Published:Updated:

அவளுக்கொரு வானம் - 6 - லைவ் தொடர்கதை

அவளுக்கொரு வானம்
பிரீமியம் ஸ்டோரி
News
அவளுக்கொரு வானம்

சின்னவருதூர் அரசு மருத்துவமனையில், செம்புவுக்கு ஆங்காங்கே உடலில் ரத்தக் கசிவோடு இருந்த காயங்களுக்கு மருந்து போட்டு, ரிப்போர்ட் எழுதிக் கொடுக்கிறார் மருத்துவர்.

மருத்துவ பரிசோதனைக்குச் செல்வதற்காகக் குழந்தையைத் தன் அம்மாவிடம் கொடுத்துவிட்டு ஜீப்பில் ஏறுகிறாள் செம்பு. போலீஸ் ஸ்டேஷன் வாசலைக் கடக்கிறது ஜீப். எதிர்ப்பக்கம் மீ.உ.ச கட்சி நிர்வாகி ராகவனின் கார் ஸ்டேஷனுக்கு உள்ளே நுழைகிறது. கையில் பெரிய பிரேஸ்லெட், தாம்புக் கயிற்றை உருட்டிச் செய்த மாதிரி தங்கத்தில் கழுத்துச் சங்கிலி, கட்சிக்கொடி பொறித்த பெரிய மோதிரங்கள், கசங்காத வெள்ளைச் சட்டை. கட்சித் தலைவரின் உருவம் தெரிகிற மாதிரி புகைப்படத்தைப் பாக்கெட்டில் வைத்திருக்கிறான் ராகவன். மிக்ஸியில் போட்டு அரைத்த மாதிரி ஒரு கரகரக் குரல்.

``இன்னாப்பா... சேகரை இன்னாத்துக்கு உள்ள வச்சுக்கிறீங்க?’’ - உள்ளே நுழையும் போதே வணக்கம் வைத்த காவலர்களிடம் சங்கதியைக் கேட்டுக்கொண்டே, நாற்காலி யில் அமர்கிறான் ராகவன். ``ராத்திரி பொண்டாட்டியை அட்ச்சு வெளிய தொரத் திட்டான் சார் சேகரு. அந்தம்மா ரெண்டு மாசக் கொழந்தையோட ஸ்டேஷனுக்கு வந்து கம்ப்ளயின்ட் குடுத்துட்டாங்க. ரிமாண்ட் பண்ணி உள்ள தள்ளினா... எப்டியும் பாஞ்சு நாள் கழிச்சுதான் பெயில் எடுக்க முடியும்’’ - இரவு எஸ்.பி வந்து போன கதையையும், செம்புவுக்குப் பழக்கத்தில் இருக்கும் பத்திரிகைகாரர்கள் பற்றியும் ஒன்றுவிடாமல் ராகவனிடம் சொல்லிக் கொண்டிருந்தார் எஸ்.ஐ.

அவளுக்கொரு வானம் - 6 - லைவ் தொடர்கதை

``இன்னாப்பா சொல்றீங்க, இவ்ளோ நடந்துகீதா?’’ என்று கேட்டுவிட்டு மூக்கை மேலும் கீழும் சொறிந்தபடியே யோசித்துக் கொண்டிருந்தான் ராகவன். ``அண்ணனுக்கு ஒரு டீ சொல்லு’’ என்று சொல்லிவிட்டு நைஸாக எஸ்கேப் ஆனார் எஸ்.ஐ. நிலைமை கைமீறிப் போனதை உணர்ந்த ராகவன், ரிஸ்க் எடுத்தால் கட்சிப் பெயர் நாறிவிடும் என்பதால், டீ வரும் வரை காத்திருக்காமல் எழுந்து, முகத்தில் ஒட்டி வைத்திருந்த அதே டிரேட் மார்க் சிரிப்போடு வந்த வேகத்தில் வீடு திரும்பினான்.

``உன்னப் பார்க்க ராகவன் சார் வந்தாப்டி. ஒண்ணும் வேலைக்காவாதுன்னு கிளம் பிட்டாரு. யார்னா வக்கீல் ஏற்பாடு பண் ணுப்பா’’ என்று சேகர் காதில் கிசுகிசுத்து விட்டுக் கிளம்பிப் போனார் கான்ஸ்டபிள்.

