
பிறந்த வீட்டில் செம்புவுக்குப் போட்ட 15 பவுனையும் அடகு வைத்தானா... இல்லை விற்றுக் குடித்தானா தெரியவில்லை. கடைசி யாக, அவன் கழுத்தில் போட்டிருந்த 2 பவுன் தாம்புச் சங்கிலியையும் காணவில்லை
கண்கொண்டு பார்க்க முடியாத தன் காயங் களுக்குக் கண்ணீரோடு எண்ணெய் வைத்துக் கொண்டிருக்கிறாள் செம்பு. சட்டென கதவைத் திறந்து உள்ளே நுழைகிறாள் அம்மா சுப்புலட்சுமி. பாவாடையைக் கழற்றி வைத்து விட்டு நிர்வாணக் கோலமாய் இருக்கும் மக ளைப் பார்த்து சலனம் ஏதுமின்றி, எதையோ தீவிரமாகத் தேடிக்கொண்டிருக்கிறாள்.
``ஏய்... அப்டிக்கா நவுந்து போயி துணி மாத்து. இங்கதானே வச்சேன்... காலு கீலு மொளச்சி போயிருக்குமா?’’ - செம்பு உடை மாற்றிக்கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டு, தைல புட்டியைத் தேடிக்கொண்டிருக் கிறாள் சுப்பு. செம்புவைக் கொஞ்சம் உற்றுக் கவனித்திருந்தால்... அவளுடைய தொடை இடுக்கின் வீக்கத்தைப் பார்த்திருக்கலாம். கொஞ்சம் தன் நாசித் துவாரங்களை ஒரு நிலைப்படுத்தியிருந்தால், காயங்களிலிருந்து கசிகின்ற சீழ் நாற்றமாவது செம்புவின் கொடூர இரவை சுப்புவுக்குக் கடத்தியிருக்கும்.
``ஊர்ல ஆம்படியான், பொண்டாட்டி யார்க்குதான் சண்ட சச்சரவு இல்ல. அட்ச் சாலும் ஒட்ச்சாலும் நான்லாம் இந்த ஆம்பள கிட்ட இத்தினி வருசமா குப்பக் கொட்டல? வெளில சொன்னா வெக்கக்கேடு’’ - தைல புட்டி கையில் சிக்க, செம்புவைத் திட்டிக் கொண்டே வெளியேறினாள் சுப்பு.
`டொப்... டொப்’ என விறகு வெட்டும் சத்தம் வெளியில் கேட்கிறது. கத்தியில் சிக்கி துண்டுத்துண்டாய் விழும் விறகைப் போல், மகள் கொண்ட துயரம் தன்னை துண்டாய் வெட்டுவதாய் உணர்கிறார் செம்புவின் அப்பா. என்னவோ நடந்திருக்கிறது, ஆனால், தன்னிடம் சொல்லாமல் அழுகிறாள் மகள் என்று அவருக்குத் தெரிந்திருக்கிறது. லுங்கி யைக் கட்டிக்கொண்டு பேக்கடைப் பக்கமாய்ப் போய் உட்கார்கிறார். மயான அமைதியாய்க் கிடக்கிறது வீடு.
யாரிடமாவது சொல்லி அழ வேண்டும் போல் இருக்கிறது செம்புவுக்கு. கண்ணாடி யைப் பார்க்கிறாள். ரசம் பூசிய கண்ணாடிக்கு, ரணத்தின் தோற்றத்தைத்தான் காட்டத் தெரி யும். வலியைக் கூடவா காட்டிவிட முடியும்? அவளுக்குள் நினைவுகள் அலை பாய்கின்றன.
‘` ****** வலிக்குது வலிக்குதுனு திரும்புற. சொல்றீ... எனக்கு முன்னாடி யார்னா வந்து போனாங்களா? சொல்றீ... எத்தினி பேரு?’’ - படுக்கையறையிலிருந்து செம்புவின் தலை முடியைப் பிடித்து தரதரவென்று இழுத்து வந்து ஹாலில் நிற்க வைத்து விசாரணை நடத்துகிறான் சேகர்.

