கட்டுரைகள்
Published:Updated:

மாயா வனம்

 ஐஸ்வர்யா
பிரீமியம் ஸ்டோரி
News
ஐஸ்வர்யா

ஒருமுறை தடோபாவில் மாயாவைப் பார்க்கப் பலமணிநேரம் காத்திருந்தோம்.

“வைல்டுலைஃப் போட்டோகிராபியில ஆர்வம் உடைய அப்பா, எனக்கு விவரம் தெரிஞ்ச காலத்துல இருந்து ஃபாரஸ்டுக்குக் கூட்டிட்டுப்போவார். 12 வயசுலேருந்து நானும் முறைப்படி போட்டோ எடுக்கிறேன். கடந்த பத்து வருஷமா அப்பாவும் நானும் சேர்ந்தேதான் இந்தியாவிலுள்ள வனவிலங்குச் சரணாலயங்களுக்கு டிராவல் பண்ணிட்டிருக்கோம்.

பொண்ணுங்க வீட்டை விட்டு வெளிய போகக்கூடாதுங்கிற பேச்சே எங்க வீட்டுல கிடையாது. ‘உனக்குப் பிடிச்சதைச் செய்; அதைச் சரியாகச் செய்’ன்னுதான் சொல்வாங்க. அந்த ஊக்கத்துல இப்போ ஆவணப்பட இயக்குநராகவும் மாறியிருக்கேன்.” - பாலக்காட்டுத் தமிழில் கொஞ்சிப் பேசும் ஐஸ்வர்யாவின் முகத்தில் விரிகிறது ஆயிரம்வாட்ஸ் புன்னகை.

 ஐஸ்வர்யா
ஐஸ்வர்யா

இளம் கானுயிர்ப் புகைப்படக்கலைஞரான இவர், விலங்குகள் நலன் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக ஆவணப்படங்களை இயக்கிவருகிறார். மத்தியப்பிரதேசம் மாநிலம் தடோபா வனவிலங்குச் சரணாலயத்தில் வாழும் ‘மாயா’ என்ற புலியைப் பற்றிய இவரது ஆவணப்படம் சமீபத்தில் உலக அளவில் கவனம் ஈர்த்திருக்கிறது.

மாயா வனம்

“தமிழ்நாடு பூர்வீகமா இருந்தாலும், தாத்தா காலத்துல இருந்தே மும்பையில வசிக்கிறோம். அப்பாகிட்ட அடிப்படை விஷயங்களையும், ஆன்லைன் வாயிலாக போட்டோகிராபி பத்தின எல்லா விஷயங்களையும் கத்துக்கிட்டேன். வருஷத்துக்கு 50 நாள்களுக்கும் மேல் டிராவல்ல இருப்பேன்.அதேசமயம் என்னோட படிப்பும் பாதிக்காமப் பார்த்துக்கிட்டேன். ரெண்டு வருஷத்துக்கு முன்பு மாஸ் மீடியா கோர்ஸ் முடிச்ச நிலையில, இந்தத் துறையையே கரியரா ஏத்துக்கிட்டேன்.

மாயா வனம்

மும்பைக்கு அருகேயுள்ள உரன் பகுதி, சில ஆண்டுகளுக்கு முன்புவரை நீர்நிலைகளுடன் பசுமையா இருந்துச்சு. ஆனா, ஆக்கிரமிப்புகளால அந்தப் பகுதியில நீர்நிலைகள் இருந்ததற்கான சுவடே கணிசமாகக் குறைஞ்சுடுச்சு. இந்த நிலைக்கான காரணம், இதனால் ஏற்படப்போகும் விளைவுகளை மையப்படுத்தி ‘பன்ஜே தி லாஸ்ட் வெட்லேண்ட்’னு ஓர் ஆவணப்படம் எடுத்தேன். அப்போதைய மகாராஷ்டிரா முதல்வர் உட்பட பலரிடமிருந்தும் அந்தப் படத்துக்காகப் பாராட்டுகள் கிடைச்சுது. மேலும், அந்த நீர்நிலைப் பகுதியின் பாதுகாப்புக்கான பணிகளும் நடக்குது” என்பவர், இந்தியாவில் புகழ்பெற்ற புலியாகக் கருதப்படும் ‘மாயா’ குறித்த ஆவணப்படத்துக்காக ஆறு ஆண்டுகள் ஆய்வு செய்திருக்கிறார்.

