
11 பேர் கொண்ட குடும்பத்தை அப்பன்காரன் ஒத்தை உழவா வச்சுக் காப்பாத்தினாரு. முட்டைக் குழம்பு வச்சால் அரை முட்டையாவது என் பங்குக்கு வந்து சேருமான்னு பார்த்திட்டு இருந்திருக்கேன்.
‘எட்டுத்திக்கும் மதயானை’ வெளிவந்து 22 வருடங்களுக்குப் பிறகு அடுத்த நாவலை எழுதிக்கொண்டிருக்கிறார் நாஞ்சில் நாடன். மரபுக்கும் நவீனத்துவத்துக்கும் பாலம் அமைக்கும் எழுத்துகள் அவருடையவை. தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் அவரிடம் பேசினேன்.
`` ‘மிதவை’ – ஒரு மனிதன் அந்நியமாதலைப் பற்றிய நாவல். இது எப்படி சாத்தியமானது?’’
‘‘நெருக்கடிதான் காரணம். மும்பையில் சம்பளம் 210 ரூபாய்தான். ரயில் தண்டவாளத்திற்கு இரண்டு பக்கமும் குடிசைகள் இருக்கும். வீடுன்னு சொல்லப்பட்ட இடத்தை மறைக்க சுவர் கிடையாது. காலை விடியலுக்கு முன்னாடி ரயில் தண்ட வாளத்திற்கு அப்புறமா உட்கார்ந்து எழுந்து வந்துடுவோம். எதையாவது தின்னுட்டு வயிற்றுப் போக்குன்னா அது பெரிய பிரச்னை ஆகிடும். அப்படியும் அங்கே இருந்த மனிதர்கள் நல்லவிதமாய் இருந்தாங்க. ஜாதி, கட்சி அரசியலுக்கு மேலே மனுஷத்தன்மை இருந்தது. அதுவே எனக்கும் வந்து எழுத வச்சது.
11 பேர் கொண்ட குடும்பத்தை அப்பன்காரன் ஒத்தை உழவா வச்சுக் காப்பாத்தினாரு. முட்டைக் குழம்பு வச்சால் அரை முட்டையாவது என் பங்குக்கு வந்து சேருமான்னு பார்த்திட்டு இருந்திருக்கேன். படிக்க 148 ரூபாய் பீஸ். அப்பாகிட்டே பணம் இல்லை. கடையில வேலைக்குப் போய் நில்லுன்னு சொல்லிட்டாரு. அழுகை வந்தது. அப்புறம் 200 ரூபாய்க்கு புரோநோட் எழுதிக் கொடுத்து வாங்கிப் படிச்சேன். எங்க தாத்தா பஞ்சம் பிழைக்க வீட்டை விட்டு ஓடி வந்து தற்செயலாகப் பசி மயக்கத்தில் படுத்துக் கிடந்த இடம்தான் வீரநாராயணமங்கலம். அதனால் அதுதான் சொந்த ஊர். இப்பகூட கூட்டத்திற்குப் போனால் ஒரு புத்தகம், ஒரு துண்டு, 500 ரூபாய் இப்படி எதைக் கொடுத்தாலும் பேசாமல் வாங்கிக்கிறேன். என் பென்ஷன் 1,418 ரூபாய்தான். பட்டினி கிடந்து படிக்க வச்ச பிள்ளைகள் இப்ப சோறும் துணியும் கொடுக்க, வாழ்றேன். இதெல்லாம் தாண்டித்தான் இந்த எழுத்து.’’

``தமிழுக்கு இரண்டே இரண்டு ஞானபீட விருதுகள்தானே கிடைத்திருக்கின்றன?’’
‘‘மானம், சூடு, சொரணை இருக்கிற எந்த எழுத்தாளனும் கலெக்டர் கிட்ட விண்ணப்பம் வாங்கி நிரப்பி, நாலு பேர்கிட்ட பரிந்துரைக் கையெழுத்து வாங்கி அனுப்புவானா? விருது கொடுக்கிறவர்களுக்கு அது பற்றிய அறிவு இருக்கணும். ஒரு நாளிதழில் ஒரு பக்கத்திற்கு நடிகர்கள் வாக்கு போட்ட விரலைக் காட்டுறாங்க. ஒரு சமூக அக்கறையும் இல்லாத இடத்தில் ஞானபீடத்தைப் பற்றி எப்படிப் பேச முடியும்?
