Published:Updated:

திருச்சி - ஊறும் வரலாறு - 31: கோடுகளின் ஆதியும் வண்ணங்களின் மூலமும்! - ஓவியர் ஆதிமூலம்

ஓவியர் ஆதிமூலம்

Abstract Art எனப்படும் உருவம் கடந்த வண்ணமயமான ஓவியத்தை இசை கேட்கும் அனுபவத்தோடு ஆதிமூலம் ஒப்பிட்டார். இசையைக் கேட்டு உள்வாங்கி ரசிப்பதன் மூலம் ஏற்படும் உணர்ச்சியைப்போலவே அரூப ஓவியங்களும் உள்நுழைந்து பரவசப்படுத்தும் தன்மையைக் கொண்டவை என்றார்.

Published:Updated:

திருச்சி - ஊறும் வரலாறு - 31: கோடுகளின் ஆதியும் வண்ணங்களின் மூலமும்! - ஓவியர் ஆதிமூலம்

Abstract Art எனப்படும் உருவம் கடந்த வண்ணமயமான ஓவியத்தை இசை கேட்கும் அனுபவத்தோடு ஆதிமூலம் ஒப்பிட்டார். இசையைக் கேட்டு உள்வாங்கி ரசிப்பதன் மூலம் ஏற்படும் உணர்ச்சியைப்போலவே அரூப ஓவியங்களும் உள்நுழைந்து பரவசப்படுத்தும் தன்மையைக் கொண்டவை என்றார்.

ஓவியர் ஆதிமூலம்
“சினிமாவில் கதாநாயகனுக்கோ கதாநாயகிக்கோ கூடுதல் வருமானம் கிடைப்பதாகச் சொல்வார்கள். அதற்கும் மேல்—ஓவியக் கலைஞர்களின் வருமானம் கூடியிருக்கிறது. நடிகரின் ஒருநாள் சம்பளத்தைவிட ஓவியரின் ஒருநாள் உழைப்பின் மதிப்பு—பத்துப் பங்கு இருபது பங்கு அதிகமாக இருக்கும் என்று நம்புகிறேன்.”
ஓவியர் ஆதிமூலம்
“நான் ஒரு கோட்டை வரைகிறேன். அந்தக் கோட்டை ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்கிறேன். ஒரு கோடுபோட பத்து நிமிஷம்தான் ஆகும். இந்தப் பத்து நிமிஷத்தில், ஒரு ஸூப்பர் ஸ்டார்கூட ஒரு லட்சம் சம்பாதித்துவிட மாட்டார். இதுதான் இன்றைக்கிருக்கிற ஓவியர்களின் நிலைமை.”
ஓவியர் ஆதிமூலம்

இப்படிக் கம்பீரமாகச் சொன்னவர் ஓவியர் ஆதிமூலம்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள சிறு நகரமான துறையூருக்கு அருகில் உள்ள கீரம்பூர் கிராமத்தில் பிறந்தவர் ஆதிமூலம். அப்பா முத்துகிருஷ்ணன் ஒரு விவசாயி. கீரம்பூர் முத்துகிருஷ்ணன் ஆதிமூலம்தான் கே.எம்.ஆதிமூலமாகக் கோடுகளாலும் வண்ணங்களாலும் உலகை வசீகரித்தார். அம்மா செல்லம்மாள். இவர்களுக்கு ஐந்து குழந்தைகள். ஆதிமூலம் நான்காவது குழந்தையாக 1938-ல் பிறந்தார். பச்சை மலைக்கும் கொல்லி மலைக்கும் இடையில் உள்ள அழகான கிராமம்தான் கீரம்பூர். அங்குள்ள பள்ளியில் ஆறாம் வகுப்பு வரை படித்தார் ஆதிமூலம். துறையூரில் ஆதிமூலத்தின் மூத்த அக்காவின் கணவர் ஆனந்தா கஃபே என்ற ஹோட்டலை நடத்திவந்தார். அக்கா வீட்டில் தங்கி துறையூர் ஜமீன்தார் உயர்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி படித்தார் ஆதிமூலம்.

ஓவியர் ஆதிமூலம்
ஓவியர் ஆதிமூலம்

படிக்கிற காலத்திலேயே நிறைய படங்கள் வரைந்ததாக அவரது அண்ணன் கே.எம்.ரங்கசாமி சொல்கிறார். மாணவனான ஆதிமூலம் போட்ட படம் முரசொலி பொங்கல் மலரில் கலைஞரின் கவிதையோடு வந்ததாம். பெரியார், பாரதிதாசன், அண்ணா, கருணாநிதி போன்றோரின் படங்களை வரைந்து அவர்களிடம் கையெழுத்தை ஆதிமூலம் வாங்கியதாக அவரது தம்பி கே.எம்.சோமசுந்தரம் சொல்கிறார். அம்மா கடைசிவரை போட்டோவே எடுத்துக்கொள்ளவில்லையாம். ஆதிமூலம் வரைந்த அம்மா-அப்பாவின் ஓவியத்தைத்தான் ஃப்ரேம் போட்டு மாலை போட்டிருப்பதாக அவரின் அண்ணன் கூறுகிறார்.

