ஆனந்த விகடன் பொக்கிஷம்
கட்டுரைகள்
Published:Updated:

படிப்பறை

கி.ராஜநாராயணன்
பிரீமியம் ஸ்டோரி
News
கி.ராஜநாராயணன்

தென் தமிழகத்துக் கரிசல் நில மக்களின் தனித்துவமான வாழ்வியலை, அவர்களின் அன்றாடப் புழங்குமொழியிலேயே உயிரோட்டமிக்க புனைவுகளாக முன்வைத்த கதைசொல்லி கி.ராஜநாராயணன்.

னித குல வரலாறு பற்றிய தேடல் எல்லைகளற்றது. வெவ்வேறு நிலப்பரப்பில் வாழ்ந்த மனிதர்களின் வரலாற்றை அணுகுவதன் மூலம் மானிடவியல் நோக்கில் மனிதகுல வரலாறு பற்றிய பார்வை உருவாகிறது.

இந்தியா என்னும் தொன்மையான நிலப்பரப்பில் வாழ்ந்த நம் மூதாதையர்களின் வரலாறு குறித்த புத்தகம் Tony Joseph எழுதிய Early Indians. இதன் தமிழாகக்கம் பி.எஸ்.வி.குமாரசாமி மொழிபெயர்ப்பில் ’ஆதி இந்தியர்கள்’ என்ற நூலாக வெளிவந்துள்ளது.

ஆப்பிரிக்கா, மேற்காசியா, கிழக்கு ஆசியா, மத்திய ஆசியா இங்கிருந்தெல்லாம் வந்து சுமார் 65,000 ஆண்டுகளில் இந்தியாவெங்கும் பரவி வாழ்ந்த நம் மூதாதையர் பற்றிய புத்தகம்தான் ஆதி இந்தியர்கள்.

படிப்பறை

டோனி ஜோசஃப் இந்தியாவின் முன்னணி இதழியலாளர்களில் ஒருவர். வரலாற்று நூல்களைத் தேடித் தேடிப் படித்ததன் மூலம் இந்திய மூதாதையர்கள் குறித்து அறிந்துகொள்ளும் ஆர்வம் ஏற்பட்டதாகக் கூறுகிறார். இந்தியாவில் குடியேறிய வெவ்வேறு இனக்குழுக்கள் முதல் இறுதியாகக் குடியேறிய வந்தேறி ஆரியர்கள் வரை இந்நூலில் ஆவணப்படுத்தியுள்ளார்.

ஆப்பிரிக்காவிலிருந்து 65,000 ஆண்டுகளுக்கு முன் வெளியேறிய நவீன மனிதர்களில் ஆரம்பித்து, ஜாக்ரோஸ் மேய்ப்பாளர்கள் பலுசிஸ்தானை அடைந்து இந்தியர்களோடு கலந்து ஹரப்பா நாகரிகம் உருவானது; பின்னர் ஆரியர்கள் வந்தது; கடைசியாக ஆங்கிலேயர் வந்தது வரை காலகட்டங்களைப் பிரித்து இந்நூல் விளக்குகிறது. பின்னிணைப்பாக உள்ள கக்கர் - ஹக்ரா பள்ளத்தாக்கு மிக முக்கியமான கட்டுரை.

படிப்பறை

பெரும்பாலான ஆய்வறிக்கைகளைத் தேடிப்படிக்க வசதியாக ஆங்கிலத்திலேயே கொடுத்துள்ளார் மொழிபெயர்ப்பாளர். கலைச்சொற்கள் பட்டியல் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.

வந்த வழியும், வந்த காலமும் வேறு வேறே தவிர நாம் அனைவரும் இங்கே வந்து குடியேறியவர்கள்தான் என்று சொல்கிறது இந்நூல். மனிதர்கள், மொழிகள், கலாசாரங்கள் என்று இந்தியர்களின் வரலாற்றை அறிந்துகொள்ள இந்நூலை வாசிக்கலாம்.

