பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

சிறுகதை: அன்பின் கொடிகள்

சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
சிறுகதை

யாத்திரி கார்த்திக்

து டைரி அல்ல; கோடுபோட்ட ஒரு குயர் நோட். தரமற்ற சாணித்தாளினால் ஆனது. அதன்மீது இன்க் பேனா வைத்து எழுதப்பட்டு இருந்ததால் மைத்தீற்றல்கள் ஒவ்வொரு எழுத்தைச் சுற்றியும் ரோமங்கள் போலப் படர்ந்திருந்தது. முகப்புப் பக்கத்தில் சொர்ணலதாவிற்கு என்று எழுதப்பட்டிருந்தது. போகிப் பண்டிகையின் வீடு சுத்தப்படுத்தல்களில் கைக்குச் சிக்கிய அப்பாவுடைய டைரியின் மதிப்பைப் பெற்ற கோடுபோட்ட நோட்டை அதன் ரகசியத்தை அறிந்துகொள்ளும் ஆர்வம் இசைக்கு அதீதமாக எழுந்தது. இசை. அதுதான் அவள் பெயர். அம்மாவின் பெயர் சொர்ணலதா அல்ல சுஜாதா! எனில் இந்தச் சொர்ணலதா யார்? இவளைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் அது ஒரு வேளை அப்பாவின் காதலியாக இருந்தால்? தன்னுடைய காதலை வீட்டில் வெளிப்படையாகச் சொல்வதற்கு இது ஒரு வாய்ப்பாக அமையும். `நீங்கள் காதலிக்கலாம் நான் கூடாதா? உங்களுக்குக் காதல் தோல்வி உற்றதைப் போலவே எனக்கும் ஆகவேண்டுமா?’ என்றெல்லாம் கேள்விகளைத் தயாரித்து வைத்துக் கொண்டாள். இடுப்பில் நோட்டைச் செருகிக்கொண்டு தன் அறைக்குச் சென்று அலமாரியில் பழைய கல்லூரிப் புத்தகங்களோடு கலந்து வைத்தாள். அறைக்குள்ளிருந்து வெளிவந்ததும் கவனித்தாள், தொலைக்காட்சியில் பாறைமீது படுத்துக்கொண்டு முந்தானை சரியவிட்ட பானுப்ரியாவை அப்பா பார்த்துக் கொண்டிருந்தார். men will be men என்று தனக்குள் சொல்லி நகர்ந்தாள். நகர்ந்து செல்லச்செல்ல அவள் காதுகளில் இருந்து தொலைக்காட்சிப் பாடலின் ஒலி மெல்லமாய் மங்கியது. ``மாலையில் யாரோ மனதோடு பேச...''

ஷாகுல்ஹமீதின் அறிமுகம் அவளுக்கு நிகழ்ந்தது ஒரு அசாதாரண சூழலில்.

சாலையில் பெரிய கூட்டம், இவளின் பாதையை அடைத்து நின்றது. இவள் கடந்து செல்ல முனையும்போது கூட்டத்தில் ஒருவர் இந்தப் பொண்ணுக்குக் கை நீளமா இருக்கு என்று சொல்லவும் கூட்டத்தினர் இவளை அழைத்து நீ உள்ள விட்டு வெளில எடுமா என்றனர். இசை புரியாமல் பார்த்தாள். வாரங்கால் சாக்கடைக்குள் கைவிடச் சொன்னார்கள். வாரங்கால் என்பது தெருக்களுக்குள் துர்நாற்றம் வராமல் இருக்க மேலாக சிமென்ட் அடைப்பு போடப்பட்ட சிறிய சாக்கடைவழி. எல்லா வீட்டின் கழிவுநீரும் அதில் கலந்துதான் வெளியேறும். தெருமுனையில் மட்டும் வாரங்காலை மூடாமல் விட்டிருப்பார்கள், சாக்கடை நீர்ப்பாதையில் அடைப்பு ஏற்பட்டால் பெரிய இரும்புக்கம்பிகளை உள்ளே விட்டு அடைப்பை எடுப்பார்கள். மூடாமல் விட்ட தெருமுனைப் பகுதியின் வாரங்காலில் இசையின் கைகளை வலதுபுற நீர்ப்பாதையில் உள்ளே விட்டு வெளியே இழுக்க வேண்டும் என்பதுதான் அவளுக்குத் தரப்பட்ட தகவல்.

