Published:Updated:

திருச்சி – ஊறும் வரலாறு 19: பறவைகள் பலவிதம்... எழுத்தாளர் குமுதினி!

எழுத்தாளர் குமுதினி

குமுதினி எழுதிய ஒரே நாவல் ’திவான் மகள்.’ கலப்புத் திருமணத்தை ஆதரித்த கதை அது. பத்திரிகைகள் வெளியிட முன்வராத நிலையில் கலைமகள் அதைத் தனிப் புத்தகமாக வெளியிட்டது.

Published:Updated:

திருச்சி – ஊறும் வரலாறு 19: பறவைகள் பலவிதம்... எழுத்தாளர் குமுதினி!

குமுதினி எழுதிய ஒரே நாவல் ’திவான் மகள்.’ கலப்புத் திருமணத்தை ஆதரித்த கதை அது. பத்திரிகைகள் வெளியிட முன்வராத நிலையில் கலைமகள் அதைத் தனிப் புத்தகமாக வெளியிட்டது.

எழுத்தாளர் குமுதினி
“பதினைந்து வருடங்களுக்கு முன்பு குமுதினி எழுதிய முதல் கட்டுரையைப் படித்த உடனேயே எனக்கு ஒரே வியப்பாய்ப் போய்விட்டது. தமிழ் பாஷையை இவ்வளவு லாகவமாகக் கையாண்டு எழுதும் இந்தப் பெண்மணி யாரோ என்று பிரமித்துப்போனேன்.”

இப்படி குமுதினியைப் பாராட்டுவது யார் தெரியுமா? கமல்ஹாசன் எடுக்க ஆசைப்பட்டு முடியாமல், மணிரத்னம் எடுத்துக்கொண்டிருக்கும் ’பொன்னியின் செல்வன்’ நாவலை எழுதிய கல்கி. 1950களில் தொடராக வந்த பொன்னியின் செல்வன் நாவல்தான் இன்றுவரை ’பெஸ்ட் செல்லர்.’ காரணம் கதை மட்டுமல்ல, சொன்ன விதம் அப்படி. சுவாரஸ்யமான கதை சொல்லியான கல்கி, குமுதினியின் சுவையான நடையை - “சாதாரண சின்ன விஷயங்களைப் பற்றி சில்லறை சங்கதிகளைப் பற்றி, இவ்வளவு ரஸமாக எப்படி எழுத முடிகிறது” என்று ஸ்லாகிக்கிறார்.

கல்கி
கல்கி

அதுமட்டுமல்ல, “எழுத உட்கார்ந்தால் ’வங்காளத்தில் பஞ்சம்’ அல்லது ’தென்னாப்பிரிக்க இந்தியர் வேதனை’ போன்ற மகத்தான விஷயங்களைப் பற்றிக் காரசாரமாக எழுத முடிகிறதே ஒழிய ’சமையல் அறையில் ஈ மொய்க்காமல் காக்கும் முறை’ போன்ற சில்லறை விஷயங்களை எழுதுவது அரிதினும் அரிது. எனக்குத் தெரிந்த வரையில் குமுதினிதான் தமிழ்நாட்டில் இம்மாதிரி சில்லறை விஷயங்களைப் பற்றி ரஸமாக எழுதுவதில் வெற்றி அடைந்திருக்கிறார்.” இப்படி குமுதினியைப் பாராட்டுவதும் யாரோ அல்லர். சிரிக்க சிரிக்க ’ஏட்டிக்கு போட்டி’ எழுதிய அதே கல்கிதான்.

இவ்வளவு ரசித்து கல்கி எழுதியது குமுதினியின் 'சில்லறை சங்கதிகள் லிமிடெட்' என்ற தொகுப்புக்கான முன்னுரையில். தொகுப்பு வந்தது 1948ல். இதில் 11 புனைவுகளும் அபுனைவுகளும் உள்ளன. இன்று படித்தாலும் நாம் சிரிக்கிறோம். 73 ஆண்டுகளுக்குப் பிறகும் நம்மை ரசிக்க வைத்ததுதான் குமுதினியின் பலம்.

