Published:Updated:

அவளுக்கொரு வானம் - 1 - புதிய பகுதி

அவளுக்கொரு வானம்
பிரீமியம் ஸ்டோரி
News
அவளுக்கொரு வானம்

- லைவ் தொடர்கதை

விட்டால் போதும். அழுதுவிடும் தோரணையில் கருத்திருந்தது வானம். மின்னல் வெட்டிக்கொண்டிருப்பது கிணற்று நீரில் பளிச்சென்று தெரிந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாய் இடி இடிக்கும் சப்தம் அந்த இரவின் நிசப்தத்தைக் கரைத்துக்கொண்டிருந்தது.

``இதுக்கு மேலயும் உயிரோட இருக்கவே கூடாது. குழந்தையோட சேர்ந்து குதிச்சிட வேண்டியதுதான்’’ - விம்மி அழ முடியாத சூழல். வெடுக்கென வெட்டிவிட்டுப் போகும் மின்னலோடு பலமாகக் காற்று வீசிக்கொண்டிருந்தது. கிணற்றருகே இருந்த சருகுகள் தரையைக் கிளறி விட்டதுபோல் ஒன்றுகூடி பறந்து கொண்டிருந்தன.

பொன்.விமலா
பொன்.விமலா

அந்தத் தரைக்கிணறு மன்னாரப்பா வுக்குச் சொந்தமானது. முன்பு வயக்காடாக இருந்தபோது இருபதுக்கு இருபது என்கிற நீள அகலத்தில் அவர் குடும்பமாகச் சேர்ந்து தோண்டி, நீர்ப்பாய்ச்சி பல போகம் பார்த்த கிணறு. பிற்பாடு அக்கம் பக்கம் கழனிகளில் மழையில்லாது போகவும், மன்னாரப்பா கழனிக்குப் பக்கத்துக்கு கழனிகளை எல்லாம் கூறுகூறாய்த் துண்டுபோட்டு நல்ல ரேட்டுக்கு வீட்டுமனைகளாக விற்று விட்டார்கள். சுற்று முற்றிலும் வீடுகள் வந்த பிறகு, தான் மட்டும் ஒண்டி ஆளாய் என்ன செய்துவிட முடியுமென்று, தன்னுடைய ஒற்றைக் கிணற்றை மட்டும் விட்டுவிட்டு, மற்ற நிலங்களையெல்லாம் பாகம் செய்து விற்றுவிட்டு, மகனோடு டவுனில் செட்டில் ஆகிவிட்டார்.

இவையெல்லாம் நடந்து 20 வருடங்கள் ஆனாலும் அந்தத் தரைக் கிணறு மட்டும் இன்னும் வற்றவே இல்லை. போகம் பார்த்தக் கிணறு என்பதால் மன்னாரப்பா அதற்கு `போகக்கெணறு’ என்று அப்போது பெயர் வைத்திருந்தார். இப்போதுதான் சில வருடங்களாக அதற்குப் `பேய்க் கிணறு’ என்று இன்னொரு பெயர் உருவாகி இருக்கிறது. அன்று வெள்ளாமை விளைந்து வாழ்க்கை செழித்த பூமியில், இப்போது அங்கொன்றும் இங்கொன்றுமாய் விவ சாயக்கடன் சாவுகள். நிலமழியும்போது அதன் இனமும் அவ்வாறே அழியும்தானே?

கறுப்புக் காகிதத்தில் வெள்ளைக் கோடு களைக் கிறுக்கிக் கிறுக்கி அழித்துக் கொண்டிருந்ததுபோல் இருந்தது மின்னல் வானம். இன்னும் சிறிது நேரத்தில் அது மழையாய் உடைந்து அழப்போகிறது.

``ஞே... ஞே… ஞே…’’

குழந்தை பீறிட்டு அழ, முதல் மழைத்துளி ஒன்று அதன் நெற்றியில் விழுந்து பட்டுத் தெறித்தது. காற்றும் குளிருமாக வெடவெடத் ததில் குழந்தை அழவும், வாயைப் பொத்து கிறாள் அம்மா.

இந்தப் பாழாய்ப்போன கிணற்றில் விழுந்து போன வாரம்தான் ஒரு கிழவி செத்துப் போனாள். அதற்கு முன்பாக வரிசையாக ஆறேழு பேர் சேர்ந்து குடும்பமாகச் செத்த கதைகூட ஊருக்குள் உலாவிக் கொண்டிருக் கிறது. இந்தப் பேய்க் கிணற்றுக்கு முன்பாக இப்படி நடுராத்திரியில் நின்று கொண்டு, பொத்தென்று விழுந்து சாகவும் முடியாமல், கிணற்றில் படரும் மின்னல் வெட்டுகளைப் பார்த்துக்கொண்டே இருக்கிறாள் அம்மா.

