சினிமா
Published:Updated:

அவள் வாசம்! - சிறுகதை

அவள் வாசம்! - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
அவள் வாசம்! - சிறுகதை

15.09.2022 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் வெளியான சிறுகதை...

விஸ்வா வீட்டுச் சுவரில் முழுக்க மழித்த முகத்தோடு தோன்றிய ஜேம்ஸ் காமரூன் சிரிக்காமல் சொன்ன தத்துவம் இது!

ஆனால் அவர் சொன்னது போல விஸ்வாவுக்கு சினிமா அத்தனை இலகுவாக இல்லை. முதல் படத்துக்கே அவனுக்கு மூச்சு முட்டிக் கொண்டிருக்கிறது. அவனும் எவ்வளவு சின்னதாக இருந்தாலும் எவ்வளவு மசாலாவாக இருந்தாலும் பரவாயில்லை என்றுதான் நினைத்தான். அவன் நண்பர்களோ, இல்லாத தங்கையோகூட அவனை நம்பத் தயாராக இல்லை. ஆனாலும் இதெல்லாம் நடந்துவிடும் என்ற நம்பிக்கையில் ஜேம்ஸ் காமரூன் வார்த்தைகள் அடங்கிய போஸ்டரைக் கிழிக்காமல் விட்டு வைத்திருக்கிறான்.

ஜேம்ஸ் காமரூனுக்கும் விஸ்வாவுக்கும் ஒற்றுமை என்னவென்றால் இருவருமே சினிமாவில் உழைத்துக்கொண்டிருப்பவர்கள். ஜேம்ஸ் காமரூன் இயக்குநராக; விஸ்வா பயிற்சி… துணை… இணை… இரண்டாம் யூனிட் என்று பல முன்னொட்டுகளுடன்கூடிய இயக்குநராக..!

இதற்கு மேல் ஜேம்ஸ் காமரூனுக்கு வேலையில்லை. இது விஸ்வாவின் கதை… இந்தக் கதை விஸ்வாவின் வீட்டில் இருந்து தொடங்குகிறது. ஓராண்டுக்கு முன்னால் பிடித்த வீடு இது. பிடித்த என்றால் மனதுக்குப் பிடித்த என்று சொல்லிவிட முடியாது. அதேநேரத்தில் அவனுக்கு அந்த வீட்டைப் பிடித்தும் இருந்தது. காரணம், ஹவுஸ் ஓனர்!

அவள் வாசம்! - சிறுகதை
அவள் வாசம்! - சிறுகதை

ஒரு வீட்டின் தரைத் தளம் உலக வழக்கத்தின்படி வீட்டு ஓனருக்கானது. அதன்மீது தரைத்தளத்தின் அளவை இரண்டாகப் பிரித்து இரண்டு வீடுகள் முதல் தளத்தில் இருக்கும். அதில் தி.நகரில் ஏதோ ஒரு சூப்பர் ஸ்டோரில் நாளெல்லாம் நின்றுகொண்டோ, ரெப்ரசென்டேட்டிவ் அல்லது ஆட்டோ டிரைவர் என்ற பெயரில் நாளெல்லாம் ஓ(ட்)டிக்கொண்டோ இருக்கும் குடும்பத் தலைவனின் குடும்பம் இருக்கும்.

இந்தக் குடித்தனக்காரரின் வேலை அந்தக் குடும்பத்துக்கும், அந்தக் குடித்தனக்காரரின் வேலை இந்தக் குடும்பத்துக்கும் பொறாமை தருவதாக இருக்கும். இரண்டு பேருக்குமே ஐந்தாம் தேதிக்குள் வாடகை கொடுப்பது என்பதுதான் வாழ்க்கை லட்சியம். அதற்குள் அத்தனை போட்டிகள் பொறாமைகள்..! இரு வீட்டுக்கும் பொதுவான பாத்ரூம் என்பது கூடுதல் பொறாமைக்கான காரணமாக அமையும். முந்தைய குளியலில் பயன்பட்ட சோப்பு வாசனைதான் அந்தக் குடும்பத்தின் அந்தஸ்தாக இருக்கும்.

