Published:Updated:

சென்னைப் புத்தகக் காட்சி 2023: ஆளுமைகள் சொல்லும் 5 புத்தகங்கள் - எழுத்தாளர் அழகிய பெரியவன்

எழுத்தாளர் அழகிய பெரியவன்

எழுத்தாளர் அழகிய பெரியவன் பரிந்துரை செய்த 5 புத்தகங்கள்

சென்னைப் புத்தகக் காட்சி 2023: ஆளுமைகள் சொல்லும் 5 புத்தகங்கள் - எழுத்தாளர் அழகிய பெரியவன்

எழுத்தாளர் அழகிய பெரியவன் பரிந்துரை செய்த 5 புத்தகங்கள்

Published:Updated:
எழுத்தாளர் அழகிய பெரியவன்

சென்னையிலே 46வது புத்தகத் திருவிழா தொடங்கியிருக்கிறது. அதையொட்டி தினமும் ஒரு ஆளுமைகளின் புத்தகப் பரிந்துரைகளை நாம் பார்த்து கொண்டிருக்கிறோம். இன்று தமிழ் சமூகத்தில் விளிம்புநிலை மக்களின் வாழ்வியலை தன் எழுத்தில் பிரதிபலித்துக் கொண்டிருக்கும், தமிழின் முக்கியமான எழுத்தாளர் “அழகிய பெரியவன்” புத்தகக் கண்காட்சி பற்றியும், 5 புத்தகப் பரிந்துரைகளையும் தெரிவித்திருக்கிறார்.

"புத்தகக் கண்காட்சி மட்டுமின்றி இலக்கியத் திருவிழாவும், சென்னையிலே நடந்து கொண்டிருக்கிறது. அதோடு மாவட்டம் தோறும் புத்தகக் கண்காட்சிகள் இலக்கிய விழாக்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இவ்வேளையில் இளம் தலைமுறையினர் எழுத்திலிருந்து மெல்ல மெல்ல விடுபட்டு காட்சி ஊடகத்திற்கும், காணொளி உலகத்திற்கும் மாறிக்கொண்டிருக்கிறார்கள், என்கின்ற குற்றச்சாட்டெல்லாம் இருக்கிறது.

Chennai Book Fair 2023
Chennai Book Fair 2023

அது இளம்தலைமுறைக்கு மட்டுமல்ல இன்று இருக்கக்கூடிய உலகமே அப்படித்தான் மாறியிருக்கிறது. பெரியவர்கள் உட்பட யாரும் ஊன்றி கவனமாக, ஆழமாகப் படிப்பதில்லை என்றும் சொல்லலாம். ஆனால், ஒரு பக்கம் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் புத்தகங்கள் பதிப்பிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. வாசிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. இந்த புத்தகக் கண்காட்சியிலே கட்டாயமாக வாசிக்க வேண்டியப் புத்தகங்கள் என்று சொன்னால், நான் ஒரு ஐந்து புத்தகங்களை உங்களுக்காகச் சொல்ல முடியும்.

1. வெறுங்கால் நடை - சு.வெங்குட்டுவன் - மணல் வீடு பதிப்பகம் 

அண்மையிலே நான் படித்த `வெறுங்கால் நடை' என்று செங்குட்டுவன் எழுதிய ஒரு சிறுகதை தொகுப்பைக் கூறலாம். இந்தத் தொகுப்பில் இருக்கக்கூடிய சிறுகதைகள் எல்லாமே மிக ஆழமான அற்புதமான சிறுகதைகளாக எனக்குத் தோன்றியது. ஏன்? அப்படி எனக்குப்பட்டன என்றால், ஒரு சமூகத்திற்குள்ளே நடக்கக்கூடிய அத்தனை விஷயங்களையும் எந்தவிதமான ஒழிவு மறைவு இல்லாமல் பட்டவர்த்தனமாக எழுத்தாளர் பதிவு செய்திருக்கின்றார். பொதுவாக இந்த `ஆண்ட பரம்பரை' என்று சொல்வார்கள். அதற்கான ஒரு பெருமிதத்தோடு இருக்கக்கூடிய நிலை எல்லாம் நாம் பார்க்கிறோம்.

வெறுங்கால் நடை - சு.வெங்குட்டுவன் - மணல் வீடு பதிப்பகம்
வெறுங்கால் நடை - சு.வெங்குட்டுவன் - மணல் வீடு பதிப்பகம்

அந்த மனநிலையோடு தன்னை உணர்ந்து கொள்ளக்கூடிய அவர்கள் செய்யக்கூடியது ஒரு கூலி வேலையாகக் கூட இருக்கலாம். ஆனால் தன்னை ஒரு ஆண்ட பரம்பரை என்று சொல்லிக் கொள்ளக்கூடிய ஒரு சூழல் அவர்களிடம் இன்று கட்டமைக்கப்படுகிறது. இது ஒரு உளவியல் கட்டமைப்பு தான். அதை எந்த அளவிற்கு பகடி செய்ய முடியுமோ செய்து, அந்த சமூகத்திற்கு உள்ளே இருக்கக்கூடிய முரண்கள், அபத்தங்கள் எல்லாவற்றையும் அவரது கதைகளிலே கொண்டு வந்திருக்கிறார். அப்படி எனக்கு மிகப் பிடித்தமான ஒரு தொகுப்பாக இந்த `வெறுங்கால் நடை' தொகுப்பு இருக்கிறது . கட்டாயமாக வாசகர்கள் இந்தப் புத்தகத்தை தேடி வாங்கிப் படிக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கின்றேன்.