ஊரில் இருந்த பெருமாள் கோயில் திருவிழாவில் பக்தர்கள் நேர்த்திக்கடனாக அளிக்கும் சுடுமண் சிற்பங்களும் மரத்தாலான வாகனங்களும் சிறுவன் ஆதிமூலத்தின் கலைமனதைக் கவர்ந்தன. மாரியம்மன் கோயில் மண்குதிரைகளையும் அவன் ரசித்தான். மாரியம்மன் கோயிலுக்கு உத்சவ வாகனங்கள் செய்யும் ஒருவர், மரத்தைப் பெரிய துண்டுகளாக்கி இழைத்து சிறு துண்டுகளாக்கியபோது ஒன்றுமே ஆதிமூலத்திற்குப் புரியவில்லை. அந்தத் தச்சர் எல்லாத் துண்டுகளையும் இணைத்தபோது ஒரு அலங்காரமான மயில் எழுந்து தோகைவிரித்தது. இப்படிக் கலையின் வசீகரத்தில் அவன் சிறு வயதிலேயே மூழ்கினான். அவன் ஊரின் மலைக்காட்சிகளும் அதன் வண்ணங்களும் அவனை மயக்கின.

ஓவியங்கள் வழியாய் கண்ணுக்கு விருந்தளிக்கும் கலைஞர்களை “கண்ணுள் வினைஞர்கள்” என்றது பழந்தமிழ். திருப்பரங்குன்றத்தில் உள்ள சித்திரை மாடத்து ஓவியங்களைப் பார்த்துக்கொண்டே உயிர்நீத்த பாண்டிய மன்னனை “சித்திர மாடத்து துஞ்சிய பாண்டியன் நன்மாறன்” என்றது நம் புறநானூறு. இதுதான் தமிழனது ஓவிய மரபு. சமண பௌத்தம் கடந்து சேர சோழ பாண்டிய பல்லவ நாயக்க மராட்டிய ஆங்கிலேயர் என்று நீள்கிறது அந்த மரபு. அந்த ஒளிக்கோடுகள் ஆதிமூலத்தின் மீது படிந்ததுதான் வரலாறு.
100 காந்தியில் ஒரு காந்தி
100 காந்தியில் ஒரு காந்தி

ஒன்பது வயதிலேயே ஆதிமூலம் காந்தியின் ஒல்லியான வசீகர உருவத்தை வரைந்து பலரின் பாராட்டைப் பெற்றான். பிற்காலத்தில் அவன் வரையப்போகிற 100 காந்திகளின் தொடக்கமாக அது அமைந்துவிட்டது. ஓவியம்தான் தன் எதிர்காலம் என முடிவுசெய்த ஆதிமூலம் பிற கல்லூரிகளில் சேர மறுத்துவிட்டார். ஒரு விசேஷத்துக்கு வந்திருந்த “சினிமா உலகம்” பத்திரிகையை நடத்திக்கொண்டிருந்த பி.எஸ்.செட்டியார் ஆதிமூலத்தைச் சென்னைக்கு வரச்சொன்னார். சிவாஜி, எம்.ஜி.ஆர் எம்.ஆர்.ராதா எல்லோராலும் “செட்டியார் அண்ணா” என்று அழைக்கப்பட்டவர் இவர். கவி காளமேகம் படத்தில் டி.என்.ராஜரத்தினம் பிள்ளையை நடிக்கவைத்தவர். சீர்காழி கோவிந்தராஐனைப் பாடகராக்கியதும் இவர்தான். சினிமா ஸ்டூடியோவில் “ஆர்ட் ஒர்க்” பண்ணிக்கொண்டிருந்தவர்களைப் பார்க்க ஆதிமூலத்தை அனுப்பினார் பி.எஸ்.செட்டியார். அங்கிருந்தவர்கள் ஆதிமூலத்தின் கையிலிருந்த ஓவியங்களைப் பார்த்து, ’இது சுண்ணாம்பு அடிக்கிறவேலை. நீ ஓவியக் கல்லூரிக்குப் போகவேண்டியவன், அங்கு போ’ என்றார்கள். பி.எஸ்.செட்டியார் தன் நண்பரான சிற்பி தனபாலிடம் ஆதிமூலத்தை அனுப்பிவைத்தார். “செட்டியாரின் வீட்டில் இருந்தபடிதான் ஆதிமூலம் ஒரு சைக்கிளில் வந்து என்னிடம் பாடம் கற்றுக்கொண்டு போவார். ஆரம்பத்தில் இருந்தே தன் சித்திரங்களால் என்னை அசத்தியவர் ஆதிமூலம்” என்கிறார் ஆதிமூலத்தை ஆற்றுப்படுத்திய சிற்பி தனபால்.