அதையும் தாண்டிப் படியேறி வந்தால் மொட்டை மாடி. அதில் ஹவுஸ் ஓனரின் அப்பாவோ தாத்தாவோ கடைசிக் காலத்தில் நிம்மதியாக (யாருக்கு நிம்மதி என்பது இங்கு தேவையில்லாத கேள்வி) வாழ்வதற்காக ஒரு குடில் அமைக்கப்பட்டிருக்கும். அந்த முதியவரின் விடைபெறலுக்குப் பிறகு கொஞ்ச நாள் தட்டுமுட்டு சாமான்கள் போடப்பட்டதாக இருக்கும் (சில நேரங்களில் ஹவுஸ் ஓனரின் பதின்ம வயது மகன் திருட்டு தம் அடிக்கப் பயன்பட்ட) அந்த அறை திடீரென்று தூசி தட்டப்பட்டு வாடகைக்குத் தயாராகும்.

அப்படியொரு வீட்டை(!)த்தான் விஸ்வா பார்க்க வந்தான். பார்த்தபோது பிடிக்கவில்லை என்றாலும் சூழ்நிலை காரணமாக பார்க்கப் பார்க்கப் பிடித்துவிடும் என்ற நம்பிக்கையோடு ஓகே சொன்னான். அந்த வீட்டின் மிகப்பெரிய சிறப்பம்சம் அட்டாச்டு பாத்ரூம்தான்! (பெரியவர் எந்தக் காரணத்துக்காகவும் தரைத்தள வீட்டுக்குள் நுழைந்துவிடக்கூடாது என்பதற்காக ஹவுஸ் ஓனர் அம்மா செய்த ஏற்பாடாகக்கூட அதை எடுத்துக்கொள்ளலாம்).

விஸ்வா ஓகே சொன்னதைவிட மிகப்பெரிய விஷயம் வீட்டு ஓனர் விஸ்வாவுக்கு ஓகே சொன்னதுதான். காரணம், விஸ்வா மிக நேர்மையாக தான் ஒரு சினிமாக்காரன் என்று சொல்லியிருந்தான்.

பொதுவாக சினிமாக்காரர்களுக்கு இரண்டு விஷயங்கள் மிகச் சிரமமானதாக இருக்கும். முதலாவது வீடு கிடைப்பது… இரண்டாவது வீட்டுக்காரம்மா கிடைப்பது! இரண்டுக்குமே பொதுவான அம்சம்… ‘ஆயிரம் பொய் சொல்லலாம், தப்பில்லை’ என்பதுதான்! பெரும்பாலும் வீடு பார்க்கச் செல்லும்போது சொல்லப்படும் தகவல்களில் நிறைய பொய்கள் கலந்திருக்கும். அதற்கு வீடு தேடுபவர்கள் மட்டுமே காரணம் அல்ல, வீட்டு ஓனர்களின் எதிர்பார்ப்பும் முக்கியமான காரணம்.

முதல் கேள்வியே ‘எங்கே வேலை பார்க்கிறீங்க’ என்பதாகத்தான் இருக்கும். ஐ.டி துறையேகூட நிரந்தரமில்லாமல் போய்விட்ட இன்றைய காலகட்டத்தில் சினிமா என்று சொன்னாலே, ‘அய்யே… நிரந்தர வருமானம் இல்லாத தொழில்பா, வேலைக்காவாது…’ என்று புறக்கணித்துவிடுவார்கள்.

அதனால் விஸ்வாவைக் கூட்டிச் செல்லும் நண்பர்கள், ‘டேய்… எதுனா கம்பெனியிலே வேலை பார்க்கிறேன்னு சொல்லு… அவங்க என்ன வந்து பார்க்கவா போறாங்க..?’ என்று சொல்வார்கள். ஆனால், ‘சினிமா என்று சொல்வதை ஏற்றுக்கொள்ளாதவர்களிடம் எனக்கு என்ன உறவு வேண்டியிருக்கிறது, சினிமா என்றுதான் சொல்வேன்… வீடு கொடுத்தா கொடுக்கட்டும், இல்லாட்டி போகட்டும்’ என்று உறுதியாக நிற்பான்.

