சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

படிப்பறை

படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
News
படிப்பறை

இலக்கியத்தில் மொழியை ஆவணப்படுத்துதல், எதிர்காலத்திற்கான அத்தியாவசியத் தேவை.

மொழிதான் ஒரு சமூகத்திற்கு வாழ்வாதாரம். அதன் வேரிலிருந்துதான் வரலாறு துளிர்க்கும். உலகமயமாக்கலும் நவீனத் தொழில்நுட்பமும் மொழியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியபிறகு, தொன்மைச் சமூகங்களின் கலைச்சொற்களைப் பாதுகாப்பது காலத்தின் தேவையாக இருக்கிறது. உலகின் புராதன சமூகங்களில் முதன்மையான நெய்தல் சமூகம், வேறுபட்ட வழக்குமொழிகளைக் கொண்டிருக்கிறது. அந்த வழக்குமொழியே அந்தச் சமூகத்தின் தொன்மைக்கும் பண்பாட்டுக்கும் வேர்.

தமிழில் வட்டாரக் கலைச்சொற்களை ஆவணப்படுத்தும் விழிப்புணர்வு நெடுங்காலம் முன்பாகவே வந்துவிட்டது. கரிசல் வட்டார வழக்கு அகராதி, நாஞ்சில் வட்டார வழக்குச் சொல்லகராதி, கொங்கு வட்டார வழக்குச் சொல்லகராதி, செட்டிநாட்டு வட்டார வழக்குச் சொல்லகராதி, நடுநாட்டுச் சொல்லகராதி எனச் சொல்லாவணச் செயற்பாடுகள் தமிழில் நிறைய நடந்துள்ளன. அந்த வரிசையில் குறும்பனை சி.பெர்லின் உருவாக்கியுள்ள நெய்தல் சொல்லகராதி மிகவும் முக்கியமானது.

வெறும் கலைச்சொற்களின் தொகுப்பாக மட்டுமன்றி, தமிழகத்தின் தென்பகுதி மீனவ மக்களின் பண்பாட்டை முழுமையாக ஆவணப்படுத்துகிறது இந்த நூல். புழங்கு பொருள்களில் தொடங்கி குடும்ப உறவுகள் வரை 3,010 வார்த்தைகளுக்கான பொருளை வகைப்படுத்துகிறது. 1,073 மீன்களின் பெயர்கள், மீன்கள் உற்பத்தியாகும் பாறைக்கூட்டங்களின் பெயர்கள், நெய்தல் சமூகங்களின் பெயர்கள், கடல் காற்றின் பெயர்கள், கடலோர மக்களின் வாழ்க்கையில் கலந்த பழமொழிகள், மீன்பிடிக் கருவிகள், கடலோர விளையாட்டுகள், விளையாட்டுப் பாடல்கள், மீனவப் பெண்கள் மீன் விற்கும்போது பாடும் பாடல்கள், வசவு வார்த்தைகள் எனக் கடும் உழைப்பைப் போட்டுச் செழுமையான அகராதியாக இதை உருவாக்கியிருக்கிறார் பெர்லின்.

இலக்கியத்தில் மொழியை ஆவணப்படுத்துதல், எதிர்காலத்திற்கான அத்தியாவசியத் தேவை. பெர்லின் அதற்கான ஆகச்சிறந்த பங்களிப்பை வழங்கியிருக்கிறார்.

படிப்பறை

நெய்தல் சொல்லகராதி

குறும்பனை சி.பெர்லின்

வெளியீடு:

நியூ செஞ்சுரி புக்ஹவுஸ் பி லிட், 41, பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-600050

தொலைபேசி:

044-26251968, 26258410

பக்கங்கள்: 326

விலை: ரூ.315