
புலிப்பானி ஜோதிடர் - காலபைரவன்
வெவ்வேறு விதமான உத்திகளைக் கொண்டு எழுதப்பட்ட ஒன்பது சிறுகதைகளின் தொகுப்பு, காலபைரவனின் ‘புலிப்பானி ஜோதிடர்.’
இப்போது கடிதம் எழுதும் பழக்கம் குறைந்திருக்கலாம். ஆனால் தனிமனித உறவுகளைத் தாண்டி, தலைவர் தொண்டர்களுக்கு எழுதும் கடிதங்கள், எழுத்தாளர்களுக்கு இடையிலான கடிதங்கள், வாசகர்கள் பத்திரிகைகளுக்கு எழுதும் கடிதங்கள் எனத் தமிழர்கள் வாழ்க்கையில் முக்கியப் பங்கு வகித்தவை கடிதங்கள்.

இந்தத் தொகுப்பில் உள்ள பல கதை களிலும் கடிதங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அந்தவகையில் ‘தொடுவானம்’ எனும் கதையின் கடிதங்கள் சிறப்பானவை. இந்தக் கதையின் நாயகன், தன் நண்பனான கந்தன் எழுதிய கடிதங்களை நள்ளிரவு கடந்தபொழுதிலும் படித்துக்கொண்டிருப்பதைக் கவனிக்கும் மனைவி, அவரை மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறாள். கதையின் தொடக்கத்தில் கடிதத்தில் உள்ள கையெழுத்துகளை வியந்து விவரித்திருப்பான். ஆனால், மருத்துவர் ‘அந்தக் கடிதங்கள் தனக்குத்தானே நாயகனே எழுதிக்கொண்டது’ என விவரிக்கும்போது, கதையே வேறொரு தளத்தில் விரிகிறது. அதேபோல, ‘ஹே ராம்’ கதையில் ராமனுக்குச் சீதை எழுதிய கடிதமும், கதைசொல்லிக்கு ராமன் எழுதிய கடிதமும் கதையை வேறொரு தளத்துக்கு அழைத்துச்செல்பவை. கதையின் தொடக்கத்தில் ஒரு கலவரத்தைச் சித்திரிப்பதைப் போல் தோற்றம் தரும் கதைப்போக்கும் இறுதியில் ராமன், சீதையின் அகச்சிக்கலைச் சித்திரிப்பதாக முடிவது, முற்றிலும் புதிய வாசிப்பனுபவத்தைத் தருகிறது.
‘காக்கா கதை’யில் கதாசிரியன் எழுதும் கதையில் உள்ள மரத்தில் கூடு கட்ட அனுமதி கேட்கிறது ஒரு காக்கா. சில நிபந்தனைகளை விதித்து, கூடுகட்டச் சம்மதிக்கும் எழுத்தாளனைச் சிறையில் தள்ளுமளவு சதி செய்கிறது காக்கா.இந்த உத்தியும் கதைக்குள் பயணிக்கும் நிஜபாத்திரங்களும் வாசிப்ப வருக்குப் புதிய அனுபவத்தை அளிக்கும். இப்படி வெவ்வேறு உத்திகள் வழியாக, தொகுப்பின் அனைத்துக்கதைகளிலும் மையச்சரடாக ஆண், பெண் உறவுச் சிக்கல் மிகக்கூர்மையாக விவாதிக்கப்படுகிறது. கதை எழுதும் ஒருவனாகட்டும், பனந்தோப்புகளைக் குத்தகைக்கு எடுக்கும் வணிகனாட்டும், கடவுள் ராமனாகட்டும், சராசரி கிராமத்து மனிதனாகட்டும், ஒரு பெண்ணை எதிர்கொள்ளல் என்பது ஆண்களுக்கு அடிப்படைச் சிக்கலாக இருப்பதைக் கதைகள் உணர்த்துகின்றன.
ஓர் ஆண் எடுக்கும் முடிவை, ஒரு பெண் எடுக்கத் துணியும்போது அதிரும் பண்பாட்டு அடுக்கு களைப் பற்றிய நுண்சித்திரிப்பு களாகக் கதைகள் அமைந்தி ருக்கின்றன. ஆண் மனதின், சதா உறுத்திக்கொண்டே யிருக்கும் குற்றவுணர்வின் வெளிப்பாடான கதைகள், எளிமையான மொழிநடையில் எழுதப்பட்டி ருப்பது தொகுப்பின் மிகப் பெரிய பலம்.
புலிப்பானி ஜோதிடர்
வெளியீடு : எதிர் வெளியீடு,
96, நியூ ஸ்கீம் ரோடு,
பொள்ளாச்சி - 642002
தொலைபேசி : 9942511302
பக்கங்கள் : 144
விலை : ரூ.150