Published:Updated:

திருச்சி - ஊறும் வரலாறு - 23: சொல் புதிது - கவிஞர் திருலோக சீதாராம்!

கவிஞர் திருலோக சீதாராம்

ஜெயகாந்தன் திருலோகத்தை “சதா இங்கே திரிந்துகொண்டிருக்கும் சித்த புருஷர்களில் ஒருவர்” என்கிறார். திருலோகத்தின் “புகழ்க் கவிதை” இது சரிதான் என்கிறது.

Published:Updated:

திருச்சி - ஊறும் வரலாறு - 23: சொல் புதிது - கவிஞர் திருலோக சீதாராம்!

ஜெயகாந்தன் திருலோகத்தை “சதா இங்கே திரிந்துகொண்டிருக்கும் சித்த புருஷர்களில் ஒருவர்” என்கிறார். திருலோகத்தின் “புகழ்க் கவிதை” இது சரிதான் என்கிறது.

கவிஞர் திருலோக சீதாராம்

தலைக் காவிரியிலிருந்து பூம்புகார் வரை காவிரிக்கரை ஓரமாகவே பயணப்பட்டு, காவிரி வளர்த்த பண்பாட்டை வாழ்க்கையை தி.ஜானகிராமன் சிட்டியோடு இணைந்து எழுதிய பயண இலக்கியம் 'நடந்தாய் வாழி காவேரி.' திருச்சியைக் கடக்கும்போது அவர்கள் சந்திக்க விரும்பிய கவி ஆளுமை திருலோக சீதாராம். ரசனையில் தோய்ந்த தி.ஜா சொல்கிறார், “சீதாராமனைக் காண்பது என்றால் கவிதை கேட்பது என்பதுதான் பொருள். அவருடைய ‘கந்தருவகானம்’ காவியத்திலிருந்து சில பகுதிகளைப் பாடிக் கேட்டபோது அவரையும் பயணத்தில் கூட அழைத்துப் போகலாமே என்று தோன்றியது. அப்படிச் செய்தால் அவரது கவிதைப் பொழிவில் மயங்கி, காவேரிக் காட்சிகளை சரியாக கவனிக்காமல் விட்டுவிடுவோமோ என்ற கவலையால் அந்த யோசனையைக் கைவிட்டோம்” என்பது தி.ஜாவின் வாக்குமூலம். அதே தி.ஜா, திருலோகத்தை ‘குள்ளமான ஆகிருதியில் இருந்தாலும் தெய்வாம்சத்தால் அகத்தோற்றத்தின் உன்னதத்தால் புறமும் நெடிதாகத் தோன்றும் ஒரு அதிமானுடன்’ என்று ஒரு கடிதத்தில் குறிப்பிடுகிறார்.

கவிஞர் திருலோக சீதாராம்
கவிஞர் திருலோக சீதாராம்

கவிதையை எழுத்தின் வரிகளாகப் பார்க்காமல், ஒலியின் ஒழுங்காக இசையின் இணையாக ஆராதித்தவர் திருலோகம். கவிதை, பாடல், சிறுபத்திரிகை, இசைஉரை, இலக்கியப்பொழிவு, தத்துவம், மொழிபெயர்ப்பு, கவித்திரட்டு, காவிய நாடகம் என்று தொட்டதிலெல்லாம் சுடர்விட்டவர் அவர். பாரதியில் மூழ்கி பரவசமாகி ஞானத் தந்தையாய் பாரதியை ஏற்றவர். அதிலும் பாரதியின் ’பாஞ்சாலி சபதம்’ அவருக்கு உயிர். பாஞ்சாலி சபதத்தின் எல்லாப் பாத்திரங்களாகவும் அவரே மாறி, குரலால் நடித்து இசையால் துளைத்தபோது கேட்டவர்கள் மயங்கிக் கிடந்ததாக சேக்கிழார் அடிப்பொடி தி.ந.ராமச்சந்திரன் (இலக்கிய உலகம் TNR என்றது) கூறுகிறார். மூன்று மணிநேர பாஞ்சாலி சபதத்தை அவர் “நாமும் கதையை முடித்தோம் - இந்த நானிலம் முற்றும் இன்பத்தில் வாழ்க” என்ற பாரதி வரிகளோடு முடிக்கும்போது சபை கைதட்ட மறந்து ஸ்தம்பித்து நிற்குமாம். காலைத் தொட்டு வணங்குமாம். இந்த அனுபவத்திற்காக பொற்காசு தருவார்களாம். பொற்காசுப் புலவர் எனப் புகழப்பட்டாராம் திருலோகம்.