வெள்ளை உடை அழுக்காகிவிடும், என்னால் முடியாது என்றாள். உசுர் பிரச்னை தாயி. இதுல சுத்தம் பாக்காதே என்றார் ஒருவர். பூனைக்குட்டியோ நாய்க்குட்டியோ சிக்கிக்கொண்டுள்ளது போல. இதற்கெல்லாம் நான்தான் கிடைத்தேனா! முகத்தில் எரிச்சலை வைத்தாள். பிறகு சமாதானித்து அமர்ந்து கைகளை வாரங்கால் உள்ளே வலப்புறமாக விட்டு கைக்குச் சிக்கியதை வெளியில் இழுத்தாள். வீல் என்ற அலறலோடு பச்சைக்குழந்தை. பெண்குழந்தை. அதன்மீது இன்னும் ரத்தக்கறைகள்கூடக் காயவில்லை, தன் சக்தியைக் கூட்டி முடிந்தமட்டும் பேரொலி எழுப்பி அழுதது. சிறிய உயிரின் உயிர்த்திருத்தலின் அலறலை, வாழும் வேட்கையை எந்தக் காதுகளாலும் நிலைதடுமாறாமல் கேட்க முடியாது. பார்த்த அந்த மாத்திரமே மூச்செடுக்க முடியாமல் இசை திணறினாள். அவளுக்கு உடலெல்லாம் அதிர்ந்தது. அம்மா அம்மா அம்மா என்று மீண்டும் மீண்டும் கை விரல்களை உதறி உதறி பிள்ளைபோலத் தேம்பிக்கொண்டே மயங்கிச் சரிந்தாள்.

சரிந்தவளை, தரை சேராமல் ஒருவன் தாங்கினான். ஷாகுல் ஹமீது. குழந்தைகளை ஏந்தும்போது சிறியதாக நடுக்கம் கொள்ளும் கைகளுக்குள் தாய்மையின் கூறுகள் வந்து அடையும். ஷாகுல் ஹமீதின் கைகள் இசையைத் தாங்கும்போது சிறிய நடுக்கம் கொண்டது. இசை தெளிந்து எழுந்தபோது ஷாகுலின் கைகளுக்குள் இருப்பதை உணர்ந்து மென்மையான உடற்பதற்றம் கொண்டு தன்னை விடுவித்து எழுந்தாள். சுற்றி இருந்தோர் அனைவரும் குழந்தையின் தாயை சபித்தபடி அங்கிருந்து செல்லத் தொடங்கியிருந்தனர். இறுதியாக இவர்கள் இருவர் மட்டுமே எஞ்சினர். இசை ஷாகுலிடம் என்ன செய்யலாம் எனக் கேட்க எத்தனித்து அவனின் கண்களில் நிலைகொண்டு பின் சுதாரித்து மீண்டாள். ஜி.ஹெச்ல கொண்டு போயி கொடுத்துடலாம்.

சிறுகதை: அன்பின் கொடிகள்
சிறுகதை: அன்பின் கொடிகள்

``ம்ம்ம்... போலீஸ் வருவாங்களா. எனக்கு சின்ன வயசுல இருந்தே அவங்கன்னா பயம்.''

``வந்தா என்ன பண்ணிடப் போறாங்க? அதெல்லாம் பார்த்துக்கலாம்.’’

காவல்துறையில் தகவல் சொன்னார்கள். அங்கு இவர்கள் இருவரின் முகவரியை வாங்கி வைத்துக்கொண்டார்கள். பிறகு அரசு மருத்துவமனையில் குழந்தையைச் சேர்த்து முதலுதவி செய்யப்பட்டு ஒரு வாரத்தில் எல்லாம் குழந்தை நல்ல ஆரோக்கியத்திற்கு வந்துவிட்டது. அந்த ஒருவாரமும் தினமும் மருத்துவமனை செல்வாள். ஹமீதும் வருவான். வராந்தாவில் குறுகிய நேரம் பேசிக்கொள்வார்கள். அதுதான் அவர்களுக்கான பழக்கத்தின் விதை.