2. யாத்வஷேம் - நேமிசந்த்ரா - தமிழில் கே.நல்லதம்பி - எதிர் வெளியீடு 

சமீபத்தில் நான் படித்த மிக முக்கியமான நாவல் `யாத்வஷேம்' அது நேமிசந்த்ரா என்று சொல்லக்கூடிய ஒரு கன்னட எழுத்தாளர் எழுதிய ஒரு நாவல். அதை தமிழிலே நல்லதம்பி அவர்கள் மொழிபெயர்த்திருக்கிறார். இந்த நாவலுக்கு இந்த ஆண்டிற்கான மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதமி விருது கிடைத்திருக்கிறது.

யாத்வஷேம் - நேமிசந்த்ரா - தமிழில் கே.நல்லதம்பி - எதிர் வெளியீடு
யாத்வஷேம் - நேமிசந்த்ரா - தமிழில் கே.நல்லதம்பி - எதிர் வெளியீடு

இந்நூல் யூதர்களை வதை முகாம்களில் கொன்றொழித்த நிகழ்ச்சியை, அதனுடைய தொடர்ச்சியை, அதனுடைய இணைப்புகள் எல்லாம் சேர்த்து சொல்லக்கூடியது. இனஅழிப்பு (holocaust) கொடுமுறைகள் ஹிட்லர் காலத்தில் நடந்தது போன்ற ஒரு கதைக்களத்தை எடுத்துக்கொண்டு எழுதியிருக்கிறார். இது மிக மிக முக்கியமான ஒரு நாவலாக நான் பார்க்கிறேன். இதன் மொழிபெயர்ப்பு, நாவல் வாசிப்பதற்கு மிக இலகுவாக இருக்கிறது. எதிர் வெளியீடு இதை வெளியிட்டிருக்கிறது. இதை அவசியம் அனைவரும் படிக்கலாம்.

3. சாதி, தலித்துகள், பெண்கள் - வ.கீதா - நீலம் பதிப்பகம்

எனக்கு எப்போதுமே பிடித்தமான ஒரு எழுத்தாளர் வ.கீதா. கருத்தியல் சார்ந்த புனைவல்லாத எழுத்துக்களை எழுதக்கூடிய ஆளுமைகள் என்று பார்த்தால் நான் முதலில் சொல்வது வ.கீதா அவர்களையும் எஸ்.வி.ஆர் அவர்களையும் தான். வ.கீதா மிக ஆழமான கருத்தியலை முன்வைத்து, மிக நீண்ட காலமாக எழுதிக் கொண்டிருக்கக்கூடிய தமிழின் ஒரு மாபெரும் ஆளுமை என்று சொல்வேன்.

3.சாதி, தலித்துகள், பெண்கள் - வ.கீதா - நீலம் பதிப்பகம்
3.சாதி, தலித்துகள், பெண்கள் - வ.கீதா - நீலம் பதிப்பகம்

இவருக்கு உரிய அங்கீகாரம், கவனம் இன்னும் தமிழ் சமூகத்தில் கிடைக்கவில்லையோ என்றுகூட எனக்கு ஒரு ஐயப்பாடு இருக்கிறது. மிக நீண்ட காலமாக  இவர் எழுதிய சமூக சிக்கல்களைப் பற்றிய, பெண்களைப் பற்றிய, தலித் மக்களைப் பற்றிய பல்வேறு கட்டுரைகள் உடைய ஒரு தொகுப்பு தான், `சாதி,தலித்துகள்,பெண்கள்' என்கிற இந்தத் தொகுப்பு. நீலம் பதிப்பக வெளியீடாக இந்த நூல் வெளிவந்திருக்கிறது. வாசகர்கள் கட்டாயமாக இதை வாங்கிப் படிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

4. நாதுராம் கோட்சே : உருவான வரலாறும் இந்தியா குறித்த அவனது பார்வையும்  - திரேந்திர கே.ஜா - தமிழில் இ.பா.சிந்தன் - எதிர் வெளியீடு

அடுத்து எனக்கு மிக முக்கியமான நூலாகப்படுவது இ.பா. சிந்தன் மொழிபெயர்ப்பில் வந்திருக்கக்கூடிய `நாதுராம் கோட்சே' என்று சொல்லக்கூடிய நூல். எதிர் வெளியீடு வெளியிட்டிருக்கிறது. ஒற்றை மொழி, ஒற்றைக் கலாசாரம், ஒற்றைப் பண்பாடு என்று பன்மைத்துவத்தை ஒழிக்கக்கூடிய ஒரு போக்கு என்பது இன்றைக்கு சனாதனவாதிகளால் முன்வைக்கப்படுகிறது.

