Published:Updated:

அவளுக்கொரு வானம் - 9 - லைவ் தொடர்கதை

அவளுக்கொரு வானம்
பிரீமியம் ஸ்டோரி
News
அவளுக்கொரு வானம்

வெளியில் ‘சுமோ’ வந்த சத்தம் கேட்கவும், ஊர்க்காரர்கள் ஒவ்வொருவராக எழுந்தார்கள். சேகரும் எழுந்து போய் வாசலுக்கு வந்தான். தன் அம்மாவுக்குப் பின்னால் ஒளிந்து நின்றி ருந்தாள் செம்பு.

சேகர் வீட்டு சமையலைறையில் இருந்து பெட்ரோல் வாடை ஜன்னல் வழியே கசிய, சேகர் வீட்டுக்குள் செம்புவின் குடும்பத் தாரும் ஊராரும் நுழைந்தார்கள். சிகரெட் டைப் பற்ற வைக்கும் லைட்டரும், மெரூன் ஆஷ் ட்ரேயும் ஹாலில் இருந்த டீப்பாயின் மீது கிடந்தன. சிகரெட் துண்டுகளும், தட்டியதில் சிதறிய சாம்பலுமாய் ஆஷ் ட்ரே நிரம்பி வழிந்தது. வாடகை வீடென் றாலும் வந்தால் 20 பேராவது உட்காருவது போல் விசாலாமாய் இருந்த ஹாலுக்குள் ஒவ்வொருவராக நுழைந்தார்கள். ஊஞ்ச லுக்குப் பக்கத்தில் இருந்த ஒற்றை சோபாவில் சேகர் உட்கார்ந்திருந்தான். ஊர்த் தலைவர் உள்ளே வருவதைப் பார்த்து `வாங்க சார்…’ என்ற ஒரே வார்த்தையோடு சோபாவை விட்டு எழுந் திருக்காமல் அங்கேயே உட்கார்ந்திருந்தான். வந்தவர்களை `இங்க உட்காருங்க, அங்க உட்காருங்க’ என அத்தைகாரிதான் கைகாட்டி உட்கார வைத்தாள்.

ஆண்கள் அங்குமிங்குமாய் போட்டு வைத்திருந்த சோபாவிலும் சேரிலும் உட்கார்ந்து கொள்ள, பெண்கள் ஓரமாய் சுவரில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டார்கள். செம்புவும் அவள் அப்பாவும் தெருவிலேயே நின்றிருந்தார்கள்.

சுப்புலட்சுமியும், கன்ன மங்கலத்திலிருந்து வந்த செம்புவின் சித்தியும் வாசலுக்குப் பக்கத்தில் `கூப்பிட்டால் உள்ளே போகலாம்’ என்று ஓரமாய் நின்றபடியே ஹாலை எட்டிப் பார்த்துக் கொண்டி ருந்தார்கள். ஊரார் யாரும் `கீச்… மூச்’ என்று எதுவும் பேசவில்லை.

``ஆயிரந்தான் இருந்தாலும் பொண்ண குடுத்துருக்கோம்பா, நாமதான் வுட்டுக்குடுத்து போணும். பொண்ண பெத்து பீ துன்னுனு பெரிவுங்க சொல்றதுதான்… இன்னா நான் சொல்றது கரிக்ட்டு தானே...’’

``சர்தான்பா… இப்போ யாரு இல்லனா… சேகரு வேற திர்ணா வந்தா கணுக்குவழுக்கு பாக்காம டொனேசன் குடுக்குறாப்ல. அன் னிக்கு சால்வ போட்டுட்டு துட்டு வாங்கினு வந்துட்டு இன்னிக்கு போயி பொண்ண ஏன்டா அட்ச்சு தொரத்துனனு கேட்கவா முடியும்?’’

``இன்னாருந்தாலும் குட்ச்சுட்டு பொட்டப் புள்ளய கொயந்தயோடு தூக்கினு போசொல்லி ராவுல அட்ச்சு தொரத்னுது தப்பு தாம்ப்பா’’

``சரி முட்ஞ்சி போன கதய வுடுங்கோ… அவன் இன்னாதான் பேசறதுக்கு கூப்ட்டு கிறான்னு போனாதான தெரியும்.’’

``இன்னா சொன்னாலும் செரி… ப்ரெச்சின வராதமாரிக்கி கம்முனு இருன்ட்டு வந்துர ணும்.’’