1960-ல் சென்னைக் கவின் கலைக் கல்லூரியில் (ஓவியக் கல்லூரி) மாணவனாகச் சேர்ந்தார். 1858-ல் கைத்தொழில் கல்லூரியாகத்தான் இது தொடங்கப்பட்டது. 1929-ல் ஹேவல் என்கிற அதிகாரி ராய்சௌத்ரியை முதல்வராக்கி FINE ARTS கல்லூரியாக இதை மாற்றினார். ராய்சௌத்ரி, பணிக்கர் போன்ற சிறந்த ஓவிய-சிற்ப ஆளுமைகளால் வழிநடத்தப்பட்ட கல்லூரியாக அது மாறியது. ஆதிமூலம் சேர்ந்தபோது பணிக்கர் முதல்வராக இருந்தார். சிறந்த ஓவியர்களான சந்தானராஜ், முனுசாமி, தனபால், அந்தோணிதாஸ், முருகேசன், கிருஷ்ணராவ் ஆகியோர் ஆசிரியர்களாகப் பணி செய்தார்கள். சிறந்த கலைஞனாக வருவதற்கான உத்வேகத்தை அந்தக் கல்லூரியின் சூழல் தனக்குத் தந்ததாக ஆதிமூலம் குறிப்பிடுகிறார். மாணவனாக இருக்கும்போதே தனக்கென்று ஒரு ஸ்டைல் வந்துவிட்டது என்றும் கறுப்பு வெள்ளையில் தன்னுடைய “ஸ்டைல் ஆப் டிராயிங்” முயற்சி செய்ததாகவும் ஆதிமூலம் சொல்கிறார்.

இளம் வயது ஆதிமூலம்
இளம் வயது ஆதிமூலம்

ஆதிமூலத்தின் மற்ற ஓவியங்களை அறியாதவர்கள்கூட அவரின் காந்தி ஓவியங்களைப் பார்த்திருப்பார்கள். காந்தியின் நூற்றாண்டை(1869-1969) உலகமே கொண்டாடியபோது, தனித்த அடையாளங்களோடு காந்தியின் 100 தோற்றங்களைக் கறுப்பு வெள்ளைக் கோடுகளால் 1969-ல் ஆதிமூலம் வரைந்தார். இதைப்பற்றி ஆதிமூலம் பின்னாள்களில் பேசினார். “மனதில் பொங்கின வேகத்துடன் வசீகரமான வீச்சுடன் காந்தி என்னுடைய காந்திஜியாக ஓவியங்களில் பதிவானார்.” 100 ஓவியங்களையும் தொகுத்து “எசன்ஸ் ஆஃப் காந்தி” என்று கண்காட்சி நடத்தினார். பக்தவத்சலம் தலைமை ஏற்க, நெடுஞ்செழியன் திறந்துவைத்தார். கலையுலகம் பரவசமடைந்தது. ஆனால் ஒரு படம் 100 ரூபாய் என்றபோதும் படங்கள் அன்று விலை போகவில்லை. அதே படம் 25 ஆண்டுகள் கழித்து அறுபதாயிரம் ரூபாய்க்குப் போனதாக ஆதிமூலம் எழுதுகிறார். தன் கோடுகளின் மீது அவருக்கிருந்த நம்பிக்கை காந்தியைப் போலவே உயர்வானது. கலை விமர்சகர் தேனுகா கூறும்போது “ஆதிமூலத்தின் கோட்டோவியங்களுள் விதவிதமான மெலிந்த தோற்றத்துடன் வரைந்த காந்தியின் கோட்டோவியங்கள் சிறப்பானவை. உளவியல் அறிஞர் எரிக் எரிக்ஸன், வரலாற்றுப் பார்வையில் ரோகேஷ்சதா போன்றார் காந்தியின் சுய சரிதைக்குப் பல புதிய அர்த்தங்களைத் தந்ததுபோல், காந்தி கோட்டோவியங்கள் வழியாக இன்றைய உலகிற்கு மிகத் தேவையான ’புதியதோர் காந்தி உலா’வினை ஆதிமூலம் தொடங்கிவைத்தார்” என்கிறார்.