மின்விசிறியின் வேகம் புயலாகப் பாய்ந்து பொச்சாகப் பறந்த தலைமுடி, அவன் கைகள் விட்டுப் பறந்து சிறிய பறவையின் கூடுபோல் குவிந்து சுழன்று கதவிடுக்கில் சிக்கிக்கொண்டது. அந்த அரக்கன் முன் நிராயுதபாணியாக நிற்பது செம்புக்கு இது முதல்முறை அல்ல என்றாலும், பச்சை உடம்பு இப்போது அதிகம் படுத்தி எடுக்கிறது.
அடி விழுந்துகொண்டே இருக்க, ``யாரும் இல்லீங்க’’ என்று விம்முகிறாள்.
``பொண்டாட்டினா... கூப்ட்ட நேரத்துக்கு படுக்கணும்டி. இதெல்லாம் உங்காத்தாகாரி உனக்கு சொல்லிக்குடுக்கலியா?’’
கண்ணீரை மட்டுமே பதிலாய் வழிய விடு கிறாள். அவனுக்கோ போதை இன்னும் தலைக்கேறிக் கொண்டிருந்தது.
`என்னை கட்டிக்கிட்டா என்ன கொறஞ்சா போயிருவே?’ என்று துரத்தித் துரத்தி கெஞ்சிக் கேட்டு கல்யாணம் செய்து கொண்டவன், இப்போது இப்படி பேசுகிறானே என்று மனம் குமுறுகிறாள் செம்பு.
`ஊர்ல அவனவன் பொண்ணு குடுக்க க்யூல நிக்கிறாண்டி. பிச்சக்கார குடும்பத்துல போயி பொண்ண எடுத்தன் பாரு... என் புத்திய செருப்பால அடிக்கணும்’ என்று இப்போதெல்லாம் அடிக்கடிச் சொல்லித் திரிகிறான். இத்தனைக்கும் சொந்த வீடு, கார் என்று எதுவுமே இப்போது அவனிடம் இல்லை. முன்னொரு காலத்தில் எல்லாமுமே அவனுக்காக இருந்தன. சொந்த வீடு, கார், பஜாரில் சொந்தமாய் காலணி ஷோரூம், கை தட்டினால் வந்து நிற்கும் பணியாட்கள், தாங்கு தாங்கு எனத் தாங்கிய குடும்பம்... எது வுமே இப்போது இல்லை. செம்புவைப் பெண் கேட்டு வந்தபோது, இதுதான் அவனுடைய உண்மையான நிலைமை.
செம்புவைத் திருமணம் செய்வதற்கு முன் பாக, தன் சாதி அல்லாத வேறு ஒரு சாதிப் பெண்ணுடன் பழக்கமாக இருந்தான் சேகர். கல்யாணம் கட்டிக்கொள்ளாமலே அவ்வப் போது வீட்டுக்கு அழைத்து வந்து கும்மாளம் போட்டுக்கொண்டிருந்தான்.
``நம்ம சாதி எங்க, அவ சாதி எங்க... அவளைக் கொண்டாந்து உன் புள்ள அடிக்கிற கூத்துக்கு வெளில தல காட்ட முடில. நாளிக்கு மட்டும் அவன் அந்த சனியன் புட்ச்சவளை கூட்டினு வந்தான்னு வையி... பொணமா போயிருவ ஆமா’’ - சேகரின் காதுகளில் விழும்படி, அவன் அம்மாவிடம் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார் அவனுடைய அப்பா.
