடி பத்திரிகை சிறுகதைகளில் பல சோதனை முயற்சிகள் செய்து வந்த காலமது. ராஜம் கிருஷ்ணனை 'தாசிகளின் மோசவலை அல்லது மதி பெற்ற மைனர்' எழுதிய இராமாமிர்தம்மாள் அதிகம் பாதித்தார். பாரதி மோகம் இவருக்கு ஏழு எட்டு வயதிலேயே வந்துவிட்டது. பாரதியின் குயில் பாட்டையும் பாஞ்சாலி சபதம் காவியத்தையும் பெரியவர்களுக்கு படித்துக்காட்டி அதன் இன்பத்தில் தான் மூழ்கியதாக பின்னாட்களில் அவர் சொன்னார். ராஜம் கிருஷ்ணனை எழுத உற்சாகப்படுத்தியவர் கி.வா.ஜகந்நாதன். ராஜம் கிருஷ்ணன் எழுதி முதல் பரிசு பெற்ற 'பெண்குரல்' என்ற நாவலை தனது கலைமகளில் தொடராக இவர்தான் வெளியிட்டார். கி.வா.ஜா வின் சொந்த ஊர் முசிறிக்கு அருகிலுள்ள கிருஷ்ணராயபுரம். அதைப்போலவே தொட்டியத்தைச் சேர்ந்த எழுத்தாளர் லஷ்மி, ராஜம் கிருஷ்ணனின் நெருங்கிய தோழி. சாவி நடத்திய வெள்ளி மணியில்தான் ராஜம் கிருஷ்ணனின் முதல் சிறுகதையான 'வெள்ளி டம்ளர்' வந்தது.

எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் படித்த பள்ளி
எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் படித்த பள்ளி
இதன் பின்னர் இவர் படைப்புகள் வேகமெடுத்தன. அன்புக்கடல் (1954) மாயச்சுழல் (1959) மலர்கள் (1958) என்று பல நாவல்கள் வந்தன. இதில் ஆனந்த விகடன் முதல் பரிசை இவரது 'மலர்கள்' பெற்றது. 1963-ல் வந்த இவரது 'குறிஞ்சித் தேன்', நாவல் உலகில் ராஜம் கிருஷ்ணனுக்கு தனி இடத்தைக் கொடுத்தது.

இந்த நாவலுக்கு முன்னுரை எழுதிய அய்யா டாக்டர் மு.வரதராசன், குறிஞ்சித் தேன் நாவலை உரைநடைக் காவியம் என்கிறார். அதோடு வேகமாக மாறிவரும் நீலகிரி மலை மக்களின் வாழ்க்கையை முன்வைத்து “இயற்கையோடு ஒட்டிய வாழ்வையும் செயற்கையால் ஓங்கும் இடர்களையும் இணைத்து காட்டியுள்ளார் ராஜம் கிருஷ்ணன்" என்கிறார். இந்த நாவலின் 'பாரு' என்னும் பாத்திரத்தின் மீது தன் மனதைப் பறி கொடுக்கிறார் மு.வ. அவர் சொல்கிறார் “நல்ல வேளை பாரு அமைதியாக நிலமகளின் மடியில் உயிர் நீத்தாள்” என்று. அவள் உயிர் நீத்ததே மு.வ க்கு நிம்மதியைத் தந்திருந்தால், பாருவின் வாழ்க்கையை ராஜம் கிருஷ்ணன் படைத்தவிதம் எவ்வளவு உயிர்ப்பானது!