குமுதினி
குமுதினி

நகைச்சுவை ஒரு கலை. அதுவும் எழுத்தில் கொண்டுவருவது சிரமம். நையாண்டி தனி ரகம். குழந்தையைத் தூங்கவைக்க தொட்டிலில் போட்டு ஆட்டும் அப்பாவே தூங்கிவிடுவது நகைச்சுவை. தூங்கும் அப்பாவைக் குழந்தை எழுப்பி, ஆட்டுப்பா தூங்கணும் என்பது நையாண்டி. நையாண்டிக்குக் கொஞ்சம் கால் கை தேவை. நகைச்சுவை இயல்பானது. முரண்பாடுகளைக் கூட ஏற்று ரசிக்கும் மனசுக்கே அது வாய்க்கும். குமுதினிக்கு எழுத்திலும் பேச்சிலும் அது அமைந்தது.

கல்கி ரசித்த 'சில்லறை சங்கதிகள் லிமிடெட்' தொகுப்பு வந்தபோது குமுதினிக்கு வயது 43. வீட்டுவேலைகளால் சலித்துப்போன கூட்டுக் குடும்பத்துப் பெண். 10 வயதில் திருமணம். அதனால் 33 வருடங்கள் மருமகளாக அனுபவம். இவை புரிந்தால்தான் எழுத்தின் சுவை நமக்குப் புரியும்.

சாமான் வாங்கச்சொல்லித் தொந்தரவு செய்யும் சேல்ஸ் மேனிடமிருந்து தப்பிக்க கதவை அவள் சாத்தி வைத்தாள். கதவை யாரோ தட்டினார்கள். “ஏதாவது விற்க வந்திருந்தால் எனக்கு ஒன்றும் வேண்டாம்” என்றாள் அவள். அவன் சொன்னான் “நான் சாமான் விற்க வரவில்லை. சௌகரியத்தையே விற்க வந்திருக்கிறேன்” என்று. இங்குதான் கதை புறப்பட்டுவிடுகிறது. இதைக் கேட்ட அவள் கதவை அரை அங்குலம் திறந்தாள். அவன் சௌகரியங்களைச் சொல்ல ஆரம்பிக்கிறான். சொட்டும் பைப்பை மூடுவது, சும்மா எரியும் லைட்டை அணைப்பது, பேஸ்ட் மூடியை டியூபில் மூடுவது, சோப்புக் கிண்ணத்தில் தேங்கும் நீரை வடித்து சுத்தம் செய்வது. கணவர்கள் ஒரே சட்டையைப் போடவிடாமல் மாற்றி மாற்றித் தருவது என்று அவன் சொல்லச் சொல்ல கதவு முழுமையாகத் திறந்துவிடுகிறது. அதாவது அன்றாட வேலைகளின் சலிப்பை குமுதினி சொல்லும் நூதனமுறை தமிழுக்குப் புதுசு.

இந்தத் தொகுப்பில் ’செய்யாத யாத்திரைகள்’ என்ற ஒரு பயணக் கட்டுரை உள்ளது. ஆண் பிள்ளைகளுக்கு ஊர் சுற்றக் கிடைக்கும் வாய்ப்பு பெண் பிள்ளைகளுக்கு அன்று இல்லை. இதை சோகமாகவும் கோபமாகவும் சொல்லலாம். ஆனால் குமுதினி தனக்குள்ள உலக அறிவைப் பயன்படுத்தி பிரான்ஸிலிருந்து இங்கிலாந்துக்கு ரயிலில் போன அனுபவமாகவும் பிரஞ்ச் கற்றுக்கொண்டு பாரிஸைப் பார்த்ததாகவும் பிறகு அமெரிக்கா போவதுபோலவும் எழுதி... ஜப்பான் நார்வேயையும்கூட அவர் விட்டு வைக்கவில்லை. இளம் வயசானதால் மனம் போனபடி கற்பனையாவது செய்யமுடிகிறது. வயசானால் டிரெயினில் கூட்டமாயிருக்குமே என்ற கவலை கற்பனையிலும் வந்துவிடுகிறது என்கிறார் வேடிக்கையாக. இந்த செய்யாத யாத்திரையைப் படிக்கும்போது எனக்கு ’காற்றின் மொழி’ படத்தில் Hello FM க்காக ஜோதிகா போன ’ஹரித்துவார்’ தான் நினைவுக்கு வந்தது.
'கொனஷ்டை' ஶ்ரீனிவாஸாசாரியார்
'கொனஷ்டை' ஶ்ரீனிவாஸாசாரியார்

