பெருமன்னன் கரிகால் பெருவளத்தானின் ‘பாசனம்’ குறித்த அறிவும், உணவு உற்பத்திக்குத் தேவையான ‘பாசனப் பரப்பை’ விரிவாக்க வேண்டிய புரிதலும், அதைச் செய்வதற்கு, “வான் பொய்ப்பினும்தான் பொய்யா” (பட்டினப்பாலை) காவிரிக்கு கரைகட்டி அணைகட்ட எடுத்த முடிவும், அதற்கான ‘தொழில் நுட்பத்தை’ கண்டடைந்த மேதமையும், அதைச் செய்வதற்கான ‘உழைப்பு சக்தியை’ தன் படையெடுப்பு வெற்றியால் சாத்தியப்படுத்தியதையும் - கொஞ்சம் கண்மூடி யோசியுங்கள். அப்போதுதான் கரிகாலனின் சாதனையின் வீரியம் புரியும். அது புரியும் போதுதான் அந்த வீர மன்னனின் வரலாறு இனிக்கும்.
இன்றைய நம் அளவுகோளின்படி, 28 ரெவின்யு தாலுகாக்கள் உள்ளடக்கிய பகுதியே ‘காவிரி கழிமுக மண்டலம்’. தென்னிந்தியாவிலேயே மிகப் பெரிதான ‘டெல்டா பாசனப் பரப்பை’ உருவாக்கிய முன்னோடி சோழன் கரிகாலன். மேக்கேதாட்டு அணை விவகாரம் தமிழர்களுக்கு எதிராக கர்நாடகத்தால் முன்வைக்கப்படும்போது, காவிரியின் மீது தமிழர்களின் உரிமையை நிலை நிறுத்தப் பயன்படுத்திய ‘பழைய டெல்டா பரப்பு’ என்னும் கடக்க முடியாத உண்மையை உருவாக்கியவன் சோழ மன்னன் கரிகாலனே! அவன் உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டவன் என்பது திருச்சியின் பெருமை.

23-ம் புலிகேசிகளை ரசித்துப் பழக்கப்பட்ட நமக்கு கரிகாலன் காணக் கிடைக்காத பொக்கிஷம். கரிகாலன் 83 வயதுகள் வாழ்ந்து, தஞ்சையில் உயிர் நீத்ததாக பெருந்தொகை சொல்கிறது.
“அஞ்சில் முடிகவித்து ஐம்பத்து மூன்றளவில்
கஞ்சிக் காவேரி கரை கண்டு - தஞ்சையிலே
எண்பத்து மூன்றளவும் ஈண்டயிருந்தேதான்
விண்புக்கான் தண்புகார் வேந்து”
2000 ஆண்டுகள் பழைமையான வரலாற்றை தேடுவது எளிதல்ல. நம் வரலாற்று அறிஞர்கள் தேடினார்கள். அவர்களுக்கு நம் இலக்கியங்கள் பாதை அமைத்துக் கொடுத்தன.
வரலாற்றின் போக்கில் இரண்டு கரிகாலன்கள் இருந்ததாக நம்பப்படுகிறது. முதலாம் கரிகாலனின் மகன் இளஞ்சேட்சென்னி. அவனின் மகன்தான் இரண்டாம் கரிகாலன். இவனே கல்லணையை கட்டிய கரிகால் பெருவளத்தான் என்ற ஆய்வு பரவலாக உள்ளது.
பொருநராற்றுப்படை நூலின் பாட்டுடைத் தலைவன் முதலாம் கரிகாலன் என்றும் இவனின் காலத்தில்தான் பரணர், மாமூலனார், வெண்ணிக்குயத்தியார் போன்ற சங்கப் புலவர்கள் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. ‘பட்டினப்பாலையின்’ பாட்டுடைத்தலைவன்தான் இரண்டாம் கரிகாலன்.