சேகர் வீட்டுக்கு வண்டி வைத்துக் கிளம்பி வந்தவர்கள் வரும் வழியெல்லாம் பேசிக் கொண்டு வந்த கதைகளை நினைத்தபடி, பேச் சொன்றும் இல்லாமல் அமைதியாய் உட்கார்ந்திருந்தார்கள்.

அவளுக்கொரு வானம் - 9 - லைவ் தொடர்கதை

`ராகவன்ணே மூணு மணிக்கு வந்துர்றேன் னாரு… உன்னியும் காணமே’ என்று தெருவை எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தான் கருணா. நல்ல தடிமனான உடல்வாகு. பார்த்தாலே பத்தடிக்கு தள்ளி நிற்க வைக்கும் வாட்டஞ் சாட்டமான ஆள். சேகருக்கு தோஸ்து. கில்லிகோட்டி ஆடின காலத்தில் இருந்து ஒன்றாகவே சுத்தியவன். சரக்கு, சிகரெட், சைட்டிஷ் வாங்கி வர என சகலத்துக்கும் பழகப்பட்ட ஓசி குடிகாரன். சேகர் வீட்டுக்கு நாலு தெரு தள்ளியிருக்கிறது இவன் வீடு. சேகர் அப்பா கூப்பிட்டால் வீட்டில் இருக்கிற தட்டுமுட்டு வேலைகள் பார்க்க தன் அப்பா வோடு சேகர் வீட்டுக்கு வந்தவன், அப்படியே சேகரோடு ஒட்டிக்கொண்டான்.

`நம்மளவுட சாதியில கம்மியாகீறவன்தான் நில்லுன்னா நிப்பான் உக்காருன்னா உக்கா ருவான்… மேல கீறவனவிட கீழ கீறவந்தான் என்னிக்கும் நம்முளுக்கு பயிந்துனு இருப்பான்’ என்று முன்பு எப்போதோ கருணாவின் சாதியைச் சொல்லி அவனை நம்பகமானவன் என்று அவன் அப்பா சொன்னதை சேகர் அப்படியே பிடித்துக்கொண்டு இவனை வலது கை போல இறுக்கமாய் வைத்திருக் கிறான். தினப்படிக்கு சேகரோடு குடித்து மட்டையாகி வீட்டுக்குப் போகிறவன் இந்த ஐந்து நாள்களாய் மண்டை கிறுக்கேறிக் கிடக் கிறான். அன்று செம்பு வீட்டுக்குப் போய் அவள் அப்பாவை அடித்துத் தள்ளிவிட்டு பூட்டை உடைக்க போன வெறி இன்னமும் அடங்காமல் ராகவனை எதிர்பார்த்து தெரு வில் நிற்கிறான். கூடவே சேகரோடு சேர்ந்து குடிக்கிற இன்னும் நான்கைந்து தோஸ்துகளும் பரபரப்பாய் ரோட்டைப் பார்த்து நின்றார்கள்.

நடப்பதை எல்லாம் பார்க்கிற செம்பு குடும்பத்தார்க்கு கைகால்கள் எல்லாம் உதறிக் கொண்டே இருந்தன. வீட்டுக்குள் பெட்ரோல் வாடை வருவது போல் இருக்கவும், ஊர்த் தலைவரே பேச்சை ஆரம்பித்தார்.

``ஏதோ கிருஷ்னால் நாத்தம் வராப்ல கீது’’ என்றதும், ``கிருஷ்னாலு இல்லப்பா… பெட்ரோலு மாரி தெர்து’’ என்றான் கூட்டத் தில் ஒருவன். யார் என்ன கேட்டாலும் பதில் சொல்லாமல் அமைதியாய் உட்கார்ந்திருக் கிறான் சேகர். சேகருக்குப் பக்கத்தில் அவன் அத்தைகாரியும் தலையில் கைவைத்து உட்கார்ந்திருக்கிறாள்.

