
- லைவ் தொடர்கதை
கைக்குழந்தையோடு கிழிந்த நைட்டியில் இந்த நடுராத்திரியில் வீடு தேடி வந்திருப்ப வளைப் பார்த்துப் பதறுகிறாள் சுகந்தியின் அம்மா.
``கொழந்தைக்கு எதுவும் உடம்பு முடியலை யாம்மா... மணி ஒண்ணு ஆவப் போகுது...’’
இவ்வளவு நேரத்துக்குப் பிறகு ஓவென்று அழத் தொடங்கினாள் செம்பு.
என்னதான் ஒரே குடும்பமாகப் பழகியிருந் தாலும் செம்புவின் கல்யாணத்துக்கு சுகந்தி யின் வீட்டிலிருந்து யாரும் வரவில்லை. ஏன் சுகந்தியும் கூடத்தான். கல்யாணம் முடிவாகி பத்திரிகை கொடுக்க வந்தபோது கூட வேண்டா வெறுப்பாகத்தான் பத்திரி கையை வாங்கிக்கொண்டார்கள்.
`ஏதோ அவசரப்பட்டுட்டேனு நினைக்கிறேன். தப்பான ஒருத்தரை செலக்ட் பண்ணிட்டியேம்மா' என்று சுகந்தியின் அப்பா சொன் னது இப்போதும் அந்த ஹாலில் ஒலிப்பதுபோல் இருந்தது. செம்பு அழுவதைப் பார்த்ததும் குழந்தையை வாங்கிக்கொண்டாள் சுகந்தியின் அக்காள். தோழியின் தோள்களை உலுக்கி என்னவென்று பதற்றத் தோடு சுகந்தி கேட்க, கிழிந்த நைட் டியை ஒருபக்கமாக இழுத்துப் பிடித்து மறைத்துக்கொண்டாள். ஹாலில் இருந்த சோபாவின் அருகே அழைத்துச்சென்று அவளை அமர வைத்தார்கள். சுகந்தி செம்புவுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து மெதுவாக அவள் கையைப் பிடித்து இழுத்துப் பார்க்கவும், நைட்டி பெரிய அளவில் கிழிந்திருந்தது தெரிந்தது.
``ஏய் செம்பு… என்னடி ஆச்சு… சொல் லுடி’’ என பதற்றமானாள் சுகந்தி. வார்த் தைகள் வராமல் தேம்பினாள் செம்பு. சுகந்தியின் வீட்டில் பெண்கள் எல்லோ ருக்குமே பெருத்த தேகம் என்பதால் செம்புவுக்குப் பொருத்தமான மாற்று உடை அவர்கள் அலமாரியில் இல்லை. அவசரத்துக்கு மறைக்கிற விதமாய் சுகந்தியின் தங்கை ஓடிப் போய் ஒரு துப்பட்டாவை எடுத்துவந்து கொடுத்தாள். குழந்தையை, பக்கத்தில் ஒரு பாயை விரித்துப் படுக்கப் போட்டார்கள். ஜன்னல் காற்றுக்கு காலண்டர் அசைந்து கொண்டிருந்தது. 2002 என்கிற வருடம் கொட்டை எழுத்தில் அசைந்தாடியது.
செம்பு என்ன சொல்லப் போகிறாள் என்பதில்தான் எல்லோருடைய கவனமும் இருந்தது.
``இன்னிக்கு ஒரு ராத்திரி மட்டும் உங்க வீட்ல தங்கிக்கட்டுமா ஆன்ட்டி?’’

``ஏம்மா என்ன ஆச்சு… எதுவும் பிரச் னையா?’’
``ஆமா ஆன்ட்டி… என்னை வீட்டைவிட்டு வெளிய துரத்திட்டார்...’’
``அய்யய்யோ… கம்மனாட்டி கம்மனாட்டி. பச்சப் புள்ளக்காரியைப் போய் இந்த நடு ராத்திரியில துரத்தியிருக்கானே’’ - சுகந்தியின் அம்மா பதறவும், அவள் அக்காள்களும் தங்கையும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள, சுகந்தியின் அப்பா ஓடிப்போய், நிலைக்கதவு சரியாகத் தாழிட்டிருக்கிறதா என்பதை ஒருமுறை சரிபார்த்துக் கொண்டார்.
