Published:Updated:

அவளுக்கொரு வானம் - 8 - லைவ் தொடர்கதை

அவளுக்கொரு வானம்
பிரீமியம் ஸ்டோரி
News
அவளுக்கொரு வானம்

நடுராத்திரில வந்து ஸ்டேஷன்ல கம்ப் ளெயின்ட் எடுக்கச் சொல்லி, எஸ்.பி சார் வரைக்கும் போயி பிரச்சன பண்ணுவீங்க. இப்ப வந்து வாபஸ் வாங்கறேன்னு நாலு பேரை கூட்டிட்டு வருவீங்க.

செம்பு இருந்த அறையை நோக்கி கையில் கட்டுக்கல்லோடு வந்தவனை இழுத்துப் பிடித்தார் ஜோதிலிங்கம். ``ஏம்பா… இன்னா இது அக்குரமமா இருக்கு. குடும்பம்னா பிரச்சன கிரச்சன இருந்துனுதான் இருக்கும். அதுக்கொசரம் ஆள கீழத் தள்ளி வுட்டு… இன்னா வேலயிது?’’ - ஜோதிலிங்கம் பக்கத்து வீட்டுக்காரர். சத்தம் கேட்டு ஓடி வந்தவர் அடி யாளை இழுத்துவந்து தெருவில் தள்ளினார். கூட்டம் கெஜகெஜ வெனக் கூடியது. பூண்டு நறுக்கத் தோதாய் இருந்த குழிக்கல்லைக் கொண்டுவந்து பூட்டை உடைத்துக் கொண்டிருந்தார் செம்புவின் அப்பா. கதவைத் திறந்ததும் `ஓ’வென்று கத்தியபடி தன் அப்பாவைக் கட்டிக் கொள்கிறாள் செம்பு. தங்கைகள் மூவரும் ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டு அழுது உட்கார்கிறார்கள்.

இந்தப் பக்கம் கொஞ்சம் ஆறுதல் சொல்லி, அந்தப் பக்கம் கொஞ்சம் புரணி பேசி என செம்பு வீட்டின் முன் நின்றுகொண்டிருந்த தெரு சனம், அடியாட்கள் போனதும் தாங்களும் கலைந்து போனார்கள். தலைப் பாகைக் கட்டிய ஒருவன் வெத்தலைப்பாக்கு வாங்கப் போன பொட்டிக்கடையில் நின்று கொண்டு ஜோபியில் கொஞ்சமும் வாயில் கொஞ்சமுமாய் சில்லறையைப் பொறுக்கிக் கொண்டிருந்தான். ``கேட்டியாடா தொர வூட்டு கதய்ய்ய’’ என்று ராகம் பாடி, செம்புவின் அப்பாவை சற்றுமுன் ஒருவன் தள்ளிவிட்டுப் போன கதையை விலாவாரியாக விளக்கிக் கொண்டிருந்தான். வெற்றிலையை மென்று `புளிச்... புளிச்’ என்று துப்புகிறபோது ஊரான் வீட்டுக் கதையையும் சேர்த்துத் துப்பிக்கொண்டிருந்தான்.

அவளுக்கொரு வானம் - 8 - லைவ் தொடர்கதை

செம்பு வீட்டின் முன்வாசல் முழுக்கவும் மரமல்லிப் பூக்கள் உதிர்ந்துகிடந்தன. அதன் வாசத்தைத் தெருவெங்கும் கடத்திப்போன மென்தென்றலை தெரு சனத்தின் நாசி கண்டு கொள்ளவில்லை. தங்கள் வாயையும் காது களையும் பெப்பரப்பேவென்று திறந்து வைத்து அதில் செம்புவைப் போட்டு உலக்கையால் குத்திக் கொண்டிருந்தார்கள்.

``பசிக்குதுக்கா’’ என மெதுவான குரலில் கல்பனாவை இழுக்கிறாள் பவானி. வீட்டில் உலை வைக்காமல் போட்டது போட்டபடி கிடக்கிறது சமையல்கட்டில். இழவு வீட்டில் அழுதபடி கிடப்பவர்களுக்கு வருவோர் போவோர் யாராவது முகவாயைப் பிடித்து டீத்தண்ணி ஊத்திவிட்டுப் போவதுபோல், காலையில் மூன்றாவது வீட்டு எளச்சியம்மாள், செம்பு வீட்டுக்கு வந்து கொஞ்சம் பானகம் கலக்கி லோட்டாவில் ஊற்றி கை களில் கொடுத்துவிட்டுப் போனதுதான் எல்லோருக் கும் வயிற்றை நனைத்திருந் தது.