பெண்தானே எல்லாவற்றுக்கும் இளக் காரம். ஆண் தவறாக வளர்ந்தாலும், பெண் தவறாக வளர்ந்தாலும் பாவம் போய்ச் சேர்வது அம்மாக்களிடம்தானே. இரண்டும் நன்றாக வளர்ந்தால் பங்கு மொத்தமும் அப்பாக்களிடம் என்கிற நம்முடைய கலா சார கோட்பாட்டிலிருந்து, இந்தக் குடும்பத் துக்கும் விதிவிலக்குக் கிடைக்கவில்லை. கலா சார காவலர்களாகவே மாற்றப்பட்டுவிட்ட பெண்களும் மறுபேச்சு பேசுவதில்லை.
பார்களில் குடித்துவிட்டுப் பணம் கொடுக் காமல் போதையில் வந்து வீட்டில் விழுவான். பார் மேனேஜர்கள் பணம் கேட்டு வீட்டுக்கு வந்து நிற்பார்கள். குடும்ப மானத்தைக் காப் பாற்றுவதற்காக... கையிலிருக்கும் தங்க வளையல்களை, வைர மோதிரங்களை அவர் களிடம் கழட்டிக் கொடுத்து செட்டில் செய்து அனுப்புவாள் சேகரின் அம்மா. அதை யெல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டே தான் இருப்பார் அப்பா. பையன் குடிப்பதோ, பெண்ணொருத்தியோடு கூத்தடிப்பதோ அப்பாவுக்குப் பிரச்னை யில்லை. சாதிக் குறைச்சலான பெண்ணோடு சொந்தபந்தம் அறிய கும்மாளம் போட்டுக் கொண்டிருக் கிறான் என்பதுதான் பிரச்னையே.
சேகர் திருந்துவதாய் இல்லை. சொந்தச் சாதியில் அவனுக்கு யாரும் பெண் கொடுக் கவும் தயாராக இல்லை. ஏழை வீட்டுப் பெண் ணாக இருந்தாலும் பரவாயில்லையென்று சொந்த சாதியில் பெண்ணெடுக்க நினைத்து சேகர் வீட்டார், செம்புவை ஒரு தரம் பெண் கேட்டு வந்தார்கள்.
``கஞ்சி குடிச்சாலும் கௌரவமா குடிக் கணும். சாதிவுட்டுப் போனவன் குடும்பத்துல தான் யாராவது பொண்ணு குடுப்பாங்களா. நாங்க அவ்ளோ எளக்காரமா போயிட்டமா?’’ என்று காபித்தண்ணிகூட கொடுக்காமல் திருப்பி அனுப்பினாள் செம்புவின் அம்மா.
சொந்தச் சாதியில் பெண் தேடித் தேடியே ஓய்ந்துபோன அவன் அம்மாவும் அப்பாவும் பின்னொருநாளில் வாட்டர் ஹீட்டர் ஷாக் அடித்து ஒரே நேரத்தில் மரணித்தார்கள் என்றும், சேகருடன் பழக்கமாக இருந்த அந்தப் பெண், எங்கோ ஓடிவிட்டாள் என்றும் ஊரெல்லாம் அரசல் புரசலாகப் பேசிக் கொண்டார்கள். பெற்றோர் ஒரே நேரத்தில் இறந்துபோனது... காதலி காணாமல் போனது என்கிற கவலைகள் துளியும் இல்லாமல், பெற்றோர் சேர்த்து வைத்திருந்த ஆஸ்தியைக் கரைத்து சுகங்காணுவதையே இலக்காக்கிக் கொண்டான் சேகர்.