பாரதி மறைந்த நூற்றாண்டை உலகம் இன்று கொண்டாடுகிறது. பாரதியின் ஆங்கில எழுத்துகளும் THE COMING AGE என்று தொகுக்கப்படும் நல்ல காலமிது. ஆனால் பாரதி பற்றிய மதிப்பீடுகள் சரியாக இல்லாத காலமும் இருந்தது. அதைச் சரி செய்தவர்கள் வ.ரா., பாரதிதாசன், ஜீவா அடுத்து திருலோக சீதாராம்தான். பாரதியின் சமூக அக்கறையை மற்றவர்கள் நிறுவியபோது, இலக்கிய இடத்தை கவித்துவ உச்சத்தை தன் வளமான குரலால் பாடி நிறுவியவர் திருலோகம். பாடிப்பாடி இவர் பேசியபோது தமிழர்களின் காதுகளில் தேன் வந்து பாய்ந்ததாக திருலோக சீதாராமை ஆவணப்படமாக்கிய இயக்குநர் ரவிசுப்பிரமணியன் கூறுகிறார்.
சுப்பிரமணியன் சீதாராம்
(திருலோக சீதாராம் மகன்)
சுப்பிரமணியன் சீதாராம் (திருலோக சீதாராம் மகன்)

பாரதியின் குடும்பத்தின் மீதும் பாசத்தைக் கொட்டினார் திருலோகம். 1955-ல் பாரதியின் மனைவி செல்லம்மாவின் உடல்நலம் மோசமானபோது தன் குடும்பத்தைப்பற்றிக் கவலைப்படாமல் ஏறக்குறைய மூன்று மாதங்கள் அவருடனேயே தங்கி செல்லம்மாவை கவனித்துக்கொண்டது திருலோக சீதாராம்தான். செல்லம்மா பாரதியின் உயிர் பிரிந்தது திருலோக சீதாராம் மடியில்தான் என்று திருலோகத்தின் மகன் சுப்பிரமணியன் சீதாராம் சொல்லி நெகிழ்கிறார்.

பெரம்பலூருக்கு அருகிலுள்ள தொண்டைமான்துறை என்ற ஊரில் பிறந்தவர் சீதாராம். தந்தை திருவையாறு லோகநாத ஐயர். தாய் மீனாட்சி சுந்தரம்மாள். பிற்காலத்தில் பூர்வீக ஊரையும் அப்பாவின் பெயரையும் சேர்த்து ’திருலோக சீதாராம்’ ஆனார். 1917ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ல் பிறந்தார். தாய் மொழி தெலுங்கு. தங்கை லலிதாவும் தம்பி பஞ்சாபகேசனும் கூடப்பிறந்தவர்கள். அப்பாவை 3 வயதிலேயே இழந்து தாய்மாமா வீட்டில் வளர்ந்தார். தனது 19 வயதில் 1936-ல் 10 வயதேயான ராஜாமணியை மணந்தார். இவர்களுக்கு மதுரம், வசந்தா, இந்திரா என்ற மூன்று பெண்களும், பசுபதி, சுப்பிரமணியன், முரளிதரன், ராமகிருஷ்ணன் என்ற நான்கு மகன்களும் பிறந்தனர்.

பள்ளிப்படிப்பு 8-ம் வகுப்போடு சீதாராமுக்கு நின்றுவிட்டது. 14 வயதில் கோயில் புரோகிதர் ஆனார். அந்த ஊரிலேயே வாழ்ந்த அந்தகக்கவி ராமசாமி படையாச்சியிடம் முறையாகத் தமிழ் கற்றார். பார்வை இழந்த படையாச்சி ராமாயணம் பாரதக் கதைகளை பிரசங்கம் செய்வதில் வல்லவர். அவரின் கதைகளில் வரும் பாடல்களை சீதாராமே பாடுவார். ஒருமுறை படித்தாலே எதுவும் அவருக்கு மனதில் தேங்கும். பாடல் எடுத்துப் பாடும் மனம் வாய்த்தது இப்படித்தான்.