``காத்துக் கருப்பு அண்டி யிருக்கும்டி சுப்பு. புள்ளைய தீட்டு எடுத்து அனுப்புறப்ப, ஆத்த கீத்த தாண்டி கூட்டினு போனயா? காலங் கெட்டுக் கெடக்குனு சொன்னா எவ கேக்குறா… வெல்லத்தை நசுக்கி எட்த்தாடி’’ - காலைப் பரப்பி உட்கார்ந்து கொண்டு எளச்சியம்மாள் கோமதியிடம் சொல்ல ஓடி போய் ஒரு கட்டி வெல்லத்தை கொண்டு வந்து பக்கத்தில் இருந்த செய்தித்தாள் மீது வைத்து, குழிக்கல்லால் `கும்… கும்’மென்று குத்துகிறாள். வெல்லக்கட்டி பொடியாகிப் போனபோது செய்தித்தாளும் பொத்தலாகத் துளையாகியிருந்தது.

``ஏ… புத்திக்கித்தி கீதாடி. வெல்லத்த நசுக்குன்னா… பேப்பரை நசுக்குறா பாரு’’ - எளச்சியம்மாள் கோமதியிடம் இருந்த செய்தித்தாளை வெல்லத்தோடு இழுத்துப் பிடுங்கி தூளை ஒரு குண்டானில் வழித்துக் கொண்டிருந்தாள். அந்தச் செய்தித்தாளில் இருந்த செம்புவின் முகமும் சேகரின் முகமும் பொத்தலாகிக் கிழிந்திருந்தன. குண்டானில் போட்ட வெல்லத்தோடு கொஞ்சம் மஞ்சளை யும் வேப்பிலையையும் சேர்த்துக் கலக்கி எல்லோரையும் குடிக்கச் சொல்கிறாள் எளச்சி. ``மடமடன்னு குடிச்சிட்டு வேலயப் பாருங்க… காத்துக் கருப்பு ஒன்னியும் இனி அண்டாது’’ என்று சொல்லிவிட்டு வாசல்படி தாண்டிப் போனவள் திரும்பவும் வீட்டுக்குள் வந்தாள்.

``ஏம்மே… சுப்பு. உனுக்கு ஆவாதவ எவளோ தான் சூனியம் வச்சிட்டு போயிருக்கா… எதுக்கும் வூட்டுக்கு எட்டு தெசையிலயும் குழி நோண்டி பாத்துருடி’’ - எளச்சியம்மா சொல் வதைக் கேட்டு பக்கென்று வாரிப்போடுகிறது சுப்பு.

``யார்க்கும் எந்த கொறை யும் வக்கிலீயே நானு. ஊட்ட வுட்டு போவனா… எவ பல்லுலனா விழுவனா… செல்லிமா தாயே கண்ணு இல்லியாடீ உனுக்கு’’ என்று ஒப்பாரி வைத்து அழுதழுது மூக்கைத் துடைத்தாள் சுப்புலட்சுமி. துக்கம் விசாரிப்பதுபோல் வரு வோர் போவோர்க்கெல் லாம் நடந்ததைச் சொல்லி அழுகிற துயரத்தை எந்த மகளும் தன் தாய்க்குக் கொடுத்துவிடக் கூடாதென மனம் கனக்கிறாள் செம்பு. தன்னால் இன்று தன் குடும்பமே தலைகுனிந்து அழுவதைப் பார்த்து புழுவாய்ச் சுருங்குகிறாள் வேதனையில்.

`பசிக்குது’ என்ற பவானியை பேக்கடைப் பக்கமாய் அழைத்துப் போய் ஒரு கொய்யாக் காயைப் பறித்துக் கொடுக்கிறாள் கோமதி.