- பரிசல் கிருஷ்ணா

ஆதி இந்தியர்கள் டோனி ஜோசஃப்

தமிழில்: பிஎஸ்வி. குமாரசாமி

வெளியீடு: மஞ்சுள் பதிப்பகம்விலை:

ரூ. 350 பக்கம்: 280

என்னைக் கவர்ந்த இளம் படைப்பாளி

படிப்பறை

“சமீபகாலங்களில் தீவிரமாக எழுதிவரும் கவிஞர்களில் சபரிநாதன் என்னைப் பெரிதும் கவர்கிறார். நவீனக் கவிதைகளுக்கென்று சில பண்புகள் இருப்பதாகக் கருதிக்கொண்டு எழுதப்படுகிற கவிதைகள் தமிழ்ச்சூழலில் நிரம்பி வழிகின்றன. அப்படியல்லாமல், வழமையான வடிவங்களையும் சொல்முறைகளையும் எடுத்துக்கொள்ளாமல் காலங்காலமாக நவீனக் கவிதைகளுக்கென்று ஆகிவந்த மருட்சியும் மிரட்சியுமான கவிதைமொழியல்லாமல் தனித்த பேசுபொருள், சொல்முறை, கவிதை மொழி அத்தனையும் கூடித்திரண்ட அவரின் கவிதைகளை முதல் தொகுப்பான ‘களம் காலம் ஆட்ட’த்திலேயே கண்டு நான் மகிழ்ச்சி அடைந்தேன். தொடர்ந்து ‘வால்’ தொகுப்பிலும் அதைப் பார்க்க முடிந்தது. முற்போக்கு என்று தங்களைப் பிரகடனம் செய்து கொள்கிறவர்கள் தொடர்ந்து நவீனக் கவிதைகளைப் புறம்பேசி வருகிறார்கள். இன்னொரு புறம் நவீனக் கவிதை பொருட்படுத்தப்படாமலே இருக்கிறது. இதையெல்லாம் தாண்டித்தான் இங்கே நவீனக் கவிதை ஜீவனுடனும் சிறப்புடனும் இருந்துவருகிறது. இதை வளர்த்தெடுத்துவருகிற எங்கள் இளைய தலைமுறைக் கவிஞர்கள் ஒவ்வொருவரையும் நான் போற்றுகிறேன். அவர்களில் குறிப்பிட்டதகுந்தவரான சபரிநாதனுக்கு என் ஆசீர்வாதங்கள்... வாழ்த்துகள்!

- கவிஞர் விக்ரமாதித்யன்

ஆளுமை போற்றுதும்!

படிப்பறை

தென் தமிழகத்துக் கரிசல் நில மக்களின் தனித்துவமான வாழ்வியலை, அவர்களின் அன்றாடப் புழங்குமொழியிலேயே உயிரோட்டமிக்க புனைவுகளாக முன்வைத்த கதைசொல்லி கி.ராஜநாராயணன். வேளாண்மை, கால்நடை வளர்ப்பு என்கிற பிரதான தொழிலோடு பிணைந்த மனிதர்களின் போராட்டங்களையும் கொண்டாட்டங்களையும் வாய்மொழிக்கதைகளின் எளிமையோடும் நுட்பத்தோடும் ஆவணப்படுத்தியிருக்கின்றன அவரது கதைகள். ‘கோபல்ல கிராமம்’, ‘கோபல்லபுரத்து மக்கள்’ இரண்டு நாவல்களும் ஒரு இனக்குழுவைப் பற்றிய முழுமையான வரலாற்றுச் சித்திரமாக அமைந்தவை. ‘கிடை’ உள்ளிட்ட அவரது படைப்புகள் யாவுமே தனித்துவமானவை. கி.ராவின் கதையுலகைப் பற்றிச் சொல்ல ஒருசோற்றுப் பதமாக ‘கதவு’ என்கிற ஒரு சிறுகதையே போதுமானது. ‘மனித மனத்தைக் கதைகளைக் கொண்டுதான் பக்குவப்படுத்த முடியும்’ என்று நம்பும் கி.ரா, தனது படைப்புகளில் முன்வைக்கும் பெண்களின், சிறார்களின் உலகங்கள் தனிக்கவனம் கொடுத்து வாசிக்கப்பட வேண்டியவை. மேலும் சூழலியல் அணுகுமுறையில் கி.ராவின் கதையுலகை வாசிப்பது இந்த நிலம் குறித்த புதிய பார்வைகளைத் தரும். எல்லாவற்றுக்கும் மேலாக, சொலவடைகளும் வசைகளும் நையாண்டியுமாய்... உணர்ச்சிகள் பீறிடும் கரிசல் மொழியில் திளைத்துக் கிடப்பதற்காகவேனும் கி.ராவை வாசித்தேயாக வேண்டும்!

- வெய்யில்