Published:Updated:

அவளுக்கொரு வானம் - 5 - லைவ் தொடர்கதை

அவளுக்கொரு வானம்
பிரீமியம் ஸ்டோரி
News
அவளுக்கொரு வானம்

கட்ன பொண்டாட்டிய, கொழந்தைய தெருவுல தொரத்திட்டு தூக்கம் இன்னாடா தூக்கம்?’’ - எஸ்.பி கோபத்தோடு வரவும், கான்ஸ்டபிளும் எஸ்.ஐ-யும் உடன் இணைந்து கொண்டு இதுதான் சாக்கென்று சேகரை திட்டுகிறார்கள்

செம்புவை அழைத்துக்கொண்டு சேகர் வீட்டை நோக்கிப் புறப்பட்டது ஜீப். அங்குமிங்குமாய் மின்ன லுக்குப் போட்டியாய் விட்டு விட்டு எரிகிற தெரு விளக்குகள். கூடவே விட்டுவிட்டு அதிர்ந்து துடிக்கிற செம்புவின் இதயம். என்ன நடக்கப்போகிறதோ என்கிற அச்சத்தில் ஜீப்பில் உட்கார்ந்தபடியே வெளியே பார்க்கிறாள். இன்னும் ஒரு தெருவைக் கடந்து திரும்பினால் வீடு வந்துவிடும்.

``ஏம்மா நீ சொன்ன மொட்டக்கெணறு இதானே… இங்கருந்து எப்டி போணும்?’’

``இந்தப் பக்கம் நேரா போயி ரைட் சைடு திரும் பணும் சார்...’’ - எஸ்.ஐ-யின் கேள்விக்குப் பதில் சொல்கிறாள். இரவு நடந்தவையெல்லாம் அவளுக்குப் பாறாங்கல்லைத் தலையில் போட்டதைப்போல் பாரம் தாங்காத வலியைத் தருகின்றன. நடப்பது நடக்கட்டு மென ஜீப்பில் உட்கார்ந்திருக்கிறாள். ஊர்ந்து நகர்ந்த ஜீப் சேகர் வீட்டுத் தெருவழியே திரும்புகிறது. அதிகாலை 4 மணி.

``இதான் வீடு...’’

``எதும்மா... இந்த பெரிய கேட் வீடா?’’

``ம்...’’ - பக்பக்கென பல மடங்காய்த் துடிக்கிறது செம்புவின் இதயம்.

``முன்னாடி இருந்த வீடு அங்காளம்மா கோயிலாண்ட இருந்துச்சு. இது சேகரோட புது வீடு போல சார்...’’

கான்ஸ்டபிள், எஸ்.ஐ-யிடம் சேகர் இருந்த பழைய வீட்டுக்கு, முன்பு எதற்கோ ஒருமுறை வந்துவிட்டுப் போனது பற்றி பேசிக்கொண்டே ஜீப்பிலிருந்து கீழே இறங்க, கூடவே அனுபமாவும் எஸ்.பி-யும் இறங் கினார்கள். குழந்தையை மடியில் போட்டிருந்த செம்பு இறங்கலாமா, வேண்டாமா எனப் புரியாமல் ஜீப்பில் உட்கார்ந்திருக்கிறாள்.

பொன்.விமலா
பொன்.விமலா

``ம்மா, வாம்மா… போயி கதவத் தட்டுவோம்’’ எஸ்.ஐ இறங்குகிறார். அனுபமா குழந்தையை வாங்குவது போல் கையை நீட்ட, அவளிடம் குழந்தையைக் கொடுக் கிறாள் செம்பு. வீட்டை நிமிர்ந்து பார்க்கிறார் எஸ்.பி.

``இதென்னமா சொந்த வீடா?’’

``இல்ல சார் வாடகை வீடுதான்...’’

``சரி… கேட்டை திறங்க.’’

