சினிமா
ஆன்மிகம்
பேட்டி - கட்டுரைகள்
இலக்கியம்
Published:Updated:

"நான் பேட்டைக்காரன்!”

மனைவி, குழந்தைகளுடன்...
பிரீமியம் ஸ்டோரி
News
மனைவி, குழந்தைகளுடன்...

எழுத்தாளர் பாக்கியம் சங்கர்

ந்தப் பூடகமும் இல்லாமல் பளீரென உள்ளத்தைப் பிரதிபலிக்கும் சிரிப்புதான் பாக்கியம் சங்கரின் அடையாளம். இருக்குமிடத்தை மகிழ்ச்சியாலும் சிந்தனையாலும் நிறைப்பவர். ஐந்து நிமிடங்கள் பேசினால், நமக்கும் சிறகு பூட்டிவிடும் நம்பிக்கை மனிதர். கட்டுரை, கவிதை, சிறுகதை, சினிமா என எல்லாத் தளங்களிலும் அழுத்தமான பங்களிப்பைச் செலுத்தும் இளம் தலைமுறைப் படைப்பாளி. வடசென்னையின் இயல்பையும், வழக்காறுகளையும், அப்பழுக்கற்ற மனிதர்களையும், கானாவையும்... கதைகள், கட்டுரைகளாகத் தொடர்ந்து ஆவணப்படுத்திவருபவர். கதை, திரைக்கதை, வசனம் எழுதிய திரைப்படங்கள் வரிசையாக வெளிவர, இன்னொரு பக்கம் நடிப்பிலும் பிஸி. ஆனந்த விகடனில் எழுதி முடித்திருக்கும் ‘நான்காம் சுவர்’ வாசகப்பரப்பில் பெரிதும் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிறது.

``சந்திக்கலாமா தோழர்?” என்று கேட்டால், “காசிமேடு ஹார்பர் தாண்டி ஒரு பாலம் இருக்கு தோழர். பெருசா கூட்டமெல்லாம் இருக்காது. நம்ம பசங்க ஓவியம் பெயின்டிங்னு பிரமாதப்படுத்தி வெச்சிருப்பாங்க. ரம்மியமா இருக்கும். அங்கே சந்திக்கலாமா?” என்றார்.

தூண்டில் வளைவாக நீள்கிற பாலம்... பாறைகளைக் கொட்டி அழகு செய்திருக்கிறார்கள். பெரும்பாலான சென்னைவாசிகளுக்குத் தெரியாத ஒரு கடலோரம். கரையில் மோதி, முகத்தை நனைக்கின்றன அலைத்துளிகள்.

அம்மா பாக்கியத்துடன்...
அம்மா பாக்கியத்துடன்...

ஐந்தாவது படிக்கும் கார்த்திகா, இரண்டாவது படிக்கும் பாரதி கண்ணம்மா, மனைவி ரேவதி என தேவதைகள் சூழ் உலகில் வாழ்கிறார் பாக்கியம் சங்கர். குழந்தைகள் கரையில் ஓடியாடி விளையாட, அவர்களின் மேல் ஒரு கண் பதித்தபடி பேசுகிறார்.

“உண்மையிலேயே இந்த வாழ்க்கை, கொடுப்பினை தோழர். வெறும் நம்பிக்கைகளை மட்டும் சுமந்துகிட்டு ‘சினிமா சினிமா’ன்னு அலைஞ்ச தருணத்துல திடீர்னு திருமணம் நடந்துச்சு. பெருசா வருமானம்னு சொல்லிக்க ஏதுமில்லை. மனசுக்குள்ள பெரிய பயம்... ஆனா, எந்த எதிர்பார்ப்புமில்லாம அப்படியே என்னை ஏத்துக்கிட்டா ரேவதி. அவ கூட இருக்காங்கிற தைரியத்துலதான் அடுத்து அடுத்துன்னு நகர முடிஞ்சுது. எங்கே போனாலும், `எப்படா வீட்டுக்கு வருவோம்’னு இருக்கு தோழர்...” ரேவதியின் கரம் பற்றிக்கொண்டு நெகிழ்ச்சியாகப் பேசத் தொடங்குகிறார் பாக்கியம் சங்கர்.