இந்த நாவலை டாக்டர் ந.சஞ்சீவி ஆய்வு செய்தார். ஐந்து குறிஞ்சி கால எல்லையான (5 x 12 = 60) அறுபது ஆண்டுகளில் நீலகிரி மலைவாழ் மக்களான படகர் வாழ்வில் ஏற்பட்டுள்ள பண்பாட்டு மாறுதல்களை இந்த நாவல்தான் முதலில் பேசுவதாக சஞ்சீவி கருதுகிறார். அவரது ஆய்வில் கவித்துவமாக சொல்கிறார், “நீலமலைத் தாயின் நெஞ்ச அடையில் இருந்து நெகிழ்ந்து வடித்த வாழ்வுத்தேனே இலக்கியத் தேனான குறிஞ்சித் தேன்” என்கிறார். மானுடவியல் செய்திகள் மண்டிக்கிடக்கும் புதினமாகவும் சொல்கிறார். “படகர் வாழ்க்கையை எட்கர் தர்ஸ்டன் (‘தென்னிந்திய குலங்களும் குடிகளும்’ எழுதிய மானுடவியல் முன்னோடி) இலைமறை காயாகவே சொன்னார். ராஜம் கிருஷ்ணனோ உண்மைகள் நிறைந்த கதையாக்கி உள்ளத்தை உருக்கிவிட்டார். அதுமட்டுமல்ல, படகர் மொழிச் சொற்களுக்கும் தமிழுக்கும் உள்ள உறவை கதையின் வழியாகவே புரியவைக்கிறார்” என்கிறார் சஞ்சீவி. குறிஞ்சித்தேன் கலைமகள் பத்திரிகையில் தொடராக வந்து வாசகரைக் கவர்ந்த படைப்பாகும்.

குறிஞ்சித் தேன்
குறிஞ்சித் தேன்

மக்களைச் சந்தித்து, மக்களோடு வாழ்ந்து மக்களையே எழுத்தாக்கும் கள எழுத்துதான் அவரை சமூக இயக்கங்களோடு இணைத்தது. காந்தியத்தின் மீது அதிக நம்பிக்கை கொண்டவர் அவர். அதேநேரம் பொதுவுடமை இயக்கங்களோடும் நட்போடிருந்தார். மனிதநேயம் கொண்ட உலகக் கண்ணோட்டமும் பெண்ணிய சிந்தனையும் அவரிடம் மலர இந்த தத்துவப் பார்வையும் பெரும் பங்காற்றியது. அதனால்தான் எழுத்தாளர் திலகவதி, “ராஜம் கிருஷ்ணன் சமூகம் சார்ந்து சிந்திப்பவர். ராஜம் கிருஷ்ணனைப் பொறுத்தவரையில் சமூகம் என்பது நீர், காற்று, உணவு போல இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. சமூக விழிப்புணர்வை எதிர்நோக்குகிற ஒரு வலுவான உள்ளடக்கத்தை தாங்கி நிற்பவை அவருடைய எழுத்துக்கள்” என்கிறார்.

பாதையில் பதிந்த அடிகள்
பாதையில் பதிந்த அடிகள்

இதற்கு சிறந்த உதாரணம் அவரது நாவலான 'பாதையில் பதிந்த அடிகள்'. இது மணலூர் மணியம்மை என்னும் விட்டு விடுதலையாகி நின்ற ஒரு பெண் போராளியின் வாழ்க்கைக் கதை. இதை "வரலாற்றுப் புதினம்” என்றே ராஜம் கிருஷ்ணன் சொன்னார். வரலாறு உண்மை சார்ந்தது. புதினம் கற்பனையும் கலந்த சுவையானது. உண்மையையும் சுவையையும் ஒருசேர கையாள்வது சவாலான ஒன்று. மணியம்மை வாழ்க்கை என்றோ நடந்த ஒன்றல்ல. 70 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அதிசயம் அது. தினமணி கதிரில் தொடராக வந்தது. ஒவியர் கோபுலு கோடுகளால் மணியம்மையை உயிர்த்தெழச் செய்தார். மற்ற நாவல்களைவிட இதில் ராஜம் கிருஷ்ணனின் எழுத்து கனிந்து ருசிக்கிறது. மணலூர் மணியம்மையில், ராஜம் கிருஷ்ணன் தன்னையே கண்டாரோ என்று தோன்றுகிறது.

திருவாரூர், நாகை, மன்னார்குடி பகுதிகளை உள்ளடக்கிய 'கிழக்குத் தஞ்சை' என்று அழைக்கப்பட்ட பகுதிகளின் சமூக-அரசியல் வரலாற்றை ரத்தமும் சதையுமாகச் சொன்ன நாவலிது. மணலூர் மணியம்மை கதையைத் தொடுவதற்கே ஒரு துணிச்சல் வேண்டும். காரணம் எல்லா அரசியல் இயக்கங்களின் வேஷம் கலைவதை மணியம்மை பார்ப்பதைப் போலவே நம்மையும் ராஜம் கிருஷ்ணன் பார்க்கவைக்கிறார். பண்ணை அடிமை என்பதன் உளவியலும் அடக்குமுறையின் கொடுமையும் நம்மை கதிகலங்க அடிக்கிறது.