சின்னவருதூர் அரசு மருத்துவமனையில், செம்புவுக்கு ஆங்காங்கே உடலில் ரத்தக் கசிவோடு இருந்த காயங்களுக்கு மருந்து போட்டு, ரிப்போர்ட் எழுதிக் கொடுக்கிறார் மருத்துவர். செம்பு மீண்டும் ஸ்டேஷனுக்கு அழைத்து வரப்படுவதற்குள்ளாகவே ஊருக் குள் விஷயம் கசிந்து, ஸ்டேஷன் வாசலில் இருபது முப்பது பேர்வரை கூடியிருக்கிறார்கள்.

`ஆமாண்ணே, இந்த சேகருக்கு கொஞ்சம் னாச்சும் அறிவு கிறிவு இருக்கணும்ல. ஊர்ல காட்ற ரவுடித்தனத்த ஊட்ல காட்டிக் கீரான் லூசு’, `அறியாத பொண்ணுப்பா, பார்க்கவே பாவமாகீது, பச்சப் புள்ளக்காரியை போயி அட்ச்சி தொரத்தியிருக்கான் பாரு கம்னாட்டி கம்னாட்டி’ -ஆளாளுக்கு உச்சுக்கொட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

சேகரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சின்னவருதூர் சிறைச்சாலையில் அடைக் கிறார்கள் காவலர்கள். செம்பு, தானாக முன் வந்து கேஸை வாபஸ் செய்தால் ஒழிய 15 நாள் களுக்கு அவனால் வெளியில் வர முடியாது. வரதட்சணைக் கொடுமை, குடும்ப வன்முறை, பாலியல் வன்கொடுமை, கொலை முயற்சி எனப் பல குற்றங்களின் அடிப்படையில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

அன்று மாலை `மாலைத்தீ’ உள்ளிட்ட செய்தித்தாள்களில் பரபரப்புச் செய்தியே இதுதான்.

`தொழிலதிபர் சேகர் (வயது 30), வன் கொடுமை செய்து தன் மனைவி செண்பக வள்ளி (வயது 21) மற்றும் குழந்தையை நள்ளிரவில் வீட்டைவிட்டு அடித்துத் துரத்தி னார். இரவில் தனியாகத் தெருவில் சுற்றிக் கொண்டிருந்த செண்பகவள்ளிக்கு விஜய மல்லூர் காவல் நிலையத்தில் அடைக்கலம் கொடுத்து பாதுகாப்பு தந்ததுடன், சேகர் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து சிறையில் அடைத்தனர்.’

காட்டுத்தீ போல் ஊரெங்கும் பரவுகிறது செய்தி. குழந்தையைத் தூக்கிக்கொண்டு அம்மாவுடன் பிறந்த வீட்டுக்குப் போகிறாள் செம்பு. தலைகுனிந்து அவள் நடந்து போவதை வேடிக்கை பார்க்கின்றன, தெருமுழுக்க திறந் திருக்கும் ஜன்னல்கள். `ஊரு கண்ணு பட்டுச்சோ ஒறவு கண்ணு பட்டுச்சோ தெரியலையே. கட்டிக் குடுத்த பொண்ண இப்படி கையோட கூட்டினு வர்றேனே. எந்த ஊருலயும் அடுக்குமா... கண்ணில்லயா தாயே’ - தெருவெல்லாம் ஒப்பாரியைக் கூட்டிக் கொண்டே வந்தாள் செம்புவின் அம்மா சுப்புலட்சுமி. இழவு விழுந்த வீட்டை விசாரிப்பது போல் அக்கம் பக்கத்து வீட்டார் வந்து விசாரித்துவிட்டுப் போனார்கள்.

``பவா, செத்த தண்ணி எட்த்துனு வாடீ... உங்கக்காகாரி குடும்பத்தக் கொண்டாந்து தெருவுல உட்டுட்டா’’ - மூக்கைச் சிந்தி சுவரில் தேய்த்தபடியே எல்லாப் பழியையும் தூக்கி செம்புவின் மீது போட்டாள் அம்மா. செம்புவின் கடைசித் தங்கை, 10 வயது சிறுமி பவானி, நடப்பது எதுவும் புரியாமல் தண்ணீர் சொம்பைக் கொண்டு வந்து நீட்டுகிறாள்.