கேட் பூட்டாமல் இருக்கிறது. பார்க்கிங்கில் டூவீலர் நிற்கிறது. இவ்வளவு நேரம் வரும் வழியில் எஸ்.ஐ-யும் கான்ஸ்டபிளும் சேகருக்குக் கொடுத்த பில்டப்புகளை வைத்துப் பார்க்கும்போது, அவனுக்குக் குறைந்தபட்சம் சொந்த வீடும் காரும் இருக்க வேண்டும். ஆனால், ஒரு வாடகை வீட்டில் வாழ்கிற மிடில் கிளாஸ் ஆசாமியிடம் பெட்டிப் பெட்டியாகப் பணம் வருவதும் அதிகார பலமிருப்பதும், அவனது பழைய வரலாற்றைத் தோண்ட வேண்டிய அவசியத்தை உணர்த்து வதாக எஸ்.பி உணர்கிறார்.

``சார், கதவு உள்பக்கமா பூட்டியிருக்கு சார்...’’ - இரண்டொருமுறை கதவை முழங் கையால் முட்டித் தள்ளிவிட்டு திறக்க முடி யாமல் சொல்கிறார் கான்ஸ்டபிள்.

``காலிங் பெல் அடிங்க’’ என்றதும் ஸ்விட்ச்சை அழுத்த, மணி ஒலிக்கிறது.

``இவ்ளோ நேரம் அடிச்சும் தொறக்க மாட்டேன்றான்… மப்புல இருக்கான் போல சார்.’’

``யோவ்… நடுராத்திரில பொண்டாட்டிய அடிச்சு தொரத்தியிருக்கான். மப்புல எதுனா கழுத்த அறுத்துனு கெடக்கப் போறான். ஜன்னல் பக்கம் போயி பாருங்க’’ - சேகர் வீட்டுக் கதவைத் திறக்க முடியாமல் ஆளா ளுக்கு வீட்டைச் சுற்றி வருகிறார்கள். படுக்கை யறை கதவு தேமேவெனத் திறந்திருப்பது ஜன்னல் வழியே தெரிகிறது.

அவளுக்கொரு வானம் - 5 - லைவ் தொடர்கதை

``சார், உள்ளதான் இருக்கான். கால் மட்டும் தெரியுது சார்.’’

``பெல்லை அழுத்திட்டே இருங்கே… ராஸ்கல். மப்பு தெளியல போல’’ - எஸ்.பி-யின் குரல் சற்று அதிர வைக்கிறது. நிர்வாணமாகப் படுத்திருக்கும் சேகர் யாரோ கதவைத் தட்டுவதாக உணர்கிறான். விடாமல் அடிக்கும் காலிங் பெல் அவனை இம்சை செய்கிறது. மனைவியையும் குழந்தையையும் வெளியில் துரத்தியதுகூட நினைவில்லாமல், `ஏய்… ஊய்’ எனத் தூக்கத்தில் செம்புவை கத்துகிறான். விடாத கதவு தட்டல். விடாத அழைப்பு மணி யோசை. தூக்கம் கலையாமல் வந்தபடியே வாசற்கதவைத் திறக்கிறான் சேகர்.

``கருமம் புட்ச்சவனே… ச்சீ. எப்டி வந்து கதவ தொறக்குறான் பாரு. பன்னாட பன் னாட...’’ - கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்த சேகரை கான்ஸ்டபிள் உள்ளே இழுத்துப் போகிறார். கலைந்து கிடக்கும் படுக்கை அறையில் ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் ரத்தத் துளிகளை மூக்கைச் சுருக்கிக் கொண்டே பார்க்கிறார். அவிழ்த்துப் போட்ட லுங்கி, மூலையில் கிடக்கும் ஜட்டி, பயன்படுத்தி எறிந்த ஆணுறையென்று... பார்க்கவே எரிச் சலூட்டும் அந்த அறையில் கிடந்த லுங்கியை எடுத்து சேகரின் இடுப்பில் சுற்றிவிடுகிறார்.

``வெளிய இழுத்துன்னு வாய்யா அவன’’ - வாசலில் நின்றவாக்கில் குரல் கொடுக்கிறார் எஸ்.ஐ.

