
பெரிதும் பேசப்படாத வரலாற்றைப் பதிவுசெய்த வகையில் இது முக்கியமான நாவல்.
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறென்பது பெரும்பாலும் வட இந்தியாவையே சுற்றிச் சுழல்கிறது. பழநி சதி வழக்கு, திருநெல்வேலி சதி வழக்கு, குலசை சதி வழக்கென வாழ்நாளைச் சிறையில் கழித்த, சிறையிலேயே உயிர்நீத்த பல சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் பெயர்கள் தமிழக சுதந்திர தின விழாக்களில்கூட உச்சரிக்கப்படுவ தேயில்லை.
வரலாற்றை எழுதும் வட இந்திய ஆசிரியர்களுக்கு 1857-க்குப் பிறகுதான் பார்வை துலங்கும். அதற்கு முன்பு 1806-ல் நடந்த வேலூர்ப் போராட்டம் பற்றியோ, 1801-ல் நடந்த காளையார்கோயில் யுத்தம் பற்றியோ அவர்கள் பதிவு செய்வதில்லை. சிறையுடைப்பு, கெரில்லா யுக்தி, கொடூரத் தாக்குதல்களென வெள்ளையர்களுக்கு எதிராகத் தமிழர்கள் நிகழ்த்திய காளையார்கோயில் யுத்தம்தான் இந்திய சமஸ்தானங்கள் முழுதும் சுதந்திர வேட்கையைத் தட்டியெழுப்பியது. இந்த யுத்தத்தில் பிடிபட்ட போராளிகளையெல்லாம் குடும்பம் குடும்பமாகத் தூக்கிலிட்டுக் கோரத்தாண்டவம் ஆடிய வெள்ளையர்கள், மிஞ்சியவர்களுக்கு அதைவிடவும் ஒரு கொடூர தண்டனை கொடுக்கத் திட்டமிட்டனர். அதுதான் ‘காலா பாணி.’ போராளிகளைக் கப்பலில் ஏற்றிச் சென்று ஏதேனுமொரு தீவில் இறக்கிவிடுவது. இதுவரை பெயர்கூட அறிந்திராத அந்தத் தீவில், இருண்ட ஓர் நாற்சதுர அறைக்குள் வாழ்க்கையைக் கழிக்கிற கொடூர தண்டனை.

மருது சகோதரர்களையும் அவர்களின் வாரிசுகளையும் தூக்கிலிட்ட பிறகு, சிவகங்கை மன்னர் வேங்கை பெரிய உடையணத் தேவன், சிறுவனாக இருந்த சின்ன மருதுவின் மகன் துரைச்சாமி, சில பாளையக்காரர்கள் உள்ளடங்கிய 73 பேரை காலா பாணியாக அறிவித்து பினாங்குக்கு நாடு கடத்தினார்கள். அந்தத் துயர வரலாற்றைச் சிறு சிறு புனைவுகளோடு நாவலாக வடித்தெடுத்திருக்கிறார், இந்திய ஆட்சிப்பணி அதிகாரியும் எழுத்தாளருமான டாக்டர் மு.ராஜேந்திரன்.
1801, டிசம்பரில் தூத்துக்குடிக் கோட்டையில் மேஜர் வெல்ஷுக்கும், போர்க்கைதியாக இருந்த தன் கணவனை சின்ன மருதுவின் கருணையால் மீட்டுக்கொண்டு வந்த ஆங்கிலப் பெண் கிறிஸ்டியானாவுக்குமான விவாதத்தில் தொடங்கும் நாவல், 1802, செப்டம்பரில் பென்கோலன் கோட்டையில் வேங்கை பெரிய உடையணத் தேவன் உயிர்நீக்கும் காட்சியோடு நிறைவடைகிறது. இந்தக் கால இடைவெளியில், வெள்ளையர்களின் ஆதிக்கத்துக்கு எதிராக, தீரத்தோடு ஆயுதம் தரித்துப் போராடிய மனிதர்களின் கதை, வாழ்க்கைமுறை, நிர்வாகச்சூழல், வெள்ளையர்கள் நிகழ்த்திய கொடுமைகள், உறவுப்பிணைப்புகள் என அனைத்தையும் தக்க அளவில் உள்ளீடு செய்திருக்கிறார் ராஜேந்திரன்.
பெரிதும் பேசப்படாத வரலாற்றைப் பதிவுசெய்த வகையில் இது முக்கியமான நாவல்.
காலா பாணி
டாக்டர் மு.ராஜேந்திரன் இ.ஆ.ப
வெளியீடு:
அகநி வெளியீடு, 3, பாடசாலை தெரு, அம்மையப்பட்டு, வந்தவாசி-604408
இமெயில்: akaniveliyeedu@gmail.com
விலை : ரூ.650
பக்கங்கள்: 536