``கை காலெல்லாம் நடுங்குதேம்மா உனக்கு... உங்க அம்மா வீட்டுக்கு விஷயம் தெரியுமா?’’
``தெரியாது ஆன்ட்டி...’’
``மொதல்ல போனைப் போட்டு அவங்களுக்கு என்ன ஆச்சுனு சொல்லு. இந்த நேரத்துல யாருக்கும் தெரியாம இன்னொருத்தர் வீட்ல தங்குறது தப்புமா...’’
லேண்ட் லைன் போனை வொயருடன் இழுத்துவந்து நீட்டினார் சுகந்தியின் அப்பா.
``எங்க வீட்ல போன் இல்ல அங்கிள். எதிர் வீட்டுல இருக்குறவங்களுக்குத்தான் போன் போட்டு சொல்லணும். இந்த நேரத்துல தூங்கி இருப்பாங்களா தெரியல...’’
``பரவால்லம்மா… ஒரு தரம் போட்டுப்பாரு...’’
போனை வாங்கி மனதில் மனனமாய்ப் பதிந்திருந்த எதிர்வீட்டு நம்பரை டயல் செய் தாள். ரிங் ஆகிக் கொண்டிருந்த போனை யாரும் எடுக்காமல் போக, கட் ஆகிவிட்டது.
``யாரும் எடுக்கல ஆன்ட்டி’’
``தப்பா எடுத்துக்காதம்மா. எங்களுக்கும் நாலு பொம்பளப் புள்ளைங்க’’ - எப்படிச் சொல்வதென்று தெரியாமல் இழுத்தாள் சுகந்தியின் அம்மா. எல்லோருடைய முகத்திலும் ஒரு பதற்றம் இருந்தது அப்பட்டமாகத் தெரிந்தது. 21 வயதில் கைக்குழந்தையோடு வந்திருக்கும் தன் தோழியை, இங்கிருந்து கிளம்பச் சொல்லி எப்படி சொல்வது? அவள் கைகள் இரண்டையும் பிடித்துக் கொண்டு அவளோடு சேர்ந்து சுகந்தியும் அழத் துவங்குகிறாள்.
``இந்த ராத்திரியில எங்க போற துன்னு தெரியலப்பா. அங்கிளை, என்னை எங்க ஊருக்குக் கொண்டு போய் விட்டுட சொல்ல முடியுமா? ப்ளீஸ்ப்பா’’ - செம்பு சொல்வதைக் கேட்டு, `சரி கிளம்பு போகலாம்’ என்று அந்தக் குடும்பத்தால் உட னடியாக தலையாட்டிவிட முடிய வில்லை. கடந்தகாலத்தில் நடந்த சம்பவங்கள் அப்படியானவை.
செம்புவும் சுகந்தியும் ஒரே கல் லூரியில் படித்த உயிர்த்தோழிகள். செம்பு பாகல்பூண்டி கிராமத்தி லிருந்து சின்னவருதூர் நகரத் திலிருக்கும் கல்லூரிக்கு வந்து படித்துக்கொண்டிருந்த காலத்தில், தன் வீட்டில் இருந்து விஜயமல்லூரில் இருக்கும் சுகந்தியின் வீடு வரையிலான முதல் ஏழு கிலோமீட்டர் வரை சைக்கிளில் வரு வாள். பின்பு தன் சைக்கிளை சுகந்தியின் வீட்டுக்குள் நிறுத்திவிட்டு, அங்கிருந்து சுகந்தியுடன், அடுத்த ஒன்பது கிலோமீட்டர் தொலைவில் சின்னவருதூர் நகரத்திலிருக்கும் கல்லூரிக்கு இருவருமாகப் பேருந்தில் பயணிப்பார்கள். கல்லூரி இருக்கும் ஊருக்கும் செம்புவின் கிராமத்துக்கும் இடையில் இருக்கும் ஊர்தான் சுகந்தியின் ஊரான விஜயமல்லூர். விதி... செம்பு வாக்கப்பட்ட ஊரும் விஜயமல்லூராகிவிட்டது.
