
இந்த நாவலில் மட்டுமல்ல, சமூகத்திலும் இந்தப் பிரச்னை உண்டு.
பலரும் பொதுவெளியில் வைக்கத் தயங்கும் அந்தரங்க விஷயங்களை வாசிப்பில் அடையாளம் காணும் கணத்தில், வாசகர்கள் அதைத் தனக்கு நெருக்கமான பிரதியாக அடையாளம் காண்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு படைப்பு, சி.மோகனின் ‘கமலி.’
இந்த நாவல் கமலி என்னும் 40 வயதை எட்டிப்பிடிக்கும் பெண்ணின் வாழ்வைப் பேசுகிறது. கமலியின் கணவன் ரகு. மகள் நந்திதா. மறுபுறத்தில் கண்ணன் ஒரு மெடிக்கல் ரெப். ஊர் ஊராகச் செல்பவன். திருமணத்தில் விருப்பம் இல்லை. தன் கருத்துடன் இசைந்துபோகும் பெண்களோடு வாழ்கிறான். அதுவும் நிரந்தரமாக இல்லை. ஐம்பது வயதைக் கடந்துவிட்ட அவன்மீது தனக்குக் காதல் தோன்றும் என்று கமலி எதிர்பார்க்கவேயில்லை. ஆனால் நடந்துவிடுகிறது. அதன்பின் நிகழும் உணர்வுப்போராட்டம்தான் கமலி.
நாவலின் இந்த மையம் புதிது என்று சொல்ல முடியாது. ஆனால் அதைச் சொல்லியிருக்கும் முறை கொஞ்சம் மாறுபட்டது. ஒழுக்கவியலை வலியுறுத்தும் குடும்பம் சார்ந்தும் குடும்ப வன்முறை சார்ந்தும் பல்வேறு எதிர்க்குரல்கள் எழுந்துகொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் இந்த நாவல் முக்கியமானதாக மாறுகிறது. கமலி உணர்வுப் பிழம்பாகவே தெரிகிறாள். ஆனால், குடும்ப அமைப்பை உதறும் தைரியம் அவளுக்கு இல்லை. கண்ணன் பொறுப்பாகக் குடும்பம் நடத்த லாயக்கற்றவன். அதுகூட அவளின் தயக்கத்துக்குக் காரணமாக இருக்கலாம்.
ரகு ஒரு வழக்கமான இந்தியக் கணவன். கண்ணன் மூலம் குழந்தையும் ரகு மூலம் குடும்பப் பாதுகாப்பும் வேண்டும் என்று தீர்மானம் எடுக்கும் பெண்ணை மைய மாந்தராக நாவலில் முன்வைக்கும்போது அது சிக்கலாக மாறுகிறது.
இந்த நாவலில் மட்டுமல்ல, சமூகத்திலும் இந்தப் பிரச்னை உண்டு. நாள்தோறும் நாளிதழ்களில் நாம் காணும் குடும்ப வன்முறைகளின் முக்கிய காரணம் இந்தப் பிரச்னைதான். ஆனால் இந்தப் பிரச்னைகளை தி.ஜா போன்றவர்கள் கையாண்டிருக்கும் விதம் அலாதியானது மட்டுமல்லாமல் நேர்மையானதும்கூட. கமலி வாசிப்பில் விறுவிறுப்பைக் கூட்டுகிறது. அதேநேரம் வாசித்து முடித்ததும் வாசகர்கள், தான் இருக்கும் குடும்ப அமைப்பைப் பார்க்க நேர்கிறபோது சிறு பதற்றத்தை ஏற்படுத்துகிறது. ஒருவகையில் இதுதான் இந்த நாவலின் வெற்றி.

கமலி
சி.மோகன்
வெளியீடு : புலம், 178, F, அனுதீப் அபார்ட்மென்ட்ஸ், 3வது பிரதான சாலை, நடேசன் நகர், சென்னை - 600 092.
தொலைபேசி : 98406 03499
விலை : ரூ. 150பக்கங்கள் : 144