பரம்பரை பணக்காரன் என்பதால், அவ னுடைய குடும்பத்தாரிடம் காலகாலமாக கூஜா தூக்கி தேர்தல் நேரத்தில் நிதியுதவி வாங்கிய அரசியல்வாதிகள், வாங்கித் தின்ற விசுவாசத்துக்கு இன்றுவரை அவ்வப்போது தாங்கிப்பிடிக்கிறார்கள். காலச்சக்கரம் அதி வேகமாய்ச் சுழன்றது. சொந்தமாய் இருந்த வீடு, கார், சொத்துபத்தெல்லாம் விற்றுத் தீர்த்துக் குடித்து முடித்தபின், தனிக்கட்டை யாக வாடகை வீட்டில் தங்கினான். யாரு மற்றவன் என்பதே அவனுக்குக் கூடுதல் தகுதியாகிப்போனது. இன்னும் தறுதலையாக ஊரை வலம்வந்தவன், உச்சாணிக்கொம்பில் ஏறிக்கொண்டு ஊரையே மிரட்ட ஆரம்பித் தான். இவனுடைய உதவி தேவைப்பட்டவர்கள் ஊற்றிக்கொடுத்து ஊக்குவிக்க ஆரம்பித் தார்கள். கட்டப் பஞ்சாயத்து, கந்துவட்டி வசூலுக்கெல்லாம் சேகர்தான் தலைமை. குடியும் குடிசார்ந்த தொழிலுமாகத் தன் திணைக்களத்தை வலுவாக்கிக்கொண்டான்.
அரசியல்வாதிகளிடம் சேகருக்கு இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி, தற்போது அவன் கையிலெடுத்திருக்கும் அண்டர் கிரவுண்ட் வேலைகளுக்காக பெட்டிகளைப் புரட்டும் பெருந்தலைகள் பலரும் அவனுடன் நெருக்கமாக ஆரம்பித்தார்கள். பங்காளி களாவும் மாறிப்போனார்கள்.
அப்பன், ஆத்தாள் இருந்தபோதே கேள்வி கேட்க முடிந்ததில்லை. இப்போது, தனிக்காட்டு ராஜா. சரக்குக்கும் சைடிஷ்ஷுக்கும் கும் மாளம் அடிக்கும் அடியாட்கள்தான் சுற்றம் சூழ குழுமியிருந்தனர். அவர்களை மட்டுமே தன்னுடைய நண்பர்கள் என்று ரொம்பவே நம்பிக்கொண்டிருக்கிறான் சேகர்.
`` *****ஞ் அவ்ளோ பெரிய ஆளாடா நீ... உன் பொண்டாட்டி தாலியை அறுத்துரு வேன்டா போசடிக்கே!’' - வட்டி வசூலுக்குப் போகும்போது அடித் தொண்டையிலிருந்து கத்தி சேகர் ஒரே ஒரு கூப்பாடு போட்டால் தெருவே நடுங்கும். கூடவே இருக்கும் கூட்டாளிகளும் `******ல’ என்று கோரஸ் பாடினால், கூடுதல் குலை நடுக்கம்தான். கடன் வாங்கியவர்கள் குடும்பத்தோடு நடு நடுங்கி நிற்பார்கள். அவர்களுடைய வாயி லிருந்து வந்து விழும் வார்த்தைகள் அத்தனை யுமே கிட்டத்தட்ட ‘பீப்’ ஒலி எழுப்பி மறைக்கப்பட வேண்டியவையாகவேதான் இருக்கும். கைநீட்டி காசு வாங்கியவனை நடுரோட்டில் புரட்டுப் புரட்டு என்று புரட்டி எடுத்துவிட்டு, ரோட்டுக் கடையில் கூடி பரோட்டா சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள்.
பெற்றோர் மறைவுக்குப் பிறகு சொத்தை யெல்லாம் இழந்து, தன்னிடம் எதுவுமில்லை என்பதை நம்ப முடியாமல் தனக்கானக் கோட்டையை, தனக்கான சாம்ராஜ்யத்தை எந்த விலை கொடுத்தும் உருவாக்க நினைக் கிறான் சேகர். அதுவே, அவனை ஒரு மத யானையாக மாற்றி வைக்க, கண்முன் நிற்கும் யாரையும் வெறிகொண்டு தொழிலாகவே மாற்றிக்கொண்டுவிட்டான். முழுமையாகத் தெரிந்துகொள்ளாமல் வாக்கப்பட்ட செம்பு, அவன் கொலைப்பசிக்கு சிக்கிய சிறு சோளப் பொரியாய் நொறுங்கிக் கொண்டிருக்கிறாள்.