“எனது அனுபவத்தில் கோடுகள் உயிரும் உணர்வுமுள்ள நரம்புகள் போன்றவை. இவைதான் ஓவியத்தின் அடிப்படை. எனவேதான் நமது கல்வெட்டு, ஓலைச்சுவடி எழுத்துகள் ஒழுங்கமைப்பில் ஓவியத்தின் அனுபவத்தைத் தருகின்றன” என்கிறார் ஆதிமூலம். இந்த நரம்புகள் ஒத்த கோடுகளால்தான் காந்தியை வரைந்ததற்கான காரணத்தை அவரே சொல்கிறார். “அவரது வசீகரமான முகம், எந்த ஒரு கோணத்திலும் கலைஞன் ஒருவனை ஓவியம் தீட்ட அல்லது சிற்பம் வடிக்க உசிப்பிவிடும் உடல்வாகு-ஒரு கோணத்தில் புத்தரையும் மற்றொரு கோணத்தில் இயேசுவையும் நினைவுக்குக் கொண்டுவரும் அளவுக்கு மனித உருவில் இறைவனை தரிசிக்கிற அனுபவம் இதெல்லாம்தான் காந்திஜியை நான் நூற்றுக்கும் மேற்பட்ட கோட்டுச் சித்திரங்களாக வரைய என்னைத் தூண்டியது” என்கிறார் ஆதிமூலம். இதே காலத்தில்தான் 1968-ல் ஆதிமூலம் லலிதாவை மணந்துகொண்டார். இவர்களுக்கு அபனீந்தரன் அபராஜிதன் என்ற இரண்டு மகன்கள் பிறந்தனர். நெசவாளர் பணி மையத்தில் வேலையில் சேர்ந்தார்.

அந்நியமாதல்
அந்நியமாதல்
பிஞ்சுகள்
பிஞ்சுகள்

தமிழ்ப் பத்திரிகைகளுக்கு நவீன இலக்கியம் வந்து சேர்ந்த அதே வேகத்தில் நவீன ஓவியங்கள் வந்துசேரவில்லை. 1971-ல் ’கசடதபற’ வந்தபோது அதற்கு கையில் அரிவாளுடன் கூடிய ஐயனாரை ‘லோகோ’ வாக வரைந்து தந்தவர் ஆதிமூலம். அவரே அதற்கான அட்டையில் ’கசடதபற’ என்ற தலைப்பை பெரியகோயிலின் வட்டெழுத்தைச் சற்று மாற்றி எட்டாம் நூற்றாண்டின் கல்வெட்டு எழுத்துகளின் தொடர்ச்சிபோன்ற எழுத்து வடிவத்தால் ஆதிமூலம் உருவாக்கினார். ஞானக்கூத்தனின் திருமணப் பரிசாக க்ரியா ராமகிருஷ்ணன் உள்ளிட்ட நண்பர்கள் தொகுத்த ஞானக்கூத்தனின் ’அன்று வேறு கிழமை’ கவிதை நூலுக்கும் பல படங்களை ஆதிமூலம் வரைந்தார். அதில் ’சைக்கிள் கமலம்’ என்ற தனது கவிதைக்கு ஆதிமூலம் வரைந்த ஓவியத்தை “அற்புதம்” என்கிறார் ஞானக்கூத்தன். இதுமாதிரியான இலக்கிய முயற்சிகளுக்கு உதவ அவர் பணம் பெற்றுக்கொண்டதே இல்லை என்கிறார் சா.கந்தசாமி. “கோடுகளிலேயே அது இந்தியக்கோடா ஐரோப்பியக்கோடா என்று தெரியும். ஆதிமூலத்தின் கோடு இந்தியக்கோடு” என்று சொல்லும் சா.கந்தசாமி “அவர் ஒளிரக்கூடிய வர்ணங்களையே பயன்படுத்தினார். அந்த வர்ணங்கள் பேசும் வண்ணங்களாக இருக்கும்” என்கிறார். க்ரியா பதிப்பகம் தொடர்ந்து ஆதிமூலத்தின் ஓவியங்களை முகப்பு அட்டையாகப் பயன்படுத்தியது.

