சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

“ஞானசம்பந்தர் முதல் கார்ப்பரேட் வரை!”

சோலை
பிரீமியம் ஸ்டோரி
News
சோலை

கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், தொகுப்புகள் எனப் பலவாறு அவர் பங்களித்துள்ளார்.

ழுத்தாளர் சோலை சுந்தரபெருமாள் திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் -காவனூரில் தன் 70-வது வயதில் மறைந்தார். கீழத்தஞ்சை எனப்படும் நாகை-திருவாரூர் வட்டாரத்தின் விவசாய வாழ்க்கையை முழுமையாகச் சொல்லிவிடத் தொடர்ந்து முயன்றவர் அவர்.

அவர் பள்ளி மாணவராக இருந்த காலத்தில் கீழ்வெண்மணியில் எரித்துக்கொல்லப்பட்ட 44 பேரின் உடல்களை ஒரு டிராக்டரில் ஏற்றி நாகப்பட்டினத்துக்குக் கொண்டுபோனதைக் கண்ணாரக்கண்டு உடலும் உள்ளமும் அதிர்ச்சி அடைந்து பிற்காலத்தில் அவ்வரலாற்றைத் தேடிப் பயணித்து ‘செந்நெல்’ நாவல் படைத்தார்.

60களின் பிற்பகுதியில் நிகழ்ந்த கதை ‘செந்நெல்’ எனில், சிதம்பரம் கோயிலில் தீக்கிரையாக்கப்பட்ட நந்தனின் வாழ்வைப் பேசிய நாவல் ‘மரக்கால்.’ திருஞானசம்பந்தரை ஒரு கதாபாத்திரமாக வைத்து அவர் எழுதிய ‘தாண்டவபுரம்’ நாவல் ஒருதரப்பினரால் எரிக்கப்பட்டது. அவர்மீது வழக்கும் தொடுக்கப்பட்டது. எனினும் படைப்பாளியின் சுதந்திரத்தை மிரட்டல்களால் பறிக்க முயல்வதை அனுமதிக்க முடியாதெனத் துணிச்சலாக அதையெல்லாம் எதிர்கொண்டார்.

சோலை
சோலை

கீழ்வெண்மணிக் கொடுமைக்குப் பிறகான அப்பகுதி வாழ்வில் புகுந்துவிட்ட கார்ப்பரேட் விவசாயம், இறால் பண்ணைகள் போன்றவை மக்களின் வாழ்விலும் பண்பாட்டிலும் கண்ணோட்டத்திலும் ஏற்படுத்திவரும் தலைகீழ் மாற்றங்களை 2014-ல் வெளியான அவரது கடைசி நாவலான ‘எல்லைப்பிடாரி’யில் எழுதியிருப்பார். “அந்நாவலை வாசித்தபோது தமிழக நெற்களஞ்சியமாம் தஞ்சை மண்ணில் வருங்காலத்தில் விவசாயமே இருக்குமா என்கிற அச்சம் எனக்கு இருக்கிறது” என்று தான் இறப்பதற்கு முன் ஒரு நேர்காணலில் விவசாய இயக்கப் போராளி தோழர் கோ.வீரய்யன் குறிப்பிட்டது நினைவுக்கு வந்தது.கீழ்வெண்மணியின் வரலாற்றை மக்கள் மொழியில் பதிவு செய்த ‘வெண்மணியிலிருந்து... வாய்மொழி வரலாறு’ என்னும் நூல் வெண்மணி வரலாற்றுக்கு அவர் செய்த முக்கியமான பங்களிப்பு.

கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், தொகுப்புகள் எனப் பலவாறு அவர் பங்களித்துள்ளார். சங்கீதமும் காதலும் காமமும் ஆண்-பெண் உறவும் என்றே சுழன்றுகொண்டிருந்த தஞ்சை எழுத்துலகில் தஞ்சை பிரகாஷும் சி.எம்.முத்துவும் முதல் குறுக்குச் சால் ஓட்டினார்கள் எனில், அதில் சேறும் சகதியும் சாட்டையடியும் சாணிப்பாலும் செங்கொடியும் எனக் கொண்டுவந்து சேர்த்தவர் சோலை சுந்தரபெருமாள். அதற்காக என்றென்றும் அவர் நினைவுகூரப்படுவார்.