Published:Updated:

அவளுக்கொரு வானம் - 4 - லைவ் தொடர்கதை

அவளுக்கொரு வானம்
பிரீமியம் ஸ்டோரி
News
அவளுக்கொரு வானம்

வழிப்பறி, அல்லது சாலை விபத்து என ஏதாவது ஒன்று நடந்திருக்கலாம். ஒரு வருடத்துக்கும் மேலாக தொடர்பிலிருந்து முற்றிலும் தொலைந்துபோன தோழியின் இரவு அழைப்புக்கு வேறென்ன காரண மிருக்க முடியும்?

அறையில் ஆங்காங்கே ரத்தத் துளிகள். பயன்படுத்திக் கிழிந்த ஆணுறை ஒன்று கட்டிலுக்குப் பக்கத்திலிருக்கிறது. ஹாலின் சோபாவுக்கு இடையில் சிக்கியிருந்த செல் போன் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. நல்ல போதையில் தன் அறையில் தூங்கிக் கொண்டிருந்த சேகர் மெள்ள அசைகிறான்.

பொன்.விமலா
பொன்.விமலா

சில மணி நேரத்துக்கு முன் தன்னோடு படுக்கையில் கிடந்த மனைவியும், பாலுக் கழுத குழந்தையும் இப்போது உடனில்லை என்கிற சொரணையற்று மதுவின் மயக்கத் தில் கட்டிலில் புரண்டு கொண்டிருக்கிறான்.

``ஏய்... ஏய்...’’ - இடைவெளி விட்டு இரண்டொருமுறை சத்தமாக உளறுகிறான். போட்டிருந்த ஜட்டியும் லுங்கியும் மூலைக்கொன்றாய் கிடக்கின்றன. இன்னொரு முறை ஹாலில் ஒலிக்கும் செல் போன் சத்தம் கேட்டு, அனிச்சையாய் உறக்கத்தில் உளறுகிறான்.

இரவு மணி 2.15.

மகளிர் காவல் நிலையச் சுவர் கடிகாரத் தில் மெதுவாக ஊர்ந்து நகர்ந்தது நொடிமுள். அதன் வேகத்தைக் கூட்ட முடியாமல் நீர் வற்றிய கண்களோடு, பெண் காவலர் அனுபமாவிடம் ``ப்ளீஸ்… ப்ளீஸ்’' எனக் கெஞ்சிக்கொண்டிருக்கிறாள் செம்பு.

அவளுக்கொரு வானம் - 4 - லைவ் தொடர்கதை

``ஏம்மா, நான்தான் சொல்லிட்டேன்ல, ராத்திரி இங்க தங்க வச்சா, ஏன் எதுக்குனு ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பானுங்க. அப்படியெல்லாம் சும்மா வந்து தங்கிட்டுப் போவ முடியாது. வோண்ணா வூடு எங் கன்னு சொல்லு. வுட்டுட்டு வரச் சொல் றேன்.’’

அனுபமா சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்கிறாள்.

`என்ன பெரிய பெண்கள் காவல் நிலையம்? பெண்ணொருத்திக்கு காவல் தராது வீதிக்கு துரத்தும் கட்டடம்தான் காவல் நிலையமா?’ - இந்த ராத்திரியில் அம்மா வீட்டு முகவரியைச் சொல்லி அழைத்துப் போகச் சொல்வதுதான் வழியென யோசிக்கிறாள் செம்பு.

``அப்போ பாகல்பூண்டில வுட்டுடுறீங்களா?’’

``என்னது பாகல்பூண்டியா? அவ்ளோ தூரம்லாம் கூட்டினு போக முடியாது. பக்கத்துல எங்கனா சொல்லுமா. இங்கியே ஸ்டேஷன்ல ஆளில்ல. இதுக்கே யார்கிட்டனாதான் கேக்கணும்...’’ தூக்கத் தைக் கலைக்க இந்த நேரத்தில் ஒருத்தி வந்து விட்ட கவலை அனுபமா வுக்கு.

``எனக்கு யார் வீடும் இங்க தெரியாது’’ - ஒரே பதில். ஒவ்வொரு முறையும்.

லேண்ட்லைன் போனை எடுத்து டயல் செய்கிறாள் அனுபமா.

``சார், இந்தப் பொண்ணு இங்க இருந்து போவச் சொன்னா போ மாட்டன்னு அடம்பிடிக்குது சார்.’’