தக்கையின் மீது நான்கு கண்கள்
தக்கையின் மீது நான்கு கண்கள்

கவிஞர் சுதீர் செந்தில் தனது உயிர் எழுத்து பதிப்பகத்தின் வெளியீடாகக் கொண்டுவந்த எழுத்தாளர் மணா தொகுத்த ’ஆதிமூலம் அழியாக்கோடுகள்’ நூலுக்கான அணிந்துரையில் அறிஞர் எஸ்.வி.ராஜதுரை குறிப்பிடும்போது, சா.கந்தசாமியின் ‘தக்கையின் மீது நான்கு கண்கள்’, ந.முத்துசாமியின் ‘நாற்காலிக்காரர்கள்’ சி.மணியின் ‘வரும் போகும்’ சுந்தர ராமசாமியின் ‘ஜேஜே சில குறிப்புகள்’ இமையத்தின் ‘கோவேறு கழுதைகள்’, ‘ஆறுமுகம்’ போலவே அவர் எழுதிய ‘அந்நியமாதல்’ போன்ற புத்தகங்களுக்கு ஆதிமூலம் வடிவமைத்த அட்டைகள் புத்தகங்களுக்குக் கூடுதலான மதிப்பைத் தந்ததாகக் கூறும் எஸ்வி.ஆர், ஆதியின் அற்புதமான காலிகிராஃபியை வியக்கிறார். ‘கசடதபற’ போலவே நடை, விருட்சம், காலச்சுவடு போன்ற பல இலக்கிய பத்திரிகைகளுக்கு தலைப்புக்கான எழுத்துகளை உருவாக்கியவர் ஓவியர் ஆதிமூலம்தான். இதை ’நடை’ தான் முதலில் பயன்படுத்தியது.

ஆதிமூலம் அழியாக்கோடுகள்
ஆதிமூலம் அழியாக்கோடுகள்

1982-ல் பாரதியின் நூற்றாண்டு விழாவை அரசு கொண்டாடியது. அப்போது வந்த பாரதியின் புதுக்கவிதை என்ற புத்தகத்திற்காக அவர் வரைந்த பாரதி, ஆர்யாவின் பாரதியைப்போல் நிலைத்துவிட்டது. கம்புடன் பாரதி உட்கார்ந்திருக்கும் ஓவியம் அது. பாரதியின் கவிதைகளில் பட்டுத்தெறிக்கும் கூர்மையும் அச்சமற்ற உள்ளமும் தேர்ந்த ஞானச் செருக்கும் ஆதிமூலத்தின் கோடுகளாய் மாறி, உள்ளமே உருவமாக அமைந்த பாரதி படமது. ஒரு நிழற்படத்தைவிட ஓவியம் ஏன் உயர்வானது என்பதை சொல்லாமல் சொன்ன படம் அது. பாரதி மீது அபரிமிதமான ஆர்வம் இருந்தும் பாரதியின் உருவப் படங்கள் நம்மிடம் இல்லாமல்போனதால் பாரதியை நிறைய வரையமுடியவில்லை என்ற ஆதங்கம் அவருக்கிருந்தது. எழுத்தாளர் ஜெயகாந்தனை பலவிதங்களில் அவர் வரைந்தார். “ஒரு இலக்கியவாதியின் ஆன்மிக அனுபவங்கள்” தொடருக்காகக் கன்னத்தில் கை ஊன்றிய மாதிரி ஜெயகாந்தனை வரைந்திருந்தார். “அந்தக் கையை இன்னும் எடுக்க முடியவில்லை” என்றார் ஜெகே. ஒரு நவீன ஓவியத்தை ஒன்றுமே அறியாதவன்கூட புரிந்துகொள்ளத்தக்கதாக மாற்றியவர் ஆதிமூலம் என்கிறார் ஜெயகாந்தன்.

ஜெயகாந்தன்
ஜெயகாந்தன்

நவீன ஓவியத்தை வெகுஜன பத்திரிகைக்கு அழைத்து வந்ததும் விகடன்தான். கி.ரா-வின் 'கரிசல் காட்டுக் கடுதாசி’க்கு ஆதிமூலத்தை வரையவைத்து, வெகுமக்கள் ரசனையின் நுட்பத்தைப் படைப்பாளிகளுக்கும் புரிய வைத்தது விகடன். இந்தத் தொடருக்காக ஆதிமூலத்தைச் சந்தித்த அனுபவங்களை அன்றைய இணை ஆசிரியர் மதன் சொல்லியிருக்கிறார். “ஆதிமூலம் பழகிய விதம் என்னை ஈர்த்தது. நான் மற்றவர்களிடம் எப்படிப் பழக வேண்டும் என்பதை அந்தக் கணங்களில் அவர் கற்றுக்கொடுத்தார். அவரிடம் மனிதநேயமும் கலைத்திறமையும் இணைந்திருந்தன. அவரைச் சந்தித்த அந்த நேரம் ‘ஒரு பெருமிதமான தருணம்” என்கிறார் மதன்.

