
தமிழக அரசின் விருதுகளைப் பொறுத்தவரை அது உள்நோக்கத்துடன் வழங்கப்படும் என்று நான் சொல்லவில்லை.
“எழுத ஆரம்பித்த காலத்திலிருந்து இன்றுவரை சோர்ந்துபோகவில்லை. எனக்கு எல்லாவற்றிலும் முளைத்தெழக்கூடிய ஒரு சுதந்திரம் இங்கே வேண்டும். இது இங்கேதான், இப்படித்தான் முளைக்க வேண்டுமென்றால் அதில் கருத்துச் சுதந்திரமே கிடையாது. எந்தக் கருத்துமே அதற்கு நேரெதிரான கருத்தோடு முரண்பட்டுத்தான் வளர முடியும். ஒரு கருத்தைத் தூய்மையாகப் பொத்தி வைப்பதற்கு நான் எதிரானவன். எந்தக் கருத்து உரையாடுகிறதோ அதுவே வளரும்.” மெல்லிய குரலில் பேசுகிறார் ஜெயமோகன்.
தமிழ் இலக்கிய உலகில் முக்கியமான எழுத்தாளர் ஜெயமோகன். எழுத்துப்பணியைத் தாண்டி இப்போது மணிரத்னம், வெற்றிமாறன், சீனுராமசாமி எனப் பல இயக்குநர்களுடன் திரைக்கதைப் பணியில் தீவிரமாக இருப்பவருடன் ஓர் உரையாடல்.

``ஏன் எந்த விருதையும் பெற மறுக்கிறீர்கள்? 'தமிழ்நாடு அரசு அறிவிக்கும் இலக்கிய மாமணி விருது தி.மு.க ஆதரவாளர்களுக்குத்தான் வழங்கப்படும்' என்றெழுதுவது முன் தீர்மானமில்லையா?’’
“நான் பெரிதும் மதிக்கக்கூடிய மிகப்பெரிய ஆளுமைகளுக்குத் தமிழில் விருதுகள் வழங்கப்படவி ல்லை. நான் அவர்களை முன்னோடிகளாகப் பார்ப்பதால் நானும் அந்த விருதுகளுக்கு ஆசைப்படக் கூடாது என்ற முடிவை முன்பே எடுத்துவிட்டேன். பின்னாளில் எனக்கு வாசகர் சுற்றம் உருவானபோது, முன்னோடிகளை கௌரவிக் கக்கூடிய ‘விஷ்ணுபுரம் விரு’தை உருவாக்கி அளித்துவருகிறோம். மூன்று நாள் களியாட்டமாக அந்த விருது வழங்கப்படுகிறது. விருது வழங்குபவனாக நான் உணர்கிறேனே தவிர வாங்குபவனாக அல்ல. தேசிய விருதுகளுக்குச் செல்வதற்குச் சில வழிப் பாதைகள் உள்ளன. தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை முன் வைப்பவர்கள் அந்தப் பாதைக்குள் செல்ல முடியாது. விருதின்பொருட்டு என் விமர்சனங்களைக் குறைத்துக்கொள்ள விரும்புவதில்லை. விருது கொடுக்கும் அமைப்புகளையே விமர்சிப்பவனாக இருக்கிறேன். மிக உயரிய தேசிய விருதுகள், அங்கீகாரங்கள் என்னைத் தேடி வந்திருக்கின்றன. அவற்றை உறுதியாக மறுத்திருக்கிறேன். விருது தேவையான இடத்தில் நானில்லை. அதற்கும் மேலான இடத்தில் இருக்கிறேன்.
தமிழக அரசின் விருதுகளைப் பொறுத்தவரை அது உள்நோக்கத்துடன் வழங்கப்படும் என்று நான் சொல்லவில்லை. சென்ற கால அனுபவங்கள் அவ்வாறு எண்ணுவதற்குத் தூண்டுதல் அளிக்கின்றன. அவ்வாறு நிகழக்கூடாது என்பதே நான் விடுக்கும் எச்சரிக்கை. கட்சி சார்பு, கொள்கை சார்பு கடந்து இலக்கிய மதிப்பீடு அடிப்படையில் அந்த விருதுகளைத் தர சில பரிந்துரை களையும் அளித்திருக்கிறேன்.”