நிர்வாணக் கோலத்தில் சேகரைப் பார்த்த தும் சட்டென முகம் திருப்பிய அனுபமா, வீட்டுக்கு உள்ளே போகாமல் ஜீப்புக்கு அருகி லேயே நிற்கிறாள். எஸ்.பி வீட்டின் உள்ளே போக, பின்னாலேயே எஸ்.ஐ போகிறார். கான்ஸ்டபிளிடம் எதையோ உளறிக்

கொண்டிருக்கிறான் சேகர். தன் வீட்டுக்குள் காவலர்கள் நுழைந்திருக்கிறார்கள் என்பதுகூட தெரியாமல் முழு போதையில் இருக்கிறான். ஹாலில் இருந்த வாஷ்பேஷனில் தண்ணீரைப் பிடித்து அவன் முகத்தில் தெளிக்கிறார்கள். அரக்கப் பறக்க முகத்தைத் துடைக்கிறான் சேகர். ஹாலின் லைட் வெளிச்சத்தால் கண் கள் கூசுகிறான். கொஞ்சம் போதை தெளிந்த அவனை சட்டை, லுங்கியெல்லாம் போட்டு விட்டு வெளியே இழுத்து வருகிறார்கள்.

``கட்ன பொண்டாட்டிய, கொழந்தைய தெருவுல தொரத்திட்டு தூக்கம் இன்னாடா தூக்கம்?’’ - எஸ்.பி கோபத்தோடு வரவும், கான்ஸ்டபிளும் எஸ்.ஐ-யும் உடன் இணைந்து கொண்டு இதுதான் சாக்கென்று சேகரை திட்டுகிறார்கள். தெருவில் வந்து நிற்கிறான் சேகர். செம்பு குழந்தையோடு போலீஸ் ஜீப் அருகே நிற்பதைப் பார்க்கிறான். அவள் அருகே அனுபமா யூனிஃபார்மில் நிற்கிறாள். அவனுக்குப் பின்னால் காக்கிச்சட்டையில் மூவர். சுற்றும் முற்றும் பார்க்கிறான். கண் களைத் துடைத்துக்கொண்டு பார்க்கிறான். அந்தச் சூழல் அவன் அடித்த சரக்கையெல்லாம் இறக்கிவிட்டிருந்தது.

செம்புவைப் பார்த்ததும் சுர்ரென தலைக்கேறுகிறது அவன் கோபம். பாய்ந்து வந்து பளாரென்று ஓங்கி அறைகிறான். ``அம்மா’’ என்று அலறித் துடித்து கன்னத்தில் கைவைத்தபடியே அங்கேயே சுருண்டு உட்காருகிறாள். அவள் அலறலில் குழந்தை வீறிட்டுக் கத்துகிறது.

``ஏன்டா நாங்க இத்தன பேரு இருக்குறப்பவே அடிக் கிறன்னா…. அந்தப் பொண்ணு தனியா இருக்குறப்ப என்னெல்லாம் பண்ணியிருப்ப நீ?’’ - எஸ்.பி ஆவேச மாகிறார். அனுபமா, செம்புவை அழைத்துக்கொண்டு வீட்டுக்குள் செல்கிறாள்; கிழிந்த நைட்டியை மாற்றிக்கொண்டு வேறு உடை அணிந்து வரச் சொல்கிறாள். பால் குடிக்கும் குழந்தை இருப்பதால் சட்டென ஒரு சுடிதாரை எடுத்துப் போட்டுக் கொண்டு வர முடியாது. அவசர அவசரமாய் புடவை கட்டிக்கொண்டு வெளியே வருகிறாள். வீங்கிய முகம், வீங்கிய கை, நடக்க முடியாத ரணத்தைச் சுமக்கும் கால்களோடு தாங்கித் தாங்கி நடந்த படி ஜீப் அருகே செல்கிறாள். சேகரை ஜீப்பில் உட்கார வைத்திருக்கிறார்கள். செம்புவையும் அதே ஜீப்பில் ஏறச் சொல்கிறார்கள். அச்சத் தில் அவளுக்குக் கைகால்கள் உதறுகின்றன.