இப்போது செம்பு இந்த அர்த்தராத்திரியில் சுகந்தி வீட்டுக் கதவைத் தட்டி உதவி கேட்பது, இந்த ஊரில் வேறு யாரையும் தெரியாது என்பதால் மட்டுமல்ல. தனக்கு தைரியமாக வேறு யார் உதவிட முடியும் என்ற நம்பிக்கை யின்மையும்தான், செம்புவை இப்போது சுகந்தியின் வீட்டுக்குத் தன்னிச்சையாக நடக்க வைத்திருக்கிறது. ஆனால், ஒரே ஊர்க்காரர்கள் என்கிற வகையில் செம்பு வாக்கப்பட்ட குடும்பத்தார் குறித்து அக்குவேராக ஆணிவேராக தெரிந்து வைத்திருந்தார்கள் சுகந்தியின் குடும்பத்தினர்.
திடீரென்று ஒருநாள் செம்பு சுகந்தியின் வீட்டுக்கு வந்து அவள் நிச்சயதார்த்தம் குறித்துச் சொன்ன போது , `அறிவிருக்கா இல்லையா?’ என்று சுகந்தி செம்புவை திட்டிய தும், `உங்க வீட்ல எப்படி இந்தக் கல்யாணத்துக்கு ஒப்புக்கிட்டாங்க?’ என்றெல்லாம் ஏகத்துக்கும் கேள்வி கேட்டதும், ’இந்த கல்யாணத்தை எப்படியாவது நிறுத்திடும்மா’ என்று சுகந்தியின் அப்பாவும் அம்மாவும் கலங்கியபடி சொன்ன தும் இப்போது நினைவில் எழும்பு கிறது செம்புவுக்கு.
``உன் அழகுக்கும் அறிவுக்கும் திறமைக்கும் நாட்ல மாப்பிள்ளையா இல்ல? படிக்கிற வயசுல இப்ப எதுக்கு கல்யாணம்? ஒரு ரவுடியை, பொம்பளைப் பொறுக்கியை கல்யாணம் பண்ணிக்கிட்டு என் னத்த சாதிக்கப் போற? எக்கேடோ கெட்டுப்போ. நாங்க யாரும் கல்யாணத்துக்கு வர மாட்டோம்’’ என்று சொல்லி சுகந்தி செம்புவை திட்ட, சொன்னபடியே அவள் கல்யாணத்தைப் புறக்கணிக்க, அதையெல்லாம் பல முறை நினைத்து நினைத்து அழுதிருக்கிறாள் செம்பு. இப்போது சுகந்தி தன் கைகளைப் பிடித்துக் கொண்டு அழும்போது, தானும் சேர்ந்து அழும் விதியைத்தான் வைத்திருந்தது செம்புவுக்கு வாழ்க்கை.
செம்பு வாக்கப்பட்ட இடம் சரியில்லை, மாப் பிள்ளை சரியில்லை என்று மருகினாலும், எப்படி யாவது அவள் நன்றாக வாழ்ந்தால் போதும் என்று ஒதுங்கிக்கொண்டார்கள் சுகந்தியின் வீட்டினர். ஆனால், இந்த நேரத்தில் செம்புவுக்கு உதவுவது அவள் புகுந்த வீட்டாருக்குத் தெரிந்துவிட்டால் தன் மொத்தக் குடும்பத்தையுமே அடித்து நொறுக்கி விடுவார்கள் என்று பயப்படுகிறாள் சுகந்தியின் அம்மா. செம்புவின் கணவனைப் பற்றி நினைத்துப் பார்த்தால் கூட, திரைப் படங்களில் வரும் சண்டைக் காட்சி களும், வில்லன் பெண்ணைத் துரத்தி துரத்தி வன்கொடுமை செய்யும் காட்சி களும்தான் கண்முன் வரும் ஊர் சனத் துக்கு. அந்த அளவுக்கு ஊருக்குள் மோச மான ரவுடி எனப் பெயர் எடுத்தவன்.