எதிர்முனையில் எஸ்.ஐ சொல்கிறார், ``கம்ப்ளெயின்ட் இல்லாம இங்க வச்சிக்க முடியாதுனு சொல்லுமா.’’

ஏதேதோ மாறி மாறிப் பேசுகிறார்கள். நிற்க முடியாத வலி. அழுதும் அடிவாங்கியும் வீங்கிய கன்னங்கள். பெஞ்சில் படுத்திருந்த குழந்தையை கொசுக்கள் வட்டமிட்டுக் கடித்துக்கொண்டிருந்தன. தன் ஒரு கையால் விசிறிபோல் ஆட்டிக்கொண்டே கொசுவை விரட்டியும், இன்னொரு கையால் வழியும் கண்ணீரைத் துடைத்துக்கொண்டும், திக்கற்ற வளாய் அனுபமாவைப் பார்த்துக்கொண்டிருக்கிறாள் செம்பு.

``ஒரு பொண்ணு இந்த ராத்திரில இங்க தங்கணும்னா அதுக்குக் காரணம் வேணும். திருடினியா, கொலை பண்ணியா, இல்ல வேற எதுனா பண்ணிட்டு கையும் களவுமா உன்ன புடிச்சினு வந்திருந்தாதான் நாங்க உன்ன வச்சுக்க முடியும். இல்லனா எனக்குத்தான் பிரச்னை. உன் புருஷன் உன்ன நடுராத்திரில அடிச்சு தொரத்திட்டான்னு கம்ப்ளெயின்ட் குடு. ஆனா, அது கூட இப்ப எழுத ஆள் கெடையாது. நாளைக்கு வந்து குடு. அவ்ளோ தான் பண்ண முடியும். இப்ப கெளம்பு.’’

நெருப்பில் வாட்டும் சோளப்பொரி கணக் காய்ப் பொரிந்து தள்ளுகிறாள் அனுபமா. குழந்தையை லபக்கென்று தூக்கி செம்புவிடம் கொடுக்கிறாள்... ``கிளம்புமா… நடுராத்திரில வந்து உயிரெடுத்துனு...’’

கையில் தாங்கிய குழந்தையை தோளில் போட்டுக்கொள்கிறாள் செம்பு. பெண் ணொருத்தி வீதிக்கு வந்து விட்டால், அதிலும் நள்ளிர வில் வந்து விட்டால் பாதுகாக்கும் காவல் நிலையங்களில்கூட பாதுகாக்கத் துப்பில்லை என்றுணர்கிறாள். அனுபமா காரி துப்பினாலும் சரி, இங்கிருந்து போவதில்லை யென உறுதியாய் நிற்கிறாள். ஓர் ஆண் பெண்ணுக் கிழைக்கும் குற்றங்களுக் கான தண்டனைகளை சுவரெல்லாம் எழுதி வைத்திருக்கும் காவல் நிலையத்தில், ஒரு பெண்ணுக்கு அரங்கேறும் இந்த அநீதி சட்டத்தின் அடர்த்தியான கருப்புப் புள்ளி.

அவளுக்கொரு வானம் - 4 - லைவ் தொடர்கதை

``இன்னாம்மா புரியலையா… இப்ப போறியா இல்லையா…’’ - செம்புவின் கையைப் பிடித்து வெளியே இழுத்து வருகிறாள். நாராகக் கிழிந்திருந்த அவள் ஆடை குறித்தோ, பாலூட்டுவதால் உள்ளாடை அணியாமல் இருக்க, மழையில் நனைந்த மார்பக வடிவம் ஆடைக்கு வெளியில் தெரி வது குறித்தோ கிஞ்சித்தக் கவலையுமில்லாத இயந்திரப் பெண்ணாகிறாள் அனுபமா.

செம்புவின் வலது முழங்கையில் ஏற்பட்ட சிராய்ப்பு வீக்கமாக மாற ஆரம்பித்திருந்தது. லேசான ரத்தக்கசிவு. வெளியில் தெரிகிற ரணத்தைவிட இன்னும் சொல்ல முடியாத ரணமொன்றை அடிவயிற்றுக்குக் கீழ் சுமந்து கொண்டு காவல்நிலைய வாசலில் நிற்கிறாள்.செம்புவோ, இந்த இரவுச் சமூகமோ, தனக்கும் தன் கைக்குழந்தைக்கும் கருணை காட்டப் போவதில்லை என்பதை தீர்மானமாய் உணர் கிறாள். நீர் வார்த்தக் கண்கள் வறண்டு போயி ருந்தது. நாக்கில் எச்சிலில்லை. உள்ளுக்குள் இருக்கும் சிறு தீயை மூட்ட வேண்டிய நேரத்தில் இருக்கிறாள்.