பாரதியின் தமிழுக்குள் சீதாராம் மூழ்கிய கதை சுவையானது. அவர் தம்பி பஞ்சாபகேசன் ஏதோ காரணமாகக் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டுப் போய்விடுகிறார். அவர் திரும்பி வரும்வரை 18 மணிநேரம் அன்னம் தண்ணி மறுத்து இருந்துள்ளார் சீதாராம். அந்த 18 மணி நேரமும் பாரதி பாடல்களைப் பாடிப்பாடி மனனம் செய்துள்ளார். இப்படித்தான் பசித்த அறிவு பாரதியைப் புசித்தது.
S.V.சகஸ்ரநாமம் அவர்களுடன் திருலோக சீதாராம்
S.V.சகஸ்ரநாமம் அவர்களுடன் திருலோக சீதாராம்

சின்ன வயதிலேயே கவிதையிலும் பத்திரிகையிலும் சீதாராமுக்கு ஆர்வம் இருந்தது 18 வயதிலேயே விழுப்புரத்தில் ’இந்திய வாலிபன்’, ’பால பாரதம்’ போன்ற பத்திரிகைகளைத் தொடங்கினார். பிறகு விழுப்புரத்திற்கு அருகில் பரிக்கல் என்ற ஊரிலிருந்து வந்த ’தியாகி’ பத்திரிகையின் துணை ஆசிரியரானார். அதில் மந்தஹாசன் என்ற புனைபெயரில் எழுதினார். சில மாதங்களிலேயே நிலைக்கப்போகும் பெயரான ’திருலோக சீதாராம்’க்கு மாறினார்.

திருச்சி வானொலிக்கும் திருலோகத்துக்கும் இருந்த பிணைப்பு முக்கியமானது. பாரதிதாசனைச் சந்தித்து அவரோடு கவிதை பாடியது இங்குதான். “உன்னிடம் கவிதை இல்லை என்றால் நீ எங்குமே கவிதையைக் காணவியலாது” என்ற சாகா வரிகளைச் சொன்ன திருலோக சீதாராமின் ’கந்தருவகானம்’ இசைக்கப்பட்டதும் இங்குதான். அதுவும் ஒரே இரவில் அவர் நடத்திய கவிதை வேள்வி அது. அதை திருலோகத்தின் MAGNUM OPUS என்கிறார் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த டி.என்.ஆர். இந்தக் கந்தர்வனில் மயங்கியே நாகலிங்கம் என்ற தன் பெயரை ’கந்தர்வன்’ ஆகச்சூடினார் முற்போக்கு எழுத்தின் முன்னோடியான எழுத்தாளர் கந்தர்வன்.

பாரதிதாசனை முழுமையாக உள்வாங்க உதவும் பெரும் தொகுப்பு நூலைத் தந்த முருகு சுந்தரம் சொல்கிறார், “பாவேந்தரின் நம்பிக்கைக்குரிய பிராமண நண்பர்கள் இருவர். ஒருவர் ஓவியர் வேணுகோபால் சர்மா (திருவள்ளுவருக்கு உருவம் கொடுத்தவர்) மற்றொருவர் திருலோக சீதாராம்” என்று. இந்த நூலில்தான் தனக்கும் பாவேந்தருக்குமிருந்த நட்பின் ஆழத்தைத் திருலோகம் நமக்குப் புரியவைக்கிறார். பாரதியின் பாஞ்சாலி சபதத்தைப் பாடிப்பாடி நடித்து உருகவைத்த அதே முறையில் பாரதிதாசனின் ’குடும்ப விளக்கு’ காவியத்தை திருலோகம் பாடிக்கேட்டவர்கள் பாக்கியவான்களாம். பாரதி கேட்கமுடியாத திருலோகத்தின் இசைப்பொழிவை அவரின் சீடர் பாவேந்தர் கேட்டு “சபாஷ் பாண்டியா” என்று குதூகலித்துள்ளார்.

1951-ல் பாரதிதாசனுக்கு மணிவிழா திருச்சியில் திட்டமிடப்பட்டது. சில காரணங்களால் விழாக்குழு கலைக்கப்பட்டது. அதுவரை சேர்ந்த பணத்தைத் திருலோகத்திடம் கொடுத்து, புதுவையில் பாரதிதாசனிடம் ஒப்படைக்கச் சொன்னது விழாக் குழு. இவரும் போனார். அந்தக் காட்சியை திருலோகத்தின் வார்த்தைகளாலேயே கேட்போம்.
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