``ஏன் நீங்க அப்போ அம்மா அம்மான்னு அழுதீங்க. அதுவும் குழந்தையைப் பார்த்து.’’

``ஏதாவது தப்பா கேட்டுட்டேனா?”

``இல்ல என் அம்மா என்னைத் தூக்குனா எப்படி இருக்கும்னு யோசிச்சிட்டேன். அம்மாவோட நெனப்பு, அதான்.''

சிரித்தான். ``வீட்ல போயி அம்மா மடில படுத்திருப்பீங்களே!’’

``அம்மாவோட சேலை எடுத்து வெச்சு அதுமேல படுத்துக்கிட்டேன்.’’

``ஸாரி''

``பரவால்ல விடுங்க''

``எப்போ?’’

``எனக்குப் பத்து வயசு இருக்கும்போது.''

``எப்படி?’’

``வேற பேசலாமே.''

நிறைய பேசினார்கள். பின் வந்த நாள்களும் அது தொடர்ந்தது.

நான்காவது வாரம்.

குழந்தையைக் கொண்டுபோய்விட்டதாகத் தகவல் தெரிவித்தார்கள். `ஏன் எங்கிட்ட சொல்லல? யார் கொண்டு போனது?’ `அது எங்களுக்குத் தெரியாது. தெரிஞ்ச ஆட்களும் சொல்ல மாட்டாங்க. இங்க வச்சு ரொம்ப நாள் பார்த்துக்க முடியாது. அரசாங்கமே அரசு அனுமதி பெற்ற ஏதாவது ஆதரவு அமைப்பிடம் தந்துடும்.’

இசையின் மனதிற்குள் சண்டையிட வேண்டும்போல, அழவேண்டும் போல இருந்தது. அது என்னோட அம்மா என்றாள். ஹமீது அவளைப் பார்த்துக்கொண்டே இருந்தான். அவளில் பொங்கிய கருணையை, அன்பை.

``நீங்க என்னை வித்தியாசமா பார்க்கறீங்க’’ என்றாள்.

``என்ன வித்தியாசம்?''

``தெரியல! ஆனா இதுவரைக்குமான பார்வைக்கும் இந்தப் பார்வைக்கும் வித்தியாசம் இருக்கு.’’

மறுநாள் இருவரும் அதே மருத்துவமனையில் அதே வளாகத்தில் ஏனென்றே தெரியாமல் வந்திருந்தனர். முதலில் ஷாகுல் வந்தான், பிறகு இசை. அவன் அருகில் வந்து அமர்ந்தாள்.

``எனக்கு உங்களப் பிடிச்சிருக்கு இசை.''

பொங்கல் விடுமுறை எல்லாம் முடிந்த ஞாயிற்றுக்கிழமை இரவில் அப்பா மதுவருந்திக்கொண்டிருந்தார். ஒவ்வொரு ஞாயிறும் இசை வழங்கிய சலுகை அது. ஹோம் தியேட்டரில் 20% ஒலியில் பாடல் ``உன்னுடைய வரவை எண்ணி உள்ளவரை காத்திருப்பேன். என்னை விட்டு விலகிச் சென்றால் மறுபடி தீக்குளிப்பேன். சொல்லிவிடு வெள்ளி நிலவே...’’

அப்பாவைத் தொந்தரவு செய்யாமல் தன் அறைக்குச் சென்று தாழிட்டுக்கொண்டாள். அலமாரியிலிருந்து அப்பாவின் நோட்டை எடுத்துப் பிரித்தாள். அதில் தொடக்கமுமற்ற முடிவுமற்ற, ஆயினும் ஒன்றுக்கொன்று தொடர்புள்ள குறிப்புகளாக இருந்தன.

`சொர்ணலதாவிற்கு.

