பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

“இலங்கை அரசின் நோக்கம் நிறைவேறுகிறது!”

செல்வம்
பிரீமியம் ஸ்டோரி
News
செல்வம்

“நான் 1981-ல் இலங்கையை விட்டு வெளியேறினேன். அப்போது நேரடியான போர் தொடங்கியிருக்கவில்லை.

வெவ்வேறுவிதமான எழுத்துமுறை, வெவ்வேறுவிதமான அரசியல் போக்கு கொண்ட எல்லா இலக்கியவாதிகளுக்கும் பரிச்சயமான பெயர் ‘காலம்’ செல்வம். இலங்கையில் பிறந்து எண்பதுகளின் தொடக்கத்தில் பிரான்ஸ் நாட்டிற்குப் புலம்பெயர்ந்தவர் செல்வம். தற்போது கனடாவில் வசித்துவரும் அவர், ‘காலம்’ என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடத்திவருகிறார். ‘சொற்களில் சுழலும் உலகம்’ என்ற தனது புத்தகத்தை வெளியிடுவதற்காகச் சென்னை வந்திருந்த வரைச் சந்தித்தேன்.

இலங்கையிலிருந்து நீங்கள் புலம்பெயர்ந்தபோது போர்ச்சூழல் நிலவியதா?

“நான் 1981-ல் இலங்கையை விட்டு வெளியேறினேன். அப்போது நேரடியான போர் தொடங்கியிருக்கவில்லை. எனினும் போருக்கான சூழல் உருவாகியிருந்தது. 1983 ஜூலை இனக்கலவரத்துக்குப் பிறகு, நிலைமை தீவிரமடைந்தது.”

வெளிநாட்டிற்கு நீங்கள் புலம்பெயர்ந்தபோது உங்கள் தொடக்க நாள்கள் எப்படி இருந்தன?

“மொழி தெரியாமல், பெரிய படிப்பறிவு எதுவும் இல்லாமல், பொருளாதாரச் சிக்கலுடன் வாழ்ந்த எங்கள் தலைமுறை பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டது. தங்குவதற்கு அறை இருக்காது; அறை கிடைத்தாலும் பத்துப் பேருடன் பங்கிட்டுக்கொள்ள வேண்டும். ஆனால் ஐரோப்பாவில் புலம்பெயர்ந்தவர் களுக்குச் சமூகப் பாதுகாப்பு உண்டு; மருத்துவம் இலவசமாகக் கிடைத்தது. ஆனால் மருத்துவம் பார்க்க விசா தேவைப்படும். 10 பேர் இருந்தால், 5 பேருக்குத்தான் விசா இருக்கும். அதனால் நாங்கள் விசாவைச் சுற்றுக்கு விட்டு மாற்றி மாற்றி மருத்துவம் பார்ப்போம். மிகச் சாதாரண வேலைதான் கிடைக்கும். அதுவும் எல்லோருக்கும் கிடைக்காது. யாழ்ப்பாணத்திலிருந்து ஒருவர் புலம்பெயர்ந்தால், அடுத்தடுத்து உறவினர்களையும் அழைத்துக் கொள்வோம்.”

உலகம் முழுவதும் தமிழர்கள் பரவலாக வாழ்ந்துவருவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

“ஒருபக்கம் நன்மை; மறுபக்கம் தீமை. தமிழர்கள் இலங்கையிலிருந்து புலம்பெயர்வதை இலங்கை அரசு விரும்பியது என்றுதான் சொல்ல வேண்டும். தமிழர்கள் வெளியேற வேண்டும் என்றும், போராட்டத்திற்கு ஆள் குறையும் என்றும் திட்டமிட்டு எங்களை வெளியேற்றியது இலங்கை அரசு.

செல்வம்
செல்வம்

தமிழர்கள் புலம்பெயர்வதால் இலங்கையில் தமிழர்கள் மேலும் சிறுபான்மையினர் ஆகின்றனர். ஆனால் தற்போது எங்கள் இளைஞர்கள் ஐரோப்பா, அமெரிக்கா, கனடா முதலான நாடுகளில் பல துறைகளில் பெரிய பதவிகள் வகிக்கிறார்கள் என்பது முக்கியமான விஷயம். இது இன்னொருவகையில் இலங்கை அரசுக்குத் தலைவலி. இலங்கையில் எந்தப் பிரச்னை என்றாலும் அதற்கான வலுவான எதிர்வினை புலம்பெயர்ந்த தமிழர்களிடமிருந்து வருகிறது.”

மேற்கத்திய வெளிநாட்டு வாழ்க்கை முறை குறித்த வியப்பு இங்குள்ள தமிழர்கள் பலரிடம் இருக்கிறது என்றபோது, ஒரு புலம்பெயர்ந்த தமிழராக மேற்கத்திய நாடு ஒன்றில் உங்கள் வாழ்க்கை முறை எப்படி இருக்கிறது?