“முற்றத்தில் சிங்கம் படுத்திருப்பதுபோல் சாய்ந்துகிடந்தார் பாவேந்தர். ரிஷைன் பண்ணிட்டியல்ல அப்ப வச்சுட்டு போ என்றார். மொத்த தாள்களையும் வைத்துவிட்டுக் கிளம்பினேன். முட்டாளு உன்னைப் போகச் சொல்வேனா. இந்த விஷயத்திலிருந்து போ என்றேன். உள்ளேபோன என்னை சாய்வு நாற்காலியின் கைப்பிடியில் உட்கார்த்திவைத்து, என்னை முதலில் தெரியுமா, கி.ஆ.பெ.வி-யை முதலில் தெரியுமா என்றார். உங்களுக்கும் முன்னால் உங்கள் கவிதைகளைத் தெரியும் என்றேன். உங்களைவிட உங்கள் கவிதைகளே எனக்கு அதிகம் மதிப்புடையவை என்றேன். துள்ளி எழுந்த பாவேந்தர், இவண்டா தமிழன். நீ வேண்டியதில்லை உன் கவிதை எனக்குப்போதும் என்றானே இவன் மறத்தமிழன் என்று சொல்லி பக்கத்தில் அமர்த்திக்கொண்டார். சாப்பிட வைத்தார்.

சிவாஜி 17-ம் ஆண்டு மலருக்குக் கவிதை கேட்டேன். கொஞ்சம் தூங்கு தருகிறேன் என்றார். உதட்டில் சூடுபட்டு விழித்தேன். வாயருகே காப்பியை வைத்து, கழுதை! என்ன இப்படி ஒரேயடியா தூங்குற, இந்தா கவிதை என்றார். என்னைப் பாராட்டி எழுதியிருந்தார். சிவாஜிக்குத்தானே கேட்டேன். என்னைப் பற்றி எழுதியிருக்கீங்களே என்றேன். முட்டாளு உனக்கு என்ன பஞ்சம் தெரியுமா? பணப் பஞ்சமில்லே. புகழ்ப் பஞ்சம். உன் பெருமை ஒரு பயலுக்கும் தெரியாது. நான்தான் சொல்லணும். சும்மா போடு என்றார்.”

சிவாஜி
சிவாஜி

சிவாஜியில் வந்த பாடலின் சில வரிகள் இவை...

“இவன் உயர்ந்தான் அவன் தாழ்ந்தான்

என்னும் இன வேற்றுமையோர்

அணுவும் இல்லான்

அவன் எழுதும் சிவாஜி எனும்

வாரத்தாள் வாழிய பல்

ஆண்டு நன்றே

நல்லேடாம் சிவாஜிக்கு

நல்லாசான் திருலோகன்

நாளும் வாழ்க”

என்று எழுதி பாரதிதாசன் கையெழுத்தும் போட்டார்.

திருச்சி தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் எஸ்.எஸ்.வாசன், டாக்டர் மு.வ., அகிலன் ஆகியோருடன் திருலோக சீதாராம்
திருச்சி தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் எஸ்.எஸ்.வாசன், டாக்டர் மு.வ., அகிலன் ஆகியோருடன் திருலோக சீதாராம்

அழுக்கற்ற அவரின் வாழ்க்கை நெறிதான் காமராஜரையும் அண்ணாவையும் ஒரே நேரத்தில் அவரை நேசிக்க வைத்தது. மனுதர்ம சாஸ்திரத்தைத் தமிழில் மொழிபெயர்த்த அவர்தான் பெரியாரை அவர் நடத்திய எழுத்தாளர் சங்க மாநாட்டில் பேச அழைத்துள்ளார். அவர் அச்சகமும் வீடும் பல எழுத்தாளர்களின் பர்ணசாலையாக இருந்தன. வல்லிக்கண்ணன், ந.பிச்சமூர்த்தி கரிச்சான்குஞ்சு, கு.ப.ரா, தி.ஜா, கி.வா.ஜ, எம்.வி.வெங்கட்ராம், அகிலன், ஜெயகாந்தன், கொத்தமங்கலம் சுப்பு, நா.பார்த்தசாரதி, இந்திரா பார்த்தசாரதி, சுகி.சுப்பிரமணியம், வாலி என்ற அந்தப் பட்டியல் நீளும்.