அழுதழுது ரணமாகிச் சிவந்து போன மனிதர்களின் வலிகளுக்கு முன்னால் தன் சிவப்பைக் காட்டக் கூசியது வானம். தன் கறுப்பு மேகம் கொண்டு தானும் துக்கத்தில் பங்கெடுப்பதாய் அறிவிப்புச் செய்து பெரு மழையாய் பிளந்து தள்ளியது. பின் வானம் தன் இயல்புக்குத் திரும்பி வெளுத்திருந்த நேரம், செம்புவுக்குப் பிரசவத்துக்குப் பின்பான முதல் மாதவிடாய் வந்திருந்தது. முருங்கை மரத்தில் உட்கார்ந்துகொண்டு பூவைப் பிய்த்துக் கொண்டிருந்த அணில்கள் இரண்டும் திடீர் சண்டையிட்டு பொத்தென்று தரையில் விழுந்தன.

``காலங்காத்தால இதுக தொல்ல தாங்கல… ஒரு பூவு கூட பிஞ்சாவ வுடுறதில்ல…’’ என்று புலம்பிக் கொண்டே துடப்பக்கட்டையால் சருகு பெருக்கப் போன சுப்பு தன்னை யாரோ தெரு வாசப்படியிலிருந்து அழைப்பதைக் கேட்டு எட்டிப் பார்க்கிறாள்.

``யார்மா ஊட்ல?’’ என்றவாறே துண்டை உதறித் தோளில் போட்டபடி உள்ளே வந்தார் செல்லமுத்து. ஊர்த்தலைவர். நல்லது கெட்டது எது நடந்தாலும் தலைவருக்குக் கூப்பிட்டுச் சொல்ல வேண்டியது ஊர் சம்பிர தாயம்.

அவளுக்கொரு வானம் - 8 - லைவ் தொடர்கதை

``தொர எங்க போனாப்டி?’’ - தலைவர் வந்திருந்திருப் பதை அவர் குரல் கேட்டு அறிந்து ஒரு துப்பட்டாவை எடுத்து நைட்டியின் மீது போர்த்திக் கொண்டு வெளியே வருகிறாள் செம்பு. ஹாலில் படுக்கையில் இருந்த குழந்தை கைகால்களை ஆட்டிக் கொண்டு கண்களை உருட்டிக் கொண்டிருந்தது. குழந்தையையும் செம்புவையும் பார்த்தவர் ஏதும் பேசாமல், முந் தானையை மூக்கு வரை மூடிக்கொண்டு கண்கலங்கி நின்ற சுப்புவைப் பார்க்கிறார். பக்கத்தில் இருந்த சேரை இழுத்துப் போட்டு அவரை உட்காரச் சொல் கிறாள் செம்பு. ``இப்பதாண்ணா அவரு வெளில போனாரு. வூட்ல ஒரே பிரச்சன… நாங்க என்ன பாவம் பண்ணோம்னே தெரிலணா’’ - தலைவர் முன்பாக அழத் தொடங்கினாள் செம்பு.

``வுடு வுடு… யாரு வூட்லதான் பிரச்சின இல்ல. எல்லாக் காதையும் ஊர்ல பேசினுதான் இருக்காங்க. ஆனது ஆச்சி… போனது போச்சி. இப்ப அதப்பத்தி பேசி என்னாவப் போவுது. கேஸ வாபஸ் வாங்கினு அவன வெளில எட்த்து வுட்ருங்க. அதான் நல்லதுனு நாஞ்சொல்லு வேன்’’ - செல்லமுத்து சொல்வதை தொலைவில் நின்றவாறு கேட்டுக் கொண்டிருந்தாள் செம்பு.

``அவன உள்ள வைக்கணும்னு நெனச்சமா… எல்லாம் எங்க தலை யெழுத்துணா’’ - முந்தானையை எடுத்து கண்ணீர் துடைக்கிறாள் சுப்பு.

``இப்ப அழுது ஒண்ணும் ஆவப் போறதில்ல. தொர வந்தா நான் பேசிக்கிறன். சேகரு பண்ணது சரியா தப்பானு தெரியாது. நாளப்பற ஜெயில்ல கீறவன் வெளில வந்தா பொழுதன்னிக்கும் குடிச்சிட்டு வந்து உன் வூட்டாண்டதான் கலாட்டா பண்ணினு திரிவான். இப்பயே வெளிய எட்த்து வுட்டோம்னு வையி… பஞ்சாயித்து பண்ணி பிரச்சன பண்ணாம பாத்துக்கலாம், இன்னா சொல்ற?’’ - செல்லமுத்து பேசுவதை கேட்கத்தான் முடியும். சுப்பு அமைதியாய் தலையாட்டி நிற்கிறாள்.

