Published:Updated:

அவசியம் வாங்க... ஐந்து நூல்கள்!

அவசியம் வாங்க... ஐந்து நூல்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
அவசியம் வாங்க... ஐந்து நூல்கள்!

சிக்கல் சண்முகசுந்தரம் எனும் நாகஸ்வரக் கலைஞனின் வாழ்வில் ஏற்படும் புகழ், காதல், பிரச்னைகள், ஏற்படும் இடையூறுகளை சுவாரஸ்யமான புதினமாக வடித்துத் தந்திருக்கிறார் நூலாசிரியர் கொத்தமங்கலம் சுப்பு.

சென்னையை விழாக்கோலமாக்கியிருக்கிறது புத்தகக்காட்சி. எந்தப் பக்கம் திரும்பினாலும் கலை நிகழ்ச்சிகள், இலக்கியத் திருவிழாக்கள், நூல் வெளியீட்டு விழாக்கள் எனப் பெருநகரம் அறிவுக் களைகட்டுகிறது. இந்தப் புத்தகக் காட்சியை ஒட்டி, ஆனந்த விகடனில் வெளியாகிப் பல லட்சம் வாசகர்களின் வரவேற்பைப் பெற்ற 5 தொடர்கள் நூல்களாகி வாசகர்களின் கரங்களுக்கு வருகின்றன. அந்த நூல்கள் குறித்த சிறுகுறிப்பு...

உன் கண்ணில் நீர் வழிந்தால்... - சேவற்கொடியோன்

ஆனந்த விகடன் ஆசிரியராக இருந்த, விகடன் குழுமத் தலைவர் அமரர் எஸ்.பாலசுப்ரமணியன், ‘சேவற்கொடியோன்’ எனும் புனைபெயரில் 17.04.1960 முதல் 02.07.1961 வரை எழுதிய தொடர்கதை ‘உன் கண்ணில் நீர் வழிந்தால்.’ தான் காதல் கொண்ட பெண் தன்னைச் சகோதரனாகக் கருதுகிறாள் என்பதை அறிந்து, அதிர்ச்சிக்கும் வெறுப்புக்கும் ஆளாகாமல் அந்தப் பெண்ணுக்காகத் தன் வாழ்க்கையையே தியாகம் செய்யும் ஓர் இளைஞனின் கதை. உறவுகளுக்கிடையே எழும் கருத்து வேறுபாடுகள், அதனால் நிகழும் எதிர்பாராத சம்பவங்கள், சந்தேகத்தால் ஏற்படும் விளைவுகள் என அனைத்து உணர்வுகளையும் தன் விறுவிறுப்பான எழுத்து நடையால் சுவாரஸ்யமாகக் கொண்டுபோகிறார். ஓவியர் கோபுலுவின் தத்ரூபமான ஓவியங்கள், கதையின் பாத்திரங்களை உயிரோட்டம் உள்ளவையாக மாற்றியுள்ளன. உணர்ச்சிகளின் கலவையான இந்நாவல் முதல்முறையாக நூலாகிறது.

பக்கங்கள்: 632 விலை: ரூ. 599

அவசியம் வாங்க... ஐந்து நூல்கள்!

ஆரோக்கியம் ஒரு பிளேட் - டாக்டர் அருண்குமார்

ஆனந்த விகடனில் இன்றளவும் தொடராக வந்து லட்சக்கணக்கான வாசகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ள தொடரின் ஒரு பகுதி நூலாகியிருக்கிறது. உணவு, ஊட்டச்சத்து, டயட், ஆரோக்கியம் குறித்து நாம் நம்பியிருக்கும் பல விஷயங்களை அறிவியல்பூர்வமாக ஆராய்ந்து எதார்த்தத்தைப் பேசுவதோடு, நாம் அன்றாடம் பயன்படுத்துகிற எல்லா உணவுப்பொருள்களையும் அறிவியல் ரீதியாகப் பகுத்தறிந்து, நவீன உணவுகள் மட்டுமன்றி, பாரம்பர்ய உணவுகள் குறித்த சாதக பாதகங்களையும் இந்த நூல் விரிவாக எடுத்துரைக்கிறது. வாசகர்களின் கேள்விகளுக்கு டாக்டர் அருண்குமார் அளித்த பதில்களும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.