வெளியில் ‘சுமோ’ வந்த சத்தம் கேட்கவும், ஊர்க்காரர்கள் ஒவ்வொருவராக எழுந்தார்கள். சேகரும் எழுந்து போய் வாசலுக்கு வந்தான். தன் அம்மாவுக்குப் பின்னால் ஒளிந்து நின்றி ருந்தாள் செம்பு. எளச்சியம்மாவிடம் குழந் தையை பார்த்துக்கச் சொல்லிவிட்டு பால் புட்டியையும் பால்பவுடரையும் கொடுத்து விட்டு வந்தது இப்போது கொஞ்சதுக்கு சௌகரியமாய் இருந்தது செம்புவுக்கு. சேகர் இவர்களை பார்க்கவில்லை. அதற்குள் கூட்டம் சேர்ந்து வாசலுக்கு வந்துவிட்டது. கரை வேட்டி சகிதமாய் ராகவன் காரிலிருந்து இறங்க கட்சியாட்கள் நான்கைந்து பேர் கூடவே இறங்கி வந்தார்கள். ஒருவன் கையில் ஏதோ சுருட்டி வைத்திருந்த பேப்பரை வைத்துக்கொண்டு, சேகர் காதில் வந்து கிசுகிசுத்தான்.

ஜெயிலுக்குப் போய் வந்ததில் சேகருக்கு அடுத்து என்ன செய்வதென்ற குழப்பம். வந்த கையோடு நடந்ததை எல்லாம் அத்தை காரியிடம் சொல்லிக் கொண்டிருந்த போது ராகவனும் உடன் இருந்தான். மூவராகக் கூடிப் பேசி இதுதான் சரியாக இருக்குமென்று முடிவெடுத்தபடி, இப்போது அந்த பேப்பரோடு ராகவனும் அவன் ஆட்களும் வீட்டுக்குள் போக, சேகரும் உள்ளே நுழைந்தான். செம்புவும் அவன் குடும்பத்தாரும் கூட்டத்துக்கு மத்தியிலேயே கண்படாமல் ஒளிந்து ஒளிந்து ஒதுங்கி நின்றார்கள்.

``எல்லாரும் வன்ட்டாங்களாப்பா’’ என்று சத்தமாகக் கேட்டபடி ஊஞ்சலில் உட்கார்ந்தான் ராகவன். ஊர்த்தலைவர் ராகவனுக்கு வணக்கம் வைக்கவும் வந்தவர்கள் ஒவ்வொருவராக தலையாட்டியும் வணக்கம் வைத்தும் ஹாலுக்குள் சேர்ந்தார்கள். இன்னும் அவளை காணவில்லையே என்கிற கோபமும் எரிச்சலுமாய் செம்புவை எதிர்பார்த்து காத்திருந்தான் சேகர்.

``ஏம்ப்பா… அவுங்க வெளிலதான் இருக்காங்க. உள்ள கூப்பிடுப்பா’’ என்றார் ஊர்த்தலைவர். வெளியில் வந்து எட்டிப்பார்த்தான் கருணா. சுவரில் ஒட்டிக்கொண்ட பல்லிபோல செம்பு, அவள் அப்பா, அம்மா, சித்தி என நான்கு பேரும் பக்கவாட்டுச் சுவரருகே வரிசையாக நின்றிருப்பதைப் பார்த்து முறைத்தவாக்கில் அவர்களை அழைக் கிறான். அவன் குரலில் ஒரு தெனாவட்டு இருந்தது. அவனது தாட்டையான உருவத்தைப் பார்த்தாலே பல்லெல்லாம் டைப் ரைட்டிங் செய்வது போல் படபடப்பாகிறது சுப்புலட்சுமிக்கு. உள்ளே வர பயந்து நான்கு பேரும் கால் பின்னிக்கொண்டபடி அங்கேயே நின்றிருக்கிறார்கள். ஊர்த்தலைவர் வெளியே வருகிறார். ``அதான் நம்ப ஜனம் இருக் கோம்ல… வாப்பா தொர… பொண்ண கூட்டினு உள்ள வா’’ என்கிறார்.