``யம்மோவ்... இங்க பாரும்மா’’ - பாவாடை யைத் தூக்கிப்பிடித்தபடி வியர்க்க விறுவிறுக்க ஓடிவந்து வீட்டில் விழுகிறாள் செம்புவின் இரண்டாவது தங்கை கோமதி. கையில் `மாலைத்தீ’ செய்தித்தாள். முதல் தங்கை கல்பனா, என்னவென்று படிக்கிறாள். செம்புவை சேகர் வன்கொடுமை செய்து வீட்டைவிட்டு துரத்திய கதையை கல்பனா வாசிக்க வாசிக்க, மார்பிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழுகிறாள் அம்மா.

``போலீஸு ஸ்டேஷன்ல மானம் காத்துல போனது பத்தாதுனு, பேப்பர்காரன் வரைக்கும் எழுதி வச்சுட்டானே. உங்கப்பன் வூட்டுக்கு வந்தா... குடும்பத்தோட வெஷத்த குடிச்சிட்டு செத்துட வேண்டியதுதான். எங்கியோ கெணத்துல வுழுந்து சாவப் போனாளாம். செத்து தொலைஞ்சிருந்தாகூட நிம்மதியா வாரி போட்டுட்டுப் போயிருப்பனே. ஊரு ஒலகம் பூரா பேர கெடுத்துட்டாளே...’’

அவளுக்கொரு வானம் - 6 - லைவ் தொடர்கதை

ஸ்டேஷனில் நாலு பேருக்கு முன் செம்புவுக் காக அழுத சுப்புலட்சுமி, வீட்டுக்கு வந்ததி லிருந்து ஏச்சும் பேச்சுமாய் அவளை ஏவித் தள்ளிக் கொண்டிருக்கிறாள். ‘தாயின் வளர்ப்பு சரியில்லை’ என்று தன்மீது ஊர் பழிபோட்டுவிடக் கூடாது என்று சாமர்த்தியமாகவே யோசித்திருக்கிறாள் அம்மா என்பதை மனதுக்குள் அசைபோட்ட செம்பு, கைகள் நடுங்கியபடியே செய்தித்தாளை வாங்கிப் பார்க்கிறாள். அவளுடைய புகைப் படம் மற்றும் சேகரின் புகைப்படம் இடம் பெற்றிருக்க, அபலைப் பெண்ணாக செம்பு துரத்தப்பட்டதைச் செய்தி யாகப் படிக்கிறாள். காலம், சில வருடங்கள் பின்னோடி அவள் மனதினில் விரிகிறது.

``பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்.
எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி


- ஆணுக்குப் பெண் எந்த வகையிலும் குறைந்தவளில்லை. அவள் அறிவால், திறமையால் சிறந்தவள். அப்படிப்பட்ட பெண், ஓர் ஆணை திருமணம் செய்துகொள்ளும் போது எக்காரணத்துக்காவும் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்துகொள்ளவே கூடாது. நான் நிச்சயம் அப்படி செய்து கொள்ள மாட்டேன்’’ - எப்போதோ பள்ளி மேடையில் வீராவேசமாக அவள் பேசியது, இப்போது அலையடிக்கிறது மனதில். பெண்ணுரிமை பற்றி மேடைகளிலெல்லாம் பேசிக் கொண்டிருந்தவள், தனக்கான கைத்தட்டல்களை காதுகுளிரக் கேட்டு வளர்ந்தவள், தைரியசாலியாக அறியப்பட்டவள், கல்லூரியில் படிக்கும் போதே செய்தித்தாள், வார இதழ்களில் கட்டுரைகள் எழுதியவள், இன்று செய்திக் கட்டத்துக்குள் வந்திருப்பதைப் பார்த்து விம்முகிறாள்.

`மலர் மேல்நிலைப் பள்ளி மாணவி செண்பகவள்ளி, மாநில அளவிலான பேச்சுப் போட்டியில் வென்று முதலமைச்சரிடம் பரிசு பெறுகிறார்’ என்று புகைப்படத்தோடு ஒருகாலத்தில் வெளியாகியிருந்த செய்தி செம்புவின் மனதுக் குள் வந்து கலங்கடித்துக்கொண்டிருக்க, அம்மாவிடம் இருந்து ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுவதைப் போல் வந்து விழுந்த வார்த்தைகள் மேலும் கலங்கடித்தன.