இந்த ராத்திரியில் செம்புவுக்கு ஏதோ ஒரு பிரச்னை ஏற்பட்டிருக்கலாம். அது நிச்சயம் ஒரு கொடுமையான சம்பவ மாகத்தானிருக்கும் என்பதே எல்லோ ருடைய அபிப்பிராயம். தொடர்ந்து பேசிக் கிளறிக் கொண்டிருப்பதற்கான அவகாசமெல்லாம் இப்போதில்லை. கத்தியைத் தூக்கிக் கொண்டு வந்து விட்டால் இங்குள்ள எல்லோருமே ரத்தம் தெறிக்கச் செத்துப் போக வேண் டியதுதான் என்ற அவர்களது அச்சத்தை, நடுங்கிய அவர்கள் விரல்கள் கூறின. செம்புவுக்கும் அது புரியாமலில்லை.
‘`அங்கிள் எனக்கு ரொம்ப பய மாருக்கு… ப்ளீஸ் அங்கிள்... இன்னிக்கு நைட் மட்டும் இங்க இருந்துட்டு போயிடட்டுமா..?’'
``செம்பு… புரியாமத்தான் பேசறயா? இப்ப நீ வீட்ல இல்லனு தெரிஞ்சா, அடுத்து இங்கதான் தேடிட்டு வருவான்’’ - சுகந்தியின் அம்மாவுக்கு பயம் கழுத்தை நெரித்துக் கொண்டிருந்தது. சுகந்திக்கு தன் தோழியின் நிலை கண்ணீரைக் கொட்டவைத்தது.
’`ப்பா, இங்கெல்லாம் தேடிட்டு வர மாட்டாங்கப்பா… நைட் மட்டும் இருந்துட்டுப் போவட்டுமே...’’
’’ஏன்டி… லூசா நீ? சும்மாரு’’ - சுகந்தி யின் அம்மா பதறிக்கொண்டே இருந் தாள். இதற்கு மேலும் அங்கிருந்து தன் தோழியின் குடும்பத்தை பதைபதைப்புக்கு ஆளாக்க விரும்பவில்லை செம்பு.

``மெயின் ரோடு வரைக்குமாச்சும் கொண்டுபோய் விட்டுட்டு வர முடியுமா அங்கிள்?’’ - கேட்கும்போதே அவளுக்குக் கண்கள் இருள்கின்றன. பதில் இல்லை. ``சரி கிளம்புறேன்பா…’’ என்று சுகந்தி யிடம் சொன்னபோது துக்கம் தொண்டையை அடைக்கிறது. குழந்தையைத் தோளில் போட்டுக் கொண்டு அந்த வீட்டின் வாசல்வரை வந்தாகிவிட்டது.
‘`இரும்மா..’’ - சுகந்தியின் அப்பா நிறுத்தி னார். சில நேரங்களில் கருணைக்கு முன் பயம் தோற்றுப்போகிறதுதான். தன் டிவிஎஸ் எக்ஸ்எல் வண்டியை வெளியே தள்ளப் போனார். சுகந்தியின் அம்மா தடுக்கப் போகிறாள் என, எல்லோரும் அவளை பார்த் தார்கள். ``மெயின்ரோடு பஸ் ஸ்டாண்டுக்கு முன்னாடியே விட்டுட்டு வந்துருங்க. எதுனா ஆட்டோ கீட்டோ பிடிச்சுப் போயிடும்’’ என்றாள் அவள். குழந்தையை ஒரு கையிலும் வண்டியை ஒரு கையிலும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டாள் செம்பு. வழியனுப்பி யவர்கள் ஒவ்வொருவரின் கண்களும் ஒவ் வொரு திசையைப் பார்த்து, யாராவது பார்க்கிறார்களா என்று நோட்டமிட்டன.