சேகருக்கு செம்புவின் குடும்பம் வெளியே இருப்பது தெரிய வர, ``இங்கியா இருக்கடி?’’ என்று காட்டுக் கத்தலோடு எழுந்திருக்கிறான். ``ஏம்ப்பா… புடிப்பா…. புடிப்பா….’’ என்று சேகரின் திரண்ட கைகளை மடக்கிப் பிடித்து அவனை உட்கார வைப் பதற்குள் ஊர்சனத்துக்குப் பெரும்பாடாகிவிட்டது. கொஞ்சம் மாநிறம் என்றாலும், பார்க்க சினிமா நடிகர் கமலஹாசன் போல் பேரழகு என்று சேகரை ஊரார் சொல்வதுண்டு. வழித்த மீசையும் தாடியுமாய் வரும்போது `மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில் வரும் கமலஹாசன் என்றும், மீசையும் தாடியுமாக வந்தால் `சத்யா’ கமலஹாசன் என்றும் மெச்சியிருக் கிறார்கள். இப்போது பரட்டைத் தலையும் குழி விழுந்த கண்களுமாய் நாக்கைத் துருத்திக் கொண்டு செம்புவை அடிக்கச் சீறுபவனை இழுத்துப் பிடிக் கவே பத்துப் பேருக்கும் சரியாகத்தான் இருந்தது.

``இன்னா இருந்தாலும் ஜெயிலுக்குப் போன கோவம் இருக்கும்தானப்பா… யாரா இருந்தா இன்னா… பொண்டாட்டியே தூக்கி உள்ள வச்சா நாளிக்கி ஊர்ல எவன் மதிப்பான் சொல்லு’’ - ராகவன் பேச்சை ஆரம்பிக்க, கூட்டத்தில் இருந்த சலசலப்பு அடங்கி கப்சிப் என அமைதி நிலவியது. கருணா திரும்பத் திரும்ப சத்தம் போட்டு அழைக் கவும் ஒவ்வோர் அடியாய் எடுத்து வைத்து நால்வரும் உள்ளே வந்தார்கள்.

சேகரை இழுத்துப் பிடித்து வைத்திருக்கும் கைகள் இன்னும் கெட்டியாய் அவனை பிடித்து வைத்திருக்கின்றன. குனிந்த தலை நிமிராமல் தரை பார்த்திருந்தாள் செம்பு. பச்சைப் பச்சை வார்த்தைகளால் அவளை அசிங்கமாகத் திட்டிக் கொண்டிந்தான் சேகர். வந்திருந்த பெண்கள் சிலர் காது கொடுத்துக் கேட்க முடியாமல் இரண்டு கைகளையும் குவித்து வாயில் அடித்துக்கொண்டார்கள். பெத்த மகளை தன் கண் முன்பாகவே `ஊர் மேய்ஞ்சவ’ என்று சொல்வதை கேட்கத் தெம் பில்லாமல் கண்கள் கலங்கி நிற்கிறார் செம்பு வின் அப்பா.

``அய்யோ… அய்யோ… அய்யோ பெத்த வயிறு எரியுதே…. நாசமா பூடுவே நீயி. கொல நடுங்குது. உன் ஆத்தாகாரி ஒருத்தனுக்கு முந்தானை விரிச்சு பெத்தா மாதிரிதான் நானும் எம் புள்ளைங்கள பெத்தன். உன் வாய்க்கு வாந்தி பேதி வந்து தூக்க… நாசமா பூடுவே'' - தான் பெற்ற மகளின் ஒழுக்கத்தைப் பத்து பேருக்கு முன்னால் ஏலம் விட்டால் மருமகனாவது மண்ணாவது என்று கோபம் பொத்துக் கொண்டு வருகிறது செம்புவின் அம்மாவுக்கு. ஹாலில் இருந்தவர்கள் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் பேச்சு வராதவாறு அடக்கிகொண்டே இருந்தார்கள்.

கத்திக் கத்தி சேகருக்கு தொண்டை வறண்டு போனது. அத்தைகாரி ஓடிப்போய் ஒரு வாழைப்பூ சொம்பில் தண்ணியைக் கொண்டு வந்து கொடுக்கிறாள். ஒரு முழுங்கைக் கூட தொண்டையில் நனைக்காமல் சொம்பைத் தூக்கி வீசி எறிகிறான் சேகர். தூரமாய் நின்றிருந்த சுப்புலெட்சுமியின் தோள்பட்டை யின் மீது விழுந்து அவள் சேலையெல்லாம் நனைந்து போனது. தோள்பட்டை எலும்பில் தோதாகப் படவும் வலி தாங்காமல் கத்து கிறாள். சொம்பு `டங்’ என விழுந்து உருண்டு கொண்டே போனது. வலி இருந்தாலும் வாய் ஓயாமல் மகளுக்காக நியாயம் கேட்டு அழுகிறாள் தாய். நடுராத்திரியில் கைக் குழந்தையோடு வெளியே துரத்தியவனை நாலு அப்பு அப்ப முடியாமல் உணர்ச்சியற்ற ஜடமாகி உள்ளுக்குள் குமுறிக்கொண்டு நிற்கிறார் தந்தை. பெண் வீட்டார் சார்பில் வந்திருப்பதால் அடக்கி வாசிப்போமென்று வாய்பொத்திக் கிடக்கிறார்கள் ஊர்மக்கள்.

