
- போகன் சங்கர்
விகடன் 2022-ம் ஆண்டு தீபாவளி மலரின் சிறப்புக் கட்டுரை. சிறப்பிதழை வாங்கி படித்து மகிழ்ந்திடுங்கள்!
மாணிக்கங்கள் பதித்த
சிம்மாசனம்போல் ஒரு நாள்.
மழை கண்டு
விரித்தாடும்
மயில்தோகைபோல ஒரு நாள்.
நதிக்கரையில்
மதியவேளைக் காற்றில்
சலவைக்காரி மறந்துவிட்ட
வெள்ளை நிற வேட்டிபோல்
படபடத்தபடி
ஒரு நாள்.
நான் விழித்திருந்தேன்.
என் முன்னால்
இரவு வானம்
ஒரு சமுத்திரம்போல்
விரிந்துகிடந்தது.
நட்சத்திரங்கள்
ஒவ்வொன்றாய் அணைக்கப்படுவதைப்
பார்த்துக்கொண்டு…
ஒவ்வொரு நட்சத்திரமும்
ஒரு சன்னல்.
சன்னலின் பின்னால்
நின்றுகொண்டு
இருளில் கீழே
எதையோ இரந்துகொண்டிருக்கும்
நம்மைப் பார்க்கும்
யாரோ ஒருவர்.
ஒரு கட்டத்தில்
எல்லா ஒளியும்
அணைக்கப்பட்டு
கடல்
ஒரு மாபெரும்
இருள் குமிழிபோல்
என்மேல் கவிழ்ந்து கிடந்தது.
படுகளத்தில்
நின்றபடியே தூங்கும்
ஒரு யானையைப் போலவும்.
பிறகு
மெல்லத் தெரிந்தது
என்னைப் பகலுக்கு
இட்டுச்செல்ல வரும்
படகோட்டியின்
சிவப்புத் தலைப்பாகை.
நீ
என் கையில் கொடுக்கப்பட்ட
ஒரு அமிர்த கலசம்.
நான் -
என் கையில் கொடுக்கப்பட்ட
ஒரு விஷக்கோப்பை.
என்னை அருந்தி அருந்தி
நீலம் பாரித்திருந்தபொழுது
எப்படிச் சரியாக
உன்னை ஏந்தியபடி
ஒரு கப்பல் வந்தது?

நகரத்தின் கூச்சல்
கேட்காத புறநகர்.
ஆனாலும்
கொஞ்சம் முறுமுறுப்பு உண்டு.
கிராமத்தின்
கிணற்றுநீர்த் தண்மையோ
வேப்பம்பூ வீழ்வது கேட்கும்
அமைதியோ கிடையாது.
எந்திரப்பெட்டிகள்
உரையாடும் சப்தம்
குமிழியிட்டுக்கொண்டே இருக்கும்
இடம்,
ஒரு அலுமினியப் பூ.
இருவருக்கிடையே
ஒலித்த ஒரு பாடலை
நெருடி நெருடி
அதன் ராகத்தைக் கண்டுபிடிக்க
முயன்ற
இரண்டு அந்தகர்கள்போல் இருந்தோம்,
இல்லையா?
புன்னகையுடன்…
நாதத்தை
எப்படி விளக்குவது?
அதில்
சேர்ந்துகொள்ளலாம்.
விலகிக்கொள்ளலாம்.
விளக்கு என்றால்?
எப்போது கணக்கு வாத்தியார் வந்தாலும்
கவனத்தைத் திருப்பி
அடி வாங்கிக் கொடுத்துவிடும்
பள்ளிக்கூடத்துக்கால அணிலை
என் மகளின்
டிராயிங் நோட்டில் பார்த்தேன்.
போதத்தின் தீட்சண்யத்தை
சீராக வைத்திருக்க முடியவில்லை.
மங்கி மங்கிப்
பிரகாசிக்கும் தீபம்போல
சில இடங்களில் மட்டும்
ஃபோகஸ் சரியாக வந்த
புகைப்படம்போல...
நான் மீண்டும் மீண்டும் முயல்கிறேன்
வானம் முழுவதும்
ஒரே நீலத்தைத் தீட்ட...
சாக்பீஸால்
டீச்சர்
கரும்பலகையில்
கரகரவென்று
எழுதிச்செல்லும் ஒலி
ஒரு கடுமையான பாடலைப்போல் இருக்கிறது.
அவளது சுண்ணாம்பு மந்திரக்கோலிலிருந்து
எண்கள்
வேற்றுக்கிரக உயிரினங்கள்போல்
தோன்றுகின்றன.
மாணவர்கள் தலை மேல்
உதிர்கின்றன.
வேப்பம்பூவும்
தேனைச் சுரந்தே
நிற்கிறதென்றால்
அதன் கசப்பு
யாருக்கு?
ஒன்றை ஒன்று
துரத்தியபடி
வானில் பறக்கும்
ஏழு குருவிகள்போல்
ஸ்வரங்கள்
பாடகியின் உதட்டிலிருந்து
கிளம்பி வந்தன.