`குழந்தையோட குதிச்சிடலாமா? இல்ல… இவள இங்கயே ஒரு ஓரமா வச்சிட்டு நாம மட்டும் குதிச்சிடலாமா?’ - மின்னல் இப்போது அவள் மனதில் வெட்டிக் கொண்டிருந்தது.

வாயைப் பொத்திய கையை விலக்கவும், மறுபடியும் அழுகிறது குழந்தை.

`ஞே…ஞே… ஞே...’

யாரோ தூரத்தில் இருந்த ஒருவர் அருகில் வருகிற சத்தம் கேட்கிறது. அவர் கையில் வைத்திருந்த டார்ச் லைட்டின் ஒளியும் அவள் பக்கத்தில் நெருங்கிக்கொண்டிருந்தது. `இதற்கு மேல் வேண்டாம் தாமதம்’ என குழந்தையோடு தரைக்கிணறு நோக்கி முன்னேறுகிறாள். குழந்தையின் அழுகைச் சத்தம் அதிகமாகி யிருந்தது. குதிக்க எத்தனித்த தருணம், அந்த டார்ச்லைட் உருவம் அவள் கையைப் பிடித்து இழுக்கிறது.

``யார்மா நீ… கொழந்தயோட கெணத்தாண்ட இன்னா வேல? சொல்லுமா இன்னா? எதும் பிரச்னையா?’’ - நைட் டியூட்டிக்கு ரோந்து பணிக்காக வந்த போலீஸ்காரர் என்பதால் அவருடைய அதட்டலும் பயங்கரமாகவே இருந்தது.

``அதுவந்து சார்… அதுவந்து’’ - ஏதாவது பொய் சொல்ல வேண்டும். அதுவும் அவசரத் துக்கு நம்புகிற ஒரு பொய் வேண்டும்.

``அது வந்து சார்…'’

``இன்னாமா, பச்சக் கொழந்தையோட இங்க இன்னா பண்ற? வீடு எங்கருக்கு?’’

``சார்… சாயிங்காலம் கொழந்தைக்கு சளினு குப்பமேனி புடுங்கலாம்னு இங்க வந்தேன். அப்புறம் இப்ப நைட்டு தூங்கறப்போ பார்த்தா, கொழந்தயோட கழுத்துல இருந்த செயினை காணோம் சார். எங்க மாமியாருக்கு தெரிஞ்சா கொன்னே போட்ரும். அதான் எல்லாரும் தூங்கனப்புறம் தேட வந்தேன் சார்’’ - சொல்லும்போதே குரல் ஒடிந்து அழுதாள்.

அவளுக்கொரு வானம் - 1 - புதிய பகுதி

``அய்யய்யோ… மழையும் கிழையுமா கீது. பச்ச கொழந்தயோட எதுக்கும்மா இந்த வேல? நீ வூட்டுக்குப் போம்மா. நான் தேடி கொண்டாந்து தர்றேன். பாம்பு கீம்பு கடிக்கப் போவுது. கொழந்தய தூக்கினு நடுராத்திரில இன்னாதிது? போம்மா … கெளம்பு கெளம்பு…’’

``சார்….’’

``வீடு எங்க இருக்கு?’’

``மாரியம்மன் தெருவுல.’’

``செரி, செயின் கிடைச்சா கொண்டாந்து தர்றேன். இல்லைனாலும் வந்து சொல்லிட்டுப் போறேன்.’’

``வேணா சார்… வீட்ல தெரிஞ்சா திட்டு வாங்க. நானே காத்தால வந்து தேடிக்கிறேன்.’’

``சரி… பத்ரமா வீட்டுக்கு போம்மா. நான் தொணைக்கு வந்து விட்டுட்டு போவவா?’’

`` வேணா சார்… போலீஸ் கூட வந்தேன்னு யாராச்சும் பாத்தாக்கா கொன்னுடுவாங்க சார்.’’

`` அட இன்னாமா நீ… அவ்ளோ பய்மா கீர பொண்ணு எதுக்கு இந்த ராத்திரி வாசப்பிடி தாண்டணுங்கிறேன்? செரி… உம் பேரு இன்னாமா?’’

``செ... செ... செம்பு சார்.’’