``செம்பே… துணி மாத்தினு வா. ஸ்டேஷனுக்கு போயி எழுதிக் குடுத் துட்டு வந்துறலாம். அப்பால நடக் குறது ஆண்டவன் வுட்ட வழி. கிளம்பு நான்கீறன்’’ - செம்புவிடம் அபிப்ராய மெல்லாம் கேட்கவில்லை. இதுதான் தீர்வென்று சொல்லி செல்லமுத்துவும், சாட்சிக் கையெழுத்துப் போட்ட சிலரும் கூட்டாய் சேர்ந்து அவளை ஸ்டேஷனுக்கு அழைத்துப் போகி றார்கள். சேகர் வைத்த வக்கீல் ஸ்டே ஷனில் காத்திருக்கிறார். தயாராக எழுதிவைத்த தாளை செம்புவிடம் கொடுத்து கையெழுத்துப் போடச் சொல்கிறார்கள்.

செம்புவுக்கு மனசு ஏதோ சொல்கிறது. ``அப்பா வரட் டும் பெரிப்பா’’ என்கிறாள்.

``தொரகிட்ட நான் பேசிக்கிறேன். அதெல்லாம் ஒண்ணுஞ் சொல்ல மாட் டாருமா’’ என்று இழுத்துக் கொண்டு போகிறார்கள். ஸ்டேஷனில் இருந்த காவலர் அனுபமா, செம்புவை ஏற இறங்கப் பார்க்கிறாள்.

``நடுராத்திரில வந்து ஸ்டேஷன்ல கம்ப் ளெயின்ட் எடுக்கச் சொல்லி, எஸ்.பி சார் வரைக்கும் போயி பிரச்சன பண்ணுவீங்க. இப்ப வந்து வாபஸ் வாங்கறேன்னு நாலு பேரை கூட்டிட்டு வருவீங்க. இதுக்குத்தான் மேடம் உடனே கம்ப்ளெயின்ட் எடுக்காம வெயிட்டிங்ல போடறது'’ - அனுபமா அன்றிரவு உடனே வழக்குப் பதிவு செய்யாமல் போன காரணம் குறித்து செம்புவிடம் நக்கலாகக் குத்திப் பேசுகிறாள். தலைகுனிந்து நிற்கிறாள் செம்பு. வக்கீலுக்கும் அனுபமாவுக்கு மிடையே வாதம் நடக்கிறது.

`தவறு செய்தவரை தண்டிப்பதை விட மன்னிக்கும்போது அவர் திருந்த வாய்ப்பிருக்கும்’ என்று எப்போதோ தன் நன்னெறி பாட டீச்சர் சொல்லிக் கொடுத்ததை ஞாபகத்துக்குக் கொண்டு வருகிறாள் செம்பு. சேகரை மன்னிப்பதால் தன் குடும்பம் மொத்தமும் அடுத்தடுத்த பிரச்னைகளில் இருந்து காப்பாற்றப்படும் என்று நினைக்கிறாள். இந்தப் பிரச்னை இதோடு முடிந்து போனால் சேகர் தன்னை இனி தொந்தரவு செய்யாமல், அவனுண்டு அவன் வேலையுண்டு என விவாகரத்து கொடுத்துவிட்டு வேறொரு வாழ்க்கையில் பயணப்பட ஆரம்பித்து விடுவான் என்றெல்லாம் சேகரின் எதிர்காலம் குறித்து தன் மனத்திரையை விரித்து வைக்கிறாள். சேகரை அவள் திட்டமிட்டு சிறைக்கு அனுப்பவில்லை. அவன் செய்த தவறுக்குத்தான் அவன் சிறைக்குச் செல்ல வேண்டுமென காலமே தீர்ப்பெழுதியிருக்கிறது. இதில் செம்புவின் தவறு ஏதுமில்லை யென்றாலும், சேகரிடம் நடந்ததைச் சொல்லி அவன் செய்த தவற்றை சுட்டிக்காட்ட நினைக்கிறாள். அந்த அர்த்த ராத்திரியில் கைக் குழந்தையோடு காவல் நிலையம் வரை வர வேண் டிய தன் சூழலை அவனிடம் சொல்லிவிட்டு, அந்த நிகழ் வுக்குத் தான் பொறுப் பில்லை என்றாலும் மனி தாபிமான ரீதியில் அவ னிடம் ஒரு மன்னிப்பையும் கேட்டுவிட நினைக்கிறாள். `எல்லாம் பேசி முடித்த பின் ஒரு பெரிய கும்பிடு போட்டு ஒரேயடியாய் அவனை விட்டுக் கிளம்ப வேண்டும். இனி காலம் காட்டுகிற வழியில் குழந்தையை சுமந்துகொண்டு மிகக் கவனமாய் ஓட வேண்டும்’ என மனதுக்குள் ஏதேதோ நினைத் துக் கொண்டு கொடுத்த தாளில் கையொப்ப மிட்டுவிட்டு அங்கிருந்து கிளம்புகிறாள். ஸ்டேஷனில் இருந்த மரங்களில் அமர்ந்திருந்த காக்கைகள் வட்டமிட்டுக் கரைந்தன. செல்ல முத்துவும் உடன்வந்தவர்களும் அவளை வீட்டுக்கு அழைத்துப் போனார்கள்.