உருத்திரங்கண்ணனார், தாம்ப்பல்கண்ணனார், மதுரைக் குமரனார் ஆகிய சங்கப் புலவர்கள் இவனைப் பாடியதாக சொல்லப்படுகிறது. அதே நேரம், தமிழ்நாடு அரசின் வரலாற்றுக்குழு தனது ஆண்டறிக்கையில், இரு நூல்களின் பாட்டுடைத்தலைவனும் ஒருவனே. வேறு கரிகாலன் இருந்தது இல்லை என்று கூறுகிறது.
‘கரிகாலன்’ என்றால் ‘கருகிப்போன கால்களை உடையவன்’ என்பது பொருள். இரண்டாம் கரிகாலன்தான் மிகப்பெரும் சாதனையான கல்லணையை கட்டினான் என்றால், அவனுக்கு பின்வரும் மன்னர்கள் கரிகாலன் என்னும் பெயரை அதன் பெருமை கருதி தன் பெயரோடு சேர்ப்பது இயல்பு. ஆனால் அர்த்தத்தால் சற்று தாழ் நிலையில் உள்ள கரிகாலன் என்ற பெயரை சாதனை நிகழ்த்தப்படுவதற்கு முன்பே ஒரு மன்னர் ஏன் வைத்துக்கொள்ள வேண்டும்? இது நடைமுறை இல்லையே என்ற கேள்வியும் முக்கியமானது. எனவே கரிகாலன் ஒருவனே. அவன்தான் கல்லணையைக் கட்டிய சோழன் கரிகாலன் என்றும் அறிஞர்கள் சிலர் வாதிடுகின்றனர்.

இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்த நிலையில், இலக்கியங்களின் துணையோடு மட்டும் செய்யப்பட்ட இந்த ஆய்வுகள் பெரிய அறிவு உழைப்பு. இந்த வாதங்கள் எப்படியிருந்தாலும், காவிரியின் இரு கரை உயர்த்தி, கல்லணையை கட்டியவன் சோழ மன்னன் கரிகாலனே. இவனே வரலாற்றில் இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பவன்.
இந்தச் சோழன் கரிகாலன் வாழ்ந்த காலத்தை வரையறை செய்வது எளிதல்ல. கரிகாலனின் இமயப் படை எடுப்பு, ரோமாபுரி வணிகம், இலங்கை மன்னன் கயவாகு வரவு, சிலப்பதிகாரம், பட்டினப்பாலை போன்ற இலக்கியங்களில் உள்ள குறிப்புகள் - இவற்றை எல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டும், பெருந்தொகை நூலில்,
“தொக்க கலியின் மூவாயிரத்துத் தொண்ணூறில்
மிக்க கரிகால் வேந்தனும்தான் - பக்கம்
அலைக்கும் புகழ் பொன்னியின் கரை கண்டான்.”
சொல்லப்பட்டுள்ள கலி ஆண்டை கணக்கிட்டும், மேலும் பல ஆய்வுகள் செய்தும், கரிகால் பெருவளத்தான் கி.மு. 65 முதல் கி.பி 18 வரை வாழ்ந்ததாக முடிவு செய்கின்றனர்.
சோழன் கரிகாலனின் முக்கிய வாழ்க்கைச் சுவடுகள்:
முடி சூட்டியபோது - வயது 5
வெண்ணிப் போர் வெற்றி - வயது 15
வாகைப்போர் வெற்றி - வயது 16
இமயமலை படை எடுப்பு - வயது 17-20
இலங்கை படை எடுப்பு - வயது 21
காவிரி கரை, கல்லணை (காலம் கிமு 12) கட்டி முடித்தபோது வயது - 53
அதன்பின் தஞ்சை சென்று, தன் வேளிர் குலத்தவரோடு 83 வயது வரை வாழ்ந்தார்.