குறிப்பு 1

இங்கு எல்லாக் குழந்தைகளும் முதலில் பெண் குழந்தைகளாகத்தான் தாயின் வயிற்றில் ஜனிக்குமாம். பெண் உடலுக்கான அமைப்புகள் முதலில் உருவாகத் தொடங்கிவிடும். அதனால்தான் ஆண்களுக்கும் மார்பில் காம்புகள் இருக்கின்றன. ஆனால் நான் சொல்ல வந்தது வேறு. ஒரு கரு பெண்ணாகத்தான் ஜனிக்கும் என்றால் நானும் பெண்ணாகத்தானே ஜனித்திருப்பேன். பின் குரோமோசோம்களினால் என் பெண் தன்மையை இழந்து ஆணாகிவிட்டேன். நான் இழந்த பெண்தன்மைக்கு உருவம் தந்தால், உயிர் தந்தால் அது சொர்ணலதாவைப்போல இருக்கும். நான் அவளோடு இருந்தால் மட்டுமே முழுமையாவேன். இல்லையென்றால் நான் பாதி மனிதன், குறைபட்ட உயிர்.

குறிப்பு 2

எனக்கு பயமாக இருக்கிறது, இதுவரைக்கும் நான் பயந்ததில்லை. சொர்ணலதாவிடம் என் அன்பைச் சொல்லாமல் அவளைச் சேராமல், அவளை அணைக்காமல், அவளை முத்தமிடாமல் அவளின் கண்ணீரை ருசிக்காமல் இறந்து போய்விடுவேனோ என்று பயமாக இருக்கிறது. அவள் என்னால்தான் சிரிக்க வேண்டும். அவள் என்னால்தான் அழ வேண்டும். அவள் எனக்காகத்தான் வந்திருக்கிறாள். எனக்குத் தெரிகிறது, இவள் நான் என்றோ எந்தப் பிறவியிலோ வாழாமல் வைத்துவிட்ட மிச்சம். அதனை நிவர்த்தி செய்துகொள்ளத்தான் நாங்கள் பிறந்திருக்கிறோம். அவளிடம் சென்று இதையெல்லாம் சொல்லிட வேண்டும். அதுவரையும் எப்படியாவது உயிர்வாழ்ந்திட வேண்டும்.’

அறைக்கதவைத் திறந்து பார்த்தாள். அப்பா காற்றில் கைகளை அசைத்து ஹோம் தியேட்டரில் ஒலித்துக்கொண்டிருக்கும் பாடலுக்குத் தக்கவாறு மெட்டுப்போட்டுக்கொண்டிருந்தார் ``அன்பே ஓடிவா அன்பால் கூடவா ஓஓஓ பைங்கிளி...''

குறிப்பு 3

சொர்ணலதாவே என்னைத் தேடி வந்துவிட்டாள். என்னை அவளுக்கு ஆயிரம் வருடங்களாகத் தெரியும் என்றாள். அவளால் அடிக்கடி வந்து என்னைச் சந்திக்கவோ பேசவோ முடியாதாம். எப்போது சமயம் வாய்த்தாலும் என்னைத் தேடி ஓடிவருவதாகச் சொன்னாள். காதலிப்பதாக மட்டும் அவள் வெளிப்படையாகச் சொல்லவில்லை. அதில் எனக்கு ஏமாற்றம் இருந்தது. பிரியம், அன்பு என்பதெல்லாம் வேலி அமைத்த சொற்களாக இருக்கின்றன. எனக்குக் காட்டாறுபோல காதல் என்ற வார்த்தை வேண்டும். அவளுக்கு என் மனதை விளக்கிக் கடிதம் எழுத வேண்டும்.

குறிப்பு 4

சொர்ணலதா பதில் கடிதம் எழுதியிருந்தாள். அதைப் படித்தது முதல் நான் இந்த பூமியோடு என் தொடர்பைத் துண்டித்துக்கொண்டு அந்தரத்தில் உலவுகிறேன். அவள் என்னைக் காதலிக்கிறாள். இந்த மகிழ்ச்சியை எப்படிச் சொல்லாக்குவது என்றே தெரியவில்லை. வருடங்கள் கடந்து நான் முழுமையாக மகிழ்ச்சியை அனுபவித்து வாழ்ந்த கணம் எதுவென நினைத்துப் பார்த்தால் சர்வ நிச்சயமாக இக்கணத்தையே சொல்லுவேன் என்று நினைக்கிறேன். அவளின் உயிர் எனக்குள் இறங்குவதை நான் துளித்துளியாக உணர்கிறேன். நெஞ்சுக்கு மத்தியில் குளிர்கிறது. அழுகிறேன்.’