``இல்ல சார்… நான் வரலை… பயமாருக்கு...’’- அங்கேயே நிற்கிறாள். அந்த நேரத்தில், செம்புவை அடித்து ஓர் அரக்கனாய் அவளை சேகர் சூறையாடியது, தலைமுடியைப் பிடித்து இழுத்து வந்து வெளியே தள்ளியது, உள்ளே அழுத குழந்தையை இரக்கமே இல்லாமல் `இந்த சனியனை தூக்கிட்டுப் போடீ’ என்று கத்தியது, கதவருகே பனியில் உட்கார்ந்து கொண்டு அழுதபோது மீண்டும் மீண்டும் எட்டி உதைத்து கேட்டைச் சாத்திவிட்டு அவன் உள்ளே போனது... அந்தக் கொடுமை இரவை நினைத்த நொடியில் மரண பீதியில் நடுங்குகிறாள்.

``...த்தா… நடுராத்திரில எவன் கூட ஊர மேஞ்சுட்டு போலீஸ கூட்டினு வந்திருக்க? எந்த்திர்ரி நாயே’’ - சேகர் காட்டுக்கத்தல் கத்துகிறான். காவலர்கள் அவனை அதட்டி ஜீப்பில் உட்கார வைக்கிறார்கள். ``நாங்க இவனை முன்னாடி கூட்டிட்டுப் போயி இறக்கிட்டு ஜீப்பை திருப்பி அனுப்புறோம். நீங்க அடுத்த டிரிப்ல வாங்க’’ என அனுபமாவை செம்புவுக்கு காவல் வைத்துவிட்டு சேகரை ஜீப்பில் அழைத்துக்கொண்டு போகிறார் எஸ்பி.

விஜயமல்லூர் காவல் நிலையம். வானம் லேசாக விடியக் காத்திருக்கிறது. பறவைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஓசை எழுப்பத் தொடங்க யிருந்தன. சேகரை ஸ்டேஷனுக்குள் இழுத்து வந்து உட்கார வைத்திருக்கிறார்கள். ராத்திரி யில் நடந்தவற்றை யோசித்துப் பார்க்கிறான். செம்பு எழுதிக் கொடுத்திருக்கும் புகார் கடிதத்தை வைத்து அவனை விசாரிக்கிறார்கள். எஸ்.பி-யின் முன்பாக தான் ஒரு நேர்மையான அதிகாரியாக இருப்பதைப் போல் காட்டிக் கொள்ள எஸ்.ஐ பிரயத்தனப்பட்டுக் கிடக்கிறார்.

``யோவ்… பச்சப்புள்ளக்காரிய நடுராத்திரி அதுவும் கொழந்தயோட அட்ச்சு தொரத்தி இருக்கியே… நீயெல்லாம் மனுஷனாய்யா?’’ - எஸ்.பி கேட்டதும் முறைக்கிறான் சேகர். ``என்னடா மொறப்பு? நடுராத்திரியில எனக்கு போன் வருது. இருவத்தஞ்சு கிலோமீட்டர் டிராவல் பண்ணி வந்திருக்கேன்’’ - சேகர் முகத்தைப் பார்த்து திட்டிவிட்டு அடுத்து எஸ்.ஐ-யைப் பார்த்துத் திட்டுகிறார் எஸ்பி... ``இவன் என்ன பெரிய புடுங்கியா? ஊர்ல பொறுக்கித்தனம் பண்றவனுக்காகலாம் என்னை ஸ்டேஷன் வரைக்கும் வர வச்சிருக் கீங்க? ராத்திரியே கம்ப்ளெயின்ட் வாங்கி எஃப்.ஐ.ஆர் போட்டு உள்ள தள்ளிருக்கணுமா இல்லியா?’’ - தன்னை உள்ளே தள்ளப் போகி றார்கள் என்பதை உணர்ந்து கொள்கிறான் சேகர்.