“பெண்ணுக்குள் ஞானம் வைத்த” காலத்தில் பிறந்தவர் குமுதினி. இவருக்குப் பெற்றோர் வைத்த பெயர் ரங்கநாயகி. தந்தை ஶ்ரீனிவாஸாசாரியார். மாவட்ட நீதிபதியாக இருந்தவர். இலக்கியத்தில் ஆர்வம் உள்ளவர். தமிழ் ஆங்கிலம் சமஸ்கிருதம் மூன்றிலும் புலமை மிக்கவர். நகைச்சுவையாக எழுதிவந்த “கொனஷ்டை” இவர்தான். ரங்கநாயகியின் தாய் லஷ்மி அம்மாள். பிரபல மிராசுதார் கொடியாலம் வாசுதேவ ஐயங்காரின் மகள் இவர். பாரதியார் தனது தலைமறைவு வாழ்க்கையில் இவர்கள் வீட்டுக்கு வந்ததுண்டு. ரங்கநாயகி 1905ஆம் வருடம் நவம்பர் 23ஆம் தேதி பிறந்தார்.

வசதியானவர்கள்கூட பெண்பிள்ளைகளைப் படிக்கவைக்காத காலமது. ரங்கநாயகியின் அப்பாவும் அவரைப் பள்ளிக்கு அனுப்பவில்லை. ஆனால் தன் மகளின் புத்திக்கூர்மையை மெச்சி, வீட்டுக்கு டீச்சரை வரவைத்து மகளுக்குத் தமிழும் சமஸ்கிருதமும் சொல்லிக்கொடுத்தார். 10 வயதாகும்போதே அந்தக் கால வழக்கப்படி ரங்கநாயகியைத் தன் சகோதரி செண்பகலட்சுமியின் மூத்த மகன் ஶ்ரீனிவாசனுக்குத் திருமணம் செய்துவைத்தனர். ஶ்ரீரங்கத்தில் புகழ்பெற்ற ரகுநாத தாத்தாச்சாரியாரின் மகன்தான் ஶ்ரீனிவாசன்.

கணவர் ஶ்ரீனிவாச தாத்தாச்சாரியாருடன் குமுதினி
கணவர் ஶ்ரீனிவாச தாத்தாச்சாரியாருடன் குமுதினி
பெரிய குடும்பம் அது. ரங்கநாயகியோ மூத்த மருமகள். எப்போதும் வேலைதான். “அந்த நாட்களை நினைக்கும்போது வீட்டின் பின்புறத்தில் சதா ஆடிக்கொண்டே இருந்த தொட்டில்கள்தான் என்முன் தோன்றுகின்றன” என்றார் பின்னாள்களில். இந்தச் சுமை அவரை முடக்கிப் போடவில்லை. அனுபவங்களை வாரிக்கொடுத்தது. பிற்கால எழுத்துக்கு இதுவே உரமானது.

படிக்கவைக்காத அப்பாவும், படிக்க அனுப்பாத கணவரும் ரங்கநாயகியின் படிப்புப் பசிக்கு நிறைய புத்தகங்கள் கொண்டுவந்து தீனி போட்டனர். சார்லஸ் டிக்கன்ஸ், வால்டர் ஸ்காட் எல்லாம் அவளுக்கு நண்பர்கள் ஆனார்கள். நகைச்சுவை நிறைந்த THREE MEN IN A BOAT நூலை கணவர் கொண்டுவந்து தருவார். இப்படிக் கிடைத்த பரந்த வாசிப்பை ரங்கநாயகி வீண் அடிக்கவில்லை. நம்ம ஊருக்கு ஏற்றமாதிரி மாற்றி, படு சுவையாக வீட்டுக் குழந்தைகளுக்குச் சொல்வாள். இதனால் எல்லாக் குழந்தைகளுக்கும் மன்னியானாள். இப்படி குழந்தைகளை மயக்கிய ரங்கநாயகி, குமுதினியான பின்னால் வாசகர்களை ஈர்த்தார். இந்த வீட்டுப்பாடம்தான் பின்னாள்களில் குமுதினிக்குக் கதை சொல்லும் கலையாகக் கைகொடுத்தது.