1952 தேர்தலில் சுயேச்சையாக ஶ்ரீரங்கத்திலும் துறையூரிலும் திருலோகம் போட்டியிட்டார். இரண்டு ஜீப், மைக் எல்லாம் ஜி.டி.நாயுடு கொடுத்தார். செலவை என்.எஸ்.கிருஷ்ணன் பார்த்துக்கொண்டார். பாரதி பாடல்களை ஓங்கிப் பாடி உணர்ச்சியோடு பேசுவார் திருலோகம். அதுதான் பிரசாரம். பின்னால் வருகிற அவரின் நண்பர் அ.வெ.ர.கிருஷ்ணசாமி ரெட்டியார் ஓட்டு கேட்பார். யாரையும் திட்டாத, வாக்குறுதி தராத ஒரு வேட்பாளரைச் சந்தித்த புது அனுபவம் திருச்சிக்கு.

காமராஜருடன் திருலோக சீதாராம்
காமராஜருடன் திருலோக சீதாராம்

ஜி.டி.நாயுடுவைச் சந்தித்து நண்பரானதே தனிக்கதை. நாயுடுவின் வீட்டைக் கடந்தபோது பார்க்க ஆசைப்பட்ட இவரிடம் ஒரு படிவத்தைக் கொடுத்துப் பூர்த்தி செய்யுங்கள். காரணம் சரியாக இருந்தால் மட்டுமே ஐயா பார்ப்பார் என்றார்கள். இவர் பார்க்கும் நோக்கம் என்ற இடத்தில் “சும்மா” என்று எழுதினார். நாயுடு திருலோகத்தை உடனே அழைத்தார். இப்படித் தொடங்கிய நட்பு அது. நல்லவர்கள் நட்பு என்பதால் வளர்ந்தது. “உழைப்பின் உயர்வு”, “அதிசய மனிதர் ஜி.டி.நாயுடு” என்று இரண்டு புத்தகங்கள் எழுதினார் திருலோகம். உங்களுக்கு என்ன வேண்டும் கேளுங்கள் என்றார் அந்த விந்தை மனிதர். எங்கள் திருச்சி சீத்தாலட்சுமி பள்ளிப் பெண்களுக்கு ஒரு பேருந்து கொடுங்கள் என்றார் திருலோக சீதாராம். மேதை தந்த பேருந்தை கவிதை வாங்கி வந்த அதிசயத்தைப் பள்ளி பார்த்தது. ஊரார் பிள்ளைகளை பஸ்ஸில் அனுப்பியதால் அவர் பிள்ளைகள் இன்று காரில் போகிறார்கள்.

திருலோக சீதாராம் என்ற பெயரோடு இணைந்தே வருவது அவர் நடத்திய ’சிவாஜி’ பத்திரிகை. 40 ஆண்டுகள் நடந்த சிறுபத்திரிகை அது. அதை சிவஞானம்பிள்ளை 1935-ல் தொடங்கினார். அப்போது திருலோகம் துறையூரிலிருந்து வந்த ’கிராம ஊழியன்’ பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார். 25 ரூபாய் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த திருலோகத்துக்கு 75 ரூபாய் தந்து ’சிவாஜி’க்கு ஆசிரியர் ஆக்கி திருச்சிக்கு வரவைத்தார் பிள்ளை. 1939-ல் சிவாஜி உரிமையை திருலோக சீதாராமிடமே கொடுத்தார் அவர். அதுநாள் தொடங்கி 1968 வரை வார இதழாகவும் 1969 முதல் திருலோகம் மறைந்த 1973 வரை மாத இதழாகவும் சிவாஜி வந்தது. அதன்பிறகும் அவர் நண்பர் டி.என்.ஆர் ஆசிரியராக இருந்து 1980 வரை சிவாஜி வந்துள்ளது. பெரிய பொருளாதாரப் பின்னணி இல்லாமல் உயர்ந்த லட்சியங்களைச் சுமந்து வாழ்க்கையோடு மல்லுக்கட்டியவர் திருலோகம். அதனால்தான் “சருகுகளைச் சேகரிப்பதிலேயே என் காலம் கழிந்துவிட்டது. அவற்றின் அக்னிஜ்வாலையில் குளிர்காய முடியாமல் போனது” என்று வாழ்நாளெல்லாம் பொருளுக்காக அலைந்ததைக்கூடக் கவிதையாக்கினார் அந்த அதிமானுடன்.