``சார், ராகு அண்ணே வந்து காலைல உங்கள பாப் பாரு. டென்ஷன் ஆவாதீங்க சார்’’ - சேகர், மீ.உ.ச கட்சியின் மாவட்ட நிர்வாகி ராகவன் பற்றி பேசுவது அங்கிருப்பவர்களுக்குத் தெரியாமல் இல்லை. செம்பு மீடியா தொடர்புடையவள். சேகர் கொடுக்கிற பெட் டிக்கோ, அவன் சொல்லும் அதிகாரச் சங்கிலித் தொடர்பு குறித்தோ இப் போதைக்கு யோசிப்பது புத்திசாலித்தனமில்லை என்பது அங்கிருப்பவர் களுக்குத் தெரிகிறது. சேகர் பேச்சைக் காதில் வாங்காமல் அங்கிருந்து அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, 9 கி.மீ தொலைவில் இருக்கும் சின்னவருதூர் சிறையில் அடைக்க முடிவு செய்கிறார்கள்.

செம்புவும் அனுபமாவும் ஜீப்பில் வந்து ஸ்டேஷனில் இறங்குகிறார்கள். உள்ளிருந்து செம்புவைப் பார்க்கும் சேகர் அவளை காது கூசும் வார்த்தைகளால் கத்திக் கத்தி திட்டு கிறான். கண்ணீர் தவிர்த்து அவளிடம் வேறு பதில் இல்லை.

``ஃபார்மாலிட்டிஸ் முடிஞ்சதும் ஜெயில்ல போட்ருவாங்கம்மா, பயப்படாதீங்க’’ -

எஸ்.பி சொல்வதைக் கேட்டு அதிர்ந்து போகிறாள் செம்பு.

``இல்ல சார், அதெல்லாம் வேணாம். விட்ருங்க. தேவையில்லாத பிரச்னை வரும். நான் அம்மா வீட்டுக்குப் போயிடறேன்.

அவளுக்கொரு வானம் - 5 - லைவ் தொடர்கதை

நீங்க அவர வீட்டுக்கு அனுப்பிடுங்க.’’

``என்னம்மா நீங்க? அவன் உங்கள அடிச் சான்… தொரத்துனான்னு சொல்லி மீடியா ஆளுங்கள வச்சு நடுராத்திரில என்னை வர வச்சீங்க. உங்ககிட்ட டீட்டெயிலா விசாரிச்ச பிறகுதான கம்ப்ளெயின்ட் எழுதி வாங்கி கூட் டிட்டு வந்தோம். படிச்சவங்க தானே… நீங் களே பயந்தா எப்டி?’’ - எஸ்.பி படபடக்கிறார்.

``ஏய் உன்ன சாவட்ச்சு போட்ருவேன்டி… நார்நாரா கிழ்ச்சி தொங்க விட்ருவன்டி… எச்சப் பொறுக்கி நாயே… பேபர்சி முண்ட…’’ - இவ்வளவு அவ்வளவு என்றில்லை. இந்த தேசத்தில் உருவாக்கி வைத்திருக்கும் அத்தனை கெட்ட வார்த்தைகளும் பெண்ணை இழிவு செய் யவே உருவாக்கப்பட்ட பெண் பால் வார்த்தைகள். அகராதியை வைத்து பொருள் தேடினாலும் கிடைத்தாத சொற்கள் கொண்டு செம்புவை திட்டிக்கொண்டிருக்கிறான் சேகர்.

``இவனையெல்லாம் உள்ள வச்சாதான் புத்தி வரும். பதினஞ்சு நாள் ரிமாண்ட். அதுவரைக்கும் ஜாமீன்லகூட வெளிய வர முடியாது. எதுனா பிரச்னைனா எனக்கு எப்ப வேணும்னாலும் போன் பண்ணுங்க.’’ - எஸ்.பி தன் விசிட்டிங் கார்டை செம்புவிடம் கொடுத்துவிட்டுக் கிளம்புகிறார். அவளை மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்துப் போகிறாள் அனுபமா.