ராகவன் பேச வேண்டிய நேரம் வந்தது. ``இப்டியே ஆளாளுக்கு கத்தி கலாட்டா பண்ணணும்னா… இன்னிக்கு பூராவும் கத்தினே தான் இருக்கணும். ஒரு முடிவு வோணும்னு தான் கட்சி வேலையெல்லாம் வுட்டுட்டு நான் இங்க வந்திருக்கன். இப்ப கம்முனு இருந்திங்கன்னா பேசுவேன். இல் லாட்டி எழுந்து போயினே இருப்பேன்’’ - ராகவன் எழுந்து நின்றதும் கூட்டத்தில் அமைதி சூழ்ந்தது. சேகருக்கு ஆத்திரம் தாங்கவில்லை.

அவளுக்கொரு வானம் - 9 - லைவ் தொடர்கதை

கூட்டத்தின் கைப்பிடிகள் தளர்ந்த நேர மாய்ப் பார்த்து மறுபடியும் எழுந்து நிற்கிறான். `ஏ… ஒக்காருப்பா ஒக்காருப்பா’ என அவன் தோள்பட்டையை அழுத்திப் பிடித்து உட்கார வைக்கிறார்கள். வாயில் இருந்த மொத்த எச்சிலையும் `க்ர்ரக்… க்ர்ரக்’ என கொத்தை யாகத் திரட்டி இங்கிருந்தவாறே விசைகொண்டு உமிழ்கிறான். அது செம்புவின் முகத்தில் பட்டுத் தெறிக்கிறது. வந்தவர்கள் ஏதும் பேசாமல் கிடக்கிறார்கள். தன் துப்பட்டாவை எடுத்து முகத்தைத் துடைக்கிறாள். சனத்துக்கு இது அதிர்ச்சியாக இருக்கலாம். செம்புவுக்கு இதெல்லாம் பழக்கப்பட்ட ஒன்றுதான் என் றாலும், ஊராருக்கு முன் நடந்த அவமானத்தால் கண்களில் அவளுக்கு நீர் பொங்கியது.

``சேகரு… நீ பண்றது செரியில்ல சொல்ட்டேன். இப்ப என்ன நீ பேச வுட்டயனா… வந்த வேலையை முடிச்சிட்டு போயினே இருப்பேன். இல்லா போனா நீயாச்சு உன் மாமியார் குடும்பமாச்சுனு கெளம்பி பூடுவேன்’’ - சேகரை ராகவன் அதட்டுவது போல் அதட்டி அந்த நேரத்துக்குச் சமாதானம் செய்கிறான். ``டேய்… பாண்டி, அந்த பேப்பர எத்தாடா’’ என்று ராகவன் கூப்பிட்டதும் கையில் இருந்த பேப்பரை கொண்டு போய் கொடுக்கிறான் பாண்டி. நூறு ரூபாய் ஸ்டாம்ப் பத்திரப் படிவம் அது. கடன் வாங்குவோரிடம் வெத்து கையெழுத்து வாங்கிக் கொண்டு ஃபைனான்ஸ் செய்வ தற்காக இதுநாள் வரையில் சேகர் பயன்படுத்தி வந்த தாளை இப்போது எதற்கு கொண்டு வந்திருக்கிறார்கள் எனக் குழப்பமாக இருந்தது செம்புவுக்கு.

``பத்திரத்த படிக்கிறன் கேட்டுக்கோங்க’’ என ராகவன் சொல்லவும், ``சார் , எதுக்கு சார் பத்ரம்லாம் என பவ்வியமாய்க் கேட் கிறார் ஊர்த்தலைவர். ``உங்கூரு பொண்ணு பண்ண வேலைக்கு என் மருமவப் புள்ள வாராவாரம் ஜெயிலுக்குப் போயி களி துன்ன சொல்றீங்களா?’’ - அத்தைகாரி ஆத்திரத்தோடு எழுந்து நிற்கிறாள். நாந்தான் பேசினு இருக்கன் லமா… செத்த கம்முனு இரு’’ - ராகவன் அடக்கினான்.