``உங்கப்பன் ஒரு பிச்சக்காரன்டி. அந்தாளு போட்ட பாஞ்சு பவுன்லதான் சோறு தின்றனு நினைச்சுனு கீறயா? என் அந்தஸ்து இன்னான்னு ஊர்ல கேட்டுப் பாருடி. ச்சும்மா பாத்தாவே அவனவென் மூத்திரம் பேஞ்சிருவான். உங்கப்பனுக்கு எவ்ளோ ராங்கு இருந்தா கொழந்த பொறந்ததுக்கு கால் காசுகூட சீர் செய்யாம, தெனாவட்டா சுத்தினு இருப்பான்?’’ - செம்புவின் தாலிக் கொடியை இழுத்து, முகத்துக்கு நேராக காரி உமிழ்ந்து கேட்கிறான். மதுவாடை குப்பென்று அவள் மூக்கில் ஏறுகிறது.
பிறந்த வீட்டில் செம்புவுக்குப் போட்ட 15 பவுனையும் அடகு வைத்தானா... இல்லை விற்றுக் குடித்தானா தெரியவில்லை. கடைசி யாக, அவன் கழுத்தில் போட்டிருந்த 2 பவுன் தாம்புச் சங்கிலியையும் காணவில்லை. போதையில் இருக்கும்போது எவனாவது கழட்டிக்கொண்டு போயிருக்கலாம். இவனே கூட விற்றுத் தின்றிருக்கலாம்.
`பளிச் பளிச்’சென அறை கிறான். செம்புவின் தலை முடியைப் பிடித்திழுத்துப் படுக்கையில் தள்ளுகிறான். வலி தாங்காமல் கதறி அழுகிறாள். சுகப்பிரசவம் தான். ஆனால், குழந்தை வெளி வருவதில் சிக்கல் ஏற்படவே, பிறப்புறுப்பைக் கீறி, தையல் போட்டிருந் தார்கள். காயம் ஆற ஒரு மாதம் ஆகுமென்றும், அது வரை தாம்பத்யம் கூடாது என்றும் அறிவுறுத்தி அனுப்பியிருந்தார்கள் மருத்துவர்கள். ஆனால், சொன்னால் புரிந்து கொள்கிற நிலைமையில் சேகர் எப்போதுமே இருந்ததில்லை.
``பச்சப்புள்ளக்காரி... வூட்டுக்கு அனுப் புப்பா. தீட்டெடுத்து அனுப்புறோம்’’ என்று செம்புவின் அம்மா கேட்டுக்கொண்ட தற்காகவும், நசநசவென்று குழந்தை அழுது கொண்டே இருந்ததாலும், பிரசவக் காயத்தால் நிற்க, நடக்க, அமர, படுக்க முடியாமல் செம்பு பட்ட சிரமங்களைப் பார்ப்பது அவனுக்கு எரிச்சலாக இருந்ததாலும் அம்மா வீட்டுக்கு அனுப்பியிருந்தான். ஆனால், சரியாக ஏழாவது நாளே திரும்ப அழைத்துக்கொண்டு விட்டான். அவனால் குடி இல்லாமலும் பெண் இல்லாமலும் தூங்கவே முடியாது. குடித்துவிட்டு வந்ததும், வன்புணர்வு செய்தால் தான் தூக்கமே வரும்.
பிறப்புறுப்பில் தையல் போட்ட ரணம் ஆறாமல், மேலும் மேலும் காயமாகி வலியால் துடிக்கிறாள் செம்பு. ஒரு மாதத்தில் ஆற வேண்டிய காயம், இரண்டு மாதங்கள் ஆகி யும் சீழ்கோத்துக் கிடக்கிறது. மரண வலியால் அனுதினமும் துடிக்கிறாள்.
