
- மல்லி
முன்னறையிலிருந்த தொலைபேசி விட்டு விட்டு நீண்ட நேரமாக ஒலித்துக் கொண்டிருந்தது. தன் அறைக் கதவைக் கொஞ்சம்போல திறந்து வைத்துக் கொண்டு, கைப்பேசியை மேய்ந்துகொண்டிருந்த அண்ணன் ராகவனின் கவனத்தைத் தொலைபேசி அழைப்பு ஈர்க்கவில்லை. அடுப்படியில் இரவு உணவுக்கான ஏற்பாட்டில் மூழ்கியிருந்த பாட்டி கெளரி, ‘ஹாலுக்கு வந்து போனை எடுப்பது, சமையல் வேலையின் ஒரு பகுதி அல்ல’ என்ற தெளிவுடன், தொலைபேசியின் சிணுங்கலைப் பொருட்படுத்தவில்லை. உள்ளறையில் உட்கார்ந்து, அடுத்த நாள் ‘ஆன்லைன்’ வகுப்பிற்கான பாடத் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த எனக்கு, போனின் தொடர் கிணிகிணிப்பு எரிச்சலை ஏற்படுத்தியது. நிச்சயம், அது எனக்கான அழைப்பு அல்ல. என்னுடைய தோழிகள் கைப்பேசியில்தான் அழைப்பார்கள். அது என் மடியில் படுத்துக்கொண்டிருந்தது. டெலிபோன் அழைப்பு, பாட்டிக்கோ அண்ணனுக்கோதான். நான் எழுந்து போய், அழைப்பது யார், யாரை என்று விசாரித்து இருவரில் ஒருவருக்குக் குரல் கொடுத்தால், ஆடி அசைந்து வந்து, ரிசீவரை வாங்குவார்கள். தேவையில்லாமல் நான் மெனக்கெட வேண்டியிருக்கிறது என்ற கடுப்புடன் எழுந்து சென்று, ரிசீவரை எடுத்து ‘ஹலோ’ என்றேன்.
மறுமுனையிலிருந்து ‘‘ஹலோ, நான் தேவனாங்குறிச்சியிலிருந்து செண்பகா பேசறேன்... பாவாயி அம்மாவோட பக்கத்து வீடு. பாவாயி அம்மா வீட்டுக்காரர், ஆறுமுகம் பெரியப்பா தவறிட்டாருங்க’’ என்ற தகவல் கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.
பாவாயிப் பாட்டி, எங்க கெளரிப் பாட்டியின் பால்ய சிநேகிதி. கிராமத்தில் ஒரே தெருவில் பிறந்து வளர்ந்து, உள்ளூர் ஆரம்பப் பள்ளியிலும், அருகிருந்த நகரத்துப் பெண்கள் நடுநிலைப் பள்ளியிலும் ஒன்றாகப் படித்தவர்கள். திருமணத்திற்குப்பின் வேறு வேறு ஊர்களுக்கு வந்துவிட்டாலும், அவர்கள் நட்பு தொடர்வது எனக்கு வியப்பாக இருக்கும். அவ்வப்போது பாட்டி தன் தோழியைச் சந்திக்கப் போவதும், பாவாயிப் பாட்டி எங்கள் வீட்டிற்கு வருவதும் தொடர்ந்துகொண்டிருந்தது. சில சமயங்களில், அவர் கணவரும் உடன் வருவார். ஆண்கள் நட்பு வாழ்நாள் முழுவதும் தொடர்வதில் ஆச்சரியம் ஏதுமில்லை. பெண்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும், பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீடு ‘இடமாற்றம்’ ஆண்களுக்கில்லை. ஊர் விட்டு ஊர் வந்து, புதிய உறவு, மனிதர்கள், குடும்பம், குழந்தைகள், வீட்டுப் பொறுப்பு போன்றவற்றின் அழுத்தத்தால், கடிதப் போக்குவரத்துகூடத் தொடர முடியாத சூழல் பெண்களுக்கு. ஆண்களுக்கு அப்படி இல்லை. புகுந்த வீட்டுக்கு டிரான்ஸ்பர் கிடையாது. வேலையின் நிமித்தம் வேறு ஊர்களுக்குச் சென்று வாழ நேர்ந்தாலும் எதைச் சாக்கிட்டாவது, ஆண் நண்பர்கள் சந்தித்து அளவளாவுவது என்பது எளிதாக நடக்கிறது.
அதிர்ச்சிச் செய்தியின் ஊடே முகிழ்த்த இந்தச் சிந்தனைகளோடு கம்மிய குரலில் ‘‘தாத்தாவுக்கு என்னாச்சிங்க, எப்ப?’’ என்று கேட்டேன். ‘‘அவரு போய்ச் சேர்ந்து, பத்து நாளுக்கு மேலாச்சுங்க. பாவாயி அம்மா அன்னைக்கே ஒங்களுக்கு போன் போடச் சொன்னாங்க. ஒங்க நம்பர் எங்கிட்ட இல்ல. அவங்களும் நம்பர் எழுதி வச்சிருந்த காயிதத்தை எங்கயோ வெச்சிட்டாங்க. தேடிக் கீடி இப்பதான் குடுத்தாங்க’’ என்றாள்.