``தமிழில் எழுதும் பெண்களை நீங்கள் அதிகம் குறிப்பிடுவதில்லை. இது பெண்ணெழுத்தைப் புறக்கணிக்கும் போக்குதானே?’’
“அவர்கள் எழுதி கடைசியாகப் படைப்பில் என்ன வந்திருக்கிறது என்பதுதான் முக்கியம். பெரும் கனவுடனும் முயற்சியுடனும் எழுதக்கூடிய பெண்கள் இங்கே குறைவாகவே இருக்கிறார்கள். அப்படி எழுத வந்தவர்களை நான் பரிந்துரைக்கத் தவறியதில்லை. பெண்கள் என்ற காரணத்தால் அவர்களுக்கு சலுகை தருவதில்லை. அவர்களைப் புறக்கணிக்கவும் செய்வதில்லை. எழுதிவரும் பெண் எழுத்தாளர்கள் எளிமையான பெண்ணிய கருத்துகளையே கதைகளாக எழுதிவந்திருக்கிறார்கள். குடும்பக் கதைகளையும் எழுதுகிறார்கள். இலக்கிய ரீதியில் அதற்குப் பெரிய மதிப்பில்லை. இப்போது உருவாகிவருகிற பெண் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அடுத்த பத்தாண்டுகளில் பெரும் சாதனை புரிவார்கள்.”
``உங்களின் சமூகப் பார்வைதான் என்ன?’’
“எழுத்தாளன் என்ற அடையாளத்துடன் நின்று இந்தச் சமூகத்திற்கு எதிர்வினையாற்ற நினைக்கிறேன். எந்த வரையறுக்கப்பட்ட கொள்கை, கோட்பாட்டுக்கும் ஆளாகாமல் எழுத்தாளர்களின் அளவுகோல் என்பது நுண்ணுணர்வு சார்ந்தது. அந்த நுண்ணுணர்வு என்ன சொல்கிறதோ அதைச் சார்ந்து செயல்பட வேண்டும். சிந்தித்து முடிவெடுப்பதை விட உள்ளுணர்வு சார்ந்து முடிவெடுப்பதே நல்லது. நுண்ணுணர்வு என்பது என்றைக்குமே சாமானியரின் குரலாகவும் இயல்பாகவும் இருக்கிறது. அதுவே அதிகாரத்தில் இருப்பவர்களுக்குப் பிடிக்காமல்போகிறது. சில சமயம் அது மக்களிடையே உணர்ச்சிக் கொந்தளிப்பு எழுச்சிகளை உருவாக்கும். அதனால் எழுத்தாளர்களுக்கு இழப்புகள், கஷ்டங்கள் வரலாம். ஆனாலும் அவன் பேசிக்கொண்டிருக்க வேண்டும். அது அவன் கடமை. அதுதான் அவனுக்குச் சமூகப்பொறுப்பு.”
`` ‘பொன்னியின் செல்வ’னில் உங்கள் பங்கு எப்படிப்பட்டது?’’
``சோழர் ஆட்சியின் பொற்காலம் என்பது பொன்னியின் செல்வனால் உருவாக்கப்பட்டது. நீலகண்ட சாஸ்திரியும், சதாசிவ பண்டாரத்தாரும் அதை வரலாறாக உருவாக்க, அதை சாமானியர்களின் மனதில் புனைவாக உருவாக்கியவர் கல்கி. அவரின் பங்கு மிகப் பெரியது. தமிழர்களின் வரலாற்றில் பொற்காலங்கள் மிகக்குறைவு. தமிழ் மக்கள் மூன்று ராஜ்ஜியங்களாகப் பிரிந்து, அதனுள் பல நூறு குட்டி அரசர்கள் இருந்தார்கள். அவர்களுக்குள் சண்டை போட்டுக் கொன்று குவித்த காலங்கள் இருந்தன. பிறகுதான் சோழர்கள் ஆட்சி வருகிறது. 250 ஆண்டுக்காலம் தமிழ் மண்ணுக்குள் போரே கிடையாது. தமிழ் எல்லை பூனா வரைக்கும் இருந்தது. இந்தக் காலகட்டத்தில் ஏரிகள் வெட்டப்பட்டு அணைகள் கட்டப்பட்டன. இன்றைக்கு வரைக்கும் தமிழகத்தின் செல்வம் இதுதான். இன்றும் நாம் ராஜராஜ சோழன் சோற்றைச் சாப்பிடுகிறோம் என நான் சொல்வதுண்டு. அந்தச் சோழர் காலத்தின் அருமை நமக்குத் தெரியும். இந்தியாவுக்குத் தெரியாது. தமிழகத்திற்கு வெளியே ராஜராஜ சோழன் பெயரைக் கேட்டால் யாருக்கும் தெரியாது. நம்முடைய பெருமையை தேசிய அளவில் கொண்டுபோய் நிறுத்த இந்த சினிமா தேவைப்படுகிறது. இதுதான் படத்தின் நோக்கம்.