நோட்டுக்குள் இருக்கிறதா என்று இசை தேடிப்பார்த்தாள். அதெப்படி பத்திரப்பப்படுத்தாமல் இருப்பார். இருந்தது, நான்காக மடிக்கப்பட்ட கடிதம்.

சொர்ணலதாவின் கடிதம்:

`ஏன் இப்படியெல்லாம் பேசுகிறீர்கள். நான் உங்கள்மீது கொண்டிருப்பது வெறும் அன்போ பிரியமோ மட்டுமல்ல, அது காதல். நான் உங்களோடு வாழ வேண்டும். வாழ்வை அதன் மகத்துவத்தை நான் உங்களோடுதான் பகிர வேண்டும். இது காதல்தான். அதில் உங்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம். என்னால் இப்படிச் சொல்லுவதற்குக் கூச்சமாக இருக்கிறது. நிஜமாய் என்னைப் பகிரங்கப்படுத்த அசிங்கமாகவும் இருக்கிறது. நீங்கள் புரிந்துகொண்டிருக்க வேண்டும் அல்லவா! என் வாயால் சொல்லக்கேட்பதில் அப்படி உங்களுக்கு என்ன திருப்தி. ஆமாம், காதலிக்கிறேன் காதலிக்கிறேன் காதலிக்கிறேன்... போதுமா! என்னால் மட்டும்தான் உங்களைப் பார்த்துக்கொள்ள முடியும். என்னிடம் மட்டும்தான் நீங்கள் அடங்குவீர்கள். நான் உங்கள் ஆண்மையை கம்பீரம் செய்வேன். என் பெண்மையை நீங்கள் அலங்கரிப்பீர்கள். என்னென்ன மாதிரியான பெரும் கனவுகள் வைத்திருக்கிறேன் தெரியுமா உங்களுக்கு? நேற்று தொடர்பே இல்லாமல் ஒரு நினைவு வந்தது, நீங்கள் எனக்கு மருதாணி இட்டுவிட்டதுபோல. உள்ளங்கையில் வட்டமாக அப்பி வைத்தீர்கள், விரல்களில் தொப்பிவைத்து விட்டீர்கள். உங்கள் விரல்களில் மருதாணியின் சிவப்பு ஒட்டிக்கொண்டது. என் நினைவு வரும்போதெல்லாம் உங்கள் விரல்களை நீங்கள் மோந்து பார்க்கிறீர்கள், நான் உங்கள் விரல்களுக்குள் மருதாணி வாசமாக இருக்கிறேன். உங்களை என் மார்பு மத்தியில் புதைத்துக்கொண்டு தூங்கிப்போகிறேன். நான் உங்களுக்காக உங்களிடமே வருவேன் என் தங்கமே.’

குறிப்பு 5

இன்று சொர்ணலதாவைத் தனியாகச் சந்தித்தேன். என் வாலிபத்தை வசந்தம் செய்ய வந்திருந்தாள். இளமையின் திமிர்களுக்கு நீரூற்றினாள், நான் அவளை முத்தமிட்டேன். முதல் முத்தம். அவள் கண்களை மூடிக்கொண்டாள். மீன்போல குளுமையாக இருந்தாள். எங்களைத் தனிமை ஆசீர்வதித்தது. நான்தான் அவளின் மேலாடையை விடுவித்தேன்.’

நோட்டிலிருந்து தலையை நிமிர்த்திய இசை பூட்டிய வீட்டிற்குள் அக்கம் பக்கம் ஏதோ திருட்டுத்தனம் செய்வதுபோல பார்த்தாள். மேற்கொண்டு படிக்கலாமா வேண்டாமா? ரொம்பவும் அந்தரங்கமாக இருக்கிறதே! அப்பாவின் அந்தரங்கம், அதை வாசிக்க வேண்டுமா என்று யோசித்து. அப்பா என்ன செய்துகொண்டிருக்கிறார் எனக் கண்காணித்தாள்.

சோபாவில் தூங்கிவிட்டிருந்தார். ஹோம் தியேட்டரில் ஏதோ மிருதங்க ஓசை ஒலித்துக்கொண்டிருந்தது.