``மேடம் ஒரு போன் பண்ணிக்கவா?’’

``யாருக்கு?’’

``எங்க போறதுனு தெரில. என் ஃபிரெண் டுக்கு ஒரு போன் பண்ணிக்கவா?’’

``சரி… வந்து பண்ணிக்கோ.’’

உள்ளே வந்து நம்பரை டயல் செய்கிறாள். சிலருடைய எண்களை மனதில் அச்சடித்து வைத்திருக்கிறாள். அதிலொரு சிநேகிதியின் எண். மணியடித்துக் கொண்டே இருக்கிறது. யாரும் எடுத்த பாடில்லை.

மீண்டும் மீண்டும் மூன்றாவது முறையாக. நள்ளிரவு இரண்டரை மணி அளவில் யாராக இருந்தாலும் அசந்து உறங்கிக்கொண்டிருப்பார்கள். இந்த நேரத்தில் போன் செய்வதால் பயனேதுமில்லை என்றுணர்கிறாள். வானம் இன்னும் பலம் கூட்டி இடிக்கத் தொடங்கியிருந்தது. செம்புவும் தன் மன பலத்தைக் கூட்டிக்கொண்டே போகிறாள். கழுத்தைப் பிடித்து தள்ளினாலும் இங்கிருந்து போகக் கூடாதென உறுதியாய் நிற்கிறாள்.

அதே எண்ணுக்குத் திரும்பவும் முயற்சி செய்யாமல் வேறொரு எண்ணை டயல் செய்கிறாள். அதையும் யாரும் எடுக்கவில்லை. அடுத்த அழைப்பு அம்மா வீட்டுக்கு எதிர்வீட்டாருக்கு. இதுவும் எடுக்கப்படவில்லை.மறுபடியும் முதலில் டயல் செய்த அதே எண்ணுக்கு. இன்னும் இரண்டுமுறை.

``ஹலோ’’ என்றது எதிர்முனை.

``ஹலோ அங்கிள்… நான் செண்பகவள்ளி. தாராவோட ஃபிரெண்ட்.’’

``என்னமா இந்த நேரத்துல… என்னாச்சு?’’

`ஓ’வென்று அழுகிறாள் செம்பு. வார்த்தைகளை எடுக்க முடியாமல் நீளும் அழுகை. அந்தப் பக்கம் பதறி, தன் மகளை எழுப்புகிறார். கண்களைக் கசக்கிக் கொண்டே டெலிபோன் ரிசீவரை கையில் வாங்கு கிறாள் தாரா. செம்புவின் அழுகையில் விபரீத மொன்றை அறிகிறாள்.

தாரா செம்புவின் தோழி. சென்னையில் இருக் கிறாள். சென்னைக்கும் விஜயமல்லூருக்கும் தொலை தூரம்.

``செம்பா… என்னாச்சுப்பா… அழாம சொல்லு ப்ளீஸ்...’’

கதறிய குரலை மெதுமெதுவாகக் குறைத்து விம்மல் களுக்கு இடையிடையே முளைக்கும் சின்னஞ்சிறு வார்த்தைகள் கொண்டு பேசத் தொடங்குகிறாள்.

``என்னை… என்னை... என்னையும் பாப்பாவையும்... பாப்பா… பாப்பா...’’ - தேம்பலில் வார்த்தைகள் தேங்கி நிற்கின்றன.

வழிப்பறி, அல்லது சாலை விபத்து என ஏதாவது ஒன்று நடந்திருக்கலாம். ஒரு வருடத்துக்கும் மேலாக தொடர்பிலிருந்து முற்றிலும் தொலைந்துபோன தோழியின் இரவு அழைப்புக்கு வேறென்ன காரண மிருக்க முடியும்? மனதைக் குழப்புகிறாள் தாரா. செம்புவுக்குத் திருமணம் ஆனதை மட்டும் ஒருமுறை அஞ்சலில் வந்த திருமண அழைப்பிதழ் வழியே அறிந்து வைத்திருந்தாள். மற்றபடி அவள் என்ன ஆனாள், ஏன் கடிதங்களுக்கு பதில் அளிப்பதில்லை, எங்கு போனாள், அவளுக்கொரு குழந்தை இருக்கிறதா என்றெல்லாம் தெரியாமலே இருக்கிறாள்.