ரிசீரைக் கையில் பிடித்தபடியே சமையலறை நோக்கி, ‘பாட்டி, பாட்டி’ என்று உரத்துக் குரல் கொடுத்தேன். ‘‘ஏன் இப்படி அலர்றே, எனக்கென்ன காது அவிஞ்சா போச்சி?’’ என்று முகம் சுளித்தபடி பாட்டி வர, அண்ணனும் கதவைக் கொஞ்சம் அகலமாகத் திறந்து எட்டிப் பார்த்தான். ‘‘யாரு கூப்பிட்றாங்க’’ என்றபடி ரிசீவரை வாங்கிய பாட்டியிடம், ‘‘ஒன் பிரெண்டு பாவாயிப் பாட்டியோட வீட்டுக்காரர் தவறிட்டாராம். பக்கத்து வீட்டு செண்பகா லைன்ல... பேசு’’ என்றேன்.
‘‘ஐயய்யோ! என்ன சொல்ற, ஆறுமுகம் போய்ட்டாரா’’ குரல் உடைந்து அழுகை பீறிட, பாட்டி, ‘‘செண்பகா, எப்பிடிம்மா நடந்துச்சி. நல்லா தானே இருந்தார். போன கொரோனாக்கு முன்னாலகூட ரெண்டு பேரும் இங்க வந்து ரெண்டு நாள் தங்கிட்டுப் போனாங்களே... ஈஸ்வரா, வெள்ளிக்கிழமையும் அதுவுமா இந்தாத் தண்டி இடியா எந்தலையில் எறங்கணும்’’ என்று போனிலேயே அழத் தொடங்கினாள்.

‘‘அவரு போய்ச் சேந்து பத்து நாளுக்குமேல ஆச்சிங்க. பக்கத்து ஊர் கவர்மென்ட் ஆசுபத்திரியில, பதினைஞ்சு நாள் வச்சிப் பாத்தாங்க; மருந்து, மாத்திரை ஒன்னாலும் கொணமாகல. டாக்டருங்க வீட்டுக்குக் கூப்பிட்டுப்போய்ப் பாத்துக்கங்கன்னு அனுப்பிச்சிட்டாங்க. வூட்டுக்கு வந்த மூனா நாளே மூச்சடங்கிப் போச்சி.’’ என்னிடம் தெரிவித்ததை பாட்டியிடமும் தெரிவித்தார் செண்பகா.
‘‘அவரு ஒடம்புக்கு என்னம்மா செஞ்சது’’ என்ற பாட்டியின் வினாவுக்கு, ‘‘என்னத்த சொல்றதுங்க! குளிக்கறப்போ வெண்ணித் தண்ணி மேல கொட்டி, இடுப்புக்குக் கீழே ஒடம்பெல்லாம் கொப்புளிச்சிப்போச்சி, சக்கரை ஒடம்பாச்சா, எல்லா இடத்திலேயும், புண்ணாகி சீழ் கோத்துகிச்சி. ஒண்ணும் செய்ய முடியாதுன்னு டாக்டருங்க கை விரிச்சிட்டாங்க’’ என்று விளக்கிய செண்பகா, ‘‘சரிங்க, நாளைக்கோ நாளன்னைக்கோ, மறுக்கா கூப்பிட்றேன். முடிஞ்சா பாவாயி அம்மாவைப் பேச வைக்கிறேன்.’’ போனைத் துண்டித்தாள் செண்பகா.
விசும்பியபடியே அடுப்படிக்குச் சென்ற பாட்டியின் தோளை அணைத்தபடி நானும் சென்றேன். ‘சிம்’மில் வைத்திருந்த ஸ்டவ்வை ஆஃப் செய்தார். சுவரோரமாய்க் கிடந்த முக்காலியில் உட்கார்ந்து, குனிந்து, இரண்டு கைகளாலும் தலையைத் தாங்கிக்கொண்டு விம்மத் தொடங்கினார். அவருடைய முதுகைத் தடவியபடியே, ‘‘பாட்டி, கொஞ்சம் தண்ணி குடி’’ என்று டம்ளரை நீட்டினேன். கையால் மெள்ளத் தள்ளி விட்டவர் எழுந்து போய், எங்கள் அறையில் கிடக்கும் தன் கட்டிலில் படுத்துக்கொண்டார். கண்களிலிருந்து கண்ணீர் கசிந்துகொண்டிருந்தது. நானும் கட்டிலின் ஓரமாக உட்கார்ந்து, பாட்டியையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
என்ன சொல்லித் தேற்றுவது என்று எனக்குப் பிடிபடவில்லை. மெல்ல நடந்து அண்ணனின் அறைக்குச் சென்றேன். ‘என்ன’ என்று அவன் கண் கேட்டது. ‘‘பாவம் அண்ணா பாட்டி! உயிர்த் தோழிக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பு அவங்கள ரொம்ப பாதிச்சிருக்கும். நாளைக்கு ஒனக்கு லீவுதானே, பாட்டியை கார்ல அழைச்சிக்கிட்டுப் போ, பாவாயிப் பாட்டியைப் பாத்துட்டு வரட்டும். நம்ப பாட்டிக்கு ஆறுதலாயிருக்கும். பாவாயிப் பாட்டிக்கும் கொஞ்சம் தெம்பாயிருக்கும்’’ என்று கெஞ்சலாகக் கூறினேன்.