கரிசல் காட்டுக் கடுதாசி
கரிசல் காட்டுக் கடுதாசி
கரிசல் காட்டுக் கடுதாசிக்கு ஆதிமூலம் வரைந்ததைப் பற்றி கி.ரா சொல்லும்போது “கோடுகளுக்கு அவர் உயிர் தந்தார்; நான் எழுத்துக்கு உயிர் தந்தேன். இருவரும் சேர்ந்து ஜமாய்த்தோம்” என்றார். 1987-ல் ஜூனியர் விகடனில் 30 வாரங்களுக்கு மேல் இது தொடராக வந்தது. ஓவியர் ஆதிமூலத்தின் சமரசமற்ற கோடுகளை சாதாரண மக்களும் ரசித்தார்கள். அதைத் தொடர்ந்து கி.ரா-ஆதி ஜோடியின் ’கோபல்லபுரத்து மக்கள்’ நாவல் ஆனந்த விகடனில் தொடராக வந்தது. கி.ரா எழுத்தின் கரிசல் மண் வாசனையை ஒரு வண்டல்மண் ஓவியன் நம்மை நுகரவைத்த அதிசயம் நடந்தது. கலை, மண் சார்ந்து இயங்கும்போதே மண் கடந்தும் வாழும் என்பதன் அடையாளமிது.
உயிர்க்கோடுகள்
உயிர்க்கோடுகள்

இந்த இரு பெரும் படைப்பாளிகளின் படைப்பை ஒன்றாக்கிய புதுவை இளவேனில், இடது பக்கம் ஆதிமூலத்தின் படமும் வலது பக்கம் அதற்கான கி.ரா வின் எழுத்துமாக ’உயிர்க்கோடுகள்’ என்ற புதுவகையான புத்தகத்தை அன்னம் (அகரம்) பதிப்பகம் மூலம் கொண்டுவந்தார். நாய், எருமை, எமன், கிழவி, கருப்பண்ணசாமி, கோட்ட அலுவலர், மின்சார ஆபீசர், டிகேசி, பண்டாரம், காந்தி, உவேசா, குடை, ஆலயப்பிரவேசம் என்று ஏகப்பட்ட கி.ரா-வின் சமாச்சாரங்கள் அதில். எல்லாவற்றையும் சின்னதும் பெரிதுமான கோடுகளால் காட்சியாக்காமல் உணர்ச்சியாக்கும் ஓவியங்களை ஆதிமூலம் தந்துள்ளார். கோடுகளாலேயே சாம்பல் (கிரே கலர்) வண்ணத்தையும் தந்து முப்பரிமாணத்தையும் தருகிறார். ஹிஜாப் அணிவதை அரசியலாக்கும் இன்றைய சூழலில் சாதியையும் மதத்தையும் கிண்டலும் கேலியுமாக சவட்டி எடுக்கும் கி.ரா-வுக்கு ஆதியின் கோடுகள் ஊன்றுகோலாகவும் தடிக்கம்புகளாகவும் மாறி விடுகின்றன.

செய்நேர்த்திகள் படைப்பாவதில்லை. படைப்புகளில் ஆழமான கற்பனையும் அர்த்தமுள்ள கேள்விகளும் பொதிந்திருக்கும். ஆதிமூலத்தின் சமஸ்தான அரசர்கள் அதற்கு சிறந்த உதாரணம். அந்த அரசர்கள் ஆங்கிலேய ஆட்சியாளர்களிடம் சமரசம் செய்து கொண்டவர்கள். அதற்காக கப்பம் கட்டுபவர்கள். அதன்மூலம் சுகபோகங்களை அனுபவிப்பவர்கள். அதனால் அவர்களின் ஆடைகளையும் ஆபரணங்களையும் தெளிவாகவும் பளபளப்பாகவும் வரைந்த ஓவியர் ஆதிமூலம் அவர்களின் முகங்களை கறுப்பாய் வரைந்தார். அதாவது அந்த அடிமைகளின் சுகபோகங்களை அவர்களின் உடை பேசுகிறது. அவர்களின் முகங்களைக் கறுப்பாகத் தீட்டியதன் பொருள்-அந்த அரசர்கள் சொந்த முகங்களை இழந்தவர்கள் என்பதைக் கலை நேர்த்தியோடு ஆதிமூலம் முன்வைத்த ஓவியங்கள் அவை. இது குறித்து Lines from an Artistic Life – The Drawings of Adimoolam என்ற தனது ஓவிய நூலில் பேசுகிறார். ஏறக்குறைய 160 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகம் ஆதிமூலத்தின் கறுப்பு வெள்ளைக் கோட்டோவியங்களால் நிரம்பி வழிகிறது.