சிவாஜியில் வந்த தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளை ஒரு தொகுப்பு நூலாக்கினால் இன்றைய தமிழ் உலகம் பயன்படும் என்று தோன்றுகிறது. ‘சிவாஜி பிரஸ்’ஸும் அதன் அலுவலகமும் அதன் பின் வந்த கவிஞர் அச்சகமும் மெயின்கார்டு கேட்டில் உள்ள நகர கூட்டுறவு வங்கிக்கு அருகே கோட்டை ஸ்டேஷன் சாலையில் இருந்துள்ளது.
G.D.நாயுடுவின் கோபால் பாக் தோட்டத்தில் R.திருஞானசம்பந்தம், R.K.ஷண்முகம் செட்டியார், நடிப்பிசைப் புலவர் K.R.ராமசாமி ஆகியோருடன் திருலோக சீதாராம்
G.D.நாயுடுவின் கோபால் பாக் தோட்டத்தில் R.திருஞானசம்பந்தம், R.K.ஷண்முகம் செட்டியார், நடிப்பிசைப் புலவர் K.R.ராமசாமி ஆகியோருடன் திருலோக சீதாராம்

திருலோக சீதாராம் நமக்குத் தந்த இலக்கியக் கொடைகள் காலத்தை வென்று நம்மோடு பேசுகின்றன. 1967-ல் வந்த ’கந்தருவ கானம்’ ; 1957-ல் அவர் மொழிபெயர்த்த ’சித்தார்த்தன்’; 1961-62, 1971-72 ஆண்டுகளில் அவர் எழுதி சிவாஜியில் வந்த கட்டுரைகளின் தொகுப்பான ’இலக்கியப்படகு’; கவிதைத் தொகுதி ’உதயம்’; அவர் தொகுத்த மற்றவர் கவிதைகள் அடங்கிய ’புதுத்தமிழ் கவிமலர்கள்’ ; பாரதி பற்றி ஆனந்த விகடனில் எழுதிய தொடரான ’புதுயுகக் கவிஞர்’ ; மொழிபெயர்த்த ’தெலுங்கு ஓரங்க நாடகங்கள்’ ; மொழிபெயர்ப்பில் வந்த ’மனுதர்ம சாஸ்திரம்’ ; 1952-ல் வந்த ’உழைப்பின் உயர்வு’, ’அதிசய மனிதர் ஜி.டி.நாயுடு’ இவற்றோடு டி.என்.ஆர் உருவாக்கிய THE POETICAL WORKS OF TIRULOKA SITARAM WITH TRANSLATION AND NOTES. சாகித்ய அகாதெமி கொண்டுவந்துள்ள இராஜாமணி எழுதிய திருலோக சீதாராம். இப்படிப் பல பொக்கிஷங்களைத் தந்தவர் திருலோக சீதாராம்.

“தனியொரு நானும் ததும்பும் படகுமாக” புறப்படுகிற திருலோகத்தின் ‘இலக்கியப்படகு’ நம்மையும் ஏற்றிக்கொள்கிறது. ஏறியபிறகுதான் புரிகிறது, “வாழ்வென்னும் பெருங்கடல் நீந்த வாய்த்த சிறு படகுதான் இலக்கியம்” என்ற அவரின் சொல் எத்தனை சத்தியம் என்பது. 50 கட்டுரைகள். எல்லாமே அளவில் மூன்று பக்கம்தான். அத்தனையும் தேன் சொட்டு. ஆகவே தித்திப்புக்கு என்ன குறைச்சல். கேமராவைக் கண்டதும் விறைப்பதும் முறைப்பதும் பலருக்குள்ள பழக்கம். அதுபோல் பலருக்கு பேனா எடுத்தவுடன் வேண்டாத விறைப்பு எழுத்துக்குள்ளும் வந்துவிடும். ஆனால் தன்னியல்பு கெடாத சொல்லில் தன்னைக் கரைத்துக்கொள்ளும் எழுத்தாளராக திருலோகத்தை நீதியரசர் எஸ்.மகராஜன் அடையாளம் கண்டு தீர்ப்பளிப்பது நியாயமே.