‘நான் வடசென்னைக்காரன்’ எழுதி, வடசென்னை மண்ணின் படைப்பாளியாக அறியப்படும் பாக்கியம் சங்கரின் பூர்வீகம் திருநெல்வேலி. அப்பா பழனிச்சாமி திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே பிழைப்புத் தேடிச் சென்னைக்கு வந்துவிட்டார். அந்தக் காலகட்டத்தில் தென்

மாவட்டங்களில் மிகப்பெரும் பஞ்சம், வறட்சி. திருநெல்வேலியின் ஒரு பகுதி மக்கள் மும்பை நோக்கிச் செல்ல, இன்னொரு பகுதி மக்கள் சென்னைக்கு வந்தார்கள். பழனிச்சாமி இங்கு தேங்காய் வியாபாரம் செய்தார். பெரிய குடும்பம். குடும்பத்தை வறுமை தின்றது.

மனைவி, குழந்தைகளுடன்...
மனைவி, குழந்தைகளுடன்...

“பூர்வீகம் திருநெல்வேலியா இருந்தாலும் நான் பேட்டைக்காரன்தான் தோழர். ஆனா, திருநெல்வேலித் தமிழும் நல்லாவே வரும். நான் பிறந்தது வண்ணாரப்பேட்டையில். பெரிய குடும்பம். அஞ்சு பிள்ளைகள். அம்மா பாக்கியம்தான் குடும்ப நிர்வாகத்தைச் சுமந்தாங்க. ஒண்டுக்குடித்தனம். வரிசையா பதினைஞ்சு குடும்பங்கள் இருக்கும். யாரு என்ன சாதி, என்ன மதம்னு தெரியாது. அக்கா, தங்கச்சி, மாமா, மச்சான்னு அவ்வளவு நம்பிக்கையாப் பழகுவாங்க. வேலை வெட்டியெல்லாம் முடிச்சுட்டு, ராத்திரி நடுவுல இருக்கிற ‘குடித்தன வாசல்’ல கூடுவோம். அவங்கவங்க வீட்டுல செஞ்ச சாப்பாட்டை எடுத்துட்டு வருவாங்க. கலந்து, பகிர்ந்து சாப்பிடுவோம். அந்தத் தருணத்துல எல்லாருக்கும் எல்லாரும் குழந்தைகளா, அப்பாவா, அம்மாவா மாறிடுவாங்க.

நான் அஞ்சாவது பிள்ளை. ஒரு அக்கா, பேர் சாந்தி. குமரன், சக்திவேல்னு ரெண்டு அண்ணனுங்க. என் உடன் பிறந்த இன்னொரு முக்கியமான நபர் திருநங்கை சுதா. அந்தச் சமூகத்தோட மறுவாழ்வுக்காகத் தொடர்ந்து தீவிரமா வேலை செஞ்சுகிட்டிருந்தாங்க.

பையன் திடீர்னு திருநங்கையா மாறி நின்னதை, அப்பாவும் அம்மாவும் அவ்வளவு எளிதா எடுத்துக்கலை. எல்லாத் திருநங்கைகளும் எதிர்கொள்ளும் சிக்கல்தான். ஆனா, ரொம்ப சீக்கிரமே யதார்த்தத்தைப் புரிஞ்சுகிட்டாங்க. கம்பீரமா, ‘இவள் என் மகள்’னு எல்லாருக்கும் அறிமுகம் செஞ்சாங்க. இன்னைக்கு சுதாம்மா எனக்கு, என் பிள்ளைகளுக்கு, ஏன் அம்மாவுக்கே அம்மாவா மாறி தாய்மையைக் கொட்டுறாங்க.