22 வயதானபோது ரங்கநாயகிக்கு ஒரு மகனும் மகளும் இருந்தனர். அப்போதுதான் அவள் தனது கேட்கும் சக்தியை மெல்ல இழந்தாள். அது அவளைத் தனிமையில் தள்ளியது. தனிமையை வெல்ல நிறைய படித்தாள். கணவர் ஶ்ரீனிவாசன் தந்த உற்சாகத்தில் எழுதவும் ஆரம்பித்தாள். அந்த எழுத்துதான் அவளைக் குமுதினி ஆக்கியது. ஆரம்பத்தில் கதைகள் ஆனந்த விகடனில் வந்தன. கதைகளுக்கு வந்த சன்மானத்தில் ROLL TOP TABLE வாங்கி தன் கணவருக்குப் பரிசளித்தாள். ஒரு காதல் மனைவியின் நினைவுகளோடு அந்த மேசை தங்கள் வீட்டில் இப்போதும் இருப்பதாக, குமுதினியின் மருமகள் எழுத்தாளர் பிரேமா நந்தகுமார் சொன்னார். ஒருவகையில் நினைவுகளின் தொகுப்புதான் வாழ்க்கையோ?

ROLL TOP TABLE
ROLL TOP TABLE
இந்தியா 1930 களில் காந்தி யுகமாக மாறியது. ரங்கநாயகியும் அவள் கணவர் ஶ்ரீனிவாசனும் காந்தி பக்தர்களாயினர். பிரிட்டிஷ் சின்னமான சிங்கமும் யூனிகான் குதிரையும் வீட்டின் முகப்பில் பதிந்துள்ள ராவ்பகதூர் வீட்டுக்குள் கதர் உடையோடு இருவர். ஒரு சனாதனக் குடும்பத்தில் இப்படித்தான் புரட்சி பூத்தது.
ஆனந்த விகடன் முன்னாள் நிர்வாக ஆசிரியர் தேவன் குமுதினிக்கு எழுதிய கடிதம்
ஆனந்த விகடன் முன்னாள் நிர்வாக ஆசிரியர் தேவன் குமுதினிக்கு எழுதிய கடிதம்

இந்தியும் படித்திருந்த ரங்கநாயகிக்கு தாகூரின் ’யோகாயோக்’ நாவல் ரொம்பப் பிடித்துப்போனது. பெண்ணின் தாய்மையேகூட அவளுக்கு விலங்காகிவிடும் கொடுமையை தாகூர் நுட்பமாகப் படம்பிடித்த நாவலது. இதைத் தமிழ் வாசகர்கள் படிக்க வேண்டுமென ஆசைப்பட்ட ரங்கநாயகி அழகாக மொழிபெயர்த்தார். இந்த நாவலின் கதாநாயகியின் பெயர் குமுதினி. ரங்கநாயகி அந்த நாயகியின் பெயரையே தனக்குப் புனைபெயராக வைத்துக்கொண்டார். மொழிபெயர்ப்பைப் படித்த கல்கி, இந்த நாவலுக்குக் குமுதினி என்றே பெயர்வைத்து 1934-ல் ஆனந்த விகடனில் வெளியிட்டார். குமுதினி நாவலை எழுதியதும் குமுதினி என்பதால் ஒரு சுயசரிதைபோல் வாசகர்களை நாவல் கவர்ந்தது. அன்று முதல் ரங்கநாயகி குமுதினி ஆனார்.