அவளுக்கொரு வானம் - 8 - லைவ் தொடர்கதை

ஸ்டேஷனில் நடந்த கதையை செம்பு தன் அப்பாவிடம் சொல்லும்போது இரவு நிலவு பாதியாய்த் தேய்ந்திருந்தது.

``சேகர் ஜெயிலுக்குப் போய் நாளையோட அஞ்சு நாளு. நாளைக்கு வந்துருவான்லம்மா?"

``ஆமாம்பா… நானும் அங்க போயி அன்னிக்கு நடந்ததை சொல்லிட்டு, நம்ம யாரையும் இனிமே தொல்ல பண்ண வேணாம்னு சொல்லிட்டு வந்துடறேன்பா...’’

``விதி… இன்னா நடக்கணும்னு இருக்குதோ அதான் நடக்கும்மா. நாளிக்கு நானும் வரேன் போலாம்’’ - அப்பாவும் மகளும் தாழ்வாரத்தில் உட்கார்ந்து பேசிவிட்டுப் தூங்கப் போனார்கள். விடிந்தது. இந்த விடியல் நல்ல தாய் துவங்கட்டுமென்று செல்லியம்மனை கும்பிட்டு எழுந்திருக்கிறாள் சுப்பு.

சிறைச்சாலை வாசலில் சேகரின் கூட்டாளி களும் வக்கீலும் காத்துக் கிடக்கிறார்கள்.

``எல்லாம் முடிஞ்சிருச்சு. கரெக்ட்டா பத்து மணிக்கு வெளிய அனுப்பிருவாங்க’’ - சப் ஜெயில் வாசலில் மணி பார்த்து நின்றவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டிருக்கும்போதே, அப்பாவுடனும் கையில் குழந்தையோடும் ஒரு ஆட்டோவில் வந்து இறங்குகிறாள் செம்பு. தூரத்தில் ஒரு பெண்மணி சிறைச்சாலை வாசலையே பார்த்துக்கொண்டு நிற்கிறாள். அவளை இதற்கு முன் எங்கோ பார்த்த மாதிரி இருப்பதாக உற்றுப் பார்க்கிறாள் செம்பு. அவள் சேகரின் அத்தை. அண்ணன் இறந்த பிறகு ஊர்ப்பக்கம் எட்டிப் பார்க்காதவள் நடந்த கதையை எப்படியோ தெரிந்து கொண்டு கொச்சியிலிருந்து வந்திருக்கிறாள். சட்டென செம்புவை திரும்பிப் பார்த்தவள் கோபம் தணியாதவளாய் அவள் அருகே வருகிறாள்.

``நீ நல்லாவே இருக்க மாட்டடீ… நாசமா போயிருவ. அப்பன் ஆத்தா இல்ல, கேட்க நாதியில்லாத அநாதயினு தானே உள்ள வச்ச…. உன் குடும்பமே அழிஞ்சிரும்டி… பேபர்சி…’’ - திட்டிக்கொண்டே கீழே குனிந்து பிடியாக மண்ணை அள்ளி செம்புவின் மீது வீசப் போகிறாள்.