வாலாம்பாள் மணலூரில் பிறந்தவள். “மணியாட்டமா இருக்கான்னு அப்படியே கூப்பிட்டு கூப்பிட்டு மணின்னு பேர் நிலைச்சுபோச்சு”. இப்படிப் பெயருக்கான காரணத்தை சித்தி சொல்கிறாள். திருவாரூர் - நாகப்பட்டினம் ரயில் பாதையில் அடியக்காமங்கலம் கிராமத்திலிருந்து 5 மைல் நடந்தால் மணலூர் வந்துவிடும். 17 வயதில் பணமும் செல்வாக்கும் படைத்த நாகப்பட்டினம் வக்கீலுக்கு கல்யாணம் கட்டிக்கொடுக்கிறார்கள். 27 வயதில் விதவையாகிறாள். வாழாவெட்டியான அந்த பிராமணப்பெண் தாய் வீடான மணலூருக்கு வந்துவிடுகிறாள். பூஜை புனஸ்காரம் சலித்துப்போகிறது அவளுக்கு.

காலந்தோறும் பெண்
காலந்தோறும் பெண்

அவள் தஞ்சையில் தன் சகோதரி கணவரோடு காந்தியைப் பார்க்கிறாள். அவர் தேசிய இயக்கத்தில் பெண்களைச் சேரச்சொல்கிறார். காந்தியத்தை ஏற்ற மணியம்மாள் சனாதனப் பிடியிலிருந்து மீள்கிறாள். மணலூர் காளியம்மன் கோயில் எதிரே காங்கிரஸ் கொடி ஏற்றி கூட்டம் போடுகிறாள். பண்ணை அடிமைகளாக வாழ்ந்த தலித் மக்களையும் அழைத்துவருகிறாள். மாட்டு வண்டி பூட்டி சவாரி செய்கிறாள். வயலுக்குப்போய் உழைக்கும் மக்கள் படும் பாட்டை பார்க்கிறாள். நடுவாள் எனப்படும் ஏஜென்ட் செய்யும் அடாவடியை எதிர்க்கிறாள். தங்கள் வயலில் உழைக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அதிக கூலியும் நெல்லும் தருகிறாள். இதனால் மற்ற மிராசுகள் பண்ணையார்கள் மணியை வாய்க்காலில் தள்ளி பழிதீர்க்கிறார்கள்.

விதவையான மணியம்மாள் வீட்டைவிட்டு வெளியே போவதை காந்தியவாதியான உறவுக்காரர் விஸ்வநாதன் ஏற்கவில்லை. சனாதனத்தை மறுக்காத தேசியம் தனக்கு வேண்டாம் என்கிறாள் மணியம்மாள். குடிசைகளின் குழந்தைகளுக்கெல்லாம் அம்மா ஆகிறாள். அம்மை கண்ட குழந்தைகள், பெண்கள் எல்லாம் மணியம்மா தந்த உணவால் இளநீரால் குணமாகிறார்கள். அவர்களுக்கு இவள்தான் இப்போது மாரித்தாய். அவர்கள்தான் இவளை மணியம்மா என்றார்கள்.

அநியாயத்தைத் தட்டிக்கேட்க, தனியாகப் போராட குடிசைக்குப்போய் ராசு வாத்தியாரிடம் சிலம்பம் கற்றுக்கொள்கிறார். கம்புசுற்ற புடவை இடைஞ்சல் செய்கிறது. அதனால் வேட்டி, சட்டை, துண்டு, கிராப் நடுவகிடு என்ற புதுமைக் கோலத்தை எடுக்கிறார். கையில் எப்போதும் ஒரு தடிக்கம்பு. சுழற்றும் லாகவம் பார்த்த ராசு வாத்தியார், “அம்மா நீங்க மனுசப்பிறவி இல்ல. எங்க ஆத்தா” என்கிறார். கிட்டு வாங்கி வந்த சைக்கிளில் திருவாரூர் கடைவீதியில் கம்பீரமாகப் போகிறார். அவர் மீண்டும் மீண்டும் சொல்வது ஆணைவிட பெண் தாழ்ந்தவள் அல்ல என்பதே. காங்கிரஸ்க்குள்ளிருந்த சனாதனம் முகம் சுளிக்கிறது.