குமுதினி நல்ல சிறுகதைகள் எழுதியுள்ளார். ’நந்துவின் பிறந்தநாள்’ தொகுப்பு அவர் வாழ்ந்த காலத்திலேயே வந்து பாராட்டப்பட்டது. பிறந்த நாள்கள் அதிகமாகக் கொண்டாடப்படாத அந்தக் காலத்தில் குழந்தைகள் சேர்ந்து நந்தகுமாரின் பிறந்த நாளைக் கொண்டாடுவதுதான் கதை. பள்ளி விழாக்களையே பார்த்துப் பழக்கப்பட்ட குழந்தைகள் அவர்கள். அதனால் நந்துவின் அக்கா வருஷாந்திர அறிக்கை படிக்கிறாள். ”நந்துவுக்கு இன்று ஆறு வயது நிரம்புகிறது. அவன் இந்த ஒரு வருஷமாய் ரொம்ப சமர்த்தாகவும் இல்லை, ரொம்ப அசடாகவும் இல்லை. சுமாராக இருந்தான். ஒருசமயம் அம்மா எனக்கு வைத்திருந்த சாக்லேட்டை சாப்பிட்டுவிட்டான்...” வேடிக்கையாக நகரும் இந்தக் கதையை குமுதினி இப்படி முடிக்கிறார். “பல அரசாங்கங்கள் தத்தம் வேலையைப் பார்த்துக்கொள்ளும் வகைகளைவிட நந்துவின் பிறந்தநாளை இந்தக் குழந்தைகள் நடத்திக்கொண்டது செம்மையாக இருக்கிறமாதிரி எனக்குத் தோன்றுகிறது” என்று.

'இருபதாம் நூற்றாண்டுச் சிறுகதைகள் நூறு' என்ற தொகுப்பை வீ.அரசு கொண்டுவந்துள்ளார். 100 எழுத்தாளர்களின் 100 சிறந்த கதைகளை அரசு தொகுத்துள்ளார். இதில் குமுதினியின் ’சுதந்திரப் போர்’ 29வது கதையாக உள்ளது. கதையின் சுதந்திரப் போருக்கும் நாட்டில் நடந்த சுதந்திரப் போருக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. “நாம ஒன்னு நினைக்க அது ஒன்னு நடந்துச்சு”ன்னு சொல்வோமில்ல அதுதான் கதை. இந்தக் கதைக்கு குமுதினி ’சுதந்திரப் போர்’ என்று தலைப்பு வைத்ததுதான் படு சுவாரஸ்யம்.
ராஜாஜியுடன் குமுதினி
ராஜாஜியுடன் குமுதினி

கிருஷ்ணன், தேவராஜ ஐயரின் ஒரே மகன். இன்ஜினீயரிங் 4ஆம் வருஷம் படிக்கிறான். அவனுக்கு சென்னையில் உள்ள ருக்மிணி என்ற பெண்ணை நிச்சயித்து அந்த மாதம் 22ஆம் தேதியையும் முடிவுசெய்து அவன் தந்தை கடிதம் எழுதினார். ’என் திருமணம் அல்லவா? நான் பெண்ணைப் பார்க்க வேண்டாமா?’ என்ற சுதந்திரக் கோபம் கிருஷ்ணனுக்கு. அவன் தன் தந்தையை தண்டித்து எதிர்ப்பைக் காட்ட சந்நியாசம் போக முடிவு செய்தான். ஆனால் அவன் நாகரிகமானவன். நாம் திடீரெனப் போய்விட்டால் அந்தப் பெண் என்ன செய்வாள் பாவம்? அதனால் சொல்லிவிட்டுப் போவோம் என்று யோசித்து, தந்தையின் கடிதத்தில் இருந்த விலாசத்திற்கு, 'நாளை சந்திப்போமா' எனக் கேட்டு ருக்மிணிக்குக் கடிதம் எழுதினான்.