கிட்டத்தட்ட விடிந்து விட்டிருந்தது. அன்றிரவு உதவிக்காக யாருக்கெல்லாம் போன் செய்திருந்தாலோ, அவர்களில் போனை எடுத்தவர்களுக்கு நன்றி சொல்லியும், எடுக்காமல் போனவர்களை மீண்டும் அழைத்து நடந்தவற்றைச் சொல்லியும் போனை வைக்கிறாள். குழந்தைக்குப் பாலூட்டி விட்டு பெஞ்சில் படுக்க வைக்கிறாள். இரவு கொசுக்கள் கடித்ததில் அதன் உடலெங் கும் திட்டுத்திட்டாய் சிவந்து தடித்திருந்தது. பால்குடி மறவாத பச்சிளங்குழந்தை. அன்னை யின் மார்பில் பாலுண்டு அவள் அரவணைப் பில் உறங்க வேண்டிய இளம்பிஞ்சு. அர்த்த ராத்திரியில் கொட்டும் பனியில் மழையில் தெருத்தெருவாகச் சுற்றி இப்போது காவல் நிலையத்தில் படுத்துக்கிடக்கிறது.

விஷயத்தைக் கேள்விப்பட்ட செம்புவின் அம்மா சுப்புலட்சுமி, வாயிலும் மார்பிலும் அடித்துக்கொண்டு தெருவுக்கு வருகிறாள். மண் புழங்கும் வீதியில் புரண்டு புரண்டு அழுகிறாள். ``அவன் நல்லாவே இருக்க மாட்டான்… நாசமா பூடுவான், தலப்பாட அடிச்சிக்கினமே அந்த கம்னாட்டிய கட்ட வாணாம் கட்ட வாணாம்னு சொன்னமே...’’ - வாயில் அடித்துக்கொண்டு வீதியில் புரள் கிறாள். தெருவில் சாணி தெளித்து கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண்கள் கும்பல் கூடினார்கள். அவளை வீட்டுக்குள் அழைத்துப் போனார்கள்.

பெண்களுக்கும், பெண் பிள்ளைகளை பெற்றவர் களுக்கும் ஒரு தீரா பட்டியல் துயரம் இங்கே எழுதி வைக்கப்பட்டிருக்கிறது. ஓர் ஆண்பிள்ளையை எந்த மனைவியும் கையில் குழந்தையைக் கொடுத்து நடு ராத்திரியில் அடித்து வெளியே துரத்துவதில்லை. வளர்ப்பு சரியில்லையென்று ஆண்பிள்ளையின் பெற் றோரைச் சொல்லப்போவதில்லை. புருஷன், பெண் டாட்டி சண்டையில் ‘எது வந்தாலும் விட்டுக் கொடுத்து போ, குடும்ப கௌரவத்துக்காக பொறுத்துப் போ’ என்ற அறிவுரைகள் எல்லாம் பெண்களுக்கு மட்டுமே உரியவை.

`ஆயிரம் இருந்தாலும் பொட்டப்புள்ள எதுக்கு ஸ்டேஷன் போவணும்’ என ஒரு கிழவன் ஆணாதிக்கம் பேச, செம்பு பாவமென்று சிலர் அரவணைத்தார்கள்.

`பொட்டச்சிக்கு எதுக்கு இந்த ராவு பொழப்பு?’ என்று செம்புவை கேவலமாகப் பேசிக் கிளம்பிச் சென்றார்கள் சிலர். செம்புவின் அப்பா அப்போது வீட்டில் இல்லை. நடப்பதை அழுதுகொண்டே வேடிக்கைப் பார்க்கிறார்கள் அவளின் மூன்று தங்கைகளும்.