கரிகாலனின் வாழ்க்கை காவியத்தன்மை நிறைந்தது. கரிகாலன் தந்தை இளஞ்சேட்சென்னி. தாய் வேள் மகள். கரிகாலனின் பெரியப்பாதான் சோழ மன்னன் இளம் பெருஞ்சென்னி. கரிகாலன், தாய் வயிற்றில் இருந்தபோதே நடந்த போரில் மன்னன் மரணமடைந்தான். தந்தையோ நோய்ப்படுக்கையில் இருந்தார். எனவே தனக்கு பிறக்கும் மகனே அரசு வாரிசாக வரவேண்டும் என்றும் அவனை அரியனை ஏற்றும் பொறுப்பை அவனது தாய் மாமன் இரும்பிடத்தலையாரிடம் கரிகாலனின் தந்தை ஒப்படைத்தார்.
குலப்பகைவரிடமிருந்து காப்பாற்ற கரிகாலனை கரூரில் பாதுகாப்பாக அவனது தாய் மாமன் வளர்த்தார்.
சோழ நாட்டுக்கு மன்னனை தேர்வு செய்ய வேண்டிய நேரம். வேளிர்குல வழக்கப்படி பட்டத்துயானை மாலை சூட்ட 5 வயது சிறுவன் கரிகாலன் சோழ நாட்டு மன்னன் ஆனான். இதை ஏற்காத குலப்பகைவர்,
சிறுவன் கருகாலனை சிறையில் அடைத்தனர.கரிகாலன் தன் போர் ஆற்றலை சிறையிலேயே வளர்த்துக் கொண்டான். பகைவர்கள் அவனைக் கொல்லும் திட்டத்தோடு சிறைக்கு தீ வைத்தனர். தன் வீரத்தால் கரிகாலன் தீயிலிருந்து தப்பித்தான். அதில்அவன் கால் கருகியது. அவன் கரிகாலன் ஆனான்.
“அரிகால்மேல் தேன் தொடுக்கும்
ஆய் புனல் நீர் நாடன்
கரிகாலன் கால் நெருப்புற்று”
என்கிறது பொருநராற்றுப்படை.

தன்னைப் பிடிக்க வெட்டப்பட்ட குழியைத் தந்தத்தாலும் துதிக்கையாலும் தகர்த்து வெளியேறிய யானையைப் போல், கரிகாலன் சிறை நெருப்பிலிருந்து மீண்டான் என்று...
“அருங்கரை கவியக்குத்தி குழி கொன்று
பெருங்கை யானை பிடிபுக்கு ஆங்கு”
பட்டினப்பாலை சொல்கிறது.
இப்படி உள்ளூர் பகையை வென்ற கரிகாலன், சோழ மன்னனாக முடி சூடினான். மிக இளம் வயதிலேயே தன் ஆட்சியை விரிவுபடுத்தும் நோக்கோடு போர் நடத்தினான். நீடாமங்கலத்திற்கு அருகேயுள்ள கோயில் வெண்ணிதான் அன்றைய வெண்ணி. அங்கு நடந்த போரில் சேரர், பாண்டியர் மற்றும் 11 வேளிர்களையும் கரிகாலன் வென்றான். இந்தப் போர் கரிகாலனை சோழப் பெரு மன்னனாக்கியது.
மேலும் “காடு கொன்று நாடாக்கி குளம் தொட்டு வளம் பெருக்கி” ஆந்திராவின் கடப்பா பகுதியில் தன்
ஆட்சியை நிறுவி ‘தெலுங்குச் சோழர்கள்’ என்னும் வேளிர் குலத்தை உருவாக்கினான். அடுத்து, அருவா நாட்டின் தலைநகரான காஞ்சிபுரத்தை விரிவாக்கி புதுப்பித்ததாக பெரிய புராணம் பேசுகிறது.
“வடவர் வாட குடவர் கூம்ப
தென்னவன் திறல் கெட.." (பட்டினப்பாலை)
ஒரு புலியைக் கொன்ற எருதின் தோலால் செய்யப்பட்ட’மயிர் கண் முரசு’ கொட்டி(சிலம்பு) இமயம் நோக்கி
படை எடுத்தான். இமயத்தின் ‘முதுகில் பாய் புலி குறி பொறித்து' (கலிங்கத்துப்பரணி) வென்றான். இதை இளங்கோ அடிகள்
“பொன் இதயக் கோட்டுப் புலி பொறித்து
மண் ஆண்டான் மன்னன் வளவன்”
என்கிறார்.