சில விநாடிகள் என்னை உற்றுப் பார்த்த அண்ணன், ‘‘சரி, போலாம். நீயும் வர தானே பாட்டியோட’’ என்றவன், நான் ஆமோதித்து தலையாட்டுவதைக் கண்டு, ‘‘காலையிலே சீக்கிரமே கெளம்பிடலாம், வெயிலுக்கு முன்னே புறப்பட்டுடுவோம். இங்கிருந்து அஞ்சு மணி நேரம்தான் புடிக்கும். காலை டிபனை வழியில பார்த்துக்கலாம்’’ என்றான்.
பாட்டி அருகே சென்று, ‘‘பாட்டி, நாம நாளைக்குக் காலைல பாவாயிப் பாட்டியைப் பார்க்கப் போறம். இப்ப நீ தூங்கு!’’ என்று மின்விளக்கை அணைத்துவிட்டு வெளியே வந்தேன். எனக்குப் பசிக்கவே இல்லை. அண்ணன் பொடியோடு இரண்டு தோசை சாப்பிட்டான். சமையலறையை ஒழுங்குபடுத்தி விட்டு, வழக்கம்போல் நானும் பாட்டியின் அறைக்குப் போய்ப் படுத்துக்கொண்டேன். பாட்டிக்குத் தூக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தார்.
மறுநாள் காலை சீக்கிரமே கிளம்பி விட்டோம். பாவாயிக்குக் கொடுப்பதற்கென்று, பாட்டி தன்னிடமிருந்த புதுப்புடவைகள் இரண்டை எடுத்துக்கொண்டார். கார் ஊரை விட்டுத் தாண்டும் வரை பாட்டி சோகமே உருவாக சாய்ந்து கொண்டிருந்தார். கார் பிரதான சாலையை அடைந்ததும் தனக்குத்தானே பேசிக் கொள்வதுபோல மெல்லிய குரலில் பேசத் தொடங்கினார்.
பாவாயியின் சொந்த அத்தை மகன்தான் ஆறுமுகம். பாட்டியும் பாவாயியும், உள்ளூரிலிருக்கும் ஆரம்பப் பள்ளியில் படித்து முடித்ததும் ஆறாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை பக்கத்து நகரத்திலிருந்த பெண்களுக்கான நடுநிலைப் பள்ளியில் ஒன்றாகப் படித்திருக்கிறார்கள். ஆறுமுகத்துக்கு பக்கத்து ஊர்தான். அவனும் அதே நகரத்திலிருந்து, ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தான். இவர்களைவிட மூன்று நான்கு வயது பெரியவன். படித்தபோதும், படித்து முடித்ததும், காலையிலும் மாலையிலும் புத்தகப் பையோடு நடந்து செல்லும் இவர்களைத் தன் சைக்கிளில் முந்துவதும், பிந்துவதும், வழி மறித்து பாவாயியோடு பேச முயல்வதும், அவனது நடவடிக்கையாக இருந்தது. இது பாவாயிக்குத் துளிக்கூட பிடிக்கவில்லை. ‘ரெளடிகணக்கா நடந்துக்கறான்’னு பாட்டியிடம் கூறுவாளாம். சமயங்களில் வாயில் வரும் வசைச் சொற்களோடு அவனை நோக்கிக் காரித் துப்புவாளாம். பாட்டி, ‘சரிடி, வுடு’ என்று ஆசுவாசப்படுத்துவாராம். தன் படிப்பு முடிந்ததும், ஆறுமுகம் அவ்வப்போது தான் எழுதிய (காதல்) கடிதங்களை, பாவாயியிடம் கொடுக்க முயல்வானாம். அவள் வாங்க மறுப்பாளாம். ‘இந்தா கெளரி, அப்புறமா, இதை நீ அவகிட்ட குடுத்து, வீட்ல போய்ப் படிச்சிப் பாக்கச் சொல்லு’ என்று பாட்டியின் கையில் திணிப்பானாம். வெடுக்கென்று பிடுங்கும் பாவாயி, அதைச் சுக்குநூறாகக் கிழித்து எறிவாளாம். ஆனால் இந்த விஷயங்கள் எதுவும், பாவாயியின் குடும்பத்தினருக்கோ, பாட்டியின் குடும்பத்தினருக்கோ தெரியாமல் பார்த்துக்கொண்டார்களாம். ஏனென்றால், ‘அப்படியா சங்கதி! நீங்க படிச்சுக்கிழிச்சது போதும்’ என்று பள்ளிக்கூடத்திலிருந்து நிறுத்திவிடுவார்கள் என்ற பயம்.