நாதுராம் கோட்சே புத்தகம்
நாதுராம் கோட்சே புத்தகம்

மிகக் குறிப்பாக ஒரு மதவாத அரசியலோடு அதை இணைத்துக் கொண்டு போகிறார்கள். இதற்கு ஒரு தொடக்கப் புள்ளியாக அமைவது என்னவென்றால், சமூகத்தில் இணக்கம் வேண்டும், தீண்டாமை ஒழிய வேண்டும், என்றெல்லாம் புத்தகங்கள் எழுதி, எங்கெல்லாம் மத வாதத்திற்கு கேடு விளைவிக்கிற, ஒரு பங்கம் விளைவிக்கிற சூழல் இருக்கிறதோ, அந்த இடத்திற்கெல்லாம் சென்று மதவாதிகளைச் சாடி, இந்து - இஸ்லாம் மக்களுக்கு இடையிலே ஒற்றுமை ஏற்படுத்தக்கூடிய யாத்திரைகள் எல்லாம் மேற்கொண்ட, ஒரு அற்புதமான மனிதர் காந்தி.

அவரைக் கொன்றதன் மூலமாக இந்த மிக மோசமான வரலாறு என்பது, முதல் அத்தியாயமாகத் தொடங்கி அது விரிகிறது. இன்று இருக்கும் அரசியல் சூழல், மாபெரும் தலைவர்கள் ஜனநாயக ரீதியாகப் பன்மைத்தன்மை நிரம்பிய ஒரு நாடாக இந்திய ஒன்றியம் மிளிர வேண்டும் என்று நினைத்த, அந்த கனவுகள் எல்லாம், சிதைந்து விடும் என்கின்ற ஒரு பதைபதைப்பை நமக்கு ஏற்படுத்துகிறது.

Gandhi
Gandhi

இந்தத் தருணத்திலே அதற்கு ஒரு தொடக்கப் புள்ளியாக இருந்த நாதுராம் கோட்சே காந்தியைக் கொன்ற நாசக்காரச் செயல் பற்றிய, அவனுடைய சித்தாந்தங்களைப் பற்றிய ஒரு பதிவாக இந்த நூல் இருக்கிறது. இந்த நூலை என்னுடைய பரிந்துரையாகச் சொல்ல விரும்புகிறேன்.

5. அலைமிகு கணங்கள் - ஆதவன் தீட்சண்யா - நீலம் பதிப்பகம்

ஆதவன் தீட்சண்யா, இப்போது எழுதிக் கொண்டிருக்கக்கூடிய எழுத்தாளர்களிலேயே ஒரு தனித்துவம் கொண்டவர். அவருடைய கதைகள் கட்டுரைகளைப் போலவே இருக்கின்றன. கட்டுரைகள் கதைகளைப் போலவே இருக்கின்றன. அப்படியாக இரண்டு வடிவங்களையும் புதிது புதிதாக முயற்சிகளை மேற்கொண்டு; ஒன்றிணைத்து எழுதக்கூடியவர்.

அலைமிகு கணங்கள் - ஆதவன் தீட்சண்யா
அலைமிகு கணங்கள் - ஆதவன் தீட்சண்யா

மிக முக்கியமாக எள்ளல், பகடி பரிகாசம் என்பதற்கெல்லாம் ஒரு நேர்மறையான பொருளைக் கொண்டு வந்து, அதை சமூக அரசியலோடு மக்களுடைய உரிமையோடு பிணைத்துப் பேசக்கூடிய ஒரு எழுத்தாளராக இன்றைக்கு விளங்கிக் கொண்டிருக்கிறார். அவருடைய கட்டுரை தொகுப்பான `அலைமிகு கணங்கள்' என்கிற தொகுப்பு நீலம் பதிப்பக வெளியீடாக வெளிவந்திருக்கிறது. இந்த நூலைக் கட்டாயமாக வாசகர்கள் வாங்கிப் படிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இந்த ஐந்து நூல்கள் என்னுடைய பரிந்துரைகள் இதைத் தாண்டி உங்களுடைய சொந்த தேர்வின் அடிப்படையிலும் நூல்களை நீங்கள் வாங்கி அவசியமாகப் படிக்க வேண்டும்.

Book fair 2023
Book fair 2023

நூல்களைப் படிப்பது தான் மனதை செழுமையாக்கக்கூடிய ஒன்று. சிந்தனைகளை விரிவாக்கக் கூடிய ஒன்று. அனுபவங்களைக் கொண்டு வரக்கூடிய ஒன்று. இந்த உலகத்தை உண்மையாகப் புரிந்து கொள்வதற்கு உதவி செய்யக்கூடிய ஒரு செயல்பாடு. எனவே அதை நோக்கி வாசகர்கள் நகர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.