சினிமா
தொடர்கள்
Published:Updated:

படிப்பறை

படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
News
படிப்பறை

அன்புள்ள புல்புல்

காந்தியின் கல்வி, காந்தியின் மதம், காந்தியின் சமூகம் என காந்தியம் குறித்த 18 கட்டுரைகளின் தொகுப்பே ‘அன்புள்ள புல்புல்.’

காந்தி குறித்து எப்போதும் கட்டவிழ்த்து விடப்படுகிற கட்டுக்கதைகளை மட்டுமே அறிந்திருக்கிற ஒரு தலைமுறை, கண்டிப்பாக காந்தியைப் பற்றிய உண்மைகளை அறிந்துகொள்ள அவருடைய ஆளுமையைப் புரிந்துகொள்ள ‘அன்புள்ள புல்புல்’ கட்டுரைத் தொகுப்பு பேருதவியாக இருக்கும். பல்வேறு அறிஞர்களின் ஆய்வுகளோடு மிக எளிமையாக எழுதப்பட்ட சுனில் கிருஷ்ணனின் எழுத்துநடை வாசிப்பின் சுவாரஸ்யத்தைக் கூட்டுகிறது.

முதல் இரண்டு கட்டுரைகள், கல்விமுறை பற்றிய காந்தியின் பார்வையைச் சொல்கிறது. நிறுவனமயமாக்கப்பட்ட கல்விமுறை குறித்து இன்று பெரியளவில் விமர்சனங்கள் எழுகின்றன. ஆனால், ‘ஆங்கிலக் கல்விமுறை அவர்களுக்கான குமாஸ்தாக்களை மட்டுமே உருவாக்கும்’ என அன்றே சொன்னவர் காந்தி.

படிப்பறை

அவரின் தொழில்முறை சார்ந்த கல்வியில் பலருக்கு விமர்சனங்கள் இருந்தாலும், கல்விக்குள் மதம் எக்காரணம் கொண்டும் நுழையக்கூடாது என்ற அவரின் உறுதி அதற்கு முற்றுப்புள்ளியிடுகிறது. அடுத்த இரண்டு கட்டுரைகள் காந்தியின் மதம் சார்ந்த பார்வையைப் பற்றியது. காந்தியின் மதம், அன்பையும் அறத்தையும் முதன்மையாகக் கொண்டது. அவரின் ராமராஜ்யத்துக்கு நாம் ‘குதாயீ ராஜ்’, ‘கர்த்தரின் ராஜ்ஜியம்’ என எப்படி வேண்டுமானாலும் பெயர் வைத்துக்கொள்ளலாம். அவரின் நோக்கமும் அத்தகையதுதான் என்கிறார் கட்டுரையாளர்.

‘அஹிம்சை கோழையின் ஆயுதமல்ல’ அது ஆகச்சிறந்த போராட்ட வழிமுறை என்பதை, ‘அஹிம்சையின் வெற்றி’ கட்டுரையின் வாயிலாக நாம் அறிந்துகொள்ள முடிகிறது. ‘கோழை’, ‘அரை நிர்வாணப் பக்கிரி’ என உலகம் காந்திக்கு அளித்த பட்டப்பெயர்களைத் தாண்டி காந்தி தனக்குத்தானே சூட்டிக்கொண்ட பெயர்களைப் பற்றிய, அவரின் நகைச்சுவையுணர்வைப் பற்றிய கட்டுரைதான் ‘அன்புள்ள புல்புல்.’ தன்னைப்போலவே மற்றவர்களையும், அன்பான செல்லப்பெயர்களில் விளிக்கும் பழக்கமுடையவரான காந்தி, சரோஜினி நாயுடுவுக்கு எழுதிய கடிதங்களில் அவரைச் செல்லமாக விளித்த ‘அன்புள்ள புல்புல்’ என்கிற பெயர், கட்டுரையாளரின் விருப்பமாக இருக்க அதுவே இத்தொகுப்பின் பெயராகியிருக்கிறது.

காந்தி குறித்துச் சொல்ல சாகசக் கதைகள் ஏதுமில்லை, ஏனெனில், அவர் சாகசவாதி இல்லை. அவர் ‘நடைமுறை லட்சியவாதி’ என்பதை ஆணித்தரமாகப் பதிவு செய்கிறது இந்நூல்.

அன்புள்ள புல்புல் - சுனில் கிருஷ்ணன்

வெளியீடு : யாவரும் பப்ளிஷர்ஸ், 214, மூன்றாவது பிரதான சாலை, புவனேஸ்வரி நகர், வேளச்சேரி, சென்னை - 42 பக்கங்கள் : 196; விலை : ரூ.200