அப்பா தூங்கிவிட்டார். பாடலை அணைத்துவிடலாம் என்று நினைத்து ரிமோட்டைத் தேடினாள். இருந்தாலும் இந்த மிருதங்கம், என்னை கேள் கேள் என்று பறைசாற்றி ஒலித்துக்கொண்டிருந்தது. திடீரென்று அமைதிக்குப் பின் அவ்விரவில் அமானுஷ்யமாக பியானோ கட்டைகளின் வழி மேலெழுந்து வருகிறது வள்ளி படத்திலிருந்து `என்னுள்ளே என்னுள்ளே’ பாடல். வீடே விண்வெளியாகிப்போனதாக உணர்ந்தாள். தினமும் அப்பா இந்தப்பாடலைக் கேட்பார்.

``காலமென்ற தேரே ஆடிடாமல் நில்லு, இக்கணத்தைப்போலே இன்பமேது சொல்லு. காண்பவை யாவும் சொர்க்கமேதான்'' உயிரின் கரைசலில் தோய்த்தெடுத்த குரல். பாடல் முடிந்திருந்த போது அவள் கண்களில் ஈரம் துளித்திருந்தது.

அப்பாவின் காமம் இரண்டு பக்கங்கள், அதனை மேற்கொண்டு வாசிக்காமல் மிகுந்த மரியாதையாக பக்கங்களைத் திருப்பிப் பொத்தி வைத்தாள். நோட்டையும் அதோடு மூடி வைத்தாள். இப்படி உயிர் நிறைந்து விரும்பிய பெண்ணை அப்பா ஏன் திருமணம் செய்யவில்லை, அவளுக்கு என்ன ஆனது? தொடர்ந்து வாசித்தால் அதற்கான விடை கிடைக்கும்! சொர்ணலதாவிற்கு என்ன ஆனால் என்ன? அவர்கள் காதல் எப்படிப் பிரிந்தால் என்ன? ஆனால் இந்தக் காதல் நன்றாக இருக்கிறது, இது அப்படியே இருக்கட்டும். எனக்கு இந்தக்கதை முழுவதுமாகத் தெரியவேண்டாம். ஒரு சோக முடிவிற்கு நான் தயாரில்லை.

சிறுகதை: அன்பின் கொடிகள்
சிறுகதை: அன்பின் கொடிகள்

இந்தக் காதல் கொண்ட மனிதரிடமா நான் காதலுற்றதைச் சொல்வதற்குத் தயங்கி நின்றேன்? இந்தப் பழைய காதலைச் சொல்லிக் குத்திக்காட்டியா என் காதலை இவரிடம் ஒப்புக்கொள்ளச் செய்ய வேண்டும்? இல்லை. என் அப்பா என்னைப் புரிந்துகொள்வார். என் காதல் அவருக்குப் புரியும். காலையில் அவரிடம் சொல்லிவிடுவதாக முடிவெடுத்துத் தூங்கிப்போனாள்.

``என்னாச்சு இசை?’’

``அப்பாகிட்ட சொல்லிட்டேன். அவங்க ஒண்ணும் சொல்லல. ஐ மீன் எதிர்க்கல.’’

``பின்ன?’’

``நான் இத வாசிச்சுட்டேன்பா’’

``தப்பில்லடா'' அவர் எந்த அதிர்ச்சியும் அடையவில்லை.

``முழுசா வாசிக்கல பாதிதான்.’’

``ஏன் முழுவதுமே வாசிக்க வேண்டியதுதானே!''

``வேண்டாம்! எனக்கு உங்க காதல் பசுமையா இருக்கணும். அதோட சோகநிலை எனக்கு வேண்டாம்பா. அவங்களைக் கல்யாணம் செய்யாம அம்மாவ கல்யாணம் செய்திருக்கீங்கனா கண்டிப்பா அந்தக் காதல்ல ஏதோ பெரிய சோகம் இருக்கு. அது எனக்கு வேண்டாம்.

எனக்கு ஒண்ணு மட்டும் வேணும்.’’

``என்ன?''