``யார் வூட்ல தான் சண்டயில்ல சாடியில்ல… ஆம்டியான்காரன் அட்ச்சா … பொட்ட பொண்ணு எங்க போவணும்? ஒண்ணு அக்கம் பக்கத்துக்கு வூட்டுக்கு போயிருக்கணும். இல்ல ஆத்தா வூட்டுக்கு போயிருக்கணும். ரெண்டுகெட்டானா ஸ்டேசனுக்கு போயி எழுதி குடுத்து ஜெயிலுக்கு அனுப்ச்சா எவ்ளோ அதுப்பு இருக்கணும்? நாங்கூட பேச வாணாம்னு தான் இருந்தன். அன்னிக்கே வந்த கோவத்துக்கு குடும்பத்தோட எல்லாரை யும் வெட்டி பொலி போட்டுட்டு வந்திருப் பேன். பொட்டப் புள்ள சமாச்சாரம்னா நாளிக்கு கேஸை நம்ப மேலயே திருப்பி வுட்ருவானுங்கன்னு தான் கம்முனு திரும்பி வந்தேன்'' - ராகவன் படபடத்தான்.

``நாங்க பேசி முடிவு பண்ணிட்டோம். இந்த பொண்ணுக்கு புத்தி கெட்டுப் போயிக்கீது. நாளிக்கு ராவு தூங்குறப்போ கல்லத் தூக்கிப் போட்டாகூட யாரு பதில் சொல்றது? கூட்ட துல வச்சு முட்வு பண்ணா தான் ஆச்சு'' - ராகவன் பேச்சை இடைமறித்தார் ஊர்த் தலைவர்.

``சார்… பொண்ணு பண்ணது தப்பு தான். மன்னிச்சுவுட்ருங்க. தம்பிக்கு நல்ல பொண்ணா பாத்து கட்டி வைங்க. நாங்க யாரும் குறுக்க வர மாட்டோம். அதுக்கொசரம் கல்லத் தூக்கிப் போடும் அது இதுன்னு எதுக்கு காப்ரா ஆவணும்?’’

இப்போது அத்தைகாரி கத்த ஆரம்பித்தாள். ``இன்னாது இன்னொரு பொண்ண பாத்து கட்றதா? ஜெயிலுக்கு போனவனுக்கு எவன் பொண்ணு குடுப்பான். இப்டியே ஒத்தையில வுட்டு கொலகாரனா ஆக்கிவுட சொல்றீங் களா?’’ ஊர்த்தலைவருக்கு ஏதோ புரிந்தால் போல் தெரிகிறது. ``யெம்மா… நீ வேற. பொண்ணு பண்ண காரியித்துக்கு அத்து வுட்டுட்டு திட்டி அனுப்புவீங்கன்னு தான் பஞ்சாயித்து பண்ண வந்தோம். சேத்து வச்சு குடும்பம் நடத்துனா யாரு வாணாம்னு சொல்லப் போறோம்’’ - அழுத்தமாய் வந்து விழுந்தது குரல்.

செம்புவுக்கு பகீரென வாரிப் போடுகிறது. சுப்புலட்சுமி குழப்பத்தில் இருக்கிறாள். இந்தப் பொறுக்கியிடம் மறுபடியும் பெண்ணை அனுப்ப மனமில்லாமல் அதிர்ச்சியில் நிற்கிறார் அவள் அப்பா. கூட வந்த சித்தியோ `வாழவெட்டியா பொண்ண வச்சிக்கிறதுக்கு ஒத்துப் பூடலாம்க்கா’ என்று சுப்புவிடம் வந்து கிசுகிசுக்கிறாள்.

``ஆனா ஒரு கண்டிஷன். பண்ண தப்புக்கு குடும்பம் மொத்தமும் ஊரு சனம் முன்னாடி சேகர் கால்ல வுழுந்து மன்னிப்பு கேட்டுட்டு இந்த பத்திரத்துல கையெழுத்து போட்டுத் தரணும்’’ - ராகவன் பேசுவது ஊர்சனத்துக்கு சரியாகப் படவில்லை.