``டூட்டிக்கு போன மனுஷன் நாளிக்கு காலைல வூட்டுக்கு வந்துருவாரு. வரட்டும். வந்து பொளி போட்டாதான் அடங்குவே’’- கூந்தலை வளைத்து முடிந்து கொண்டு படுக்கப் போனாள் அம்மா.

லாரி ஓட்டுநரான அப்பா, வேலைக்குப் போய் வழக்கம் போல ஒரு வாரம் கழித்து வீடு திரும்பவிருக்கிறார். நடந்தவையெல்லாம் அவருக்குத் தெரிய வரும்போது என்ன ஆகுமென்று அஞ்சியஞ்சி மூலையில் உட்கார்ந்து கண்ணீர் வடிக்கிறாள் செம்பு. சேகர் அடித்த இடமெல்லாம் ரணமாகி வீங்கி வலியைக் கூட்டியிருந்தது. இரண்டு கால்களையும் அகட்டிக்கொண்டே தான் நடப்பதுகூட புரியாமல், வாய்க்கு வந்ததையெல்லாம் பேசிவிட்டுப் போகும் அம்மா வின் மீது அவளுக்குக் கோப மெல்லாம் இல்லை.

`படிச்சது போதும். உனக்கு அடுத்து மூணு பொம்பளப் புள்ளைங்கள கரையேத்த வேண்டியிருக்கு. கெவருமென்டு மாப்பிள்ளை... மரியாதையா கல்யாணம் பண்ணிக்கோ’ என்று பன்னிரண்டாவது படிக் கும்போதே பாக்கு வெத்தலை தட்டோடு பத்துப் பேரை வீட் டுக்கு வரவழைத்தவள் அம்மா.

`இந்த ஒரு தாட்டிக்கு படிக்க வைப்பா... ப்போவ் ப்ளீஸ் பா’ என்றெல்லாம் கெஞ்சிக்கேட்ட பிறகு, கல்லூரி விண்ணப்பத்தை வாங்கிக் கொடுத்து படிக்கச் சொன்னவர் அப்பா. மகள் படித்து பெரிய கெவருமென்டு வேலைக்குப் போவாள் என்று கனவு கண்டவர். அந்தக் கோட்டை சரிந்ததும் அடுத்த பெண்பிள்ளைகளுக்காக அழுக்குக் காக்கிச் சட்டையும் கிரீஸ் வாச முமாய் லாரிச் சூட்டில் காடு மலை யெல்லாம் கடந்து பயணப்பட்டு பிழைப்பு நடத்திக்கொண்டிருக் கிறார். அன்றிரவு செம்புவுக்கு நடந்த கொடுமைகளைக் கேட்டால், துக்கம் தாங்காமல் என்ன ஆவாரோ தெரியவில்லை.

குழந்தை மடியில் தூங்கிக் கொண்டிருக்க, தான் விழித்திருக் கிறாள் செம்பு. மணி 2 என்று காட்டி யது கடிகாரம். நேற்றிரவு இந்நேரம் போலீஸ் ஸ்டேஷனில் போராடிக் கொண்டிருந்த துயரை நினைத்துப் பார்க்கிறாள். 12 மணிக்கு முன்பாக, சேகர் தன்னிடம் அரங்கேற்றிய கோரத்தாண்டவத்தை யாரிடம் சொல்லி அழுவதெனப் புரியாமல் தத்தளிக்கிறாள். அந்தக் கொடூர இரவு நிகழ்வை இதுவரை முழுமையாக அம்மா காது கொடுத்துக் கேட்கவில்லை என்பதை நினைத்துக் கொள்கிறாள். `ராத்திரியில ஏன் வெளியே வந்த’ என்றே தன்னை திரும்பத் திரும்பக் கேட்கும் அம்மாவிடம் பதில் சொல்வதற்குள் அவளுக்கு வார்த்தைகள் வற்றி விடுகின்றன. `அப்பா வீட்டுக்கு வந்தவுடன் அவரிடம் மொத்தமாகச் சொல்லி அழ வேண்டும். என்ன நடந் தாலும் சரி, அப்பா எனக்கு எந்தத் தண்டனை கொடுத் தாலும் சரி’ என்று உறுதியாய்க் கிடக்கிறாள் செம்பு.