இடிபாடுகள்
இடிபாடுகள்
காங்கிரசின் போதாமை அவரை சோசலிஸ்ட்டாக மாற்றுகிறது. தன் ஊரில் ஜாதி கடந்து உழவர்களை ஒன்றாக்க 'நாகை தாலுகா கிசான் கமிட்டி' அமைக்கிறார். ஜனசக்தி பேப்பர் வாங்கி விற்கிறார். பொதுக்கூட்ட மேடைகளில் அம்மாவுக்கு தனி மவுசு. மரக்காதொப்பி போலிஸ்கூட தலையாட்டி கேட்கும் அவர் பேச்சை. இந்தப் பேச்சுகளின் வழியே ராஜம் கிருஷ்ணன் அந்தகால சமூக அரசியலை நமக்கு புரியவைக்கிறார்.

“ஒரு பெண், தனக்கு சமுதாயம் செய்யும் இழிவை பொறுத்துக்கொண்டு முடங்காமல், தைரியமாக அதே சமுதாயத்தை எதிர்ப்பது குற்றமா” இது நாவலில் மணியம்மா தன் தோழி குஞ்சம்மாவை கேட்கும் கேள்வி மட்டுமல்ல, வாசகரை ராஜம் கிருஷ்ணன் கேட்பதும் இதைத்தான். நாகை ஸ்டீல் ரோலிங் மில்லில் வேலை செய்யும் தொழிலாளிக்கு 6 அணா கூலி. 10 மணிநேர வேலை. வீடெங்கும் இருட்டு. எலும்பும் தோலுமாய் குழந்தைகள். மணியம்மா நாகப்பட்டினத்தில் ஊர்வலம் போகிறார். அதுவரை சாமி ஊர்வலம் பார்த்த ஊர் 'பாட்டாளி ஊர்வலம்' பார்க்கிறது. பயந்தவர்கள் “சீட்டைக் கிழிச்சிடுவான் தாயே” என்கின்றனர். அம்மாவோ “சீட்டைத்தான் கிழிக்க முடியும். சீட்டுக்கட்டை கிழிக்க முடியுமா?” அதாவது ஒண்ணாயிருந்தா ஜெயிக்கலாம் என்று சொல்லித்தருகிறார். மலிவு விலையில் அரிசி, மண்ணெண்ணெய் போடும் உணவு டிப்போவை மில்லில் திறக்கவைக்கிறார்.

ஊரும் சொந்த ஜாதியும் மணியம்மாவை ஏற்கவில்லை. பண்ணையார்கள் அட்டகாசம், நாடு சுதந்திரம் பெற்ற பின்னாலும் குறையவில்லை. மயிலாங்குடிப் பண்ணையில் அம்மாவைச் சுற்றி வளைத்து ஆண்டைகள் சிறைப் பிடிக்கிறார்கள். விவசாயத் தொழிலாளிகள் திரண்டுவந்து அம்மாவை மீட்கிறார்கள். சுதந்திர சர்க்கார் தடுப்புக்காவல் சட்டத்தால் அம்மாவைக் கைது செய்து வேலூருக்கு கொண்டுபோகிறது. அங்கு மதுரை ஜானகி, ருக்மணி, கீழ்ப்பசலை சிவப்பி, ஷாஜாதி என்று பலரோடு சேர்ந்து சிறைக்குள்ளும் போராடுகிறார். இதை தனி சினிமாவாகவே எடுக்கலாம்.