‘நாடு முழுவதும் ராஜராஜ சோழன் பெயர் சென்று சேர்ந்தால் இந்தப்படம் வெற்றி’ என்றார் மணிரத்னம். அதற்காக ஆவணப்படம் எடுக்க முடியாது. பொழுதுபோக்கு, சாகசப் படமாக இருக்கவேண்டும். ‘பொன்னியின் செல்வன்’ பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்தது. சாகசங்கள் கொண்டது. காதல், விபத்துகள், மர்மங்கள் கொண்டது. அதை உற்சாகமான பரபரப்பான, பிரமிப்பான திரைக்கதையாக மாற்றியிருக்கிறோம். இதில் எழுத்தாளர்களின் பங்கு முக்கியமானது. எந்தெந்தப் பகுதிகள் சினிமாவுக்கு உகந்தது என்பது முக்கியம்.
‘பொன்னியின் செல்வன்’ படித்தவர் களுக்குத் தெரியும். அதில் நிறைய பகுதிகள் வசனமாகவே இருக்கும். வரலாற்று நிகழ்வுகள்கூட வசனமாகவே இருக்கும். உதாரணமாக பாண்டியனை ஆதித்த கரிகாலன் கொன்றது. நந்தினியின் கண் முன்னால் வைத்து அந்தக் கொலை நடக்கிறது. அது நாவலில் ஆதித்த கரிகாலன் உணர்ச்சியில்லாமல் சொல்லக்கூடிய வசனமாகவே வருகிறது. போர்க்களக் காட்சிகள் சுருக்கமாக வசனமாகவே வருகிறது. அப்போது எந்த இடம் காட்சிக்குரியதாக வேண்டும்? எந்த இடம் வசனமாக இருக்க வேண்டும் என நிர்ணயிக்கவேண்டும். நாவலோ 2,000 பக்கங்களைக் கொண்டது. அதிலிருந்து 200 நிகழ்வுகள் மட்டுமே ஆறு மணி நேரத்திற்குள் வரமுடியும். அந்த நிகழ்வுகள் என்ன, அவற்றின் தொடர்ச்சி என்ன... அதுவும் முக்கியம்.
நாவலை அப்படியே படமாக்க முடியாது. நாவலிலிருந்து முக்கியமான பகுதிகளை எடுத்து வரிசைப்படுத்தித் தொகுத்து ஒரு திரைக்கதையை உருவாக்க வேண்டும். அந்தத் திரைக்கதையில் நான் பங்கேற்றிருக்கிறேன். அப்புறம் வசனங்கள். ‘பொன்னியின் செல்வன்’ வசனங்கள், அந்தக் காலகட்டத்தில் வந்த தமிழ் சினிமாவின் பாணியில் அமைந்தவை. உதாரணமாக ‘பெரிய பழுவேட்டரையரே’ என்பார்கள். படிக்க நன்றாக இருக்கும். இன்று அதே வசனங்களைப் பயன்படுத்தினால் 50, 60இல் வந்த சினிமாவின் வசன நெடியடிக்கும். படம் வசனத்தால் ஆனது அல்ல; காட்சிகளால் ஆனது. வசனம் காட்சியின் ஒரு பகுதியாக இருப்பது தெரியாமல் இருக்கவேண்டும். அந்த வசனத்தை இதில் எழுதியிருக்கிறேன். வசனத்தைக் குறைக்க வேண்டும் என்பது வசனகர்த்தாவின் வேலை. இறுதியாக நம்பகமான சூழலை உருவாக்க வேண்டும். அத்தனையும் சேர்ந்தது பொன்னியின் செல்வன்.”