ருக்மிணிக்கும் அதேதான் பிரச்னை. அது எப்படி முகம் தெரியாத ஒருவரோடு வாழ்வது என்ற சுதந்திரக் கோபம் அவளுக்கும். மாலை சந்திக்க சம்மதிக்கிறாள். இருவரும் பிரிவதற்காகச் சந்திக்கிறார்கள். அவனின் நியாய புத்தியும் கோபத்தில் தெறித்த அழகும் அவளைக் கவர்ந்தன. ருக்மணி பேசப்பேச முகத்தில் மாறும் உணர்ச்சிகளின் அழகு கிருஷ்ணனை ஈர்த்தது. எதிர்காலத்தில் எப்படியெல்லாம் தாங்கள் இருவரும் தங்களின் வாழ்க்கைத் துணையோடு நடந்துகொள்வோம் என்பதைப் பேசும்போது 5 அடியாக இருந்த இடைவெளி இல்லாமல்போனது. ருக்மிணி கண் கலங்கி, அப்பாவை தண்டிப்பதாக நினைத்து நாம் பிரியத்தான் வேண்டுமா என்றாள். தேவராஜ ஐயர் தீர்மானித்த அதே 22ஆம் தேதி கல்யாணம் நடந்தது. தம்பதியின் சந்தோஷத்திற்குத் தாமே காரணம் என தேவராஜ ஐயர் நினைத்துக்கொண்டார். இப்படியாக கதை முடிந்தது.

குமுதினி குடும்ப உறுப்பினர்கள்
குமுதினி குடும்ப உறுப்பினர்கள்
இதில் எங்கே வந்தது சுதந்திரப் போர்? நம் நாட்டு சுதந்திரப்போரில், தேவராஜ ஐயர் மாதிரி நடந்தது தெரியாமல் சுபம் போடுபவர்களும் உண்டு. நினைத்தது ஒன்று கிடைத்தது வேறு என்பவர்களும் உண்டு. இப்படி நாட்டின் சுதந்திரப்போரை ஒரு கதைக்குள் குறியீடாக்கியதுதான் குமுதினியின் மேதமை.

“பயண இலக்கியம்” என்று பொதுவாகச் சொல்லிவிடுகிறோம். ஆனால் பயண அனுபவங்கள் பல நேரங்களில் வெறும் தகவல்களாக மாறிவிடுவதும் உண்டு. எழுதுபவரின் அனுபவங்கள் வாசிப்பவரின் அனுபவமாக மாறும்போதுதான் அந்தப் பயணம், இலக்கிய அந்தஸ்தை அடைகிறது. பயண இலக்கியத்தில் குமுதினியின் இடம் உயர்வானது.

இலங்கைப் பயணத்தை அவர் 'இரத்தினத் தீவு' என்று எழுதியுள்ளார். அதில் இலங்கைப் புவி அமைப்பைக் கூறும்போது “இந்தியாவில் 200, 300 மைல்கள் பிரயாணம் செய்த பின்பே மாறுபாடு அடையும் பூமியின் தோற்றம், இலங்கையில் 20, 30 மைலுக்குள் மாறிவிடுகிறது. தஞ்சை ஜில்லா போன்ற வயல்களுக்குள் போய்க்கொண்டிருக்கையிலேயே நிஜாம் ராஜ்யத்தின் பாறையும் பள்ளமும் வந்துவிடுகின்றன” என்கிறார். இலங்கைக்குப் போய் வந்தவர்களுக்கு இந்தக் கூர்மையான பார்வை ஆச்சர்யப்படுத்தும். இந்தப் பயணத்தில் வவுனியாவில் ஒரு நவீன விடுதியில் பெண்கள் எல்லாம் தங்கினார்கள். அங்கு நீச்சல் குளம் உண்டு. அத்தைக் கிழவி ஆச்சாரத்தோடு குளிப்பதற்கு மாற்றுப் புடவையோடு நீச்சல் குளத்தில் இறங்கியதைப் படித்தபோது, வந்த சிரிப்பை அடக்க முடியவில்லை.

குமுதினியின் ’சதாங்கம்’ 426 பக்கங்களில் விரிந்த கல்விச்சுரங்கம். ஜன கன மன எப்படிப்பாட வேண்டும் என்பது தொடங்கி, சின்ன இடத்தில்கூட எப்படி வீட்டுத் தோட்டம் போடுவது என்பது வரை அலுப்புத்தட்டாத நடையில் பேசுகிறார். தேன் பாகும் வெண்ணெயும் கடலாக இருப்பதாக இப்போதும் எழுதுவது பயன்படுமா? பாடங்களை போதிக்க ஆங்கிலத்தில் இருப்பதைப்போன்ற புத்தகங்கள் ஏன் நம்மிடம் இல்லை என்று குமுதினி கேட்கிறார். ஆச்சர்யப்படுத்தும் கலைக்களஞ்சியம் இந்த நூல்.