எட்டாம் வகுப்போடு இவர்கள் பள்ளி செல்வது முடிவுக்கு வந்தது. தன் மகன் படிப்பு முடிந்து இரண்டு வருடங்களாகக் காத்திருப்பதாகக் கூறி, பாவாயியின் அத்தை, இவளைப் பெண் கேட்டு வந்தார். இரட்டை மாடு பூட்டிய வில் வண்டியில், ‘ஜல் ஜல்’ என்று அத்தை வந்திறங்கிய தோரணையைப் பார்த்து, ஊரே பாவாயியின் அதிர்ஷ்டத்தைச் சிலாகித்துப் பேசிக் கொண்டதாம்.

விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த ஆறுமுகம், தந்தையை இழந்தவன், தாய்க்கு ஒரே பிள்ளை. ஐந்து ஏக்கர் நஞ்சை, மூன்று ஏக்கர் புஞ்சை, விவசாய நிலத்திலேயே கட்டப்பட்டிருந்த பெரிய கல் வீடு, வண்டி, மாடு, பசு, கன்று காலிகள், தவசு தானியம் என்று சோத்துக்கும், துணிமணிக்கும் கைச்செலவுக்கும் யாரையும் எதிர்பார்க்கத் தேவையில்லை.
பாவாயிக்கு அம்மா கிடையாது. அவள் குழந்தையாக இருக்கும்போதே இறந்து விட்டிருந்தார். நான்கு வயது மூத்த அக்கா உண்டு. அம்மா உயிரோடு இருக்கும்போதே தன்னோடு தொடுப்பில் இருந்த பச்சையம்மாவை, அம்மா இறந்தவுடன், அப்பா வீட்டிற்கே அழைத்து வந்துவிட்டார். ‘குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள’ என்ற சாக்காட்டோடு. ‘ரெண்டு பொட்டப் புள்ளங்கள ஒரு ஆம்பளையாலே, எப்படிக் கட்டிக் காப்பாத்திக் கரைசேக்க முடியும்? அதுங்களுக்கு நல்லது கெட்டது யார் சொல்லிக் குடுப்பா? கண்ணாயிரம் செஞ்சது ஒண்ணும் தப்பில்ல’ என்று ஊர் ஏற்றுக் கொண்டது. பச்சையம்மாவும் குழந்தைகளை நன்றாகவே பார்த்துக் கொண்டார். அவருக்குக் குழந்தைகள் பிறக்கவில்லை.
பாவாயியின் அக்காவுக்கு ஏற்கெனவே சொந்தத் தாய் மாமனுடன் திருமணம் ஆகியிருந்தது. இப்போது அத்தை மகன் ஆறுமுகத்திற்கு பாவாயியைக் கட்டிக் கொடுப்பதில் குடும்பத்திற்கு எந்தவித அட்டியுமில்லை. சந்தோஷம்தான். பாவாயி தனக்குக் ‘கல்யாணம் வேண்டாம்; ஆறுமுகத்தைக் கட்டிக்க மாட்டேன்’ என்று தன் அக்காவிடமும், பச்சையம்மாவிடமும் எத்தனை தடவை சொன்னாலும், அதை யாரும் காதில் வாங்கிக் கொள்ள வில்லை. ‘நல்ல குடும்பத்துப் பொண்ணுங்க அப்பிடித்தான் சொல்வாங்க. அதுக்கு, பெத்தவங்க பொண்ணுங்கள நல்லபடியா வளத்திருக்காங்கன்னு அர்த்தம். இல்லைன்னா அலையறான்னு பேரானா யாருக்குக் கேவலம். அவங்களுக்குத்தானே’ என்பது கிராமத்துப் பேச்சு.
கல்யாணம் ரொம்ப நன்றாக நடந்தது. நான் தான் அவளுக்குத் தொணப் பொண்ணா இருந்தேன். அவங்க அப்பா முப்பது பவுன் நகை போட்டார். இரட்டை மாட்டுக் கூண்டு வண்டியில் பச்சையம்மா, பாத்திரம், பண்டம், பாய், தலவாணி, தவசு தானியம்னு வண்டி கொள்ளாம ஏத்தி பாவாயியைப் புகுந்த ஊட்டுக்கு அனுப்பி வெச்சாங்க.