அவள் வாசம்! - சிறுகதை
அவள் வாசம்! - சிறுகதை

உறுதியாக நிற்பது நல்ல விஷயம்தான். ஆனால் ரோட்டில் நிற்பது நல்ல விஷயம் இல்லையே..! ‘டேய்… நீ அவ்வப்போது பார்க்கிற ஈவன்ட் மேனேஜ்மென்ட்னுகூடச் சொல்லுடா… அது பொய் இல்லையே..?’ என்பார்கள் நண்பர்கள். ஆனால், ‘அதெல்லாம் சைடு டிஷ் மாதிரி… அதையே சோறுன்னு சாப்பிட முடியுமா..?’ என்பான். ‘அட… இது செமயான வசனமா இருக்கே…’ என்று டைரியில் குறித்தும் வைத்துக் கொள்வான்.

அப்படிப்பட்ட விஸ்வா இந்த வீட்டைப் பார்க்க வந்தபோது ஒரு பொய் சொன்னான். ஹவுஸ் ஓனர் பேசிக்கொண்டே வந்தபோது, மிக கேஷுவலாக, ‘ஒய்ஃப் என்ன பண்றாங்க தம்பி..?’ என்று கேட்க, விஸ்வாவும் அதே கேஷுவலாக, ‘ஊர்ல பஞ்சாயத்து போர்டுல வேலை பாக்கிறாங்க… சீக்கிரமே இங்கே நல்ல வேலை பார்த்துக் கூட்டிட்டு வரணும்…’ என்றான். ‘உங்களை மாதிரி சினிமாக்காரங்களுக்கு வேலைக்குப் போற பொண்ணுங்கதானப்பா ஆதாரம், நல்ல விஷயம்… அவசரப்பட்டுக் கூட்டிட்டு வந்துறாத, நல்ல வேலையாக் கெடைச்சதும் கூட்டிட்டு வா…’ என்றார் ஹவுஸ் ஓனர்.

‘என்னடா, உத்தமன் மாதிரி பேசுனே… இப்ப கூசாம பொய்யைச் சொல்லியிருக்கே..?’ என்று நண்பன் கேட்க, ‘சினிமா விஷயத்துல ஒருநாளும் பொய் சொல்லவே மாட்டேன். இப்பகூட நான் பொய் சொல்லலையே… எனக்கான பொண்ணு எங்கேயோ ஒரு ஊருல வேலை பார்த்துகிட்டுதானே இருப்பா… அப்ப அது உண்மைதானே? ஒருவேளை பஞ்சாயத்து போர்டுனு நான் சொன்னது வேணா பொய் ஆகிடலாம்… இன்னிக்கோ நாளைக்கோ அவளைப் பார்த்துட்டேன்னா அந்தப் பொய் உண்மையாகிடும்ல’ என்றான்.

இந்த இடத்தில் கதை இரண்டாவது அத்தியாயத்தைத் தொடங்குகிறது. அதாவது, வீட்டுக்காரம்மா கிடைக்காமல் விஸ்வா தடுமாறிக் கொண்டிருக்கும் கதை!

இந்தக் கதைக்காக ஸ்யாம் வரைந்திருக்கும் ஓவியத்தை நீங்கள் கவனிக்கத் தவறியிருந்தால் இந்த விஷயம் உங்களுக்கு அதிர்ச்சி தருவதாக இருக்கலாம் (அல்லது, ஸ்யாம் திட்டமிட்டு விஸ்வாவை வரையாமல் விட்டிருந்தாலும்). விஸ்வாவின் வயது இப்போது 47!

எனக்கான பெண் எங்கோ பிறந்திருப்பாள் என்று அவன் நம்பிக்கொண்டிருப்பது என்பதை வைத்து அவன் கடைசி இருபதுகளிலோ இளம் முப்பதுகளிலோ இருப்பதாக நீங்கள் கற்பனை செய்துவிட வாய்ப்பிருக்கிறது என்பதால்தான் ஸ்யாம் வரைந்த (அல்லது, வரையாமல் தவிர்த்த) ஓவியம் பற்றி உங்களுக்குச் சொன்னேன். ஆனால், முதல் பார்வையில் உங்களால் விஸ்வாவின் வயதை யூகிக்க முடியாது.