கடந்த 10 ஆண்டாக 15 நூல்கள் எழுதிட்டேன். ஒரு புத்தகத்தைக்கூட நூலக ஆணைக்குழு வாங்கியதில்லை.வாங்கின நூல்களும் என் புத்தகத்தைவிட மேம்பட்டது கிடையாது. அதற்குப் பின்னால் ஒரு வணிகம் இருக்கு. கலைமாமணி பெற்ற எழுத்தாளர்கள், சினிமா கலைஞர்கள் எத்தனை பேர் இருக்காங்க... பாருங்க. தமிழ் மக்களைப் பொறுத்தவரை சினிமா சம்பந்தப்பட்டவர்கள் எல்லோரும் தெய்வத்திற்கு சமமானவர்கள். நாங்கள் எல்லோரும் பொருத்தமற்ற, தேவையில்லாத ஜீவராசிகள். நாஞ்சில் நாடனுக்கு கொரோனா வந்து பத்து நாள்கள் ஆஸ்பத்திரியில் கெடந்தான். ஜெய மோகனுக்கும் கொரோனா வந்து ஆஸ்பத்திரியில் வச்சிருந்தாங்க. இதெல்லாம் தமிழ் ஊடகங்களுக்குச் செய்தி கிடையாது. இங்கே சினிமா சார்ந்தது மட்டுமே பொருட்படுத்தப்படுது. சினிமா நல்ல கலைதான். அதுக்காக சினிமாவே உலகம்னா எப்படி?’’
``உங்க படைப்புலகம் தோல்வி, கசப்பு, ஏமாற்றம், சூனிய மனநிலை, விரக்தின்னு போகுது. முழு மகிழ்ச்சிகரமான படைப்பு சாத்தியமில்லையா?’’
“என்னுடையது கசப்பாகவே இருக்கலாம். டி.கே.பட்டம்மாள் நாக்கில் ரமண மகரிஷி தேனைத் தொட்டு வச்சார்னு செய்தி இருக்கு. என் நாக்கில் சித்தன் வந்து விஷத்தைத் தடவி வச்சிருக்கான்போல. அதை நான் விழுங்கவும் முடியாது. துப்பித்தானே ஆகணும். இந்தச் சமூகம் எனக்கு என்ன தருதோ அதையே நான் வட்டியும் முதலுமாகத் திருப்பித் தருகிறேன்.’’
`` ‘வாக்குப் பொறுக்கிகள்’னு ஒரு தீவிரமான வசைச் சொல் உங்களால் உருவாக்கப்பட்டது. அதற்கான அரசியல் சூழல் அப்படியே இருக்கிறது என்று நினைக்கிறீர்களா?’’
‘‘அதைவிட மோசமா இருக்கு. நம்பித் தொடர, ஓர் அரசியல் தலைமை இல்லை. 1977-ல் ‘இந்நாட்டு மன்னர்’ எழுதினேன். இப்பவும் சாதியும் பணமும் அதிகாரமும் குற்றமும் இல்லாத சூழல் இந்தியாவில் இல்லை. ‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்’ என்று சொன்னாலும், அதில் என்ன அர்த்தம் இருக்குன்னு புரியலை. நீங்க ஒரு மாம்பழக் கடைக்குப் போனால் நல்லது போக, கொஞ்சம் அடிபட்டது, அழுகியது, பாதி பழுத்தது கொஞ்சம் விலையில் கிடைக்கும். அப்படித்தான் இப்போ அரசியல் இருக்கு. அதுவும் தொழில் ஆயிடுச்சு.’’
``தமிழக ஆட்சி மாற்றத்தை எப்படிப் பார்க்கிறீங்க?’’
‘‘நம்ம மக்கள் எளிமையானவங்கதான். அவங்க குறைந்தபட்சத் தேவையைப் பூர்த்தி செய்தாலே போதும், திருப்தி அடைந்து விடுவார்கள். அதற்கு அனுசரணையாக இந்த அரசு இருந்தால் நிச்சயம் வரவேற்கப் போறோம். தொடக்கத்திலேயே அவநம்பிக்கைப்படுகிற ஆள் நானில்லை. உலகத்திலேயே நாத்தம் புடிச்ச அரிசி எங்கேயும் விளைவதில்லை. அது ஏன் ரேஷன் கடைக்கு வருதுன்னு தெரியவே இல்லை. அப்படி வராமல் ஏழை மக்களைக் கண்ணும் கருத்துமாக இந்த அரசு பாத்துக்கணும். உழவர் சந்தைன்னு முன்னாடி கலைஞர் கொண்டு வந்தார். சிறப்பான திட்டம். நான் அதை நல்லா பயன்படுத்தி யிருக்கேன். பெருசா மக்களுக்கு அள்ளிக் கொடுக்க வேண்டாம், இந்தக் கொரோனாவிலிருந்து அவர்களை மீட்டெடுத்து நல்லபடியா வாழும் சூழலை உருவாக்கினால் போதும். இந்த அரசு எளிமையானவங்க கிட்டே சென்றடையணும்னு விரும்புறேன்.’’