முதல் பொதுத்தேர்தல் வருகிறது. காங்கிரஸ் கட்சிக்கும் கம்யூனிஸட் கட்சிக்கும்தான் முக்கிய போட்டி. நாகையில் மணியம்மை போட்டியிட விரும்புகிறார். கட்சி ஏற்கவில்லை. ஆனாலும் மணியம்மா தனது மக்கள் செல்வாக்கால் முதல் தேர்தலிலேயே கம்யூ.கட்சி வேட்பாளரை வெற்றியடைய வைக்கிறார். ஆனாலும் கட்சியில் தானொரு பெண் என்பதால் அந்நியப்பட்டு நிற்பதை உணர்கிறார்.
எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன்
எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன்

ஆனாலும் மக்கள் அம்மா மீது உயிரையே வைத்திருக்கிறார்கள். பூந்தாழங்குடியில் பிறந்த குழந்தையை அம்மா கையில் கொடுத்து பேர் வைக்கச் சொல்கிறார்கள். அம்மா உஷா எனப் பெயர் வைக்கிறார். அன்று ஒரு பேச்சுவார்த்தைக்காக பிணைவாசல் என்ற ஊருக்கு போகிறார். அங்கே ஒரு தோப்பில் பண்ணையார் நீள் கொம்புள்ள ஆண் கலைமான் வளர்க்கிறார். அம்மா திருவாரூர் போக பஸ்க்காக நிற்கிறார். அப்போது திடீரென பாய்ந்துவந்த கலைமான் அம்மாவின் இடுப்பிலும் விலாவிலும் குத்து வாளாய் கொம்பு பாய்ச்ச, அம்மா மண்ணில் சாய்கிறார். இது விபத்தல்ல சதி என்று பரவலாகப் பேசப்பட்டது. திருவாரூரை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து சாரிசாரியாய் மக்களின் கட்டுக்கடங்காத கூட்டம். 'காந்தி செத்தப்ப வந்தமாதிரில்ல கூட்டம் வருது' என்று அம்மாவை உதாசீனம் செய்த சனாதினிகள், ஆம்பிளை மாதிரி திரியராளே என்ற வீட்டுப் பெண்கள், தனிமனித சாகசம் ஒத்துவராது என்ற இயக்கங்கள் எல்லோரும் வியந்தார்கள்.

“மாடுமுட்டி கேட்டதுண்டு

மான் முட்டி கேட்டதுண்டா

ஆடுமுட்டிப் பார்த்ததுண்டு

ஆமை முட்டி பார்த்ததுண்டா

ஏழைகுலம் குளுரும்

எங்கம்மா பேருசொன்னா

மக்கள் குலம் விளங்கும்

மணியம்மா பேருசொன்ன"

என்ற மக்களின் ஒப்பாரியோடு நாவல் முடிகிறது. தமிழ் நாவல்களில் குறிப்பிடத்தக்கதாக இது இன்றும் பேசப்படுகிறது.

பாரதியின் வாழ்க்கையை பலர் எழுதியுள்ளார்கள். ஆனாலும் ஒரு பெண்ணியப் பார்வையோடு எழுதியது ராஜம் கிருஷ்ணன்தான். நம் கூத்து, நாடகம், வியாசர், வில்லிபுத்தூரார் யாரும் செய்யாத வேலையை பாரதி செய்தான். பாஞ்சாலியை 'தன் உணர்வோடு' பேசவைத்தான். அதனால்தான், மூளையை கசக்கிப் பிழிந்து வடித்த மகாகாவியம் இது என்று அவனே சொன்னான். அதனால்தான் பெண்ணியப் பார்வையோடு எழுதிய பாரதியின் "வரலாற்றுக் கதைக்கு" 'பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி' என்று தலைப்பிட்டார் ராஜம் கிருஷ்ணன். பாரதியின் குடும்ப வாழ்வின் பின்னணியோடு விரிவாக 636 பக்கங்களில் எழுதப்பட்ட வரலாறு இது. தன் அர்பணிப்பு நிறைந்த தேடலால், பாரதி வாழ்வின் பல காட்சிகளை சினிமாபோல் பார்க்கவைக்கிறார். பாரதி ஒப்பற்ற மானுடனாகி அவன் ஆற்றல் ஒளிவீச அடித்தளம் அமைத்தது காசி நகர வாழ்க்கையே என்பது ராஜம் கிருஷ்ணனின் துணிபு. அதனால் இந்த நூலில் பாரதியின் 'காசி வாழ்க்கை' விரிவாகப் பேசப்பட்டுள்ளது. மீசை வைத்துக்கொண்டதும் அங்குதான். ஆசையோடு ஷெல்லி கற்றதும் அங்குதான். இந்துஸ்தானி, சமஸ்கிருதம், ஆங்கிலம் எல்லாம் காசியில்தான் கற்றான் பாரதி.

பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி
பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி

பாரதியை யானை அடித்த துயரமும், மீண்டுவந்த பாரதிக்கு ஏற்பட்ட வயிறு நோவும், அதற்கு பாரதி மருந்துண்ண மறுத்த காட்சியில், ”நான் அமுதம் பருகியவன். எனக்கு மருந்து வேண்டாம். நான் அமரன் எனக்கு மரணமில்லையடா சாமி” என்கிறான் பாரதி. இப்படி பாரதியை பிழிந்து தருகிறார் ராஜம் கிருஷ்ணன். உயிரின் கடைசி துளியில்கூட முகம் கழுவி தலைப்பாகை சரிசெய்து பாரதி மீசைதடவும்போது செல்லம்மா மட்டும் விம்மவில்லை. படிக்கிற எல்லோரும் விம்முகிறோம்.

பாரதி மறைவோடு பல வரலாறுகள் முடிந்துபோக, ராஜம் கிருஷ்ணன் அதன்பிறகான வாழ்வில் செல்லம்மாள் அடைந்த துன்பத்தைக் காட்டுவதுதான் தனித்துவமானது. கணவனை இழந்த பெண்களுக்கு நிகழும் கோரமான சடங்குகளுக்குள் செல்லம்மாவையும் சனாதனம் இழுத்ததுதான் நாவலின் உச்சம். சகுந்தலாவுக்கு கல்யாணம் ஆகணுமே என்று பயந்து செல்லம்மாவே மஞ்சள் குங்குமத்தை விட்டுவிடுகிறாள். பாரதியிடம் மனதை பறிகொடுத்த நடராஜன் தன் குடும்பத்தின் தயக்கங்களையும் சமாளித்து சகுந்தலாவை மணக்கிறான். நடராஜனுக்கு மானாமதுரையில் சர்வேயராக வேலை. குழந்தை பிறக்கிறது. செல்லம்மாவையும் உடன் அழைத்துப்போகிறார்கள்.

மூத்த மகள் தங்கம்மாவை உறவுகள் கொட்டுகின்றன. புருஷனே போனபின்னால் எதற்கு கலர்புடவையும் ரவிக்கையும்? நீயாவது உங்க அம்மாவுக்கு சொல்லக்கூடாதா? குலாச்சாரம் வேணாமா? வாழ்ந்த காலத்தில் எதுவும் செய்யாத சொந்தம் இப்போது ஆச்சாரம் பேசியது. தங்கம்மா தாயை ராமேஸ்வரம் அழைத்துப்போய் விதவைச் சடங்குகளை செய்து அழைத்துவருகிறாள். அண்ணன் அப்பாதுரையும் மருமகன் நடராஜனும் இடிந்துபோகிறார்கள். ராஜம் கிருஷ்ணன் வேதனையோடு பேசுகிறார், “பாஞ்சாலியின் சபதம் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. ஆனால் உன்னுடைய பாஞ்சாலியின் வீர உரைகள் ஆயிரக்கணக்கான பாஞ்சாலிகளை தோற்றுவித்திருக்கின்றன” என்பதோடு நாவல் முடிகிறது.

இவரின் 'முள்ளும் மலர்ந்தது' நாவல் பீகார் சம்பல் கொள்ளையர்களைப் பற்றியது. கொள்ளைக்கூட்டத் தலைவன் ‘டாகுமான்சி’யை சந்திக்க சம்பல் செல்ல தீர்மானித்ததும், அவர் கணவர் கிருஷ்ணன் தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு உடன் சென்றார். 400 கொலைகள் செய்த தாசில்தார் சிங்குடன் 4 மணி நேரம் பேசினார். இப்படிப் பல கள அனுபவங்களுக்குப் பிறகே முள்ளும் மலர்ந்தது.