குழந்தைக்கு இன்னும் சரியாக தலை நிற்கவில்லை. கழுத்துக்கும் தலைக்குமிடையே உள்ளங்கையை வைத்து பொத்தினாற்போல் பிடித்துக்கொள்கிறாள் செம்பு. டிவிஎஸ் வாகனம் தன் பாதையில் சற்றுதூரம் கடந்தது. பார்க்கும் தூரத்தில் பேருந்து நிறுத்தம். அதற்கு மேல் வண்டியின் ஆக்ஸிலேட்டரை முறுக்கும் தைரியம் இல்லாமல் விரல்கள் நடுங்கிக் கொண்டிருந்தார் சுகந்தியின் அப்பா. ‘`இங்கயே எறங்கிக்கிறியாம்மா?’’ என்றவுடன் இறங்கிக் கொண்டாள். வெட வெடக்கிறது குளிர். ``பத்திரம்மா’’ என்ற ஒற்றைச் சொல்லோடு வண்டியைத் திருப்பிக்கொண்டு வந்த வழியே காணாமல் போகிறார்.
மிச்சமிருக்கும் தைரியத்தை எல்லாம் திரட்டிக்கொண்டு நடக்கிறாள் செம்பு. இந்த இரவில், வராத பேருந்துக்காக நிறுத்தத்தில் காத்துக் கிடந்து என்ன செய்ய? இதோ அதோவென ஜாலம் காட்டிக்கொண்டிருக்கும் இந்த மேகவானம் எப்போது வேண்டு மானாலும் கொட்டலாம். அதற்கு முன் கொஞ்ச தூரம் கடந்துவிட வேண்டும். எந்தச் சாலையைத் தேர்ந்தெடுத்துப் போவதெனத் தெரிய வில்லை.
`நான் நல்லா படிப்பேன். படிச்சு பெரிய ஆள் ஆவேன். அப்பதான் எவ்ளோ கஷ்டம் வந்தாலும் நடுரோட்ல நிக்குற நிலைமை வராது. ஒரு மூணு வருசமாச்சும் காலேஜு படிக்க வைம்மா’ என்று முன்னொரு நாளில் கல்லூரி விண்ணப்பத்துடன் அம்மாவிடம் கெஞ்சிக் கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது. `போராடிப் படித்ததெல்லாம் இப்படி நடு ரோட்டில், நடுராத்திரியில், கைக்குழந்தையோடு வந்து நிற்கத்தானா?’ வெடித்து வெடித்து அழுகிறாள். வாழ்கிற வயதில் ஒருத்தி, வாழ்வைத் துவங்கும் கைப்பிள்ளை. இந்த இருவரையும் விடியல் வரை பொத்திப் பாது காக்க வேண்டுமென, இரவு தனக்கிட்ட விதியை ஏற்கிறாள். பசிக்கு சிணுங்கும் பிள்ளைக்குப் பாலூட்ட ஒதுங்க இடமின்றி, பால்கட்டிய மார்பின் கனத்தையும் சேர்த்து சுமந்துகொண்டு நடக்கிறாள் ஒரு தாய்.
இதோ... தன் பங்குக்கு நீர் அம்பு எய்யத் துவங்கிவிட்டது வானம். குளிருக்கு குழந்தை சிணுங்க ஆரம்பிக்கிறது. தாயின் மார்புச் சூட்டைத் தாண்டிய வெம்மையைத் தேடுகிறது அதன் பஞ்சு தேகம்.
நடுங்கும் கால்களை நடக்கப் பணித்தாள். சாலையோர மரங் களுக்கிடையே புகுந்து புகுந்து நடந்து, அவற்றை மழைக்கு ஒதுக்கக் கிடைத்த ராட்சதக் குடையாக்கிக் கொள்கிறாள். விடாமல் பசிக்கு அழுகிறது குழந்தை.
`நடுசாமத்தில், இந்த சாலை யோரத்தில், மார்பைத் திறந்து பாலூட்டுவதா... குழந்தை அழும் சத்தம் கேட்டு யாரேனும் வந்து தனக்கு ஆபத்தாகி நின்றால்...’ - செய்வதறியாமல் ஒரு மரத்தின் மீது சாய்ந்து நிற்கிறாள்.
நொடிப் பொழுதில் ‘ஐயோ… ஐயோ’வென அலறுகிறாள். அவ ளுடைய நைட்டியின் நுனியை வலுவாகப் பிடித்திழுக்கிறது கரிய உருவம்.
- தொடரும்...