 திருநெல்வேலி
திருநெல்வேலி

சின்ன வயசுலயே வறுமை பழகிடுச்சு. தீபாவளி அன்னிக்குத்தான் இட்லிப்பானை பரண்லேருந்து இறங்கும். அக்கா வைக்கோலைவெச்சு அதுல ஒட்டியிருக்கும் பத்துகளைத் தேய்ப்பாங்க. `எப்படா இட்லிப்பானையை அடுப்பில வைப்பாங்க?’ன்னு ஆசையா பார்த்துக்கிட்டு உட்கார்ந்திருப்போம். அப்பாவோட வருமானம் போதுமானதா இல்லை. பக்கத்துல ஒரு இரும்புக் குடோன் இருந்துச்சு. தினமும் 100 குடம் தண்ணி இறைச்சுக் கொடுத்தா மாசம் ஐந்நூறு ரூபாய் தருவாங்க. அம்மாவுக்கும் சுதாம்மாவுக்கும் தண்ணி இறைச்ச காய்ப்பு இப்பவும் அப்படியே இருக்கு...” ஞாபகங்களில் கரைகின்றன நிமிடங்கள்.

வடசென்னை பற்றித் திகட்டத் திகட்டப் பேசுவார் பாக்கியம் சங்கர். அவரின் படைப்புகளும் வடசென்னையைப் பேசுகின்றன. விரைவில் இயக்கவிருக்கும் திரைப்படமும் வடசென்னையைத்தான் பேசப்போகிறது.

“வடசென்னை பத்திக் கொஞ்சம்தான் ஆவணப்படுத்தப்பட்டிருக்கு தோழர். நிறைய எழுத வேண்டியிருக்கு. வேறு பகுதிகள்ல பார்க்க முடியாத சுவாரஸ்யமான வழக்காறுகள் நிறைய இருக்கு. இந்தப் பகுதியில ‘கல்யாணச் சாவு’ன்னு ஒரு விசேஷம் உண்டு. ரெண்டு மூணு பொண்டாட்டி கட்டி 95 வயசுவரைக்கும் வகையா வாழ்ந்துட்டுச் சாகிறவரின் மரணம்தான் கல்யாணச் சாவு. கிட்டத்தட்ட அவர் தெய்வ நிலை அடைஞ்ச மாதிரி. பேட்டைத் தலைவர் எல்லாரையும் கூப்பிட்டு, `பெருசு போய்ச் சேந்திட்டாரு... மத்தியானம் பிரியாணி விருந்துக்கு ஏற்பாடு செய்யணும்’னு சொல்லிருவாரு.

வடசென்னை
வடசென்னை

கேன்ல சாராயம் வந்திரும். பட்டை பட்டையா ஊறுகாய் வரும்... ஒரு பக்கம் வண்ணாரப்பேட்டை ஜிகான், இன்னொரு பக்கம் காசிமேடு தாஸ்னு போட்டி ‘கானா’ களைகட்டும். பாக்ஸிங், சிலம்பம், சரக்குத்து, டைவ்னு பதினாறுவிதமான விளையாட்டுகள் நடக்க, பின்னாடி அலங்கரிச்ச பாடையில இறுதி ஊர்வலம் வரும். இப்பல்லாம் இந்தக் கல்யாணச் சாவு காணாமப்போயிருச்சு.

வடசென்னைப் பகுதியில குப்பன், கும்மம்மா, தேசப்பன், தேசம்மாங்கிற பேரெல்லாம் அதிகமா இருக்கும். எல்லாம் கடலோட பெயர்கள். கண்ணேறு படாம இருக்கக் கடலுக்கு, ‘தேசம்மா சோறு’ போடுறதா வேண்டிக்குவாங்க. கருவாட்டுக் குழம்பு, மீன் குழம்பு, சிக்கன் குழம்பு, மட்டன் குழம்பு, மாட்டுக்கறிக் குழம்பு, காரக்குழம்பு எல்லாத்தையும் ஒண்ணா ஊத்தி, சாதத்தைப் பிசைஞ்சு மக்களுக்குத் தூக்குவாளியில அள்ளிக் கொடுப்பாங்க. `மற்றவர்கள் வயிற்றை நிரப்பிட்டா கண்ணேறு படாது’ங்கிறதுதான் இந்தச் சடங்குக்குப் பின்னாடியிருக்கிற நம்பிக்கை. இப்படி நிறைய விஷயங்கள் இருக்கு தோழர். இதையெல்லாம் எப்படியாவது சினிமாவுல கொண்டு வரணும்னு நினைக்கிறேன்” என்கிறார் பாக்கியம் சங்கர்.

