ஆசிரியர் பக்கம்
தொடர்கள்
தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

அவசியம் வாங்க ஐந்து நூல்கள்!

அவசியம் வாங்க ஐந்து நூல்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
அவசியம் வாங்க ஐந்து நூல்கள்!

எந்த இயற்கை உணவை எடுத்துக்கொண்டாலும், அது அழகையும் ஆரோக்கியத்தையும் சேர்த்தே கொடுக்கிறது.

சென்னையை விழாக்கோலமாக்கியிருக்கிறது புத்தகக்காட்சி. எந்தப் பக்கம் திரும்பினாலும் கலை நிகழ்ச்சிகள், இலக்கியத் திருவிழாக்கள், நூல் வெளியீட்டு விழாக்கள் எனப் பெருநகரம் அறிவுக் களைகட்டுகிறது. இந்தப் புத்தகக் காட்சியை ஒட்டி, விகடன் குழுமத்தில் வெளியாகிப் பல லட்சம் வாசகர்களின் வரவேற்பைப் பெற்ற ஐந்து நூல்கள் வாசகர்களின் கரங்களுக்கு வருகின்றன. அந்த நூல்கள் குறித்த சிறுகுறிப்பு...

உன் கண்ணில் நீர் வழிந்தால்... சேவற்கொடியோன்

ஆனந்த விகடன் ஆசிரியராக இருந்த, விகடன் குழுமத் தலைவர் அமரர் எஸ்.பாலசுப்ரமணியன், ‘சேவற்கொடியோன்’ எனும் புனை பெயரில் 17.04.1960 முதல் 02.07.1961 வரை எழுதிய தொடர்கதை ‘உன் கண்ணில் நீர் வழிந்தால்.’ தான் காதல் கொண்ட பெண் தன்னைச் சகோதரனாகக் கருதுகிறாள் என்பதை அறிந்து, அதிர்ச்சிக்கும் வெறுப்புக் கும் ஆளாகாமல் அந்தப் பெண்ணுக்காகத் தன் வாழ்க்கையையே தியாகம் செய்யும் ஓர் இளைஞனின் கதை. உறவுகளுக்கிடையே எழும் கருத்து வேறுபாடுகள், அதனால் நிகழும் எதிர்பாராத சம்பவங்கள், சந்தேகத்தால் ஏற்படும் விளைவுகள் என அனைத்து உணர்வுகளையும் தன் விறுவிறுப் பான எழுத்து நடையால் சுவாரஸ்யமாகக் கொண்டுபோகிறார். ஓவியர் கோபுலுவின் தத்ரூபமான ஓவியங்கள், கதையின் பாத்திரங்களை உயிரோட்டம் உள்ளவையாக மாற்றியுள்ளன. உணர்ச்சிகளின் கலவை யான இந்நாவல் முதல்முறையாக நூலாகிறது.

பக்கங்கள்: 632 விலை: ரூ. 599

***

வெந்து தணிந்தது காடு பட்டுக்கோட்டை பிரபாகர்

பண ஆசைக்காக ஒரு கிராமத்தையே தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஒருவனுக்கும், வன அதிகாரியாக வந்து அந்த கிராம மக்களுக்கு நன்மை செய்யத் துடிக்கும் ஓர் இளைஞனுக்கும் இடையே நடக்கும் போட்டியே கதைக்களம். உயிரைப் பணயம் வைத்து செம்மரம் வெட்டும் அப்பாவி ஆட்களை விடுவிக்கவும், மாஃபியா கும்பல் போல் செயல்படும் செம்மரக் கடத்தல் கும்பலை சிக்கவைக்க வன அதிகாரி எடுக்கும் முயற்சிகளையும் தனக்கே உரிய எழுத்து நடையில் விறுவிறுப் பான நாவலாகத் தந்திருக்கிறார் பட்டுக்கோட்டை பிரபாகர். அவள் விகடனில் தொடராக வெளிவந்து வாசகர்களின் வரவேற்பைப் பெற்ற நாவல் இப்போது புத்தகமாக வந்திருக்கிறது.