உதாரணமாக, கைத்துப்பாக்கியைத் துடைத்தபோது தற்செயலாய் குண்டு பாய்ந்து இறந்துபோன ஹெமிங்வேக்கு அஞ்சலி போல் அவரின் நோபல் பரிசு பெற்ற ’கடலும் கிழவனும்’ நாவலை முன்வைத்து ஒரு கட்டுரை இதில் உள்ளது. படித்துவிடுங்கள் எனச் சொல்லி நகர்வதுதான் நேர்மை. வயோதிக செம்படவனுக்கும் ராட்சத மீனுக்கும் போராட்டம் 3 நாள்கள் கடலில். கடைசியில் கிழவன் மீனைக் கரையில் இழுத்துப்போடுகிறான். வெறும் கூடுதான் மிச்சம். லட்சியம் நிறைவடைந்த மனநிறைவோடு சிங்கக் கனவுகளோடு கிழவன் தூங்குகிறான். இந்தக்கதை நம்மில் பலர் படித்ததுதான். ஆனால் இதை வைத்து திருலோகம் முன்வைக்கும் வாழ்க்கைப் பார்வை அபாரமானது. ”எந்த சாதனையும் உலகில் அழியக் கூடியதுதான். இந்த அழிவை அறிந்திருந்தும் ஆக்க சக்தியில் மனிதன் வைத்திருக்கும நம்பிக்கைதான் விந்தை. அந்த விந்தையை விமர்சிப்பதுதான் கலையின் வேலை” என்கிறார். “காதலோ பெண்ணோ இல்லாமல் ஒரு நெடுங்கதை இலக்கிய விந்தையாக அமைந்திருக்கிறது. எப்பொருளையும் கருவியாகவைத்து படைப்பின் விந்தைகளை விமர்சித்துவிடலாம் என்பதற்கு ஹெமிங்வே வழிகாட்டி” என்கிறார் திருலோகம்.

இராஜாமணியின் திருலோக சீதாராம்
இராஜாமணியின் திருலோக சீதாராம்

’கந்தருவ கானம்’ அவரின் சிறந்த நீள் கவிதைகளின் தொகுப்பு. காவிய நாடக வடிவம் கொண்டவை. “கவிதை அனுபவம்” என்பதன் உண்மைப் பொருளை உணர்த்தி நிற்பவை. “முன்பொரு பாடல் எழுதினேன்- அந்த மூலப் பிரதி கைவசமில்லை” என்ற கவிதை இதில்தான் உள்ளது. அந்தப் பாடல் இப்படி முடிகிறது.

மூலப் பிரதி
மூலப் பிரதி

“ஏட்டுப் பிரதியை எடுத்தவர் தந்தால்

இனிய பாடலைக் கற்றவர் சொன்னால்

காட்டில் இருளைக் கடந்திட லாகும்

கருணை செய்தவர் ஆவீர் ஐயா.”

அழகான இந்தக் கவிதை வேறு வேறு வண்ணங்களாய் விரிவதைப் படிக்கும் ஒவ்வொருமுறையும் நாம் உணரமுடியும்.

ஜெயகாந்தன் திருலோகத்தை “சதா இங்கே திரிந்துகொண்டிருக்கும் சித்த புருஷர்களில் ஒருவர்” என்கிறார். திருலோகத்தின் “புகழ்க் கவிதை” இது சரிதான் என்கிறது. கதைக்கவிதையில், விருதுகள் அளிக்க வேந்தன் கவிஞனை அழைக்கிறான். ஆனால் கவிஞன் (திருலோகமோ) மறுத்து பதில் சொல்கிறான். “புகழ் எனும் புதுக்குடை வேண்டாம். இயற்கையின் இன்பமும் எழிலும் காற்றும், அழகின் உறவை அறவே மறைக்கும் புகழ்க்குடை கெடுக்கும். புகழ்க்குடை மடக்கிப் போவீர் வாழி.” இதுதான் திருலோக சீதாராமின் போக்கு.