பத்தாம் வகுப்போடு படிப்புக்கு முழுக்குப் போட்டாகிவிட்டது. எட்டாம் வகுப்பு படிக்கும் காலங்களிலேயே சினிமாக் கனவு மனதிலேறிவிட்டது.

“வடசென்னையில பிறந்த பெரும்பாலான ஆட்களுக்கு சினிமாவுக்குப் போற கனவு இருக்கும். இங்கே மசூதிக்குப் பக்கத்துல, `செட்டிக்குளம்’னு ஒரு திட்டு இருக்கு. மகாநதி சங்கர், சூப்பர் சுப்பராயன் ரெண்டு பேரும் அங்கே பசங்களுக்கு டைவ் அடிக்கப் பயிற்சி கொடுப்பாங்க. அங்கே பயிற்சி எடுக்கும் பல பேர் சினிமாவுல ஸ்டன்ட் காட்சிகள்ல நடிப்பாங்க. நானும் அந்தப் பயிற்சிக்குப் போனேன். ஆனா, எனக்கு உதவி இயக்குநராகணும்னு ஆசை. கோவிந்தசாமின்னு ஒரு உதவி இயக்குநர் இருந்தார். மிகச்சிறந்த கதைசொல்லி. அவர்தான் எனக்கு சினிமா ஆசையைத் தூண்டிவிட்டவர். நான் பாலகுமாரனைத் தீவிரமா வாசிச்சுக்கிட்டிருந்த தருணம்... ‘இங்கே நிறைய புதையல் இருக்கு... தோண்டியெடு’ன்னு நூலகத்துக்குள்ள கொண்டுபோய் விட்டார். பாலகுமாரன்ல இருந்து புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், லா.ச.ரா.,

சுதாம்மா
சுதாம்மா

ந.பிச்சமூர்த்தி, சுந்தர ராமசாமின்னு வாசிப்பு நகர்ந்துச்சு. கவிதைகள் எழுத ஆரம்பிச்சேன். பேட்டையில யார் காதலிச்சாலும் கவிதைக்கு என்கிட்டதான் வருவாங்க. ஒரு கட்டத்துல அதுவே முழுநேர வேலையா மாறிடுச்சு. எழுதின கவிதைகளைப் பத்திரிகைகளுக்கு அனுப்ப ஆரம்பிச்சேன். கவிதைகள் வெளிவர ஆரம்பிச்சுச்சு. ஆனா, ஒன்பதாம் வகுப்பு ஊத்திக்கிச்சு. அடுத்த வருஷமும் அதே வகுப்புல படிச்சு பத்தாம் வகுப்பு வந்து அங்கேயும் ஃபெயில்.

இனிமே படிப்பு வேணாம்னு முடிவு பண்ணிட்டேன். எப்படியாவது சினிமாவுக்குப் போகணும்... வீட்டுல பேசிப் பார்த்தாங்க. ‘ஏதாவது உருப்படியாச் செய்யப் பாரு’ன்னாங்க. எதுவும் காதுல ஏறலை. பத்தாம் வகுப்புப் படிப்பை விட்டதுக்கும், முதல் படத்துக்குக் கதை வசனம் எழுதினதுக்கும் இடையில அறுபது விதமான வேலைகளைச் செஞ்சிருக்கேன். சேல்ஸ்மேன், பெயின்ட்டர், சித்தாள், பர்மா பஜார் வியாபாரம், கவுன்சிலருக்கு பி.ஏன்னு விதவிதமான வேலைகள்.

கேன்ல சாராயம் வந்திரும். பட்டை பட்டையா ஊறுகாய் வரும்... ஒரு பக்கம் வண்ணாரப்பேட்டை ஜிகான், இன்னொரு பக்கம் காசிமேடு தாஸ்னு போட்டி ‘கானா’ களைகட்டும்.