குமுதினி எழுதிய ஒரே நாவல் ’திவான் மகள்.’ கலப்புத் திருமணத்தை ஆதரித்த கதை அது. பத்திரிகைகள் வெளியிட முன்வராத நிலையில் கலைமகள் அதைத் தனிப் புத்தகமாக வெளியிட்டது.

மொழிபெயர்ப்பை ஒரு கலையாக பாவித்தவர் குமுதினி. அவர் சொல்கிறார், ”நல்ல மொழிபெயர்ப்பு தேன் போல் இருக்க வேண்டும். மொழிபெயர்ப்பாளனின் உயிர்ப்பையும் சிறிது சேர்த்து மூலத்தை இன்னும் சிறப்பாகத் தோற்றுவிக்க வேண்டும்.” குமுதினி போன்றவர்களின் முயற்சியால் மொழிபெயர்ப்பு இன்று வளர்ந்துள்ளது. நல்ல மொழிபெயர்ப்பாளனுக்கு இரு மொழிகளின் வார்த்தைகள் மட்டுமல்ல வாழ்க்கையும் தெரிந்திருந்தால் நல்லது.

காந்தியத்தின் மீது ஈடுபாடு கொண்ட குமுதினி காந்திய பொருளாதார மேதை ஜே.சி.குமரப்பா எழுதிய VILLAGE MOVEMENT, PRECEPTS OF JESUS ஆகிய இரண்டு நூல்களையும் “கிராம இயக்கம்” என்றும் “ஏசுநாதர் போதனை” என்றும் தமிழில் தந்து, தமிழ்ச் சிந்தனையை வளமாக்கினார்.

காந்தி, குமுதினிக்குத் தலைவரானது பெரிதல்ல. 1941-ல் காந்தி குமுதினிக்கு எழுதிய கடிதத்தில் “ஒரு இரவு முழுவதும் குளிர்ந்த நீரில் ஊற வைத்த திராட்சை சாப்பிடு. மாம்பழச்சாறும் பாலும் இதற்கு நல்லது. கொடுமையான மலச்சிக்கல்கூட குணமாகும்.” இப்படி எங்கோ ஒரு மூலையில் இருந்த குமுதினிகள்மீது காந்தி கொட்டிய பாசம்தான் அவரை “தேசத் தலைவர்” என்ற இடத்தையும் தாண்டி “தேசத் தந்தை” யாக உயர்த்தியது.

இப்படிப்பட்ட காந்தியையும் ஒருவன் சுடுவான் என்பதை குமுதினியால் நம்ப முடியவில்லை. நேரில் சென்று அஞ்சலி செலுத்த ஆசைப்பட்டார். மகன் நந்தகுமாரோடு வந்த அவரை, அவரது பிரியமான மருமகன் பார்த்தசாரதி காந்தியின் வார்தா ஆசிரமத்திற்கு அழைத்துப்போனார். மூன்றாவது தடவையாக குமுதினி வார்தா வந்துள்ளார். ஆனால் இப்போது காந்தி இல்லை. அம்புஜம் அம்மாளோடு வந்த 1936 பயணத்தில் குஷ்ட நோயால் கஷ்டப்பட்ட ராமாநந்தருக்கு காந்தி தன் கைகளால் சிகிச்சை செய்ததைப் பார்த்துள்ளார். ஆசிரம முரட்டு ரொட்டியும் வேப்பிலைத் துவையலும் இன்றும் குமுதினியின் நினைவுகளில் அப்பியுள்ளன. பெண்களுக்கு காந்தி காட்டிய மரியாதையை இந்திய ஆண்களோடு ஒப்பிட்டு தான் நகைச்சுவை கொப்பளிக்க எழுதிய கட்டுரை அவருக்கு நினைவுக்கு வந்தது. தான் மிகவும் நேசிக்கிற காந்திக்கு அர்த்தமுள்ள அஞ்சலி செலுத்த ஆசைப்பட்டார். அதன் விளைவுதான் திருச்சியில் உள்ள 'சேவா சங்கம்'. டாக்டர் ராஜனின் மகள் தஞ்சம்மாள் மற்றும் சிலரோடு சேர்ந்து ’துன்பப்பட்ட பெண்களுக்காக’ அவர் தொடங்கியது இது. பொன் விழாவும் கொண்டாடி இன்றும் சிறப்போடு சேவா சங்கம் இயங்குகிறது.