அவளுக்கொரு வானம் - 4 - லைவ் தொடர்கதை

``என்னையும் பாப்பாவையும் அடிச்சு தொரத் திட்டாரு தாரா…’’ - அழுகை.

``இப்ப எங்க இருக்க செம்பா?’’

``போலீஸ் ஸ்டேஷன்ல...’’

இடிக்கிற வானத்தின் அதிர்வு இங்கிருந்து சென்னை வரை கேட்கிறது. இந்த ராத்திரியில் வெளியே வந்த கதையை ஒன்றுவிடாமல் தாராவிடம் கொட்டுகிறாள் செம்பு. தாராவும் உடனிணைந்து அழுகிறாள். அழுவதே கூடாதென்னும் தோழிகள் இருவர் சேர்ந்து அழுவதால் கரைகிறது அவ்விரவு.

``செம்பா… நீ எவ்ளோ தைரியமான பொண்ணு. உனக்கே இந்த நிலை மைன்னா’’ - அவலச் சூழலில் ஆச்சர்யங்கள் பற்றிப் பேசுவது முரண்.

``பக்கத்துல யாரு இருக்கா? போனை அவங்க கிட்ட குடு...’’ - அனுபமா விடம் கொடுக்கிறாள் செம்பு.

``மேடம்… செண்பகவள்ளிகிட்ட ஒரு கம்ப்ளெயின்ட் வாங்குங்க. அவங்க நைட் ஸ்டே பண்ணட்டும்.’’

``அதெல்லாம் முடியாதுங்க. ரைட்டர் நாளைக்குத்தான் வருவாங்க, நைட்ல கம்ப்ளெயின்ட் வாங்க முடியாது.’’

அனுபமாவின் தெனாவெட்டோடு போராட தாராவுக்கு நேரமில்லை. ``சரி, செம்பாகிட்ட கொடுங்க.’’ கையில் கிடைத்த கேடயம் போல் அந்த ரிசீவரை வாங்கிக் கொள்கிறாள் செம்பு.

``சரி, நான் நம்ம சீனியர்ஸ்கிட்ட இப்பவே பேசறேன். உங்க டிஸ்ட்ரிக்ட் எஸ்.பி கிட்ட பேசறோம். பாப்பாவோட பத்திரமா இருமா. நீ இருக்குற ஸ்டேஷனோட லேண்ட்லைன் நம்பர் சொல்லு. நோட் பண்ணிக்கிறேன்’’ - செம்பு அனுபமாவிடம் கேட்டுச் சொன்னாள்.

`என்ன நடக்குது இங்க?’ என்பதுபோல் கவனிக்கிறாள் அனுபமா. யாருக்கோ தகவல் சொல்லியிருக்கிறாள், வந்து அழைத்துக் கொண்டு போவார்கள் என்று டேபிளில் வந்து உட்கார்ந்துகொள்கிறாள். வாசலுக்குப் பக்கத்தில் திட்டாக இருந்த ஓர் இடத்தில் உட்கார்ந்துகொண்டு குழந்தையை தடவிக் கொண்டிருக்கிறாள் செம்பு. டெலிபோன் ஒலிக்க, ``ஹலோ’’ என்கிறாள் அனுபமா.

``எஸ்.பி ராஜேந்திரன் பேசறேன். அங்க என்ன நடக்குது? அந்தம்மாவ எதுக்கு வெளிய துரத்துனீங்க?’’ - எதிர்முனை குரலுக்கு பயந்து உளறுகிறாள் அனுபமா.

``சார்… சார்… இந்தப் பொண்ணுதான் சொல்ல சொல்ல போகாம அடம் பிடிச்சது… அதான் சார்.’’

``ஏம்மா… பத்திரிகை காரங்ககிட்ட எப்படிப் பேச ணும்னுகூட தெரியாதா?’’