ஹெர்மன் ஹெஸ்ஸே ஜெர்மன் மொழியில் எழுதி நோபல் பரிசும் பெற்ற ’சித்தார்த்தன்’ நாவலை ஆங்கிலம் வழியாய் தமிழ்க்கரை சேர்த்த ஓடக்காரர் திருலோக சீதாராம். கவிதை தூவிய மொழியாக்கமல்ல இது. கவிதை கலந்த கவித்துவ ஆக்கமிது. எது ஞானம் அதைப் பெறுவது எப்படி என்ற தேடலே சித்தார்த்தன் நாவல். புத்தரின் போதனைகளைக் கடந்து அவரின் தரிசனத்தை அனுபவத்தைத் தானும் அடையவிரும்புகிறான் சித்தார்த்தன். ஓடும் நதியிலிருந்தே தோணிக்காரன் வாசுதேவன் மூலம் ஞானம் அடைகிறான் சித்தார்த்தன். காலம் என்பது ஒன்று கிடையாது என்னும் ரகசியத்தை நதியே அவனுக்குக் கற்பிக்கிறது. ஆறுக்கு நிகழ்காலம் மட்டுமே உண்டு என்னும் பேருண்மையை வாசுதேவன் மூலம் சித்தார்த்தன் அறிகிறான். “கேட்பது எப்படி” என்பதை நாவல் சொல்கிறது. “சலனமற்ற உள்ளத்தோடு, ஆசையில்லாது, அபிப்பிராயம் எதுவும் கொண்டுவிடாமல் கேட்பது எப்படி என்பதைக்கூட நதியிடமிருந்தே சித்தார்த்தன் கற்றுக்கொள்கிறான்.” வாழும் நாவலாக இது இருப்பதால்தான் 1922-ல் எழுதப்பட்டிருந்தாலும் 1957-ல் மொழிபெயர்த்த திருலோக சீதாராம் சொல்கிறார் “நான் என் சொந்த வாழ்வில் சித்தார்த்தனாகவே மாறிவிட வேண்டுமென்று பெரிதும் விரும்பினேன்” என்று. நாமும் அதனாலேயே இன்றும் படிக்கிறோம். வாழ்க்கையின் தத்துவ சரட்டை 150 பக்கங்களில் சொல்லும் மகத்தான படைப்பிது. மகத்துவத்தைத் தீர்மானிப்பது பக்கங்களின எண்ணிக்கை அல்ல என்பதைப் புரியவைக்கிறது.

சித்தார்த்தன்
சித்தார்த்தன்

“மலிந்த விலையில் உயர்ந்த நூல்” என்ற நோக்கத்தோடு தென்னிந்திய மொழிகளுக்காக உருவாக்கப்பட்ட ’தென் மொழிகள் புத்தக டிரஸ்ட்’ 1957-ல் வெளியிட்ட முதல் தமிழ் நூல் ’புதுத்தமிழ் கவிமலர்கள்.’ பாரதிக்குப் பிறகு எழுதிய சிறந்த 55 கவிஞர்களின் மரபுக் கவிதைகளை திருலோகம் இதில் தொகுத்துள்ளார். ஒவ்வொரு கவிஞரைப் பற்றிய சிறு குறிப்பும் எழுதியுள்ளார். புதுமைப்பித்தனின் அசல் கவிதையும் இதில் உள்ளது. கவிதை கடந்துவந்த பாதையைத் தெரிந்துகொள்ள விரும்பும் எவருக்கும் இந்தப் புத்தகம் ஒரு கைவிளக்கு.

ஆனந்த விகடன் இதழில் 1955-56ல் “மந்திரம் போல் சொல் வேண்டுமடா” என்ற பாரதியின் படைப்புகளை முன்வைத்து ’புதுயுகக் கவிஞர்’ என்ற தொடரை திருலோகம் எழுதியுள்ளார். 23 வாரங்கள் இது வந்துள்ளது. “இலக்கிய உலகில் பாரதியின் ஸ்தானத்தை எடைபோடும் விமர்சன வேலை இல்லையிது” என்னும் கவிஞர், சொல் அழகும் கற்பனையழகும் கொண்டு பாரதியைப் புதுயுகக் கவிஞராக இத்தொடரில் அறிமுகம் செய்கிறார்.

’தேவசபை’ திருலோகசீதாராமின் அறிவுக் குழந்தை. உபநிஷத்துகளும் தம்மபதமும் அங்கு அவரால் பிழியப்பட்டன. சாறு, அடுத்த இதழ் சிவாஜியில் பிதாமகர் கடிதமாக வந்தது. “நான் நேற்றே இறந்துபோய்விட்டேன் என்று உணர்ந்தால் மிச்ச வாழ்க்கையைப் பிறருக்காய் வாழலாம்’’ என்ற அவரின் சிந்தனை அங்குதான் வெளிப்பட்டது.

திருச்சியின் கலை இலக்கிய உலகில் தனி நபர் ராணுவம்போல் செயல்பட்ட திருலோக சீதாராம் 1973 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 23ஆம் தேதி தனது 56-ம் வயதில் மறைந்தார். ஆனாலும் அவரின் தேவசபையில் கந்தருவகானம் கேட்டுக்கொண்டேயிருக்கிறது.

(இன்னும் ஊறும்)