சினிமா
தொடர்கள்
Published:Updated:

படிப்பறை

இந்தியாவில் குற்றங்களும்  மத நம்பிக்கைகளும்
பிரீமியம் ஸ்டோரி
News
இந்தியாவில் குற்றங்களும் மத நம்பிக்கைகளும்

இந்தியாவின் வட்டார வரலாறுகள் பெரும்பாலானவற்றை வெளிநாட்டவர்கள்தான் எழுதியிருக்கிறார்கள்.

ப்படிப் பிறமொழிகளிலிருந்து தமிழுக்குப் பெயர்க்கப்பட்ட நம் வட்டார வரலாற்றுப் பிரதிகள் பலநூறு இப்போது விற்பனைக்குக் கிடைக்கின்றன. சடங்குகள், வழிபாடுகள், வாழ்க்கைமுறைகள், நம்பிக்கைகள் தொடர்பான அந்தப் பிரதிகளில் பல, சொல்லக் கேட்டு எழுதியவை. உண்மைக்குத் தொடர்பில்லாதவை. ஆனால், அகஸ்டஸ் சோமர்வில் எழுதியுள்ள `Crime and Religious Beliefs in India' என்ற நூல் நமக்கு நெருக்கமாக இருக்கிறது. 1931-ல் The Criminologist நிறுவனம் வெளியிட்ட இந்த நூலை மா.வெற்றிவேல் மொழிபெயர்த்திருக்கிறார். இந்தியாவின் பல்வேறு கிராமங்களில் அலைந்து திரிந்து, பாமர மக்களின் வழிபாடுகள், மத நம்பிக்கைகள், அந்த நம்பிக்கைகளின் அடிப்படையிலான குற்றச்செயல்களை ஆவணப்படுத்தியிருக்கிறார் அகஸ்டஸ் சோமர்வில். `ஒரு சராசரி இந்தியன் சமய நம்பிக்கைகளாலும் மூடப்பழக்கங்களாலும் சூழப்பட்டிருக்கும் ஒரு புறவெளியில் வாழ்ந்துகொண்டும் நடமாடிக்கொண்டும் இருக்கிறான்' என்பது அவரது முடிவு.

படிப்பறை

பாலியல் தொழில் பற்றிய கட்டுரை முக்கியமானது. புத்த ஜாதகக் கதைகள், அர்த்த சாஸ்திரம், மனு ஸ்மிருதி, காமசூத்திரம் போன்ற பழங்கால நூல்களை முன்வைத்து பாலியல் தொழிலின் வேரை அகழ்வுசெய்யும் அகஸ்டஸ், வெள்ளையர் காலத்தில் நிகழ்ந்த `கம்பள விற்பனை' பற்றியும் எழுதுகிறார். கடத்தல்காரர்களின் மொழியில் அழகான, விரும்பத்தகுந்த பெண்கள் `சிவப்புக் கம்பளங்கள்'; விரும்பக்கூடிய தோற்றமில்லாத பெண்கள் `நீலக் கம்பளங்கள்'; பாலியல் தொழிலுக்குப் பழக்கப்பட்ட பெண்கள் `கறுப்புக் கம்பளங்கள்'. இந்தியாவில் கடல் வழியில் நடந்த, அபின், கோகைன் போன்ற போதைப்பொருள் கடத்தல் குறித்து ஒரு க்ரைம் நாவலின் விறுவிறுப்போடு எழுதியிருக்கிறார் அகஸ்டஸ். கொல்கத்தாவுக்கு அருகேயுள்ள கங்கா சாகர் திருவிழாவில் சந்ததி சிறக்க, தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை முதலைகளுக்கு இரையாகத் தரும் பழக்கம் இருந்ததையும் ஆவணப்படுத்தியிருக்கிறார்.

இந்தியப் பண்பாட்டுக்கும் இன்று ‘குற்றம்’ என்று வரையறுக்கப்படும் செயல்களுக்கும் இடையிலான உறவைத் தெரிந்துகொள்ள அவசியம் படிக்க வேண்டிய நூல்.

இந்தியாவில் குற்றங்களும் மத நம்பிக்கைகளும்

அகஸ்டஸ் சோமர்வில்

தமிழில் மா.வெற்றிவேல்

வெளியீடு: சந்தியா பதிப்பகம், புதிய எண்77, 53-வது தெரு, 9-வது அவென்யூ, அசோக்நகர், சென்னை-83.

பக்கங்கள் : 224; விலை : 170 ரூபாய்