பாவாயி கல்யாணத்துக்கு அப்புறம், நாலு வருசம் கழிச்சிதான் என் கல்யாணம் நடந்தது. இடையில் அவங்க அத்தையும் பச்சையம்மாவும் போய்ச் சேந்துட்டாங்க. என் கல்யாணம் நடக்குறவரை, பாவாயி வருஷம் ரெண்டு தடவையாவது ஊருக்கு வருவா, பொங்கலுக்கும் கார்த்திகை தீபத்துக்கும். ‘‘அவன் ஒண்ணும் சரியில்லடி. `எதனால என்னைக் கட்டிக்க மாட்டேன்னே? எவனையாவது லவ் பண்ணுனியா? எவனையாவது வெச்சிருக்கியா? இப்பவும் அவன்தான் ஒம் மனசுல இருக்கானா? அவன் ஒன்ன இங்கெல்லாம் தொட்டானா?’ன்னு அசிங்கப்படுத்துறான். குடி, கூத்தின்னு அவனுக்கு இல்லாத கெட்ட பழக்கம் இல்லை. அத்தை இருந்த வரை கொஞ்சம் அடங்கியிருந்தான். இப்ப கேட்க ஆளில்லை. எல்லாம் எந் தலையெழுத்து’’ன்னு புலம்புவா. எனக்குக் கல்யாணம் ஆகும்போது பாவாயிக்கு, ஆணொண்ணு, பொண்ணொண்ணுன்னு ரெண்டு குழந்தைங்க. பாத்து பாத்து வளத்தா பாவாயி.
பையன் செவப்பா, நல்ல லட்சணமா இருப்பான். பேரு சிவகுமார். ஆறுமுகம் படிச்ச அதே ஸ்கூல்லதான் அவனும் படிச்சான். ஒரு நாள் சாயங்காலம் பள்ளிக்கூடம் முடிஞ்சி சைக்கிள்ல வரும்போது லாரி மோதி அதே எடத்துல சைக்கிளோட விழுந்து செத்துட்டான். அப்ப அவன் பன்னெண்டாம் வகுப்பு படிச்சிட்டிருந்தான். பாவாயியும் ஆறுமுகமும் பட்ட பாடும் வடிச்ச கண்ணீரும் கொஞ்ச நஞ்சமில்ல. துக்கம் விசாரிக்க நானும் அப்ப போயிருந்தேன். விதி யாரை விட்டது.
மகன் போன பின்னே, ஆறுமுகத்தின் குடிப்பழக்கம் அதிகமாகிவிட்டது. மகன் பேரைச் சொல்லி, எந்நேரமும் புலம்பிக் கொண்டிருப் பானாம்.
துக்கம் நடந்த வீட்டில், வருஷம் திரும்பு முன் ஒரு நல்ல காரியம் நடக்கணுங்கிறது அந்த ஊரு நம்பிக்கை. சிவகுமாரின் தங்கைக்கு பதினாறு வயசு நடக்கும்போதே நல்ல பையனாகப் பார்த்து, ஊர் மெச்ச கல்யாணம் பண்ணினாங்க. பாவாயி, தன் கல்யாணத்துக்கு அவ அப்பா போட்ட அத்தனை நகைகளையும் மகளுக்கே குடுத்துட்டா. அடுத்த பத்தாவது மாசம், அவளுக்கொரு பெண் குழந்தையும், அதுக்கப்புறம் ரெண்டு வருசம் போய் ஒரு ஆம்பிளைப் புள்ளையும் பொறந்தது. பேரனை நல்லா படிக்க வெச்சு, பெரிய ஆளா ஆக்கணும்ங்கிறது ஆறுமுகத்தோட ஆசை. மகன் இல்லாத கொறைய பேரன் மூலம் நெறவேத்திக்க நெனச்சாரு போல. திருச்சியிலே இருக்கிற ஒரு நல்ல என்ஜினீயரிங் காலேஜில சேத்து, ஹாஸ்டல்ல உட்டு படிக்க வெச்சாங்க. காச, காசுன்னு பார்க்காமே செலவழிச்சாரு ஆறுமுகம். அவரோட குடிப்பழக்கம்கூட கொஞ்சம் கொறஞ்சிருந்ததா பாவாயி சொல்லுவா. பேரன் படிப்பு முடிஞ்சி வந்ததும், சொத்த, ‘படிச்ச பேரன்கிட்ட ஒப்படைக்கப்போறேன், அவன் கைப்பட்டால் சொத்து விருத்தியாகும்’னு பேசத் தொடங்கியிருக்காரு. ‘முதல்ல பேத்தி கல்யாணம் முடியட்டும், அதுக்குப் பின்னால சொத்து மாத்தறத வெச்சுக்கலாம்’ என்று பாவாயி உறுதியாக நிற்க, பேத்தி கல்யாணம் நடந்தது. அவளும் தன் புருஷன் வீட்டுக்குப் போய்ட்டா.
சொத்த பேரன் பேருக்கு மாற்ற ஆறுமுகம் ஏற்பாடு செய்யறப்போ, பாவாயி ஆறுமுகத்திடம் ‘நமக்குன்னு ஒரு ரெண்டு ஏக்கர் நெலத்தை வெச்சிகிட்டு, மீதியை அவன் பேருக்கு மாத்து. எப்படியும், நமக்குப் பின்னால அவனுக்குத் தானே அந்த ரெண்டு ஏக்கரும் போவும். நமக்குக் கடைசிக்காலத்தில கஞ்சிக்கு வழி இல்லாம, எல்லாத்தையும் வழிச்சிக் குடுத்துட்டு, நாம பிச்சை எடுக்கவா போறம்’ என்று பாவாயி தல தலயா அடிச்சிக்கிட்டா. ‘சீ நாயே, ஒங்கொப்பன் வீட்டிலிருந்து நீ கொண்டாந்ததையா நான் தூக்கிக் கொடுக்கிறேன், எஞ்சொத்து, எம்பேரனுக்குக் கொடுக்கறேன், ஒனக்கு ஏன் கொடையுது, பரதேசிப் பய மவளே’ என்று ஏகடியம் பேசினான்.