அன்றிரவு... குழந்தைக்குப் பாலூட்டிக் கொண்டிருக்கிறாள். அதைக்கூட உணராமல் தரதரவென்று இழுக்கிறான். வைத்த வாய் விலகாது கத்தி அழுகிறது குழந்தை. சிறு கருணையும் இல்லாமல் படுக்கைக்கு அவளை இழுக்கிறான். அவளுடைய பிறப்புறுப்பின் ரணம்காரணமாகத் தனக்கு ஏதும் பிரச்னை வந்துவிடக் கூடாது என்பதற்காக போதை யிலும் ஆணுறையை அணிகிறான். செம்பு, வலியால் அவனை தள்ளி விட்டு எழுந்து ஓடுகிறாள். ஆக்ரோஷமான சேகர், மீண்டும் மீண்டும் இழுத்து வந்து ஒரு காட்டுமிராண்டி யைப் போல் வன்கொடுமை செய்கிறான். வலி ஒருபுறம். தாயின் மார்பைக் காணா மல் தேடித் தேடி பசிக்கு அழும் குழந்தை இன் னொருபுறம். உள் ரணமும் வெளி ரணமும் தாங்காது மீண்டும் அவனைத் தள்ளி விட்டுக் குழந்தையைத் தூக்குகிறாள். ஒரு கொடிய பேயிடம் சிக்கி விட்ட சிறுஉயிராய் நடுக்கத்துடன் அலறி அழுகிறாள்.

``என்னடி கத்தி ஊரைக் கூட்றயா? வந்து பட்றீ.'’
``என்னால முடில...’’
``இன்னாடி முடில. ஒரே ஒரு புருசனுக்கே முடியலயா?’’
``நான் இல்லாதப்ப எவன்டி வந்து போறான்? எனக்கு முன்னாடி அவன முடிச்சு அனுப்பிட்டியா?’’ - வாய்க்கு வந்ததெல்லாம் பேசியபடியே ஆணுறையைக் கழற்றி அவள் முகத்தில் வீசி எறிகிறான். பைத்தியக்காரன் போல் அவள் ஆடையை இழுத்துக் கிழிக் கிறான். ஓலமிட்டபடி அறை முழுக்க ஓடியதில் சிராய்ப்புகள். ரத்தத் துளிகள் அறையில் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன. ஓடி வந்து தன் குழந்தையைத் தூக்கி மார்போடு அணைக் கிறாள். குழந்தைக் காகக்கூட பரிதாபப்படாமல், செம்புவின் கழுத்தைப் பிடித்திழுத்து வாச லுக்கு வெளியே தள்ளி கதவைச் சாத்தித் தாழிடுகிறான்.
மேகம் தாங்கிய வானம், இடி இடித்துக் கதறிய அந்தக் கொடூர இரவில்தான், காவல் நிலையம் வரை செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் அவளுக்கு உருவானது. நடந்ததையெல்லாம் பட்டவர்த்தனமாக யாரிடமும் சொல்ல முடி யாத மனப்பூட்டு அவளை விம்ம வைக்கிறது.
சேகர் ஜெயிலில் அடைக்கப்பட்டு இரண்டு நாள்களாகிறது. குடியும் இல்லாமல், கூட படுக்க ஒரு பெண்ணும் இல்லாமல் எப்படி இருப்பானென்று யோசித்துப் பார்க்கிறாள். இன்னும் 15 நாள்கள் கழித்து ஜாமீனில் வெளியில் வந்தால் என்ன நடக்கு மென்று பயந்து நடுங்குகிறாள். அன்று உத விக்கு வந்த நண்பர்களை மீண்டும் மீண்டும் தான் தொல்லை செய்யாமல் இருக்கும்படியான சூழல் நிலவவேண்டுமென மனதுக்குள் மருகுகிறாள்.