விடியும் நேரம்... விர்விர்விர்ரென்று லாரி வரும் சத்தம் கேட்கிறது. ‘அப்பாதான் வராப்ல இருக்கு. வந்ததும் வராததுமா அவருகிட்ட போயி இந்தக் கூத்தை யெல்லாம் சொல்லாதீங்கடீ’ என்று மகள்களிடம் அதட்டி வைக்கிறாள் சுப்பு. செம்புவின் குழந்தை பாலுக்கு அழுதுகொண்டிருக்கிறது. வண்டி நின்றதும் பிரேக் ஏர் ரிலீஸ் ஆகும் சத்தம் கேட்கிறது. செம்புவின் அப்பா காக்கிச்சட்டையோடு லாரியை விட்டு இறங்கி வருகிறார். வாய் பேசாமல் வாசலில் நிற்கிறாள் சுப்பு. எதுவும் கேட்காமல் நேராக வீட்டுக்குள் போகிறார்.

``இன்னாமா... இன்னாச்சு?’’ என்று மகளருகே போய் நிற்கிறார்.

``அப்போவ்...’’ என்று கதறிக்கொண்டே போய் அவரை கட்டியணைக்கிறாள் செம்பு. நீளவாக்கில் மடித்து உள் பனியனுக்குள் செருகி வைத்திருந்த நியூஸ் பேப்பரை வெளியே எடுத்து, செம்புவின் முன் நீட்டுகிறார். ஓவென்று கதறிக்கதறி அழுகிறாள். செம்பு வோடு போட்டி போட்டு இப்போது அழத் திராணியற்ற வானம், வெளுத்துக் கிடக்கிறது.

``ப்போவ்... நீயாச்சும் நான் சொல்றத கேளுப்பா’’ என்று கால்களில் மண்டியிட்டுக் கெஞ்சுகிறாள். பொறுக்க மாட்டாமல் சட்டென அவளைத் தூக்கி நிற்க வைக்கிறார் அப்பா.

`பெரியவங்ககிட்ட ஆசீர்வாதம் வாங்க மட்டும்தான் ஒருத்தர் கால்ல விழலாமே தவிர, வேற எதுக்காகவும் எப்பவும், யாரும், யாரு கால்லயும் வாழ்க்கையில விழுந் துடவே கூடாதும்மா’ என்று சிறு வயதில் செம்புவுக்கு அவள் அப்பா சொல்லிக் கொடுத் திருக்கிறார். இரண்டு நாள்களாய் சரியாகச் சாப்பிடாமல் போனதில் கண்கள் மங்கலாகி பொத்தென தரையில் உட்காருகிறாள். ஓடிப் போய் தண்ணீர் கொண்டு வந்து கொடுக்கிறார் அப்பா.

``நம்ம பெத்தது இப்படி நடுசந்தியில நிக்க வச் சிருச்சே’’ என கணவன் முன்பு அழத் தொடங்கினாள் சுப்பு. துண்டை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டார்.

``என்னாச்சும்மா...’’ என்று ஆற்றாமையும் ஆதர வும் குழைத்தக் குரலில் கேட்கிறார் தகப்பன்சாமி.

வீட்டை விட்டு வெளி யேறும் முன் அந்த இரவு என்னதான் நடந்தது எனச் சொல்ல வாயெடுத்தாள் செம்பு. அந்நேரம், வீட்டுக் குப் பின்புறம் இருந்த கோழிக்கூண்டில் முட்டை யிட்டுவிட்டு வெளியேறிய பெட்டைக் கோழி கொக் கரித்தது. முட்டையிட்ட வலிக்கு கோழி அப்படித்தான் சத்தமிட்டு அடங்கும். `பொ… பொ… பொ… பொ…’ எனக் கோழியை அழைத்துக்கொண்டு கொட்டாங்கச்சியில் இருந்த ரேஷன் அரிசி யைக் கொண்டு போய் பின் வாசலில் வைத் தாள் சுப்பு. முட்டையிட்ட கோழிக்குத்தானே வலி தெரியும் என்பார்கள். கோழி முட்டை போடுகிறதென்று வாஞ்சையாய் அதற்குத் தீனி வைக்கிறாள் அம்மா. பெட்டையை `மிதிக்க’ வரும் சேவலை ‘ஹே ஸ்ஸூ… ஸ்ஸூ’ என ஒரு வேப்பங்குச்சியெடுத்து விரட்டிக் கொண்டிருக்கிறாள். என்ன இருந்தாலும், முட்டையிடுகிற வரைதான் அந்தக் கோழிக்கு மரியாதை. இட்ட முட்டையையெல்லாம் எடுத்துக்கொண்ட பின்பு, முட்டை நினைப்பி லேயே கோழி அதே இடத்தில் அவியம்காத்து (அடைகாத்து) கிடக்கும்போது, `சீ ப்பே... எப்பப்பாரு குந்த வச்சு உட்கார்ந்துகினு… எழுந்து போ’ என அதன் றெக்கையை பிடித்துத் தூக்கி வெளியே தள்ளிவிடுவாள் சுப்பு. அந்த நேரம் கோழியை `மிதிக்க’ வரும் சேவலுக்குத்தான் ஏகபோக மரியாதை. ஆண் பால், பெண்பால் எதுவாகினும் மரியாதை என்பது தேவையைப் பொறுத்தாகிறது பல நேரங்களில்.