``வயிசுல பெரிவுங்க போயி கால்ல வுழுவாங் களாப்பா… இன்னாருந்தாலும்…’’ - கூட்டம் சலசலத்துக் கிடந்தது.

``பொண்ணை வோணும்னா கூட வுழ சொல்றோம்ப்பா… அவுங்க பாவம்ப்பா… அவுங்களுக்கு இன்னா தெரியும்’’ என்று ஊர்த்தலைவர் தன் பங்குக்கு ஆலோசனை சொன்னார். பேசிக் கொண்டிருக்கும்போதே திடுதிப்பென எழுந்த சேகர் சமையல்கட்டுக்குள் புகுந்து பெட்ரோல் கேனை தரையில் சாய்க் கிறான். `திபு திபு’வென பின்னால் ஓடியவர்கள் தவளையில் இருந்த தண்ணீரை எடுத்து தரையில் கொட்டுகிறார்கள்.

பொன்.விமலா
பொன்.விமலா

சேகருக்கு கிறுக்கேறிப் போனது மட்டும் ஊராருக்குப் புரிந்து போனது. செம்புவின் அப்பாவையும் அம்மாவையும் வெளியில் அழைத்தார் ஊர்த்தலைவர்.

``அவன் கண்டிஷனுக்கு ஒத்துக்கிட்டு பொண்ண அனுப்பிவுடுங்க. ஒரு பொண்ணு செத்துச்சுனு நினைச்சிக்கிட்டு மூணு பொண்ண காப்பாத்துற வழிய பாருப்பா. மனுஷ கொணம் மாறுறதுதானே? பொண்ண அனுப்பிச்சு வுட்டா திருந்துனாலும் திருந்து வான். இல்லாட்டி கொலகாரனா ஊர்ல வந்து திரிவான். இப்பத்திக்கு சொல்றத செஞ்சுட்டு போயிருவம். அப்றம் என்ன கூத்துனு அப்பால பாத்துக்கலாம். என்ன சொல்றப்பா…’’ - செம்புவின் அப்பா ஊர்த்தலைவர் பேசு வதைக் கேட்டு பதிலில்லாமல் அழுது துடிக் கிறார். மிச்சமிருக்கிற மூன்று பெண்களை நினைத்துப் பார்க்கிறாள் சுப்பு. ``குடும்பத்தோட வெஷம் வாங்கி குட்ச்சிட்டு சாவறோம்ணா’’ என்று முந்தானையை மூக்கில் வைத்து அழுகிறாள். ``சாவற கதை அப்பால. இன்னிக்கு ஆவறத பாருங்க. நாளிக்கி ஊரு சனம் உங்க குடும்பத்தால வெட்டு குத்து கொல கேஸுனு ஸ்டேசனு கோர்ட்டுனு அலைய முடியா துல்ல’’ - காட்டமாக அதட்டிப் பேச ஆரம் பித்துவிடுகிறார் ஊர்த்தலைவர். பெண்ணைப் பெற்றால் தலைகுனியத்தானே வேண்டுமென்று ஏதும் பேசாமல் வாய்பொத்தி அழுதவாக்கில் உள்ளே வருகிறார்கள்.

பத்திரத்தை வாசிக்க ஆரம்பித்தான் ராகவன்.

``சேகரின் மனைவியாகிய செண்பகவள்ளி என்னும் நான் சில மாதங்களாகவே உடல்நலம் சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தேன். மனக் குழப்பத்தில் இருக்கும் எனக்கு எந்த முடிவை எடுப்பதிலும் பெரிய குழப்பம் இருந்து கொண்டே இருக்கிறது. உடல் ரீதியாகவும் நான் பல பிரச்னைகளை அனுபவித்து வரு கிறேன். என் தவறான செயலினால் அப்பாவி யான என் கணவர் சேகரை நான் சிறைக்கு அனுப்பிவிட்டேன். இதற்காக மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன். இனி நான் சேகருடன் வாழும் காலங்களில் நான் என் மனக்குழப்பத் தினால் தற்கொலை செய்து கொண்டால் அதற்கு முழுக்க முழுக்க நானே பொறுப்பு...’’ - ராகவன் பத்திரத்தை முழுமையாகப் படிப்பதற்குள், செம்பு மயங்கி சரிந்தாள்.

- தொடரும்...