“பிரான்ஸ் நாட்டிற்குப் புலம்பெயர்ந்த அடுத்த நாளே, நாங்கள் யாழ்ப்பாணத்தின் சோறும் கறியும்தான் சாப்பிட்டோம். கனடாவில் நான் இருக்கும் பகுதியே ஒரு யாழ்ப்பாணம்தான், அந்த அளவுக்குத் தமிழர்கள் இருக்கிறார்கள். வீட்டுக்கு வெளியில் வெள்ளைக்காரர்கள்போல வாழ்ந்தாலும், வீட்டுக்குள் சன் டிவியோ, விஜய் டிவியோ பார்த்துக்கொண்டு, தமிழ்ப் பத்திரிகை படித்துக்கொண்டு, தமிழ் ரேடியோ கேட்டுக் கொண்டு வாழ்ந்துவருகிறார்கள். யாழ்ப்பாணத்தில் ஏதோவொரு இடத்தில் ஒரு சின்ன சம்பவம் நடந்தால், அதன் அருகிலிருக்கும் கிராமத்தில் இருப்பவருக்குக்கூட அது தெரியாது; ஆனால் டொரொன்டோவில் இருப்பவருக்கு அது தெரியும். உலகம் அப்படிச் சுருங்கியுள்ளது. தமிழர்களின் பண்பாட்டிலும் பெரிய மாற்றமில்லை. ஆனால் கையில் பணப்புழக்கம் அதிகம் இருப்பதால் ஆடம்பரமாகத் திருமணம் செய்கிறார்கள். அதிக செலவுடன் அதிக வைதீகத்துடன் பூப்புனித விழாக்கள் நடத்தப்படுகின்றன.”

அப்படியானால் தமிழ் மொழிக்கும் எந்தச் சிக்கலும் இல்லையா?

“30 ஆண்டுகளாகக் கனடாவில் இருக்கிறேன். நான் புலம்பெயர்ந்த முதல் ஆண்டிலேயே, தமிழ் அழிந்துபோகும் என்று சொன்னார்கள். ஆனால் இன்றுவரை அப்படி எதுவும் நடக்கவில்லை. எங்கள் வீட்டுக் குழந்தைகள் நன்றாகத் தமிழ் பேசுவார்கள். ஆனால் எழுதுவதும் வாசிப்பதும் அவர்களுக்குக் கஷ்டம். சில இடங்களில், குழந்தைகளுக்கு வீடுகளிலேயே தமிழ் கற்றுக் கொடுக்கப்படுகிறது. வாரம் முழுவதும் பள்ளி சென்றுவிட்டு, வார இறுதியில் புலிகளால் தொடங்கப்பட்ட தமிழ்ப்பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்பும் பெற்றோரும் அதிக அளவில் இருக்கிறார்கள். தற்போது தமிழ் கற்றுக்கொள்வது, பல்கலைக்கழகத்தில் சேரும்போது கூடுதல் மதிப்பெண்களையும் தருகிறது.”

முள்ளிவாய்க்கால் துயரம் முடிந்து 10 ஆண்டுகள் கழித்து, மீண்டும் ராஜபக்சே இலங்கையின் பிரதமராகப் பதவியேற்றுள்ளதைப் பற்றி..?

“நான் அறிந்த காலம் முதல், தமிழர்கள் பல நெருக்கடிகளைச் சந்தித்துக்கொண்டேதான் வருகின்றனர். அது இன்னும் மோசமாகப் போய்க்கொண்டிருக்கிறது. அதனைச் சிந்தித்து, மாற்றக்கூடிய தலைமை இங்கு இல்லை. யாழ்ப்பாணம் அருகில் இருந்த என் கிராமத்தில், நான் வாழ்ந்தபோது, காலை வேளைகளில் விவசாயம், கடைத்தொழில், வேலை, மாணவர்கள் என கிராமம் முழுவதும் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். போர் முடிவுக்குப் பிறகு, கடந்த ஆண்டு என் கிராமத்திற்குச் சென்றிருந்தேன். பெரும்பாலான ஆட்கள் அங்கு இல்லை. மூன்று வீட்டுக்கு ஒரு வீட்டில்தான் ஆட்கள் இருக்கிறார்கள். போரில் இறந்தவர்கள், புலம்பெயர்ந்தவர்கள் போக, உயிர் பிழைத்தவர்கள் மட்டுமே அங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கையில் குழந்தைகளோடு தமிழ்ப்பெண்களைப் பார்ப்பதே அங்கு அரிதாக இருக்கிறது. ஏனென்றால் அந்தத் தலைமுறை வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்துவிட்டது. இதுதான் சிங்கள அரசின் நீண்டகாலத் திட்டம். அதை நிறைவேற்றியும் உள்ளார்கள்.”