ஆறுமுகம், கெளரி, மகள், மருமகன், பேரன் என்று குடும்பம் சில மாதங்கள் ஓடியது. ஆறுமுகத்தின் மருமகன் ஒரு அப்பாவி. அடிச்சா அழக்கூடத் தெரியாது. பேரன் அப்பிடியில்லை. ஆறுமுகம் குடித்துவிட்டுக் வருவதைக் காரணம் காட்டி, படித்த பேரன், ‘ஒங்களுக்கும் எங்களுக்கும் சரிப்பட்டு வராது, நீங்க தனியா போயிருங்க’ என்று ஊருக்குள் தங்களுக்கிருந்த இடத்தில் ஒரு சிறிய வீடு - சின்ன சமையல் இடம், அதோடு ஒரு அறை - கட்டிக் கொடுத்து அனுப்பி வச்சுட்டான். இப்ப நாலஞ்சு வருஷமா பாவாயியும் ஆறுமுகமும் அந்த வீட்டில்தான் இருக்காங்க.
பேரனின் இந்தப் போக்கு, ஆறுமுகத்தை ரொம்பவே பாதிச்சிருச்சு. குடியும் அதிகமானது. இங்க நம்ம வீட்டுக்கு வரும்போது மட்டும்தான் கஷ்டப்பட்டு குடிக்காமலிருப்பானாம், பேர் கெட்டுவிடும் என்று. அதுக்காகவே பாவாயி, அவனையும் இழுத்துக்கிட்டு வருவா. வீட்டுச் செலவுக்கு மகளோ, பேரனோ, ஒத்த ரூபாகூட கொடுத்து உதவுறதில்லை. யாராவது அவனிடம் தாத்தா பாட்டிக்கு உதவச் சொன்னால், ‘அதான் கவர்மென்ட்டு, நூறு நாள் வேலை கொடுக்குதே, கெழவனையும் கெழவியையும் அதுக்குப் போகச் சொல்லுங்க’ என்பானாம்.
வயதான காலத்தில், தான் ஏற்கெனவே சிறுகச் சிறுக சேமித்து வைத்திருந்த ஒரு லட்சம் ரூபாயை, பக்கத்து ஊரிலிருந்த ஒரு லேவாதேவி செட்டியாரிடம், ரெண்டு வட்டிக்குக் கொடுத்து வைத்திருந்தா பாவாயி. அதிலிருந்து மாதாமாதம் கிடைக்கும் வட்டித்தொகை, ஆதரவற்ற முதியவர்களுக்காக கவர்மென்ட் கொடுக்கும் உதவித்தொகை இவைதான் பாவாயியின் வருமானம். அதுலயும் மிச்சம் புடிச்சுதான் என்னப் பாக்க, இங்க வரும்போது புளி, செக்கு எண்ணெய், எள்ளுன்னு எல்லாம் வாங்கி வருவா பாவாயி.” பாட்டி கடந்தகால நினைவுகளின் தாக்கத்தில் பேச்சை நிறுத்தினார்.
‘சரி பாட்டி, கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கோ. ஒரு நல்ல ஹோட்டல்ல, வண்டியை நிறுத்தறேன்... ஏதாச்சும் சாப்பிடுவோம்’ என்றான் ராகவன்.
‘‘நீங்க ரெண்டு பேரும் போய் சாப்புட்டுட்டு வாங்க. எனக்குப் பசிக்கல. வண்டியிலேயே இருக்கேன்’’ என்ற பாட்டியைக் கட்டாயப்படுத்தி ஓட்டலுக்கு அழைத்துப் போனோம். ரெண்டு இட்லிகூட பாட்டியின் தொண்டையில் இறங்கவில்லை. நாங்கள் இருவரும் சாப்பிட்டுவிட்டு பயணத்தைத் தொடர்ந்தோம்.
பாட்டி பேசாமல் வந்தார். இரவு தூக்கம் இல்லாததால், கொஞ்ச நேரத்தில் தலையைப் பின்னால் சாய்ந்தபடியே கண்ணயர்ந்தார்.