பக்கங்கள்: 248 விலை: ரூ. 245

நரம்பு அறுந்த யாழ் - கவிக்கோ அப்துல் ரகுமான்

வரலாற்றுக்கால இலங்கை, யாழ்ப்பாணம் நகரின் பழம்பெருமை, அங்கு நிகழ்ந்த இனக் கலவரங்களைப் பற்றி கவிக்கோ அப்துல் ரகுமான் 2003-ம் ஆண்டில் ஆனந்த விகடனில் எழுதிய தொடர் கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். இலங்கையின் வரலாறு, தமிழருக்கும் சிங்களருக்கும் இடையே ஆதியிலிருந்து நடந்துவரும் மோதல்கள், போராளிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே நடந்த போர், சமாதான முயற்சிகள் என அனைத்தையும் தன் செழுமையான தமிழால் பதிவு செய்திருக்கிறார் கவிக்கோ. ஈழத் தமிழர்களின் இன்னல் வாழ்வை முழுமையாகப் பதிவு செய்துள்ள இந்த ஆவணம், முதன்முறையாக நூல் வடிவம் பெறுகிறது.

பக்கங்கள்: 152 விலை: ரூ. 160

நான் ஒரு ரசிகன் - மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்

இளமைக்காலம் முதல், தான் இசைத்துறைக்கு வர எடுத்துக்கொண்ட முயற்சிகள், வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட நிகழ்வுகள், சினிமாவின் பெரும் ஆளுமைகளுடனான தன் அனுபவங்கள் பற்றியெல்லாம் `நான் ஒரு ரசிகன்' எனும் தலைப்பில் ஆனந்த விகடனில், 1993-94-ம் ஆண்டுகளில் எம்.எஸ்.விஸ்வநாதன் எழுதிய தொடர் கட்டுரைகள் முதல்முறையாக இப்போது நூலாகியிருக்கின்றன. ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்காலம் தமிழ்த் திரையுலகை, தன் இனிமையான பாடல்களால் தாலாட்டிய எம்.எஸ்.வி, தன் வாழ்க்கைப் பயணத்தை இசைக்கோட்டையாகக் கட்டியிருக்கிறார் இந்த நூலில்!

பக்கங்கள்: 168 விலை: ரூ. 170

தில்லானா மோகனாம்பாள் (3 தொகுதிகள்) - கொத்தமங்கலம் சுப்பு

சிக்கல் சண்முகசுந்தரம் எனும் நாகஸ்வரக் கலைஞனின் வாழ்வில் ஏற்படும் புகழ், காதல், பிரச்னைகள், ஏற்படும் இடையூறுகளை சுவாரஸ்யமான புதினமாக வடித்துத் தந்திருக்கிறார் நூலாசிரியர் கொத்தமங்கலம் சுப்பு. ஆனந்த விகடனில் பணியாற்றியபோது 1956 முதல் 1958-ம் ஆண்டு வரை `தில்லானா மோகனாம்பாள்' தொடரை எழுதினார் அவர். ஓவியர் கோபுலு வரைந்த அழகிய ஓவியங்களுடன் வெளிவந்து வாசகர்களை வசீகரித்த இந்தத் தொடர், பின்னர் சிவாஜி கணேசன், பத்மினி நடிப்பில் திரைப்படமாகவும் வெளிவந்து கோடிக்கணக்கான தமிழ் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. இப்போது விகடன் பிரசுரத்தில் மூன்று தொகுதிகளாக நூல் வடிவம் பெறுகிறது.

பக்கங்கள்: 1384 விலை: ரூ. 999