விஸ்வாவின் பரம்பரைப் பெருமை இந்த இடத்தில் அவனுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. அவனுடைய பூட்டனாருக்குப் பட்டப்பெயரே கரடி மாடசாமிதான். அந்த அளவுக்கு உடலெங்கும் முடியாக இருக்கும். பாட்டனார் கொஞ்சம் பரவாயில்லை… புதருக்குள் இருந்து எட்டிப் பார்ப்பது போல தாடி, தலைமுடிக்குள் கண்கள் மட்டும் மினுக் மினுக் என்று இருக்கும். அப்பாவுக்கு இயற்கையே விபூதி பூச கொஞ்சம் இடத்தை விட்டு வைத்திருந்தது. வெளுத்துவிட்டது என்றாலும் முன்னந்தலை முடியும் புருவமும் அவ்வளவு அடர்த்தியாக இருக்கும்.

அவள் வாசம்! - சிறுகதை
அவள் வாசம்! - சிறுகதை

விஸ்வாவுக்கும் நல்ல அடர்ந்த முடி! அதனாலேயே எப்போது பார்த்தாலும் முப்பது வயது மதிக்கத் தக்கவனாகவே இருந்தான். நாற்பதைத் தொடும் வயதில் வெள்ளைக்குக் கறுப்பு மை அடித்து அதே முப்பதில் நின்றுகொண்டிருந்தான். இப்போதுதான், ‘என்ன பாஸ், முப்பத்திநாலு இருக்குமா?’ என்று கேட்கும் அளவுக்கு லேசாகக் கிழடு தட்டியிருக்கிறது.

எப்படி ஒரு மனிதனுக்குப் பெயர் மாறவே மாறாதோ அதுபோல விஸ்வாவுக்கு வயதும் மாறவே ஸாரி, ஏறவே ஏறாது! எந்த ஷூட்டிங்கிற்காக, டிஸ்கஷனுக்காக வெளியூருக்குச் செல்வதாக இருந்தாலும் விஸ்வா, வயது 31 என்று மேனேஜர்களே எழுதி டிக்கெட் எடுத்துவிடுவார்கள். இன்னும் சிலர், `ஸாரி சார், பையனை விட்டு டிக்கெட் போட்டேன்… உங்களுக்குப் போய் 33-ன்னு போட்டுட்டான்… தப்பா எடுத்துக்காதீங்க…’ என்று சொல்வார்கள். அந்த அளவுக்கு மிடுக்காக இருப்பான் விஸ்வா.

வீட்டுக்காரம்மாவுக்காக வெயிட்டிங்கில் இருக்கும் கதையைச் சொல்லத் தொடங்கி நடுவில் கமர்ஷியல் பிரேக்கில் டை கம்பெனி விளம்பரம் போட்ட மாதிரி கொஞ்சம் திசை மாறிவிட்டேன்… மறுபடியும் விட்ட இடத்துக்கே வந்துவிடுகிறேன்.

பொதுவாக இயக்குநர் கனவோடு வந்தவர்களுக்கு ஒரு வீறாப்பு இருக்கும்… படம் பண்ணுன பிறகுதான் கல்யாணம் என்று! அது வெற்றியின் மீது இருக்கும் வேட்கை என்றும் கொள்ளலாம், அல்லது வெற்றிப்பட இயக்குநர் ஆகிவிட்டால் ஒரு ரோஜா போலவோ குஷ்பு போலவோ தேவயானி போலவோ நயன்தாரா போலவோ ஒரு நடிகையே வாழ்க்கைத் துணையாகக் கிடைக்கும் வாய்ப்பை இழக்க வேண்டாமே என்பதும் காரணமாக இருக்கலாம். மூன்றாவதாக ஒரு கேட்டகரி இருக்கிறார்கள். ‘இயக்குநரானதும் கல்யாணம்’ என்ற வைராக்கியத்தோடு தொடங்கி, பெண் கிடைக்காமல் பேச்சிலராகவே வாழும் ரகம் அவர்கள். நம்ம விஸ்வா அந்த மூன்றாவது ரகம்தான்!