கரிப்பு மணிகள்
கரிப்பு மணிகள்

இலக்கியம் வெறும் பொழுதுபோக்கக் கொறிக்கும் சிறுதீனியாகி விடக்கூடாது. அது மக்களின் வாழ்வுக்கு ஆரோக்கியமான சத்துணவைப்போல் சமுதாய உணர்வை ஊட்டுவதாக இருக்கவேண்டும் என்ற நோக்கமே தன்னை புதிய புதிய களங்களுக்கு அழைத்துச் செல்வதாகச் சொல்லும் ராஜம் கிருஷ்ணனின் 'கரிப்பு மணிகள்', தூத்துக்குடி உப்பளத்தின் வெயிலை நமக்கு கடத்தும் படைப்பாகும்.

ஏறக்குறைய 75 படைப்புகளைத் தந்தவர் ராஜம் கிருஷ்ணன். இதில் நாவல்கள்தான் அதிகம். நிறையச் சிறுகதைகள் எழுதியவர். இந்த ஆண்டு சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் அம்பை தொகுத்த பெண் எழுத்தாளர்கள் சிறுகதை தொகுப்பான ‘மானுடம் வெல்லும்’ நூலில் ராஜம் கிருஷ்ணனின் 'மனதுக்குப் புரியாதவை' சிறுகதை உள்ளது. இவர் எழுதிய டாக்டர் ரெங்காச்சாரி முக்கியமான வாழ்க்கை வரலாறாகும்.

இவரது படைப்புகள் பல பரிசுகளைப் பெற்றன. 'வேருக்கு நீர்' நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றார். அகாதமி விருதைப் பெற்ற முதல் தமிழ்பெண் படைப்பாளர் இவர்தான். வளைக்கரம் சோவியத்லாந்து விருது பெற்றது. இலக்கிய சிந்தனை விருதை 'கரிப்பு மணிகள்' நாவலும் பாரதீய பாஷா பரிஷத் பரிசை 'சேற்றில் மனிதர்கள்' நாவலும் பெற்றன. தமிழக அரசின் பரிசை சுழலில் சிக்கிய தீபங்கள் அடைந்தது. திரு.வி.க விருது, அக்னியின் அட்ஷர விருது போன்ற பல விருதுகளைப் பெற்றவர் ராஜம் கிருஷ்ணன். ரஷ்யா, செக் போன்ற நாடுகளுக்கு அழைப்பின்பேரில் சென்றுவந்தார்.

எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன்
எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன்

அவரது அன்பான கணவர் கிருஷ்ணன் பக்கவாத நோயால் தனது 90ம் வயதில் காலமானார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. சில உறவினர்களை நம்பி தன்னிடமிருந்த பணத்தையும் சொத்தையும் கொடுத்தார். அவர்கள் ஏமாற்றிவிட்டனர். நிர்கதியாகநின்ற அவரை சில நண்பர்களும் சகோதரரும் விச்ராந்தி என்ற முதியோர் இல்லத்தில் சேர்த்தனர். உயிரோடிருக்கும்போதே ஒரு எழுத்தாளரின் படைப்புகளை முதல்முறையாக நாட்டுடைமையாக்கி, 3 லட்சம் பணத்தை ராஜம் கிருஷ்ணனுக்கு கலைஞர் கருணாநிதி கொடுத்தார். அதனை மு.க.ஸ்டாலின் 11-7-2009 அன்று மருத்துவமனைக்கே சென்று ராஜம் கிருஷ்ணனிடம் கொடுத்தார்.

தனது 90 வயதில் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் 21-10-2014 அன்று ராஜம் கிருஷ்ணன் காலமானார். அவரது பணத்தை ராமச்சந்திரா செவிலியர் கல்லூரிக்கும் உடலை ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரிக்கும் கொடுத்துவிட்டார். எழுதிக் குவித்த கைகளால் இன்றும் நம்மை புதிய களங்களுக்கு அழைத்துப்போகிறார் ராஜம் கிருஷ்ணன்.

- இன்னும் ஊறும்