``வெற்றிமாறன், கௌதம் மேனன் என்று வெவ்வேறுவிதமான இயக்குநர்களுடன் இணைந்து இயங்கும் அனுபவம்..?’’
``எழுத வந்த காலம் முதலே தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்த வசந்தபாலன், பாலா இவர்களிடமிருந்தே தொடங்கினேன். சிறந்த இயக்குநர்களிடம்தான் வேலை செய்திருக்கிறேன். ஆகவே என் இடம் என்னவென்று எனக்குத் தெரியும். கலை இயக்குநர், ஒளிப்பதிவாளருக்கு என்ன பங்கோ அதுதான் எனக்கும். கதைக் கட்டுமானத்தில் உதவியாய் இருக்கிறேன். அடிப்படையான கதைக் கட்டுமானம், எடிட்டிங்கில் மறுபடியும் இன்னொரு வகையில் உருவாகிறது. உண்மையில் திரைக்கதைதான் எல்லாவற்றையும் முடிவு செய்யும். ஆனால் தமிழ்த் திரைப்படங்களில் பெரும்பாலும் அப்படி நடப்பதில்லை. பாட்டு, டான்ஸ், ஆக்ஷன், எமோஷன் என அளவுகோல்கள் சரியாக இருக்கவேண்டும். அந்த சதவிகிதம் சரியாக இருக்கிறதா என்று பார்க்கும்போது திரைக்கதை வேறொன்றாக மாறிவிடுகிறது. அது எடிட்டரின் பங்களிப்பாக மாறிவிடுகிறது. ஒரு கதையைக் காட்சி வடிவமாக உருவாவதில் பங்காற்றுகிறேன் என்ற விதத்தில் மட்டுமே என் சினிமாப் பங்களிப்பு. பிற துறைகளில் உலகியல் தன்மை, கணக்குக் கூட்டல் தன்மை இருக்கிறது. சினிமா அப்படி இல்லை. ஒரு வணிக சினிமாவாக இருந்தாலும் அதில் ஈடுபடுகிறவர்கள் கலைஞர்கள். அவர்களோடு பணிபுரிவது அனுபவம். ‘பொன்னியின் செல்வ’னெல்லாம் ஒரு கனவுக்குள் நுழைந்து வெளிவருவது போன்றது.''
``எழுத்தாளராக இந்த வாழ்க்கை கற்றுக்கொடுத்த பாடம்தான் என்ன?’’
“என்னுடைய எழுத்து பொழுதுபோக்கு கிடையாது. தங்கள் வாழ்க்கைப் பயணத்திற்கும், ஆன்மிகப் பயணத்திற்கும் என்னுடைய எழுத்து உதவுவதாக எந்த நல்ல வாசகரும் உணரமுடியும். என் எழுத்தின் வழியே மேலும் மேலும் ஆழத்திற்குச் செல்கிறேன். வெண்முரசில் ஏழாண்டு இருந்திருக்கிறேன். 26,000 பக்கங்கள் எழுதியிருக்கிறேன். பெரிய கொந்தளிப்பின் வழிச்சென்று மிகப்பெரிய தரிசனங்களை அடைந்திருக்கிறேன். மனநிலையில் உச்சம், அதலபாதாளம் என அலைபாய்ந்திருக்கிறேன். ஒரு விஷயத்தைக் கண்டுகொண்டு அதன்மேல் ஏறி இன்னொன்றைக் கண்டுகொண்டு முந்தியதை நிராகரித்து அடுத்ததைச் சென்றடைந்திருக்கிறேன். தொடர்ந்து அந்தப் பயணம் நடந்துகொண்டே இருக்கிறது. ஒரு தத்துவ நூலை எழுதும் இடத்தில் இருக்கிறேன். ஒரு தத்துவ வழிகாட்டியாக இருக்கக்கூடிய தகுதியை உணர்கிறேன். நான் ஞானியல்ல. ஞானியாவதற்கான தகுதிகள் கொண்டவனாக உணர்கிறேன்.”