உதவி இயக்குநர் வாழ்க்கையில் வந்து போகும் வசந்த வாய்ப்புகள் ஏராளம்… பஞ்சாயத்து சீனில் முன்வரிசையில் பிராது கொடுத்த பெண்ணுக்குப் பக்கத்தில் நிறுத்தி க்ளோசப் வாய்ப்பைக் கொடுத்த ஒரே காரணத்துக்காக பேட்டா காசில் பிரியாணி வாங்கிக் கொடுக்கும் நட்சத்திரங்கள் இருக்கிறார்கள். பிரியாணியில் தொடங்கும் அந்த உறவு எதுவரை போகும் என்பது அந்த உதவி இயக்குநரின் கையில் இருக்கிறது. விஸ்வா பிரியாணியையே மறுத்துவிடுவான்.

ஒருமுறை மலையாளத்தில் இருந்து வந்திருந்த தங்கச்சி நடிகை ஒருவர் `உன் வெற்றி வரையில் நான் பொறுப்பு, அதற்குப் பிறகு நடிப்பை நான் விட்டுவிடுகிறேன்… என்னை நீ பார்த்துக்கோ’ என்று ஃபேர் டீல் ஒன்றோடு வந்தார். `இல்ல… வெக்கைக் காத்துல வேலை தேடுறவன் விண்டோ ஏசி கிடைச்சா வேகம் குறைஞ்சுடுவான் (அவனோட டயலாக் டைரியில் இதையும் எழுதி வெச்சிருக்கான்), உங்க அன்புக்கு நன்றி. என் படத்துல உங்களுக்கு ஏத்த கேரக்டர் இருந்தா நிச்சயம் கூப்பிடுவேன்!’னு சொல்லி அனுப்பிட்டான்.

அதன் பிறகு இயக்குநர்களே அவனை சார் போட்டுக் கூப்பிடும் அளவுக்கு வந்த பிறகு ப்ரபோசல்கள் குறைந்துவிட்டன. பதிலாக ரெகமண்டேஷன்கள் வரத் தொடங்கின. ‘நீங்க கொஞ்சம் சொல்லுங்க பாஸ்’ என்ற ரீதியில் வரும் அழைப்புகளின்போதுதான் தனக்கு வயதானதை உணர்ந்தான். வீட்டிலும் அம்மா சொல்லிச் சொல்லி அலுத்து வரன் பார்ப்பதை நிறுத்தி விட்டிருந்தாள். ஒரே ஒருமுறை, ‘தம்பி விஸ்வா… இந்த சீரியல் டைரக்ட் பண்ணவாச்சும் போகலாம்ல. சட்டுனு பொண்ணு பார்த்துடலாம்டா’ என்று அம்மா சொல்ல, அம்மா சின்னத்திரை என்ற கலை வடிவத்தை அவமதித்துவிட்டாள் என்ற கோபத்தில் `உன்னை எவன் பொண்ணு பார்க்கச் சொன்னான்’ என்று திட்டிவிட்டு வர, ஊரிலிருந்து ஒரு பெண் என்ற வழியும் அடைபட்டுவிட்டது. டைரக்டராகி விட்டால் அம்மா சமாதானம் ஆகிவிடுவாள் என்று விஸ்வாவும் விட்டுவிட்டான்.

கதை எழுதுவதிலும் அதைத் தயாரிப்பாளர்களைத் தேடிப் போய்ச் சொல்வதிலும் மற்ற இயக்குநர்களின் கதைகளுக்கான காட்சிகளை விவாதிப்பதிலுமே காலத்தைச் செலவிட்டுவிட்டதால் விஸ்வாவுக்கு என்று தனிப்பட்ட வாழ்க்கையே இல்லாமல் போய்விட்டது.

ஒருகட்டத்தில் பார்ப்பவர்கள் `பசங்க என்ன பண்றாங்க’ என்று கேட்கத் தொடங்கியபோதுதான் உணர்ந்தான் விஸ்வா, வந்த ப்ரபோசல்களில் ஒன்றுக்கு டிக் அடித்திருக்கலாமோ என்று! அவனைத் தேடி வந்த மலையாள தங்கைகூட நாயகியாகி, பிறகு ஒரு சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தாள்.