வெளியே சத்தமிடும் கோழியின் வலி தன்னைப் பாடாய்ப்படுத்துவதாய் உணர் கிறாள் செம்பு. இரண்டு நாள்களாகப் கால் களை விரித்து வைத்து நடப்பது குறித்து இதுவரை யாரும் கேட்கவில்லையே என்றெண்ணி நிற்கிறாள். இரவு நடந்தது என அப்பாவிடம் எதைச் சொல்வது, எதை விடுப்ப தென தெரியாமல் நிற்கிறாள்.

பொன்.விமலா
பொன்.விமலா

``இன்னாம்மா.. இன் னாச்சு’’ என்கிறார் அப்பா இன்னொரு முறை. ``வீட்ல போட்ட நகையில ரெண்டு பவுன் நகையை காணோம்பா. யார் எடுத்ததுனு தெரில. மாட்ட அடிக்கிற மாதிரி அடிச்சிட்டாரு. கொழந்த யோட சேர்த்து வெளிய போடின்னு இழுத்துனு வந்து தள்ளி கேட்டை சாத்திட் டாருப்பா...’’ - ஓலமிட்டு அழுகிறாள் செம்பு. கோழிக் குத் தீனி வைத்து விட்டு வந்த சுப்புலட்சுமி `பக்’கென்று திரும்பிப் பார்க்கிறாள்.

``எந்த நகைடி? தாம்புச் செயினையா தொலைச்ச?’’ - பதற்றத்தோடு கேட்கிறாள்.

``ம்... ஆமா...’’

``சனியனே... சனியனே. முன்னயே பாஞ்சு பவுனு போட்டும், கொழந்த பொறந்ததுக்கு ஒண்ணும் செய்யலனு எங்க தாலிய அறுத்துனு இருந்தான். இப்ப நகையை வேற தொலச்சிக்கீற. அதான் அட்ச்சி தொரத்திக் கீறான்'’ - அம்மா பேசுவதை காதில் ஏற்றிக்கொள்ளவில்லை என்றாலும், அப்பாவிடம் சொல்ல முடியாத உண்மைகளை மனதில் புதைத்தபடி அறைக் குள் சென்று கதவைச் சாத்திக் கொண்டாள் செம்பு. நிலைக் கண்ணாடியை தரையில் வைத்துவிட்டு அதன் முன் தலைவிரி கோல மாய் உட்கார்ந்திருந்தாள். பாவாடையை கழற்றிவிட்டு தன்னால் பார்க்க இயலாத தன் உடம்பை கண்ணாடியில் பார்க்கிறாள். குழந்தை பிறந்தபோது தையல் போட்ட இடமெல்லாம் இப்போதுவரை ரணம் ஆறாமலே சீழ்ப்பிடித்து வீங்கியிருக்கிறது. மெதுமெதுவாகச் சீழ் ஒழுகுவதை கண்ணாடி காட்டுகிறது. அப்பாவிடமும் அம்மாவிடமும் சொல்ல முடியாத இந்தக் காயத்தை கண்ணீ ரோடு விழுங்கிக் கொண்டிருக்கிறாள். அவள் அவஸ்தையைச் சொல்ல இனி கண்ணாடிக்குத் தான் வாய் முளைக்க வேண்டும்.

கண்ணீரோடு வலிக்கு எண்ணெய் வைத்துக் கொண்டிருக்கிறாள் செம்பு. சட்டென கதவைத் திறந்து உள்ளே வருகிறாள் சுப்புலட்சுமி.

- தொடரும்...