ஒரு புலம்பெயர்ந்த தமிழராக இந்தியாவின் குடியுரிமைத் திருத்த சட்டத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

“இந்தியாவில் வலதுசாரிப் போக்கு உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. ஆனால் இதை இலங்கையோடு ஒப்பிட முடியாது. இங்கு குறைந்தபட்ச ஜனநாயக வெளி இருக்கிறது. மக்கள்விரோதச் சட்டங்களுக்கு எதிராகத் தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு நிலவுகிறது. இதைப் பற்றிப் பேசுவதற்கு அனுமதி இருக்கிறது. இலங்கையில் இப்படிப் பேசினாலே, கைது செய்யப்படுவதும், கொல்லப்படுவதும்தான் நிகழும்.

காலம்
காலம்

ஒரு காலத்தில் நிறம், இனம், மொழி என்று எதிர்த்தவர்கள், தற்போது மதத்தைக் காரணமாகக் கொண்டு எதிர்க்கிறார்கள். இப்போது, இந்தியாவிலும், இலங்கையிலும் முஸ்லிம் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் அதிகரித்துவருகின்றன. இந்தியாவில் வசிக்கும் இலங்கை அகதிகளில், பெரும்பாலானோர் இந்துக்கள். அவர்களுக்குக் குடியுரிமை அளிக்காமல் இருப்பதுகூட கோபம் வரவழைக்கவில்லை. இலங்கை அகதிகளை இந்திய அரசு கௌரவமாக நடத்தவில்லை என்பதுதான் வருத்தத்தையும் கோபத்தையும் அளிக்கிறது.”

‘காலம்’ இதழை 30 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாகக் கொண்டு வந்துகொண்டிருக்கிறீர்கள். அதைப் பற்றி..?

“நாங்கள் ‘காலம்’ இதழைத் தொடங்கிய போது, இலங்கையில் கடுமையான போர்ச் சூழல் நிலவியது. புலம்பெயர்ந்த தமிழர்களால் பல நாடுகளில் ஈழ அரசியலை முன்வைத்து இதழ்கள் நடத்தப்பட்டன. நானோ அப்போது இலக்கியத்தில் ஆர்வம்கொண்டிருந்தேன். சென்னை வந்தபோது, பதிப்பாளர் ஒருவரின் அறிமுகம் கிடைத்தது. கனடாவிலிருந்து கட்டுரைகளை நாங்கள் அனுப்பி வைப்போம். இங்கு ‘காலம்’ அச்சடிக்கப்பட்டது. ராஜீவ் காந்தி கொலைக்குப் பிறகு அந்தப் பதிப்பாளர் பின்வாங்கிக்கொண்டார். அதனால் ஆறுமாதங்கள் அமைதியாக இருந்தோம். அதன்பின், மீண்டும் இதழ்ப் பணிகளைத் தொடங்கினோம்.

தொடர்ச்சியாக 30 ஆண்டு கள் இதழைக் கொண்டு வந்திருப்பது மகிழ்ச்சி யளிக்கிறது. இதில் எல்லாத் தரப்பு எழுத்துகளுக்கும் களம் அமைக்கிறோம். இமையம் தமிழகத்தில் இருக்கலாம்; அ.முத்துலிங்கம் ஆப்பிரிக்காவில் இருக்கலாம்; ஷோபாசக்தி பிரான்ஸில் இருக்கலாம். ஆனால் அனைவரும் தமிழர்கள் என்ற அடிப்படையில் இணைகிறோம். `காலம்’ இதழில் எழுதாத ஈழத் தமிழ் எழுத்தாளர்களும், இந்தியத் தமிழ் எழுத்தாளர்களும் குறைவு. புலி ஆதரவு, புலி எதிர்ப்பு, இந்திய ஆதரவு, எதிர்ப்பு என அனைத்துத் தரப்புகளிலும் படைப்புகள் வெளியிட்டுள்ளோம். கருத்துகளில் எந்தப் பாகுபாட்டையும் நாங்கள் கடைப்பிடித்ததில்லை. மேலும் கனடா இயல் விருது முயற்சியைத் தொடங்கிய நால்வரில் நானும் ஒருவன். சுந்தரராமசாமிக்கு 70 வயது ஆனதையொட்டி,சிறப்புச் செய்வதற்காகத் தொடங்கப்பட்டது. 18 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வரும் இயல் விருது, இந்த ஆண்டு சு.வெங்கடேசனுக்கு வழங்கப்படுகிறது.!”