கையிலிருக்கும் குழந்தையின் மீது படாத வாறு சட்டென திரும்பிக் கொள்கிறாள் செம்பு. அவள் பின்னங்கழுத்து முழுக்கவும் மண்ணப்பிக் கொள்கிறது. தடுக்க வந்த செம்பு வின் அப்பாவையும் வாய்க்கூசும்படி திட்டுகிறாள். அங்கிருந்த வக்கீலும் சேகரின் கூட்டாளிகளும் உடன் சேர்ந்துகொண்டு செம்புவை வார்த்தைகளால் பொலி போட்டுக் கொல்கிறார்கள்.

பொன்.விமலா
பொன்.விமலா

``மரியாதையா இங்கருந்து ஓடிரு நாயே… என் மருமவன் வந்தா உன்னியே கொன்னே போட்டிருவான்’’ என அத்தைகாரி விரட்டு கிறாள். சூழல் சரியில்லை என்பதால் அங்கிருந்து கிளம்பிப் போகிறாள் செம்பு. மணி 12 ஆகியிருந்தது. இந்நேரம் சேகர் ரிலீஸ் ஆகி வீட் டுக்குப் போயிருப்பான் என்று செம்புவின் அப்பா சொல்லிக் கொண்டிருக்கிறார்.

``நல்லா ரிலீஸ் பண்ணி கிழிச் சீங்க. இப்பதான் சேகர் ஆள் விட்டு சொல்லி அனுப்பியிருக்கான். நீயி, உன் சம்சாரம், உன் பொண்ணு மூணு பேரும் ஒடனே அவன் வூட்டுக்குக் கிளம்பி வாங்க’’ - ஊர்த்தலைவர் பேசிக்கொண்டே வர, புரியாமல் விழிக்கிறார் செம்புவின் அப்பா.

``இன்னாப்பா சொல்றது புரிலையா? இன்னிக்கு சேகர் வூட்ல பஞ்சாயித்து, அவுங்க அத்தை வந்து சொல்லிட்டுப் போவுது. ராகவன் வராப்டியாம்...’’

``கட்சில இருக்காரே… அந்த ராகவனா?’’

``ஆமா… அவரே தான். உன் பொண்ணு பண்ண காரியத்துக்கு ஞாயம் கேக்கணுமாம். ஊரு சனம் பத்து பேரை இட்டுக்கினு வரச் சொல்றாங்க. அவுங்க ஆளுங்க பத்து பேரு. போயி இன்னா ஏதுனு பேசி ஒரு முடிவு பண் ணிட்டு வந்துரலாம். அப்டியே வுட்டம்ணா நாளிக்கி பிரச்ன பெருசாயிடும். இன்னா சொல்றே?’’ - சேகர் வீட்டில் நடக்கவிருக்கும் பஞ்சாயத்துக்கு ஆளைச் சேர்த்துக் கொண்டிருக்கிறார் செல்லமுத்து. ஊர்த் தலைவர் சொல்வதற்கு மறுபேச்சு பேச முடியாமல் சுப்புவிடமும் செம்புவிடமும் தகவலைச் சொல்கிறார் அப்பா துரைமூர்த்தி.

ஜெயிலை விட்டு வந்த சேகர் ஐந்து நாள் வளர்ந்த தாடியோடும் பரட்டையாய்க் காற்றில் பறக்கும் தலைமுடியோடும் ஹாலில் போட்டிருந்த ஊஞ்சலில் உட்கார்ந்து கொண்டு புகைத்துக்கொண்டிருக்கிறான். ``வரட்டும்... அந்த தே**** வந்ததும் வண்டையா நாலு கேள்வி கேட்டா தான் மனசு ஆறும்’’ - அத்தைகாரி பினாத்திக் கொண்டிருக்கிறாள். சமையற்கட்டில் 10 லிட்டர் கேன்கள் ஐந்தாறு கிடக்கின்றன. சேகர் ஒரு கேனின் மூடியைத் திறக்கிறான். பெட்ரோல் வாசம் குப்பென்று மூக்கில் ஏறவும், சட் டென மூடிவிட்டு அறையை விட்டு வெளியே வந்து நின்று, `வரட்டும் சனியனுங்க' என மனதுக்குள் வன்மம் வைத்துக் காத்திருந்தான் சேகர். செம்பு வின் குடும்பமும் ஊரார் பத்து பேரும் சேகர் வீட்டுக்கு முன்பாக வந்து இறங்கி ஒவ் வொருவராக உள்ளே நுழை கிறார்கள்.

- தொடரும்...