அவளுக்கொரு வானம் - 5 - லைவ் தொடர்கதை

``குடும்ப மானம் போச்சே… மருவாத போச்சே… அந்த செல்லிமா தாய்க்கு கூடவா கண்ணு இல்ல, அந்த ஆம்பள கூட வூட்ல இல்லியே’’ - ஊர்க்காதுகள் கேட்கக் கதறிக் கதறி அழுகிறாள். ``பொண்ணப் பெத்தா ஜாதியா வளர்க்கணும். அதின்னா பழக்கம்... ராத்திரி கொழந்தய தூக்கினு போலிஸாண்ட போறது?’’ - செம்புவின் ஒன்று விட்ட பெரியம்மாள் அவள் அம்மாவை காரித் துப்பி விட்டுப் போகிறாள். அந்த ஊரில் ஆறுதல் சொன்ன நான்கைந்து பேரைக் கூட்டிக் கொண்டு ஸ்டேஷனுக்குப் போகிறாள் சுப்புலட்சுமி.

``நான் கிளம்பணும்... உமன் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ மேடம் வரன்னு சொல்லியிருக்காங்க. நைட்டு இன்னாச்சுன்னு அவங்ககிட்ட ஒருதரம் சொல்லிருங்க மேடம்’’ என்று சொல்லிவிட்டு அனுபமா ஸ்டேஷனை விட்டுக் கிளம்புகிறாள்.

``இந்த எடத்துக்கெல்லாம் வர்றது தகுமா… அந்த சாமிக்குக்கூட அடுக்குமா? நாட்ல நடக்குற அக்குறம்லாம் என் வூட்லயா நடக்கணும் சாமீ… அய்யோ’’ - வழிந்த கண்ணீரோடு கதறிக்கொண்டே காவல்நிலையம் வருகிறாள் சுப்புலட்சுமி. செம்புவைப் பார்த்ததும் கட்டியணைத்து கதறிக் கதறி அழுகிறாள். வீட்டை விட்டு வெளியேறும் முன்னர் நடந்தவற்றை யெல்லாம் சொல்லிச் சொல்லி அழுகிறாள் செம்பு.

பேத்தி அழுவதைப் பார்த்து அந்தக் குழந்தையைத் தூக்கி மார்பில் வைத்துக்கொண்டு கதறுகிறாள் அவள் அம்மா. ‘`இந்த பச்ச மண்ணக்கூடவா ஈவு எரக்கம் இல்லாம வெளிய தள்ளுவான்...’’ குழந்தை வீறிட்டு அழவும், பெண் காவலர் ஒருவர் அங்கு வந்து ஓரமாக உட்காரச் சொல்லிவிட்டுப் போக, உடன் வந்த ஊரார் சிலர் என்ன செய்வதெனத் தெரியாமல் அங்குமிங்குமாய் விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். போலீஸ் அவர்களில் ஐந்து பேரிடம்

பெண் வீட்டார் தரப்பில் சாட்சிக் கையெழுத்தை வாங்கிக் கொள்கிறார்.

``சேகருக்கு இனி சங்குதான் சார்’’ என்று கான்ஸ்டபிள் சொல்லிக்கொண்டே போனார்.

பத்திரிகையாளர்கள் வழக்க மான தினசரி செய்திகளுக்காகத் துப்பு கிடைக்குமா என்று ஸ்டேஷனில் வலம் வந்துகொண் டிருந்தார்கள். ``ஏங்க, அந்தாளு உங்கள அடிச்சதுக்கு, கவருமென்ட் ஹாஸ்பிட்டல்ல மெடிக்கல் ரிப்போர்ட் வாங்கணும். சின்ன வருதூர் வரைக்கும் போவணும். கொழந்தைய உங்கம்மாகிட்ட குடுத்துட்டு வாங்க’’ - பெண் காவலர் ஒருவர் செம்புவை அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துப் போகிறார். குழந் தையைத் தன் அம்மாவிடம் கொடுத்துவிட்டு ஜீப்பில் ஏறுகிறாள் செம்பு.

வாசலைக் கடக் கிறது ஜீப். எதிர்ப் பக்கம் மீ.உ.ச கட்சி நிர்வாகி ராகவ னின் கார் ஸ்டேஷ னுக்கு உள்ளே நுழைகிறது.

தொடரும்...