பதினொன்றரை மணியளவில் கார், பிரதான சாலையிலிருந்து பாவாயிப் பாட்டியின் ஊருக்குள் செல்லும் கப்பிப் பாதையில் திரும்பியது. பாட்டி அடையாளம் காட்ட, அண்ணன் பாவாயிப் பாட்டியின் வீட்டருகே காரை நிறுத்தினான். கார் நின்ற சத்தத்தைக் கேட்டு செண்பகா, தன் வீட்டுக் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள். கெளரிப் பாட்டியை அடையாளம் கண்டுகொண்ட செண்பகா, ‘வாங்க... வாங்க’ என்று வாய் நிறைய வரவேற்றாள். சற்றுத் தயங்கிய பாட்டியிடம், “மூனாம் நாளே கருமாதி எல்லாம் முடிஞ்சிருச்சு. துஷ்டி கழிச்சாச்சி. பயப்படாம வாங்க!” என்றாள். “பாவாயி அம்மா ரேஷன் கடைக்குப் போயிருக்கு; உள்ள வந்து உக்காருங்க. பாட்டியைக் கூப்பிட்டு உடறேன்” பரபரத்தாள்.
செண்பகா வீடு பெரிய வீடு. ஹாலில் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் உட்கார்ந்தோம். செண்பகா குடிக்கத் தண்ணீர் கொண்டு வந்தாள். ‘காபி போடறேன்’னு கிளம்பியவளைத் தடுத்த பாட்டி, ‘இப்பதான் செத்த முன்னால மூணு பேரும் டிபன் சாப்பிட்டு காபி குடிச்சிட்டு வாரோம். நீ ஒக்காரு!’ என்று கையைப் பிடித்துத் தன் அருகே நாற்காலியில் உட்கார வைத்துக்கொண்டார்.
‘‘நீங்க பேசிக்கிட்டு இருங்க. நான் இப்படி கொஞ்சம் ஊரைச் சுத்திப் பாத்துட்டு வாரேன்’’ என்று அண்ணன் வெளியேறினான்.
தன்னிடமிருந்து, செய்திகளைத் தெரிந்துகொள்ள பாட்டி ஆவலாதியாக இருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்ட செண்பகா, தணிந்த குரலில் பேசத் தொடங்கினாள்.
“பாவாயி அம்மா ரேஷன் கடையிலிருந்து வர இன்னும் ஒரு மணி நேரமாவும். பாவாயி அம்மா பாவம், வசதியான குடும்பத்தில் பொறந்து, வசதியான குடும்பத்துல வாக்கப்பட்டு, வயசான காலத்துல யாருமில்லாம இப்பிடிக் கஷ்டப்படணும்னு அவங்க தலையில கடவுள் எழுதி வச்சிட்டான். என்னத்த சொல்றது போங்க... ரெண்டு வருஷமாகவே பெரியப்பா குடிக்கிறது அதிகமாயிட்டிது. வரவேண்டிய வட்டிப்பணமும் கொரோனா காலத்துல வரதில்ல. கையில காசில்லனாலும், பெரியப்பா வாயிக்கும் வயித்துக்கும் வஞ்சகம் செய்ய மாட்டாரு. சோறு பத்தாட்டியோ, கொழம்பு ருசியா இல்லாட்டியோ, பாவாயி அம்மாவ வாய்க்கு வந்தபடி திட்டுவாரு. அவங்க ஏதாச்சும் எதுத்துப் பேசுனா, அடிக்கிறது, ஒதைக்கிறது, முடியைப் பிடித்து இழுத்தாந்து, வீட்டுக்கு வெளியே தள்ளிக் கதவை மூடிக்கிறதுன்னு ஊரே பார்த்திருக்க, கோலங் கட்டுவாரு. இந்த மாதிரி நேரங்களிலெல்லாம் சத்தம் கேட்டு வெளியே வந்து நாந்தான், அவருகிட்ட இருந்து பாட்டியைக் காப்பாத்தி, இங்க வீட்டுக்குக் கூட்டிக்கிட்டு வந்துடுவேன்’’ என்று செண்பகா சொன்னது பாட்டிக்கு அதிர்ச்சியாக இருந்தது.
‘‘நாளாக நாளாக, இந்தக் கொடுமை அதிகமாயிட்டே போச்சே ஒழிய குறையல. ‘உங்க தாத்தன், பாட்டியைச் சித்ரவதை செய்யறாம்பா, கொஞ்சம் கூட்டியாந்து ஒங்ககிட்ட வெச்சி பாத்துக்குங்க’ன்னு ஊர்க்காரங்க சொன்னதுக்கு, அந்த மாபாவி பேரன், ‘அந்தக் கெழவி எங்கள நம்பாம பக்கத்து ஊருக்காரங்கிட்ட, வட்டிக்குக் கொடுத்து வச்சிருக்கா இல்ல, அந்த ஒரு லட்சத்தை வாங்கியாந்து, எங்கிட்ட குடுக்கச் சொல்லுங்க மொதல்ல. அப்புறமா நீங்க சொல்றதை நான் கேக்குறேன்’ன்னு குதர்க்கம் பேசினான்.