பாலகுமாரன் சார், கதைகளை கேஸட்ல பேசிக் கொடுப்பார். அதை வேறொருத்தர் எழுதுவார். அதை வாங்கி எழுதிக் கொடுப்பேன். பல்சுவை நாவல் அறிமுகம் கிடைச்சது. அதுல சே.பிருந்தா, குணா கந்தசாமி, வே.பாபு, நா.பெரியசாமி, விஷ்ணுபுரம் சரவணன் எல்லாரும் நவீனக் கவிதைகள் எழுதுவோம். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தோட தொடர்பு கிடைச்ச பிறகு வாசிப்பும் எழுத்தும் இன்னும் தீவிரமாச்சு. அப்பப்போ செலவுக்காக ஏதாவது ஒரு தொழில், எழுத்து, சினிமா தேடல்னு வாழ்க்கை விசித்திரமா ஓடிச்சு...” சிரிக்கிறார் பாக்கியம் சங்கர்.

பாலகுமாரன் சார்
பாலகுமாரன் சார்

பாக்கியம் சங்கரின் மனைவி ரேவதி தூத்துக்குடியைச் சேர்ந்தவர். திருமணம் நடந்தபோது வெறும் கனவுகள் மட்டும்தான் கையில் இருந்தன. வாய்ப்புகள் ஏதும் வசப்படவில்லை.

“யுகபாரதி, சரவணன், நா.முத்துக்குமார், சினேகன், சுந்தரபுத்தன், ராஜுமுருகன், குரு, சீனிவாஸ் கவிநயம், ஹெச்.வினோத், சீனுவாசன்,

ஆர்.சி.ஜெயந்தன்னு நல்ல நண்பர்கள் கிடைச்சாங்க. யுகபாரதி ரொம்ப நல்லா சமைப்பான். கவிதை நல்லாருக்குன்னு சொன்னா, கூடவே ஆம்லெட்டும் போட்டுத் தருவான். பலநாள் பசியாற்றிய நண்பன் அவன். யுகபாரதியோட ‘மனப்பத்தாயம்’ கவிதைத் தொகுப்புக்குப் பெரிய வரவேற்பு கிடைச்சுச்சு. அது எல்லோருக்குமே பெரிய நம்பிக்கையா அமைஞ்சுது. ராத்திரி, பகல்னு நிறைய பேசுவோம். கதைகள் விவாதிப்போம். எல்லோருக்கும் வேறு வேறு வாய்ப்புகள் அமைய, எனக்கு ‘வீரா’ படத்துக்குக் கதை, வசனம் எழுதுற வாய்ப்பு கிடைச்சுது. அந்தப் படத்துக்குப் பிறகுதான் வாழ்க்கையில வெளிச்சம் விழத் தொடங்குச்சு...” உற்சாகமாகிறார் பாக்கியம் சங்கர்.

கணவர் பேசுவதை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தார் ரேவதி.

“திருமணமான புதுசுல கஷ்டம்தான். அத்தைதான் குடும்பத்தைப் பார்த்துக்கிட்டாங்க. எந்தக் கஷ்டத்தையும் இவங்ககிட்ட காட்டுறதில்லை. எதுக்காகவும் இவங்களைத் தொந்தரவு பண்றதில்லை. எவ்வளவு வேலையிருந்தாலும் என் மேலயும் குழந்தைங்க மேலயும் அக்கறையும் கவனமுமா இருப்பாங்க. குழந்தைங்கதான் இவங்க உலகம்... இவங்களுக்குக் கிடைக்கிற பாராட்டுகளையும் மத்தவங்க காட்டுற அன்பையும் பார்க்கும்போது சந்தோஷமா இருக்கும்” என்கிறார் ரேவதி.

பாக்கியம் சங்கர்
பாக்கியம் சங்கர்

வசந்த பாலனின் ‘ஜெயில்’, ‘பகைவனுக்கு அருள்வாய்’, ‘அதிரூபசுந்தரி’, ‘குருதியாட்டம்’ என பாக்கியம் சங்கர் எழுத்துப் பங்களிப்பில் வரிசையாக வெளிவரவிருக்கின்றன.

கருவானம் குவிந்து, தூறல்களால் ஆசீர்வதிக்கிறது. கடல் நிறம் மாறுகிறது. காற்று குளிர்ச்சியை அள்ளி அப்புகிறது. குழந்தைகளை வாரி அணைத்துக்கொள்கிறார் பாக்கியம் சங்கர். அழகிய கவிதையாகிறது காலம்!