விஸ்வா இப்போதெல்லாம் கல்யாணம் என்ற எபிசோடையே மறந்துவிட்டான். `திருமணத்தால கிடைக்கிற இல்லறங்கறது வெளியே இருக்கறவங்க உள்ளே போகணும்னும் உள்ளே இருக்கறவங்க வெளியே ஓடணும்னும் முட்டி மோதுற கதவு, அவ்ளோதான்!’ என்று தத்துவமாகச் சொல்லிவிட்டுக் கடந்துபோய்விடும் மனநிலைக்கு வந்துவிட்டான்.

முன்பு குடியிருந்த வீடுகளிலாவது `எப்ப கல்யாணம்..?’ என்றொரு கேள்வியை வாடகை கொடுக்கப் போகும்போது சம்பிரதாயமாகக் கேட்பார்கள். இந்த வீட்டில் அதற்கும் தேவையில்லை. ஹவுஸ் ஓனரைப் பொறுத்த அளவில் அவன் மனைவி ஏதோ ஒரு பஞ்சாயத்து போர்டு ஆபீஸில் வேலையில் இருக்கிறாள்.

ஐதராபாத்தில் ஒரு தயாரிப்பாளரைத் தேடிப் போய் கதை சொல்லி ஓகே வாங்கிக்கொண்டு வீடு திரும்பிய நாளில் ஹவுஸ் ஓனர் கேட்டார். ‘`ஏம்பா… இப்படி ரெண்டு நாள் வெளியூர் போறேன்னா மணிமேகலைட்ட சொல்லிட்டுப் போக மாட்டே, பாவம் அந்தப் புள்ளை..?’’

யார் அந்த மணிமேகலை… அவளிடம் நான் ஏன் சொல்லிவிட்டுச் செல்ல வேண்டும் என்ற குழப்பத்தோடு, ‘மணிமேகலையா..?’’ என்றான்.

‘`ஆமாப்பா, உன் பொண்டாட்டி. உனக்கு சர்ப்ரைஸ் குடுக்கணும்னு நினைச்சுதோ என்னவோ… சென்னைக்கு வந்துருச்சு. நீ அட்ரஸும் ஒழுங்காக் கொடுக்கலை போல… நம்ம தெரு முனையிலே நின்னு தொளாவிட்டு இருந்துச்சு. நான் பார்த்ததுமே கண்டுபுடிச்சுட்டேன். நீ விஸ்வா சம்சாரம்தானேம்மா… நம்ம வீட்லதான் தம்பி இருக்குதுன்னு கூட்டிட்டு வந்தேன். யோசனையோடதான் வந்துச்சு. உன் வூட்டுல ராத்திரி தூங்கிட்டு காலையிலே கெளம்பிப் போயிருச்சு. உன் பொண்டாட்டின்னு எப்டி கண்டுபுடிச்சேன்னு கேட்கிறியா..? ஆரும்மா நீனு கேட்டப்ப, மணிமேகலை, இலஞ்சி டவுன் பஞ்சாயத்துல வேலை பார்க்கிறேன்னு சொல்லுச்சு. அட… நம்ம பய வூட்டுக்காரிதானே பஞ்சாயத்துல வேலையிலே இருக்கான்னு கண்டுபுடிச்சுட்டேன். அது சரி, அவ்ளோ தொலைவுல இருந்து, அது இம்புட்டு ஆசையா வந்திருக்கு… நீ மணிமேகலையான்னு கேட்குறே..?’’

‘`அது… வந்து… நான் மேகான்னுதான் கூப்டுவேன். அதான் குழம்பிட்டேன்…’’

கிடுகிடுவென்று படியேறி வீட்டுக்கு வந்தான். கதவைத் திறந்து சுற்றுமுற்றும் பார்த்தான், சுவரில் போஸ்டராக இருந்த ஜேம்ஸ் கேமரூனுக்கு அழகாக (?) மீசை வரையப்பட்டிருந்தது. மற்றபடி எல்லாமே வைத்தது வைத்த இடத்தில் அப்படியே இருந்தது… கூடுதலாக அவள் வாசமும்!

- முருகேஷ் பாபு

(15.09.2022 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)