மாயா வனம்

“குட்டியாக இருக்கும்போதே தாயை இழந்து தனியாகவே வளர்ந்த மாயா, தன்னைத் தற்காத்துக்க ரொம்பவே போராடியிருக்கு. மாயா முதல்முறை பெற்றெடுத்த ரெண்டு குட்டிகளுமே இறந்திடுச்சு. ரெண்டாவது முறை பெற்ற மூணு குட்டிகளில், ஆண் புலிகள் துரத்திவிட்டதால் ரெண்டு குட்டிகள் என்ன ஆச்சுன்னு இதுவரை தெரியலை. மூணாவது முறை ரெண்டு குட்டிகள் பெற்று அதில் இப்போ ஒண்ணுதான் உயிரோடு இருக்கு. மாயா இப்போ மீண்டும் கர்ப்பமா இருக்கு. பிரசவம் முடிந்த ஒவ்வொரு முறையும், செந்நாய்கள், ஆண் புலிகள், கரடிகளிடமிருந்து தன்னோட குட்டிகளைப் பாதுகாக்க மாயா ரொம்பவே போராடுது.

மாயா வனம்

ரொம்பவே விசாலமான மாயாவின் வசிப்பிடத்தை மற்ற விலங்குகளால் அவ்வளவு சீக்கிரம் நெருங்க முடியாது. போராட்டக் குணத்தால் மாயா இப்போ ரொம்பவே ஆக்ரோஷ மானதாக மாறியிருக்கு. இதனாலயே இந்தியாவி லுள்ள புலிகளில் மாயா தனித்துவமானதாகக் கருதப்படுது. அதனுடைய வாழ்க்கை பத்தி ‘குயின் ஆஃப் டாரு’ன்னு ஓர் ஆவணப்படத்தை எடுத்தேன். அது கடந்த ஆண்டு இறுதியில் நியூயார்க்ல நடந்த ‘வைல்டு லைஃப் கன்சர்வேஷன் ஃபிலிம் ஃபெஸ்டிவலில் செலக்ட் ஆகி, எனக்குச் சிறந்த அறிமுக ஃபிலிம் மேக்கருக்கான விருது கிடைச்சுது. அடுத்து சிங்கப்பூர் சவுத் ஏசியன் இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல்லயும் இந்தப் படம் தேர்வாகியிருக்கு” என்று மகிழ்ச்சியுடன் கூறும் ஐஸ்வர்யா, விலங்குகள் பாதுகாப்பு குறித்துப் பல ஆண்டுகளாகப் பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இங்கிலாந்து மன்னர் குடும்பத்தின் ‘தி டயானா’ விருதும் சமீபத்தில் ஐஸ்வர்யாவுக்குக் கிடைத்திருக்கிறது.

 ஐஸ்வர்யா
ஐஸ்வர்யா

“ஒருமுறை தடோபாவில் மாயாவைப் பார்க்கப் பலமணிநேரம் காத்திருந்தோம். திடீர்னு வெளிய வந்த மாயா, ரெண்டாவது டெலிவரியில் பிறந்த தன்னோட மூணு குட்டிகளுடன் சேர்ந்து ஒரு மானை வேட்டையாடியதைப் பக்கத்துல இருந்து பார்த்தேன். மற்றொருமுறை அதே மூணு குட்டிகளுக்கும் காட்டெருமையை வேட்டையாடக் கத்துக்கொடுத்து அதைச் சாப்பிட்டது, ஆண் புலியுடன் ஆக்ரோஷமா சண்டை போட்ட தருணங்களைப் பார்த்தது செம த்ரில்லிங். சிங்கங்கள் இனச்சேர்க்கை பண்றதை அரிதாகவே பார்க்க முடியும். அந்தக் காட்சியை குஜராத் கிர் பார்க்ல பார்த்து போட்டோ எடுத்தது மறக்க முடியாத மெமரீஸ். இப்படி நிறைய அனுபவங்கள் உண்டு.

பெரும்பாலான விலங்குகளின் வாழ்நாள் முழுவதுமே போராட்டமானதுதான். சக விலங்குகளிடமிருந்தும், மனிதர்கள் வேட்டையாடுவதிலிருந்தும் தப்பிக்க ஒவ்வொரு நாளும் அச்சத்துடனே அவை வாழ்கின்றன. விலங்குகள் குறித்த விழிப்புணர்வு இன்னும் அதிகளவில் மக்களுக்கு ஏற்படணும்” என்று உற்சாகமாகக் கூறுகிறார் ஐஸ்வர்யா.