இதயத்தில் புலிச் சின்னமா? இது சாத்தியமா? என யோசிப்பது இயல்புதான். சிக்கிம் மாநிலத்திலிருந்து திபேத் செல்லும் ‘சூம்பிப் பள்ளத்தாக்கு’ இன்றும் ‘சோழக் கணவாய்’ என்றும் ‘சோழ மலைத்தொடர்’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த அடையாளம், கரிகாலன் இதயம் வந்ததை உறுதி செய்வதாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

இப்படி இமயத்தை வென்ற கரிகாலன் அடுத்துப் பாய்ந்தது இலங்கையின் மீது. தன் கடல் படையை வலிமை மிக்கதாக மாற்றி, ‘நனியிரு மூன்னீர் நாவாய் ஓட்டி’ (புறம்) இலங்கை மீது படை எடுத்தான். வென்றான். 12000 வீரர்களை கைதியாக கொண்டுவந்தான். இந்த வரலாற்றை இலங்கையின் ‘மகாவம்சம்’ குறிப்பிடுகிறது.
இந்த கைதிகளைக் கொண்டே, காவிரியின் இருகரைகளையும் வலிமை மிக்கதாக உயர்த்தினான். இக்காலத்தில்தான் கல்லணையையும் கட்டினான்.
கரிகாலன் ‘நாங்கூர் வேள்’ குலப் பெண்ணை மணந்தான். இவர்களுக்கு மணக்கிள்ளி, பெருவிரற்கிள்ளி என இரு மகன்கள் பிறந்தனர். மணக்கிள்ளிக்குப் பிறந்த நற்சோணைதான் சேர மன்னன் இமய வரம்பன் நெடுஞ்சேரலாதனை மணந்தாள். இவர்களின் பிள்ளைகளே சேரன் செங்குட்டுவனும் இளங்கோ அடிகளும் ஆவர். எனவே சேரன் செங்குட்டுவன் கரிகாலனின் பேரனாவான்.
முதியவர் வேடம் போட்டு சிக்கலான வழக்கை கரிகாலன் தீர்த்ததை
“இளமை நாணி முதுமை எய்தி
உரை முடிவு காட்டிய உரவோன்”
என்கிறது மணிமேகலை.
இவன் காலத்தில் கட்டப்பட்டு, பிற்காலத்தில் விரிவாக்கப்பட்ட பஞ்சவர்ணசாமி கோயில் உறையூரில் உள்ளது. இதில் உள்ள குதிரை சிற்பம் (படம்) சிறப்பானது.’சைக்கிள் ஓட்டும் சிறுவன்‘ புடைப்பு சிற்பம், அக்கோயில் பிற்காலத்தில் விரிவுபடுத்தப் பட்டதன் அடையாளம். திருவையாறில் உள்ள ஐயாரப்பன் கோயிலும் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலும் கரிகாலன் காலத்து கோயில்களே.
உறையூரிலும் ரோமாபுரியிலும் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட சாயத்தொட்டிகள் ஒரேமாதிரி இருந்தன. இதன் மூலம் வணிக உறவு வெளிப்பட்டது. அதுபோலவே, உறையூரில் நடந்த அகழாராச்சியில் கி.பி இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ரௌலெட் மண் பானை, சுடுமண் உருவங்கள் சங்கு வளையல்கள், இரும்பு செம்பு பொருள்கள் போன்றவை கிடைத்தன.
இப்படி காலத்தால் அழியாத சுவடுகளை குறிப்பாக கல்லணையை விட்டுச் சென்ற சோழன் கரிகாலன் தமிழர்களின் பெருமைமிகு அடையாளமாகவே போற்றப்படுகிறான்.
(இன்னும் ஊறும்)