Lines from an Artistic Life – The Drawings of Adimoolam
Lines from an Artistic Life – The Drawings of Adimoolam

தன் உணர்வோடு இயங்கும் கலைஞரான ஆதிமூலம், தனது வளர்ச்சி நிலையில் தேக்கம் உடைத்து முற்றிலுமாக வண்ணத்திற்கு மாறினார். இக்காலத்தில் அவர் மேற்கொண்ட ஐரோப்பியப் பயணமும் அங்கு சந்தித்த ஓவியர்களும் அவருள் புதிய எண்ணங்களைத் உருவாக்கினர். அதிர்கிற வண்ணங்களால் அவர் வரைந்த அரூப ஓவியங்கள் தனித்தன்மையோடு ஒளிர்ந்தன. அரூப ஓவியங்களில்கூட பெயர் எழுதாவிட்டாலும் அதை வரைந்தது ஆதிமூலம்தான் என்று தெரியும் அளவுக்கு தனித்தன்மையை தான் காப்பாற்றியதாக அவரே பிற்காலத்தில் பேசினார். கோடுகளைப் போலவே வண்ணங்களிலும் ஆதிக்கம் செலுத்திய ஓவியராக ஆதிமூலத்தை கலை விமர்சகர் ராமன் கூறுகிறார்.

Abstract Art எனப்படும் உருவம் கடந்த வண்ணமயமான ஓவியத்தை இசை கேட்கும் அனுபவத்தோடு ஆதிமூலம் ஒப்பிட்டார். இசையைக் கேட்டு உள்வாங்கி ரசிப்பதன் மூலம் ஏற்படும் உணர்ச்சியைப்போலவே அரூப ஓவியங்களும் உள்நுழைந்து பரவசப்படுத்தும் தன்மையைக் கொண்டவை என்றார். தொடர்ந்து ரசிப்பதன்மூலமே இதைப் பெறமுடியும் என்றார் அவர். இதன்பிறகே அவரது ஓவியங்களின் மேல் சர்வதேச வெளிச்சம் விழுந்தது. ஓவியச் சந்தையில் மதிப்பும் கூடியது.

அபிராமி அந்தாதி கூறுகிற “சலியாத மனம்” ஆதிமூலத்தின் சொத்து. அவர் சொல்கிறார், “இப்போதைக்கு என் ஓவியங்களைப் பாராட்ட மாட்டார்கள். பணம் கொடுத்து வாங்குபவர்களும் இல்லை. இருந்தாலும் என் உழைப்பை அங்கீகரிக்கிற காலம் கட்டாயம் வரும் என்று என்மீது நான் வைத்திருந்த நம்பிக்கைதான் எல்லாவற்றுக்கும் ஆதாரம்” என்கிறார். ஆதிமூலத்தின் எந்த ஓவியத்தைப் பார்த்தாலும் இந்த நம்பிக்கைக் கோடு நம்முள் வரையப்படுமல்லவா. அதனால்தான் சச்சிதானந்தம் சொல்லும்போது ஆதிமூலத்தின் வெற்றிக்குக் காரணம், தன் வாழ்க்கை இலட்சியத்தை தெளிவாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டதுதான். அதிலிருந்து இம்மியும் விலகிச் செல்லவில்லை. எனவே அவருக்குக் கிடைத்த பெரும்புகழும் பணமும் தகுதியானவைதான் என்கிறார். ஆதிமூலமே சொல்வதுபோல் “93-ல் நானே தனி ஆளாக-ஜூரியாக இருந்தேன். ஒரு தேசிய விருதுக்காக ஏங்கின நிலை மாறி, நானே ஜூரியாக இருந்து 20 கலைஞர்களுக்கு விருதுகள் கொடுத்தேன். என்ன வசதிகள் வந்தாலும் நான் வியாபாரி ஆகிவிடவில்லை.” இதைத்தான் தன்னிலை மாறாமை என்று புகழ்கிறோம்.

கோடுகளைப் பற்றிய அவரின் புரிதல் பள்ளிகளில் பாடமாக வைக்கத்தக்கது. “ஒரு காகிதத்தில் ஒரு கோட்டைப் போட்டால்-கீழே தரையாகவும் மேலே வானமாகவும் மாறிவிடும். பக்கத்தில் சில தென்னை மரங்களை வரைந்தால் முப்பரிமாணக் காட்சியே வந்துவிடும். அதற்குப் பின்னால் சில கோடுகளை வரைந்தால் மலையாகிவிடும். எனவே ஒரு காகிதத்திலோ திரைச்சீலையிலோ ஒரு வெளியை உருவாக்கக் கோடுகள்தான் அடிப்படை.” இந்த எளிமைதான் அவரின் பலம்.