``கொரோனாப் பெருந்தொற்று மக்கள் மனநிலையில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கு?’’
‘‘என் மகளும் மருமகனும் மருத்துவராக இருக்காங்க. அவங்க கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க, எங்களுக்கும் கொரோனா வந்து மொத்தக் குடும்பமும் வீட்டைப் பூட்டிவிட்டு உள்ளே கிடந்தோம். நான் மட்டும் பிரச்னையாகி ஆஸ்பத்திரிக்குப் போனேன். அங்கே பார்த்தால் மருத்துவர்கள், தாதிகளைக் கும்பிடத் தோணுது. இன்னும் மக்கள் அதை உணர்ந்ததாகத் தெரியலை. உணர்ந்தே ஆகணும். அரசு, போலீஸ், சுகாதாரத் துறைக்கு மட்டுமே முற்றான பொறுப்பு கிடையாது. வீட்டைப் பூட்டிக்கிட்டு இருன்னா இருக்கணும். அரசியல்வாதியைக் குறை சொல்லிக்கொண்டே இருக்க முடியாது. அரசியல்வாதி என்ன வானத்தில் இருந்தா குதிக்கிறான், அவனும் நம்ம கிட்ட இருந்துதானே வர்றான். நமக்கும் பேராசை வருது. வாழைமரம் தன் உற்பத்தியை நிறுத்தவே இல்லை. 10 ரூபாய்க்கு விற்ற வாழைப்பூ 30 ரூபாய் சொல்றாங்க. இந்தத் தனிமனிதப் பேராசைதான், கார்ப்பரேட் பேராசை, மருத்துவமனைப் பேராசைன்னு விரியுது. கொரோனா குணமாவது நம் கைகளில் மட்டுமே இருக்கு.’’
``கி.ரா மரணத்துக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டதை வண்ணநிலவன் கடுமையாக விமர்சித்திருந்தது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?’’
“வண்ணநிலவனின் கருத்தோடு எனக்கு உடன்பாடில்லை. எதையும் சொல்றதுக்கு நேரம், காலம், இடம், பொருள், ஏவல்னு இருக்கிறது அவருக்குத் தெரியாதா? ஒரு தடவை ‘ஊர் ஊராக நிறைய சிலைகள் கையை உசத்திக்கிட்டே நிற்கிறாங்க, புதுமைப் பித்தனுக்குத் திருநெல்வேலியில் சிலை இல்லையா’ன்னு ஒரு மீட்டிங்கில் பேசினேன். அதைக்கூட ‘அண்ணா, அம்பேத்கரைச் சொல்றேன்’னு திரிச்சு விட்டுட்டாங்க. நானென்ன அவர்கள் சாதனை அறியாதவனா? நான் புதுமைப்பித்தனுக்குக் கேட்டது கி.ராவுக்கு நடந்திருக்கு. தமிழ் இலக்கியத்துக்கு அவர் செஞ்சிருக்கார்ல. அதுக்கு கி.ரா என்ன ஆதாயத்தை அடைஞ்சாரு, சாகிற வரைக்கும் 400 சதுர அடி வீட்டிலதானே வாழ்ந்திட்டுப் போனாரு? அவருக்கு அரசு மரியாதை, சிலை வைக்கிறதெல்லாம் பெரிய கௌரவம். எல்லாத்துக்கும் பின்னாடி அரசியலைத் தேடக்கூடாது. மலையாள அரசியல்வாதிகள் அவங்க எழுத்தாளர்களுக்குச் செய்த மரியாதையை இங்கே நம்ம அரசியல்வாதிகள் செய்ததே இல்லை. அப்படித் தமிழக அரசு செய்ய முன்வரும்போது அதை இழிவுபடுத்தக்கூடாது.”