``சார்... அப்டீனு எனக்குத் தெரியாது சார்…’’ - அனுபமா போனில் பேசிக் கொண்டே வாசலில் இருக் கும் செம்புவைப் பார்க் கிறாள். பாலித்தின் பையில் சுருட்டி தூக்கி எறிந்த குப் பையைப்போல் சுருண்டுக் கிடக்கிறாள் செம்பு.

```இன்னும் அரை மணி நேரத்துல நான் அங்க இருப்பேன்… எல்லாம் ரெடி பண்ணி வைங்க...’’ - பயந்துபோனாள் அனுபமா.

``ஏங்க, நீங்க ரிப்போர்ட்டரா? இதெல்லாம் முன்னாடியே சொல்லக் கூடாதா?’’ - வாயால் தந்தி அடித்துக்கொண்டிருந்தாள் அனுபமா. லேசாகக் கண்கள் விரித்து ஆம், என்பது போலவும், பின்பு இல்லை என்பது போலவும் மாறி மாறித் தலையாட்டுகிறாள் செம்பு.

``மேடம்… உள்ள வந்து உட்காருங்க மேடம்.’’ - மெதுவாக எழுந்து நிற்கிறாள் செம்பு.

``நீங்க ரிப்போர்ட்டர்னு முன்னாடியே சொல்லியிருக்கலாமே…’’ - அனுபமாவின் குரல் பவ்யத்துக்குப் போயிருந்தது. அவள் சொல்வதை ஆமோதிக்கவோ, மறுக்கவோ செய்யாமல் உள்ளே வருகிறாள் செம்பு. நீண்ட பெஞ்சின் மீது அமர்ந்துகொண்டு ஜிப்பை திறந்து குழந்தைக்குப் பாலூட்டுகிறாள். எதைப் பற்றியும் பிரக்ஞையற்ற காட்டு விலங்கொன்று நடுக்காட்டில் தான் ஈன்ற குட்டிக்குப் பாலூட்டுவதைப்போல் நிர்வாணம் குறித்த உள்ளுணர்வேதுமின்றி குழந்தைக்குப் பாலூட்டிக் கொண்டிருக்கிறாள்.

ஒரு பேப்பரும் பேனாவும் கொடுத்து நடந்ததை எழுதச் சொல்லிக் கேட்கிறாள் அனுபமா. செம்புவின் முன்னால் நோட் பேடில் இருக்கும் அந்தத் தாளையும் பேனா வையும் பார்த்து அவளையறியாமல் அழு கிறாள். கடிதம் எழுதி எவ்வளவு நாள்களாயிற்று? ஓராண்டாய் மளிகைச் சாமான்கள் எழுது வதைத் தவிர வேறெதற்கும் பயன்படாமல் போன பேனா, இப்போது தன் அவலத்தை எழுத கைதேடி வந்திருந்தப்பதைப் பார்த்து நொந்துகொள்கிறாள். எழுதுகிறாள்.

மணி மூன்றே முக்காலைக் கடந்திருந்தது. பாலூட்டிய மார்பைச் சரிசெய்து பின் குழந்தையை ஓரமாகப் படுக்க வைத்து எழுந்து நிற்கிறாள். அனுபாவிடம் கேட்க செம்புவிடம் சில கேள்விகள் இருந்தன.

``ஏன் மேடம்... ஒரு சாதாரண பொண்ணு நடுராத்திரில போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தா அவளுக்குப் பாதுகாப்பு தர மாட்டீங்களா? புகாருக்கு உரியவங்க மேல கம்ப்ளெயின்ட் கொடுத்தாதான் ராத்திரி நேரத்துல தங்க முடியும்னு சொல்றீங்க. அப்டி ராத்திரியே கம்ப்ளெயின்ட்டை எழுதி வாங்கணும்னா அவ ஒரு சராசரியான பொண்ணா இல்லாம பணமோ பதவியோ இருக்குற பெரிய எடத்துப் பொண்ணாதான் இருக்கணுமா..?’’

அனுபமா அமைதியாகப் பார்க்கிறாள்.