பக்கங்கள்: 232 விலை: ரூ. 275

அவசியம் வாங்க ஐந்து நூல்கள்!

உணவோடு நலம் நாடு மருத்துவர் வி.விக்ரம்குமார்

அவள் விகடன் இதழில் ‘அஞ்சறைப் பெட்டி’ எனும் தலைப்பில் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் முதல் பாதி, ‘அஞ்சறைப் பெட்டி’ எனும் பெயரில் நூலாக வெளிவந்தது. அதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாதி கட்டுரைகள், ‘உணவோடு நலம் நாடு’ எனும் பெயரில் நூலாக வெளிவந்துள்ளது. பன்னெடுங்காலமாகப் பயன்பட்டுவரக்கூடிய நலம் கூட்டும் அஞ்சறைப் பெட்டிப் பொருள்கள் சமையலில் எதற்காகச் சேர்க்கப்பட்டன, உணவியலில் அவற்றின் முக்கியத்துவம் என்ன, அவற்றின் வரலாறு, பயன்பாடு, மருத்துவ குணங்கள், நன்மை செய்யும் நுண்கூறுகள் ஆகியவற்றை நவீன தலைமுறைக்கு எடுத்துக்கூறும்விதமாக இந்நூல் அமைக்கப்பட்டிருக்கிறது.

பக்கங்கள்: 128 விலை: ரூ. 200

****

இயற்கை வழியில் அசத்தல் அழகு டாக்டர் ராஜம் முரளி

எந்த இயற்கை உணவை எடுத்துக்கொண்டாலும், அது அழகையும் ஆரோக்கியத்தையும் சேர்த்தே கொடுக்கிறது. நாம் அன்றாடம் சாப்பிடும் கீரை, பழ வகைகள், பருப்பு வகைகள், பால், நெய், தயிர், மோர் என ஒவ்வோர் உணவுப் பொருளும் ஆரோக்கியத்துடன் சேர்த்து அழகையும் கொடுக்கிறது. நமக்கு எளிதில் கிடைக்கும் பொருள்களைக் கொண்டே இயற்கை வழியில் அழகைப் பெறலாம் என்பதை அறியச்செய்கிறது இந்த நூல். உடல் பாகங்களை அழகாக்க எப்படியெல்லாம் இப்பொருள்கள் உதவுகின்றன என்பதையும் பயன்படுத்தும் முறைகளையும் அழகாக எடுத்துச்சொல்கிறது இந்நூல்.

பக்கங்கள்: 96 விலை: ரூ. 190

****

தில்லானா மோகனாம்பாள் (3 தொகுதிகள்) கொத்தமங்கலம் சுப்பு

சிக்கல் சண்முகசுந்தரம் எனும் நாகஸ்வரக் கலைஞனின் வாழ்வில் ஏற்படும் புகழ், காதல், பிரச்னைகள், ஏற்படும் இடையூறுகளை சுவாரஸ்ய மான புதினமாக வடித்துத் தந்திருக்கிறார் நூலாசிரியர் கொத்தமங்கலம் சுப்பு. ஆனந்த விகடனில் பணியாற்றியபோது 1956 முதல் 1958-ம் ஆண்டு வரை `தில்லானா மோகனாம்பாள்' தொடரை எழுதினார் அவர். ஓவியர் கோபுலு வரைந்த அழகிய ஓவியங்களுடன் வெளிவந்து வாசகர்களை வசீகரித்த இந்தத் தொடர், பின்னர் சிவாஜி கணேசன், பத்மினி நடிப்பில் திரைப்படமாகவும் வெளிவந்து கோடிக்கணக்கான தமிழ் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. இப்போது விகடன் பிரசுரத்தில் மூன்று தொகுதி களாக நூல் வடிவம் பெறுகிறது.

பக்கங்கள்: 1384 விலை: ரூ. 999

சென்னைப் புத்தகக்காட்சியில் விகடன் பிரசுர ஸ்டால் எண்கள்

F-1, F-44