``இன்னாது செம்பா?’’

``செண்பகவள்ளி சார்.’’

பற்றவைத்த சிகரெட்டை ஒரு இழு இழுத்துவிட்டு புகையை வெளியே தள்ளினார் போலீஸ்காரர். செண்பகவள்ளி குறுக்குத் தெருவொன்றின் வழியாக நடந்து போவதை தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டே உறுதி செய்துகொண்டார்.

ஐந்தரை அடி உயரம். நல்ல சிவப்பு நிறம். ஒல்லி யான தேகம். கையிலிருக்கும் குழந்தைக்கு இரண்டு மாதங்கள் இருக்கலாம். பால்குடிக்கும் குழந்தையைத் தூக்கிக் கொண்டு இந்த ராத்திரியில் நைட்டியோடு நடந்துபோகும் பெண்ணைப் பார்த்தால் துணிச்சல் காரி என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. அவளைப் பார்த்தால் சந்தேகப்படுகிற மாதிரியும் இல்லை. அவள் சொல்வது உண்மையா, பொய்யா... தெரியாது. இப்போதைக்கு அவளை மேற்கொண்டு கிளற விருப்பமில்லாமல் சிகரெட்டை அணைத்துவிட்டு, அவள் தெருமுனை திரும்பியதைப் பார்த்ததும் கடந்து போகிறார் போலீஸ்காரர்.

அக்குள் பக்கத்தில் கிழிந்த நைட்டியை மறைக்க அடிக்கடி அந்தப் பகுதியில் இருந்த நைட்டித்துணியை இழுத்துச் சுருட்டி அக்குள் இடுக்கில் அழுத்திக் கொண்டே நடக்கலானாள் செம்பு.

சாவென்பது தள்ளிவைக்கப்பட்ட பிறகு, இந்த இரவைக் கடந்து வாழ வேண்டுமென்கிற துர்பாக்கியம் நேர்ந்துவிட்டதாய் அழுகிறாள். கைக்குழந்தையுடன் இந்த ராத்திரியில் இப்படி தெருத்தெருவாக அலைய நேர்ந்த துயரத்தை என்னவென்று சொல்லி அழுவது?

வானம் இறங்கிக்கொண்டே இருந்தது. காற்று பலமாக இருந்ததால் லேசான தூரல்.

``ஞே… ஞே… ஞே...’’

குழந்தை பசிக்கு அழ ஆரம்பித்து விட்டது. நடு இரவில், பொது இடத்தில் நைட்டியை விலக்கி பால் கொடுக்கத் தயங்கினாள். கொஞ்சமும் புத்தி யில்லாமல் சாகப் போனவளை, வாழச் சொல்லி இழுக்கிறது அந்த பிஞ்சின் குரல்.

வீட்டுக்குத் திரும்பிப் போகவே முடியாது. யார் வீட்டுக் கதவைத் தட்டுவதென்றும் தெரியவில்லை. தூரத்தில் காத்திருக்கும் வானம் பொழிய ஆரம்பித்துவிட்டால் தொப்பலாக நனைய வேண்டியதுதான். அதற்குள் கைக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு எங்காவது போக வேண்டும். எங்கு போவது?

அதுவும் இந்த ரோந்து போலீஸ்காரர் கண்ணில் சிக்காமல் போக வேண்டுமே! குறுக்குத் தெருவை கடந்து வேகமாக நடக்கிறாள் செம்பு.

நேர்வழியில் போனால் யாராவது பார்த்துக் கேட்கக் கூடும். குழந்தையும் பசி தாங்குகிற மாதிரி தெரியவில்லை. டிச்சுக் கால்வாய்க்குப் பக்கத்தில் காய்லான் கடை ஒன்று பூட்டிக் கிடந்தது. இப்போதைக்கு அங்கு ஒதுங்கிக் கொள்ளலாமென சுவரோரமாய் அமர்ந்து கொண்டு, நைட்டியின் ஜிப்பைக் கழட்டி மார்போடு குழந்தையைக் அணைத்துக் கொண்டாள். மண்ணில் விழும் மழைத்துளி களைப் பசியில் காத்திருக்கும் நிலம் உறிஞ்சிக் கொள்வதைப் போலவே தன் சிறிய உதடுகள் குவித்து காம்பைக் கவ்விக்கொண்டு பால் உறிஞ்சியது குழந்தை.

`ச்சக்... ச்சக்... ச்சக்...' என்று பாலுறுஞ்சும் சப்தம். பக்கத்தில் யாரோ இருமுவது போலவும் கேட்கிறது.