எதிர்பாராத விபத்தில் குமுதினியின் மருமகன் பார்த்தசாரதி 1957-ல் மரணமடைந்தார். எழுத்தும் தடைபட்டது. மீண்டும் 1970 களில் எழுத ஆரம்பித்தார். பள்ளிக்காக ’தில்லி சென்ற நம்பெருமாள்’ என்ற நாடகம் எழுதினார். அதைத் தொடர்ந்து, தனது அன்புக் கணவரின் 80வது பிறந்த நாளுக்காக ’புத்திமதி பலவிதம்’ என்ற நகைச்சுவை நாடகம் எழுதினார்.

பயணத்தில் ஆர்வம்கொண்ட குமுதினி 1975-ல் கணவரோடு மலேசியா, சிங்கப்பூர், பினாங் போய்வந்தார். அடுத்த ஆண்டே இருவரும் மகள் தேவகியோடு அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து சென்றுவந்தனர். 1983-ல் அவரின் கணவர் ஶ்ரீனிவாச தாத்தாச்சாரியார் காலமானார்.

குமுதினி வாழ்ந்த வீட்டைப் பார்க்க நானும் நண்பர் இளையபெருமாளும் ஶ்ரீரங்கம் போயிருந்தோம். குமுதினியின் மகன் அய்யா நந்தகுமார் வரவேற்றார். அபூர்வமான மனிதர். வழக்கமான மென் நகையோடு எழுத்தாளர் பிரேமா நந்தகுமார் பேசினார். மாமியாரான குமுதினியின் நினைவுகளை அவர் பேசப்பேச “அதிர்கிற தந்தியில் தூசி குந்தாது” என்ற பிரமிள் கவிதை ஏனோ ஞாபகம் வந்தது.

குமுதினியின் சிறந்த நூலகத்தையும் கோப்புகளையும் 1977-ல் வந்த காவிரிப் பெரு வெள்ளம் கொண்டுபோனதாம். 1958-ல் தன் திருமணத்திற்கு முன்பே எழுதிய BHARATI IN ENGLISH VERSE நூலை குமுதினிக்கு சமர்ப்பணம் செய்த பிரேமா அதில் “அன்புடனும் பெருமையுடனும் நன்றியுடனும்’’ என்று எழுதியிருந்தாராம். வழக்கமான கிண்டலோடு, “அன்பும் பெருமையும் புரிகிறது. நன்றி எதற்காக?” என்று பதில் போட்டாராம் குமுதினி. பிரேமா நந்தகுமார், “நான் அவருடைய மருமகளாகி 30 ஆண்டுகள் இனிய அனுபவங்கள் பெறுவேன் என்பதை முன் உணர்ந்து சொன்ன நன்றி அது” என்று நம்மிடம் நெகிழ்ந்தார்.

பிரேமா
பிரேமா

1986-லிருந்தே குமுதினிக்கு உடல் நிலை நன்றாக இல்லை. கையில் வந்த ஒரு கட்டியால் மிகுந்த வேதனை அனுபவித்தார். “புண் மிகவும் வலிக்கிறதா அம்மா” என்று கேட்ட பிரேமா நந்தகுமாரிடம், புன்னகைத்துக்கொண்டே, கட்டி இருந்த இடத்தைக் காட்டி, “எம்பெருமானிடம் அவன் இருக்குமிடம் வருவதற்கு வழி கேட்டேன். இங்கு ஒரு கதவைத் திறந்திருக்கிறான்” என்றாராம் சாந்தமாக.

இதுதான் வைணவத்தின் சரணாகதியா, அல்லது, வலியை ஏற்கும் காந்தியின் அகிம்சையா? புரியவில்லை. ஒரு உண்மையான காந்தியப் பறவை தன் சிறகசைப்பை 1986ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி நிறுத்திக்கொண்டது.

(இன்னும் ஊறும்)