ஒருபக்கம் வூட்டுக்காரன் தொல்லை, இன்னொரு பக்கம் ஏமாத்துற அயோக்கிய பேரன். அன்னைக்கு ராவுலயும் அதுதான் நடந்திருக்கு. மூக்கு முட்ட குடிச்சிட்டு வந்து வூட்ல விழுந்த பெரியப்பா சாமத்தில் எழுந்து, பாவாயியை அடிச்சிருக்கார். அப்புறம் போதையில தூங்கிட்டார். விடிஞ்சதும், ‘எழுந்திருடி கெழவி! நான் குளிச்சிட்டு வெளியூர் போவணும். சுடுதண்ணி போடு’ன்னு அதட்டியிருக்கார்” என்று நடந்த சம்பவத்தை விவரித்தாள்.
உடல் வேதனையோடு, மெல்ல எழுந்து அடுப்பு மூட்டி தண்ணீர் நிறைந்த பெரிய அலுமினியச் சட்டியை அடுப்பில ஏத்தி வைத்தார் பாவாயி. ஊரை விட்டுக் கொஞ்சம் தள்ளியிருந்த கருவேலங்காட்டில் காலைக் கடன்களை முடித்து விட்டு வந்த ஆறுமுகம், வாசலில் போடப்பட்டிருந்த கல் மீது கோவணத்தோடு காலைத் தொங்கப் போட்டு உட்கார்ந்திருந்தார். அவர் அருகே ஒரு சிமென்ட் தொட்டி பாதி அளவு தண்ணீரோடு இருந்தது. ‘ஏன்டி கெழவி இன்னமுமா தண்ணி காயுல? காஞ்சது போதும் கொண்டாந்து ஊத்து’ என்று கூவினார். கொதிக்கும் வெந்நீர்ச் சட்டியை, கரிச் சுருணையால் பிடித்து செரமப்பட்டு மெல்லத் தூக்கி வந்த பாவாயி, ஆறுமுகம் எதிரே இருக்கும் சிமென்ட் தொட்டியில் வெந்நீரை ஊற்ற முயலும்போது, கை தவறி, சட்டி அவர் வயிற்றில் சரிந்துவிட்டது. கொதிக்கும் நீர், தகிக்கும் அலுமினியச் சட்டி... அவர் வயிறு, தொடை, கால்களில் பட்டு வழிந்தோட, ‘ஐயய்யோ’ என்று ஆறுமுகம் போட்ட கூப்பாட்டில் அக்கம்பக்கமே கூடிவிட்டது.

“பயத்துல பாவாயி அம்மா கல்லா சமைஞ்சி, அப்படியே நிக்கிறாங்க. அந்த எரிச்சலிலும், வலியிலும்கூட தாத்தா, கெட்ட வார்த்தையால் திட்டிக்கிட்டே பாவாயியை எட்டி எட்டி உதைத்தார். அக்கம்பக்கத்தினர் அவரைத் தடுத்து, காரில் ஏற்றி பக்கத்து ஊரிலிருந்த அரசாங்க ஆஸ்பத்திரியில் கொண்டு சேத்தாங்க.அப்பகூட அவங்க பேரனோ, மகளோ, மருமகனோ எட்டிக்கூடப் பாக்கல. பாவாயிதான் கூட இருந்து பாத்துக்கிட்டாங்க. வீட்டுக்கு வந்த மூணாவது நாளே பெரியப்பா போய்ட்டார்” என்று சொல்லிய செண்பகா, மெளனமானாள்.
பாட்டியும் நானும்கூட தலைகுனிந்து மெளனம் காத்தோம். சில நிமிடங்கள் நீடித்த இந்த மெளனத்தை உடைத்தது பாவாயிப் பாட்டியின் குரல்.
‘`கெளரி, நான் அப்பவே வந்துட்டேன். செண்பகா சொன்னதையெல்லாம் வெளியே நின்னு நானும் கேட்டுகிட்டுத்தான் இருந்தேன்’’ குரல் கேட்டு, கெளரிப் பாட்டி விசுக்கென்று திரும்பி, பாவாயியைப் பார்த்தார். ‘`எல்லாச் சங்கதியையும் சரியாச் சொன்ன செண்பகா, ஒரு எடத்துல மட்டும் பிசகா சொல்லிட்டா. வெந்நீர்ச் சட்டி கை நழுவி அவன் மேல் கொட்டிடுச் சின்னால்ல, அது தப்பு!’’ சொல்லிக்கொண்டே என் பாட்டி அருகே வந்து, தோளில் கை போட்டுக் கூறினார், `‘கெளரி, வீணா அழுவாதே! நீ வந்திருக்கவே வேணாம். நான் சந்தோஷமா இருக்கேன். வேணுமின்னேதான் கொதிக்கிற தண்ணியை அந்த நாசமாப் போனவன் மேல ஊத்துனேன். தொலஞ்சான் பாவி. இப்பதான் நான் நிம்மதியா இருக்கேன்’’ குரல் தீர்க்கமாக ஒலித்தது.
கெளரிப் பாட்டி, என்ன சொல்வது என்று தெரியாமல் விழிக்க, நான் எழுந்து போய், பாவாயிப் பாட்டியின் கழுத்தைச் சுற்றிக் கை கோத்து நெற்றியில் முத்தமிட்டேன்.