கடைக்குப் பக்கத்து முற்றத்தில் யாரோ ஒருவர் நல்ல போதையில் படுத்திருக்கிறார் என்பதற்கு ஆதாரமாகத் தன் பெண்டாட்டியை வசவு பாடிக்கொண்டிருக்கிறார்.

இதற்கு மேல் இங்கிருப்பது ஆபத்து. மழைக்கு முன் தஞ்சம்கொள்ள ஓர் இடம் தேட வேண்டும். தெருவழியாகப் போகாமல் வீடுகளின் குறுக்கு சந்துகளில் புகுந்து போய்விட்டால், இங்கிருந்து ஒன்பதாவது தெருவில் இருக்கும் தன் கல்லூரித் தோழி சுகந்தி வீட்டுக்குப் போய்விடலாம்.

காம்பிலிருந்து குழந்தையைச் சட்டென இழுத்துவிட்டு தோளில் போட்டுக் கொண்டாள். வைத்த வாய் நினைப்பிலேயே அது தன் வாயைச் சப்புக்கொட்டிக் கொண்டே காம்பைத் தேடியது. பசியாறவில்லை என்றாலும் இப்போது அதன் அழுகை நின்றதேபோதும் என்றிருந்தது அவளுக்கு.

`இந்த நடுராத்திரியில் கிழிந்த நைட்டியோடு பிஞ்சுக் குழந்தையைத் தோளில் தூக்கிப் போட்டுக்கொண்டு தெருத்தெருவாய் நடக்கிற துயரம் இனி எந்தப் பெண்ணுக்கும் வந்து விடவே கூடாது...’ மனதில் ரணங்கள் அழுந்த நடக்கிறாள் செம்பு.

ஊரடங்கிய நேரத்தில் சிலர் வீடுகளில் மெல்லிய இசையும், சிலர் வீடுகளில் பேச்சுக் குரல்களும் சன்னமாக ஒலித்தன. குறுக்குத் தெருவொன்றைத் தாண்டியபோது யாரோ ஒருவர் சிறுநீர் கழித்துக் கொண்டிருக்கிறார்.

முகத்தை திருப்பிக்கொண்டாள் செம்பு. கொஞ்சம் நேரத்தில் சிறுநீர் கழிக்க வந்தவர் நடந்து மறையவும், செம்பு குறுக்குத் தெரு வழியாக வேகமாக நடக்க ஆரம்பித்தாள். பிள்ளையார் கோயில் தெருவில் நான்காவதாய் இருக்கிறது சுகந்தியின் வீடு.

தோளில் இருந்த குழந்தை தூங்கி விட்டிருந்தது. நேராகப் போய் காலிங் பெல்லை அழுத்துகிறாள். கதவு திறந்தபாடில்லை. இரண்டுக்கு மூன்று முறை அழுத்திய பின்பு உள்ளிருந்து ஒரு குரல் கேட்கிறது.

``யாரு… இந்த நேரத்துல?’’

வாசல் கதவைத் திறந்து தெரு விளக்கைப் போட்டுவிட்டு, மூக்குக் கண்ணாடியைத் துடைத்துப் போட்டுக்கொண்டே மெயின் கேட் அருகே வருகிறார் சுகந்தியின் அப்பா.

``செம்பு… என்ன செம்பு? இந்த நேரத்துல?’’- கேட்டில் இருந்த பூட்டைத் திறந்துவிடவும் செம்பு குழந்தையுடன் உள்ளே வருகிறாள். கேட்டுக்கு வெளியே மிஸ்டர். குணசேகரன் B.H.M.S, M.Phil ஹோமியோபதி கிளினிக் என்று எழுதி இருந்த பலகை இருந்தது.

மின்னல் வெளிச்சத்தில் இரண்டொரு விநாடிகள் அந்தப் பலகை முழுமையாகத் தெரிந்து பின்பு இருளில் மறைந்துகொண்டது.

இந்த நேரத்தில் காலிங் பெல்லை அழுத்திய பேஷன்ட் யாரென்று பார்க்க, ஜன்னலைத் திறந்தார் குணசேகரன்.

ஒரு பெண், கையில் குழந்தையுடன் உள்ளே வருவது போல் தெரிந்தது சுகந்திக்கு. அவளின் அப்பா குணசேகரன் 30 வருடங்களாக ஹோமியோபதி டாக்டராக இருக்கிறார். ஆரம்பத்தில் சிறிய அறை ஒன்றில் வைத்தியம் பார்த்து, பின்பு அதே இடத்தில் கிளினிக்குக்கு கொஞ்சம் இடம் ஒதுக்கிவிட்டு, பக்கத்திலேயே வீடு கட்டிக்கொண்டார்.