``அவங்க உங்களுக்கு எழுதுன பதில் கடிதம் இருக்கு. வாசிச்சேன். நீங்க அவங்களுக்கு எழுதுன கடிதத்தை நான் வாசிக்கணும். நீங்க என்ன எழுதுனீங்கன்னு உங்களுக்கு நினைவிருக்கா?’’

``வரிவரியா நினைவிருக்கு.''

``எனக்காக அத எழுதித் தாங்கப்பா ப்ளீஸ்.’’

``தரேன். பையன் பேர் என்ன?''

``அப்பா..!’’

``சும்மா சொல்லு. இதுகூடவா தெரியாம இருக்கப்போறேன். நான் உனக்கு அப்பன்.''

``ஷாகுல் ஹமீது.’’

``குட்.''

``என்கிட்டே வேற எதுவும் நீங்க கேட்கப்போறது இல்லியாப்பா?’’

``ஏன் கேட்கணும். நீ ஒண்ணும் முட்டாள் கிடையாது. எனக்குத் தெரியும், என் பொண்ணு புத்திசாலி. நம்ம வாழ்க்கைல நம்மகூட யார் டிராவல் பண்ணணும், யார் கூட வாழணும்னுகூட சுயமா முடிவெடுக்கத் தெரியலன்னா இத்தனை வருஷம் வாழ்ந்ததுக்கான அர்த்தம் என்ன? இப்பதான் நான் உன்னை சரியா வளர்த்திருக்கேன்னு சந்தோசமா இருக்கு. என் பொண்ணு நான் கைநீட்டுற பையனதான் கட்டிக்குவான்னு சொல்றதுல பெருமை என்ன இருக்கு. அது நிஜமா அவமானம்தான். நீ அந்த அவமானத்தை எனக்குக் கொடுக்கல. இது உன் வாழ்க்கை, நீதான் வாழணும். உனக்காக நான் வாழ முடியாதுடா.’’

``ஷாகுல் நான் ஒண்ணு கேட்கணும்.’’

``ஷாகுல் புன்னகைத்தான். சரி அந்தக் குழந்தையைத் தத்தெடுத்துக்கலாம்.''

``ஷாகுல் உன்கிட்ட இன்னொண்ணு சொல்லணும்.’’

``ஐ லவ் யூ.''

``என்னைய பேச விடேன்டா.’’

``சரி பேசு. கைல என்ன பேப்பர்?''

``பேப்பர் இல்ல லெட்டர். வாசி. அது என் அப்பா மனசு. என் மனசும்.’’

அப்பாவின் கடிதம்:

`அன்புள்ள சொர்ணலதாவிற்கு.

எப்படித் தொடங்குவதென்று தெரியவில்லை, எனக்குள் நிகழும் மாற்றங்களை மாயங்களை நீயும் அறியவேண்டியே இதை எழுதுகிறேன். உனக்குள்ளும் அவ்வாறே மாயங்கள் உண்டா அல்லது இது ஒருதலையா என்பதுவும் எனக்குத் தெரிந்தாக வேண்டும்.

நீதான் எனக்கானவள் என்று கண்டுகொண்ட பிறகு என்னால் இந்தத் தனிமையை சமாளிக்கவே முடியவில்லை. அருகில் வா. நான் உன் கன்னங்களைக் கையில் ஏந்தி அன்பு தேங்கிக் கிடக்கும் கண்களைப் பார்க்க வேண்டும். போதும். பிறகு நீ போய்விடு. என்னால் உன் விரல்களை உணரமுடிகிறது. உன் தொடுகையை. உன் அணைப்பைப் பரிச்சயம் கொள்ள முடிகிறது. உன் நிர்வாணம் கூட நான் பார்த்த ஒன்றுதான். என்னை நீ அழச் செய்திருக்கிறாய். உன்னை அழுது உன் பாதங்களைத் தொழுத நினைவு இருக்கிறது. யார் நீ? என்னை என்ன செய்துகொண்டிருக்கிறாய். எத்தனை கெட்டிப்பட்டவன் தெரியுமா நான்? யாராலும் என் கெட்டிப்பட்ட மனதைக் கரைக்க முடியவில்லை, நீ அனாயாசமாகச் செய்து முடித்துவிட்டாய். நீ வந்து திறக்கத்தான் நான் பூட்டிக்கொண்டு இருந்திருக்கிறேன் போல! நான் உன்னைக் காதலிக்கிறேன். உன்னால் என் உயிர் போகும் என்றால் சம்மதம் என்னும் அளவிற்குக் காதலிக்கிறேன்.

