புத்தக வாசிப்பாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த 46வது சென்னை புத்தகக் கண்காட்சி நேற்று தொடங்கி வரும் 22ம் தேதி வரை தினசரி காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற இருக்கிறது. அதையொட்டி தினமும் ஒரு ஆளுமைகளின் புத்தகப் பரிந்துரைகளை நாம் இன்று முதல் பதிவு செய்ய இருக்கின்றோம். தமிழின் குறிப்பிடத் தகுந்த எழுத்தாளரான சாரு நிவேதிதா பரிந்துரை செய்த 5 புத்தகங்கள் இதோ...

1.மண்ணில் தெரியுது வானம் -நா.சிதம்பர சுப்பிரமணியன்
தமிழ் எழுத்துலக வரலாற்றில் நூல்களைப் பரிந்துரைக்க வேண்டுமென்றால் பல ஆயிரம் நூல்களை நான் குறிப்பிடுவேன்.இருந்தும் அவற்றில் 5 நூல்கள் என்ற வகையில் நான் பரிந்துரைக்கும் முதல் நூல் “ மண்ணில் தெரியுது வானம்”.
இத்தலைப்பைப் போலவே இந்நூல் ஒரு நேர்மறையான சிந்தனையைத் தரக்கூடிய ஒரு அனுபவ நாவல்.

இந்நூலின் ஆசிரியர் நா.சிதம்பர சுப்பிரமணியன் தனது குருவான காந்தியடிகளோடு ஏற்பட்ட அனுபவங்களையும், அக்காலகட்டத்தில் நடந்த சுதந்திரப் போராட்டம் எவ்வாறு இருந்தது என்பதனையும் அழமாக விவரித்திருப்பார்.இன்றைய இளைஞர்கள் அனைவரும் நிச்சயம் வாசிக்க வேண்டிய நூலாக இதனைப் பரிந்துரை செய்கிறேன்.
2. பழுப்பு நிற பக்கங்கள் - மூன்று பாகங்கள் - சாரு நிவேதிதா
பொதுவாக பரிந்துரைகளில் பிற எழுத்தாளர்களின் நூல்களையே குறிப்பிடுவார்கள். இருந்தும் எனது நூலினை நானே பரிந்துரை செய்து கொள்ள முக்கியமான காரணம் இருக்கிறது.

ஏனெனில் இந்நூலினை நான் உரிமை கொண்டாடும் தகுதி இருப்பதைவிட தமிழின் பாரதிக்கு பிறகு வந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் உரிமை உண்டு என்பதே அதற்கு காரணம். மூன்று பகுதிகளாக வெளியான இந்நூல் பாரதி தொடங்கி சமகால எழுத்தாளர்கள் பெரும்பாலானவர்களின் படைப்புகளைப் பற்றி பேசுகிறது.
3.கரைந்த நிழல்கள் - அசோகமித்திரன்
தமிழின் ஆகச் சிறந்த படைப்பாக அசோகமித்திரனின் இந்நாவலை நான் குறிப்பிடுவேன். என்னைப் பொறுத்தமட்டில் சினிமா என்பது இங்கு மதமாகவே உள்ளது என்று சொல்லலாம். அவ்வாறு பார்க்கப்படும் சினிமாவின் திரைக்கு பின்னால் இருக்கும், உண்மையான முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிய நாவலாக இதைப் பார்க்கலாம்.

சினிமாவின் தயாரிப்புத் துறையில் பல ஆண்டுகள் பணிபுரிந்த அசோகாமித்திரன் இதனை மிக நேர்த்தியாகப் பதிவு செய்து இருக்கிறார். திரைப்படம் எவ்வாறு உருவாகிறது, அதற்கு பின்னால் இருக்கும் மனிதர்கள் யார்? யாரென உண்மையைப் பேசும் இந்நாவலை மையமாக வைத்தே தனியாக ஒரு திரைப்படம் எடுக்கலாம். மேலும் வாசகர்களுக்கு அசோகமித்திரனின் பிற படைப்புகளையும் நிச்சயம் வாசிக்க வேண்டியவையாக நான் பரிந்துரைச் செய்கிறேன்.
4.சுதந்திர தாகம் -மூன்று பாகங்கள் - சி.சு.செல்லப்பா
தமிழர்கள் அனைவரும் தங்களது புத்தக அலமாரியில் நிச்சயமாக வைத்திருக்க வேண்டிய நூலாக இதனைக் கூறிப்பிடுவேன். ஏனெனில் சுதந்திரம் என்பது எவ்வாறு கிடைத்தது?

அதற்காக வெள்ளையர்களின் துப்பாகிகளுக்கு அஞ்சாமல் நின்ற வீரர்களின் உணர்வுகள் எத்தகையது? என்பதனை அக்காலத்திற்கே கூட்டிச் சென்று மனக்கண்ணில் காட்டிய வரலாற்று நாவலாக இதை பார்க்கலாம். மூன்று பாகங்கள் கொண்ட இந்நூலினை உங்கள் வாழ்நாளில் நிச்சயம் வாசிக்க வேண்டிய நூலாக நான் குறிப்பிடுவேன்.
5.தற்கொலை குறுங்கதைகள் - அராத்து
சமீபத்தில் எழுதக்கூடிய எழுத்தாளர்களுக்கும், இன்றைய இளைய தலைமுறையினருக்கும் ஒரு பெரிய இடைவெளி உள்ளதாகவே எண்ணுகிறேன்.

இளையோரின் காதல் எத்தகையது ? அவர்களின் நையாண்டி என்ன? கிண்டல் மொழிகள், காதல் மொழிகள் எவ்வாறு இருக்கும்? என்பதைப் புரிந்து கொள்வதில் இருக்கும் சிக்கலே அதற்கு காரணமாக கருதுகிறேன். ஆனால் அதனை துல்லியமாகப் பிரதிபலிக்கும் எழுத்தாக அராத்துவின் எழுத்துகள் உள்ளது. இப்புத்தகத்தை வாசிக்கக் கூடிய முந்தைய தலைமுறையினருக்கு நிச்சயம் இது பெரிய ஆச்சர்யத்தையும் இளைய தலைமுறையினரின் நவநாகரிகத்தைப் புரிந்து கொள்ளும் ஓர் அனுபவத்தையும் தரும்.