சுகந்திக்கு இரண்டு அக்காக்கள், ஒரு தங்கை. டாக்டருக்கு குடும்பக் கட்டுப்பாட்டில் விருப்பமில்லை. சுகந்தியின் அம்மா கட்டுப் பெட்டியான பயந்த சுபாவப் பெண்மணி. தானுண்டு தன் குடும்பமுண்டு என்றிருப்பார். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் அடிக்கடி சுகந்தியின் வீட்டுக்கு வந்து குரூப் ஸ்டடீஸ் படிக்கிற பழக்கம் செம்பு வுக்கு இருந்தது. போகப் போக அந்தக் குடும்பத்தில் ஒருத்தியாகவே ஆகிவிட்டாள். செம்புவின் பேச்சும் அறிவும் குணசேகரனுக்குப் பிடித்துப் போயிருந்தது. `சுகந்தி… செம்புவ பாரு. பாரதியார் கவிதைகள் எல்லாம் சொல்றா. நீயும்தான் இருக்கியே’ என்பார்.

``அச்சமில்லை அச்சமில்லை…

அச்சமென்பது இல்லையே

உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்

அச்சமில்லை அச்சமில்லை…

அச்சமென்பது இல்லையே’’

- அந்த நாள்களில் குணசேகரிடம் உரக்கச் சொல்லிக்காட்டிய பாரதியார் பாடலை மனதுக்குள் ஒருமுறை சொல்லிப் பார்த்துக் கொண்டாள் செம்பு.

`யார் சொன்னது, அச்சம் இல்லை என்று? மேலே வானம் இடிந்து கொண்டிருக்கிறது. உச்சி மீது இடிந்து விழப்போகிறது வானம். அச்சம்தான், அவ்வளவு அச்சம். இந்த ராத்திரியைக் கழிக்க முடியாத அச்சத்தில் தானே இந்த வீட்டு வாசலைத் தட்டிக் கொண்டிருக்கிறேன்’ என்று நினைத்தபோது, ஓவென்று அழ வேண்டும் போல் இருக்கிறது செம்புவுக்கு.

அவளுக்கொரு வானம் - 1 - புதிய பகுதி

சுகந்தி ஒரு வருடம் கழித்து செம்புவைப் பார்க்கவும் ஓடிவந்து கட்டிக்கொண்டாள். ``எப்டி இருக்கப்பா… எவ்ளோ நாள் ஆச்சு பார்த்து. ஐ… பாப்பா யாரோடது. உன் பாப்பாவா?’’ - விடாமல் கேட்டுக்கொண்டே குழந்தையை வாங்கிக்கொண்டாள்.

செம்புவும் சுகந்தியும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள். ஒரே வயது. ஆனால், செம்பு வுக்கு இப்போது கையில் இரண்டு மாதக் குழந்தை. சுகந்தி எம்.ஏ படித்துக் கொண்டிருப்ப தாகச் சொல்லவும் தோழியைப் பூரித்து அணைத்துக்கொள்வதா, தனக்கு இன்று நேர்ந்த துயரைச் சொல்லி அவளிடம் அழுது தோள் சாய்வதா தெரியவில்லை. பேச்சு வராமல் தவித்தாள் செம்பு. சுகந்தியோடு சேர்ந்து அவள் அக்காள்களும், தங்கையும், அம்மாவும் அப்பாவும் என அனைவரும் சேர்ந்துகொண்டார்கள்.

செம்புவைப் பார்த்து ஒரு வருடத்துக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் எல்லோருடைய மனதிலும் அவளைப் பார்த்த சந்தோஷம் ஒரு பக்கம் இருந்தாலும், இந்த நேரத்தில் அவள் கதவைத் தட்டிக்கொண்டு வந்திருப்பதுதான் அவர்களுக்குப் புரியாத புதிராக இருந்தது.

சுகந்தியின் அம்மாவே பேச்சை ஆரம்பித் தாள்... ``கொழந்தைக்கு எதுவும் உடம்பு முடியலையாம்மா? மணி ஒன்னாவப் போகுது’’ என்றாள்.

இவ்வளவு நேரம் அடக்கிவைத்தது வெடித்துக்கிளம்ப, ஓவென்று அழத் தொடங்கினாள் செம்பு.

- தொடரும்...