``நான் இப்ப சராசரியான குடும்பப் பொறுப் புல இருக்குற பொண்ணு. என்கிட்ட பணமோ, பதவியோ எதுவுமே இல்ல. அங்க அவன் துரத் துனான்னு ரோட்டுக்கு வந்தேன். இங்க நீங்க துரத்துறீங்க. ஒரு பொண்ணு நடு ராத்திரில வேற எங்கதான் போயி தொலைக்குறதுனு நீங்களே சொல்லுங்க? உங்களுக்கெல்லாம் பாவமாவே இல்லியா?’’ - அமைதியாய் இருக்கிறாள் அனுபமா.

போலீஸ் ஸ்டேஷனுக்கு வெளியே ஜீப் வந்து நிற்கிறது. எஸ்.பி வந்து இறங்கவும் பொது காவல் நிலையத்தின் எஸ்.ஐ, கான்ஸ்டபிள் உட்பட இன்னும் இருவர் அவருக்கு சல்யூட் வைக்கிறார்கள். அனுபமா ஓடிப்போய் சல்யூட் வைக்கிறாள். இந்த ராக்கூத்தை வேடிக்கை பார்க்க மழையை நிறுத்திக்கொண்டது வானம்.

``அந்த கம்மனாட்டியை அடிச்சு ரிமாண்ட் பண்ணாம, மீடியா வரைக்கும் நியூஸ் போகவிட்டீங்களே…’’ - புரியாமல் விழிக்கிறார்கள் காவலர்கள்.

``அந்தம்மா, இதுக்கு முன்னாடி ரிப் போர்ட்டர் போல. அவங்க டீம்ல கூட இருந்தவங்க எல்லாம் இப்ப `மகுடம்’ பத்திரிகைல ஜர்னலிஸ்ட்டா இருக்காங்க. நம்ப ஸ்டேஷன்ல இதெல்லாம் நடந்துச்சுன்னு நாளைக்கு தாறுமாறா எழுதுவாங்க. ஜாக்கிரதையா இருக்க வேணாமா... சென்னைல இருக்குற ஜர்னலிஸ்ட் தாரான்னு ஒரு லேடி போன் பண்றாங்க. நம்மூரு `மகுடம் கிரைம்’ ரிப்போர்ட்டர் மாசிலாமணி போன் பண்றாரு. அடிச்சு புடிச்சு ஓடி வர்றேன். சரி அந்தம்மா எங்க இருக்காங்க?’’

``உள்ளதான் சார்…’’ - அனுபமா கைகாட்ட மகளிர் காவல் நிலையத்தின் உள்ளே போகிறார் எஸ்.பி.

வாயிற்காவலனிடம் வாதமிட்டு பின் மன்னனிடம் முறையிட்ட கண்ணகியைப் போல் தலைவிரி கோலமாய், கைச்சிலம்புக்குப் பதில் கைக்குழந்தையை ஏந்தி, கணவனுக்காக நியாயம் கேட்க வந்த புராணக் கண்ணகியாய் இல்லாமல் கணவன் செய்த அநீதிக்காய் நீதி கேட்டு நிற்கும் புதிய கண்ணகியாய் உட் கார்ந்திருக்கிறாள் செம்பு. எஸ்.பி, செம்பு விடம் எதுவும் பேசவில்லை. ஏற்கெனவே எல்லாவற்றையும் தாரா சொல்லி விட்டிருக் கிறாள். செம்புவை ஒரு பார்வை பார்க்கிறார்.

``இவங்களை ஜீப்ல கூட்டிட்டு வாங்க, சேகரை ரிமாண்ட் பண்ணிட்டு வருவோம்...’’ - யாரும் எதுவும் பேசவில்லை. அனுபமா செம்புவை ஜீப்பில் ஏற்றிவிட்டு தானும் ஏறிக்கொள்கிறாள். போலீஸ் ஜீப்பில் தான் ஏற்றப்படுவோம் என்றெல்லாம் நினைத்தே பார்த்திருக்கவில்லை செம்பு.

``எஸ்.பி சார்லாம் நேர்ல வந்து இந்தப் பொண்ணை ஜீப்ல கூட்டிட்டுப் போறார். இன்னிக்கு சேகருக்கு சங்குதான்யா’’ - எஸ்.ஐ, கான்ஸ்டபிளிடம் சொல்லிக்கொண்டே ஜீப்பை நோக்கி வருகிறார்.

``அட, அவன் எல்லாரையும் காசால `பார்த்துடுவான்’. எழுதி வச்சுக்குங்க… இன்னிக்கு இந்தப் பொண்ணுக்குத்தான் சங்கு...’’ - கான்ஸ்டபிளும் எஸ்.ஐ-யும் யாருக்கு சங்கு எனப் பேசிக்கொண்டே ஜீப்பில் ஏறுகிறார்கள்.

சேகர் வீட்டுக்குப் புறப் பட்டது ஜீப்.

- தொடரும்...