நாம் சேர்ந்து நனைய ஒரு மழை

இணைந்து பார்க்க ஒரு நிலா

முகம்பார்த்துப் பேச ஒரு காலம்

நிச்சயம் வரும் கண்ணம்மா.

நான் அதற்குத்தான் காத்திருக்கிறேன்.

அதுவரைக்கும்

பிறவிதோறும் பின்தொடரும்

என் பிரியத்தை

பத்திரமாக வைத்துக்கொள்.’

திருமணமான தம்பதியர் ஒரு குழந்தையைத் தத்தெடுக்க வேண்டும் என்றால் அவர்கள் இருவரும் இரண்டு வருடம் இணைந்து வாழ்ந்திருக்க வேண்டும். அப்போதுதான் அரசாங்கம் அனுமதிக்கும். இருவரில் ஒருவருக்கு 26 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும் என்பது நியதி.

காத்திருந்தார்கள்.

இரண்டு வருடங்களில் இசை முதல் பெண்குழந்தையைப் பெற்றெடுத்தாள். இரண்டாவது குழந்தையைத் தத்தெடுக்கும் முயற்சியில், இவர்கள் இருவரும் சேர்ந்து காப்பாற்றிய குழந்தை இருக்கும் ஆசிரமமும் இன்னும் அக்குழந்தை அங்குதான் வளர்வதாகவும் தகவல் கிடைத்தது. வாழ்வின் சுவாரஸ்யங்களை எண்ணி வியந்தாள். ``நான் என் அம்மாவைக் கூட்டி வரப்போகிறேன்'' என மனம் பூத்தாள்.

ஆசிரமத்திற்குள் நுழைந்ததுமே இசையின் மனம் கனத்து உருண்டது. இந்த உணர்வு முன்னம் அறியாதது. தன்னை ஏதோ அழுத்துவதாக. தீராத சோகம் வந்து கவ்வுவதாக ஒரு பிரம்மை.

செவிலிப்பெண் ஒருத்தி வந்து வழிகாட்டினாள், நீங்க குழந்தையைப் பார்க்க மட்டும்தான் முடியும் மேடம், உங்களுக்கு அதே குழந்தையைத் தத்துக்கொடுக்க மாட்டாங்க. உங்க அப்ளிகேஷன் வரிசைப்படிதான் உங்களுக்குக் குழந்தையைத் தருவாங்க. அது எந்தக் குழந்தையா வேண்டுமானாலும் இருக்கலாம்.

ஆசிரமத்திற்குள் திடலில் மூன்றுவயதுப் பெண் குழந்தைகள் கூட்டாக விளையாடிக்கொண்டிருந்தார்கள். தும்பைப் பூக்கள் காற்றில் பறப்பதுபோல அவர்கள் துள்ளிக்குதித்து விளையாடினார்கள். குடும்பம் இல்லாதிருத்தல், கவலை என்பதையே அறியாத பிஞ்சுகள். நீங்கள் விசாரித்த குழந்தை அதோ என்று செவிலி கை நீட்டவும் செவிலியின் கைகளைப் பிடித்து இசை இறக்கினாள். ``வேண்டாம்! எனக்கு அந்தக் குழந்தை யாரென்று தெரியவேண்டாம்.’’ இசையின் குரல் தகர்ந்துபோயிருந்தது.

``இது எல்லாம் என்னோட பிள்ளைகள்’’ அழுதுவிட்டாள்.

``எல்லாமே என்னுடைய அம்மாக்கள். இவர்களில் யார் வேண்டுமானாலும் எனக்குப் பிள்ளையாக வரட்டும் எல்லாம் ஒன்றுதான்.’’

ஷாகுல் இசையின் தோள்களைச் சேர்த்து சம்மதமாக அழுத்திப் பிடித்தான்!

அன்பின் கொடிகள் திசைகள் தீர்மானித்துப் படர்வதேயில்லை.