``பொட்டப் புள்ளைய இப்டியா வளக் குறது... பொண்ணா பெத்து வச்சிருக்க... அடக்க ஒடுக்கமா செத்துப் போயிருந்தாகூட பொணத்தை எடுத்து பொதச்சிட்டு போயிருப் பமே... உம் பொண்ணு இப்டி வந்து பண்ணி வச்சிருச்சே’’ என்று கத்தியபடியே சுப்புவின் தம்பி, வீட்டுக்குள் நுழைகிறார்.
கல்யாணத்துக்கு வந்து அட்சதைகூட தூவாத தாய்மாமன், இப்போது வந்து ஏன் சுட்டெரிக்கும் வார்த்தைக்களைத் தூவி கதறிக்கொண்டிருக்கிறார் என்று, பூட்டிய அறைக்கதவுக்குப் பின்னிருந்தபடியே காது களைக் கூர்மையாக்குகிறாள் செம்பு.
``சேகர் மேல போட்ட கேஸை வாபஸ் வாங்கிருங்க. இல்லாட்டி அவன் நம்ப குடும் பத்துல ஒரு ஆளைகூட விடாம போட்டுத் தள்ளிருவான். இப்பதான் அவன் அடியாளுங்க நாலு பேரு எங்க வூட்டாண்ட வந்து தெவுசா, அண்டா குண்டான் எல்லாத்தையும் தூக்கிப் போட்டு மெரட்டிட்டுப் போயிருக்கானுங்க’’ - பதற்றம் குறையாதவராகப் பேசிவிட்டு வந்த வேகத்தில் கிளம்புகிறார் தாய்மாமன்.
தன்னை ஜெயிலில் சந்தித்துப் பிரியாணி பொட்டலங்கள் வாங்கிக் கொடுத்தவர்களிடம் அசைன்மென்ட் கொடுத்திருக்கிறான் சேகர். குடித்த குடிக்கு வாலாட்ட வேண்டுமென்று செம்புவின் உறவினர்களைத் தேடித் தேடி மிரட்டுகிறார்கள்.
இரண்டு பேர் வாட்டம் சாட்டமாக முழு போதையில் வந்து, செம்பு வீட்டில் இறங்கு கிறார்கள். செம்புவின் தங்கைகள் மூவரும் அலறியடித்துக்கொண்டு வீட்டுக்குள் ஓடு கிறார்கள். ஒருவன் செம்புவின் அப்பாவை ஓங்கி ஓர் அறைவிட, சுருண்டு போய் ஒரு மூலையில் விழுகிறார். இரண்டாவது அடிக்கு அவள் அம்மாவை தேடிப் போகிறான் இன் னொருவன். சுப்பு சமையற்கட்டுக்குள் பயந்து ஓடுகிறாள். சத்தம் கேட்டு, உடையை அவசர மாக மாட்டிக்கொண்டு, செம்பு அலறியடித்து அறைக் கதவைத் திறக்கப்போக, கதவு வெளிப்பக்கமாகப் பூட்டப்பட்டிருக்கிறது.
``சாவி குட்றா கெழ *****.... அட்சே சாவடிச் சுருவேன்’’ - செம்புவின் அப்பாவை வாய்க்கு வந்ததெல்லாம் திட்டி, பூட்டிய அறையின் சாவியைக் கேட்கிறான் ஒருவன். பேக்கடைப் பக்கமாக ஓடியவர், தன் ஜோபியில் இருந்த சாவியை எடுத்துப் பதற்றத்துடன் கிணற்றில் வீசுகிறார். துரத்திக்கொண்டு போனவன், கிணற்றடியில் இருந்த கட்டுக்கல்லைக் கையி லெடுக்கிறான். `அய்யோ... எங்கப்பாவை விட்டுடுங்க’ என்று கத்திக்கொண்டே கிணற் றடிக்கு ஓடி வருகிறாள் பவானி. அவன், அப்பாவைத் தாண்டி, செம்பு இருக்கும் அறை நோக்கி கையில் கல்லோடும் கண்களில் கொலைவெறியோடும் பாய்கிறான்.
- தொடரும்...