கலை விமர்சகர் இந்திரன் ஆதிமூலம் குறித்துச் சொன்னது முக்கியமானது. “அவரது சித்திரங்கள் உருவரீதியாகவும் ஓவியங்கள் அரூப ரீதியாகவும் இருக்கின்றன. உருவரீதியான சித்திரங்களின் அடுத்தகட்ட நீட்சிதான் அவரது தைல வண்ண ஓவியங்கள். அவரது சித்திரங்களின் உட்கிடையாக இருக்கிற உணர்ச்சிகளை, அவரது ஓவியங்கள் அரூப நிலையில் வெளியே கொண்டுவர முயல்கின்றன” என்னும் இந்திரன், பேசாப்பொருளைப் பேசுவதற்கு தைலவண்ணத்தை வலிமையோடு அவர் கைக்கொண்டதை நமக்கு உணர்த்துகிறார்.

தனது தந்தையின் வாஞ்சையை ஆதிமூலத்திடம் கண்டதாகக் கூறும் ஓவியர் ட்ராட்ஸ்கி மருது, வெளியே யாருக்கும் தெரியாதபடி பலரை ஆதிமூலம் படிக்கவைத்துள்ளதாகவும் கூறுகிறார். தன்னுடைய தனித்தன்மையைத் தக்கவைத்துக்கொண்டே, ஒரு சுத்தமான நேர்மையான மனிதராகச் செயல்பட்டதுதான் ஆதியின் சிறப்பு என்கிறார் பத்திரிகையாளர் ஞாநி. சிறகைவிட மென்மையானது அவரது உள்ளம் என்கிறார் எஸ்.வி.ஆர். வயதில் இளையவர் என்று ஒதுக்காமல் தனது ஓவியங்களை ரசித்து பாராட்டியதோடு தொடர்ந்து வரையச்சொன்னதாக திருச்சியை வாழ்விடமாகக்கொண்ட ஓவியர் ரவி சொல்கிறார். ஒரு ஓவியர் என்பதையும் தாண்டி ஆதிமூலத்தின் பண்பையும் அவர் காட்டிய அன்பையும் கலை இலக்கிய உலகம் சொல்லிக்கொண்டே இருக்கிறது.

ஓவியர் ஆதிமூலம்
ஓவியர் ஆதிமூலம்
1963 முதல் 2007 வரை அவரது ஓவியங்கள் உலகின் பல நாடுகளில் நடந்த கண்காட்சிகளில் இடம்பெற்றன. டெல்லி லலித் கலா அகாடமி தேசிய விருது உட்பட பல விருதுகளையும் ஆதிமூலம் பெற்றார். பல ஓவிய முகாம்களில் பங்கேற்றுள்ளார். அவரது ஓவியப் படைப்புகள் Between the lines, Art of Adimoooam, Lines from an Artistic Life என்ற மூன்று பெரும் தொகுப்புகளாக வந்துள்ளன.

1998-ல் ’மல்டிபிள் மைலோமா’ என்னும் ஒருவகைப் புற்றுநோயால் ஆதிமூலம் பாதிக்கப்பட்டார். நோயை எதிர்த்துப் போராடும் ஆயுதமாகவும் அவர் ஓவியத்தையே தேர்வு செய்தார். ஓவியத்துள் மூழ்கும்போது வலி மறைந்துபோவதாகவும்; ஓவியமே தனக்கு ஒரு தியானம் என்றும் அவர் சொன்னார். தன்னை மரணம் நெருங்குவதை உணர்ந்த அவர் ஏராளமான ஓவியங்களை வரைந்தார். ஒரு பொங்கல் நாளில், 2008 ஜனவரி 15 அன்று ஆதிமூலம் தான் வரைவதை நிறுத்திக்கொண்டார்.

ஓவியர் ஆதிமூலம், கி.ரா., இயக்குநர் தங்கர் பச்சான், ஜெயகாந்தன்
ஓவியர் ஆதிமூலம், கி.ரா., இயக்குநர் தங்கர் பச்சான், ஜெயகாந்தன்
“ஒரு சமூகத்துக்கு வளங்களைச் சேர்க்கிறவர்களை மிகவும் முக்கியமானவர்களாகப் போற்ற வேண்டும். அந்த வகையில் தமிழ்ச் சமூகத்துக்கு மிகவும் முக்கியமானவர் ஆதிமூலம்.”
ந.முத்துசாமி
“ஆதிமூலம் அவரது கலையைப் போலவே-அவரது படைப்பைப் போலவே நிரந்தரமானவர். அவருக்கு அழிவில்லை.”
ஜெயகாந்தன்

- இன்னும் ஊறும்