Published:Updated:

சென்னைப் புத்தகக் காட்சி 2023: 5 புத்தகங்களும் திருக்குறள்தான்; ஏன் தெரியுமா? - கரு.பழனியப்பன்

கரு பழனியப்பன்

இயக்குனர் கரு.பழனியப்பன் பரிந்துரைத்த 5 புத்தகங்கள்

சென்னைப் புத்தகக் காட்சி 2023: 5 புத்தகங்களும் திருக்குறள்தான்; ஏன் தெரியுமா? - கரு.பழனியப்பன்

இயக்குனர் கரு.பழனியப்பன் பரிந்துரைத்த 5 புத்தகங்கள்

Published:Updated:
கரு பழனியப்பன்

1. உரைநடையில் திருக்குறள் - வ.சுப.மாணிக்கனார்

பொதுவாக நான் புத்தக பரிந்துரைகள் செய்வதில் இருந்து சற்று விலகியே இருப்பேன். ஏனென்றால் எனது வாசிப்பு குறைவானது என்ற எண்ணம் எனக்கு உண்டு.மேலும் நான் பயின்ற மதுரை அமெரிக்கன் கல்லூரி எனக்கு கற்றுத் தந்தது. ஆங்கில வகுப்பில் அவர்கள் பாடத்திட்டத்தில் கிளாசிக் என்று எடுக்கின்ற நூல் எங்களுக்கு அதே உணர்வை தர வேண்டும் என்கிற அவசியமில்லை என்பதே ! ஆகையால் ஒவ்வொரு புத்தகங்கமும் ஒவ்வொரு உணர்வைத் தரவல்லது. இருந்தும் என்னிடம் பரிந்துரை என்று கேட்கும்போது எந்தத் தயக்கமுமின்றி நான் பரிந்துரை செய்ய வேண்டுமேன்றால் திருக்குறளைத் தான் பரிந்துரை செய்வேன்.

உரைநடையில் திருக்குறள் - வா.சு.ப. மாணிக்கனார்
உரைநடையில் திருக்குறள் - வா.சு.ப. மாணிக்கனார்

முதலில் நான் பரிந்துரைக்கும் திருக்குறள் நூல் "உரைநடையில் திருக்குறள்” வ.சுப.மாணிக்கனார் எழுதியது. இந்த உரைநூலின் சிறப்பு என்னவென்றால் இது திருக்குறளைப் போல ஏழு சொல்லில் எழுதப்பட்ட உரைநடை நூல். வ.சுப.மாணிக்கனார் மதுரை காமராசர் பல்கலைக்கழத்தில் துணைவேந்தராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

2. திருக்குறள் - தமிழ் மரபியல் - ஞா. தேவநேயப்பாவாணர்

திருக்குறளில் இதற்கு முன்பு வந்த எல்லா உரைகளிலும் தேர்ந்த, சிறந்த உரைகளைத் தேர்ந்தெடுத்து அதில் எது இலக்கணப்படி சரி, தவறு என நிறுவிய நூலாக இதனைச் சொல்லலாம். இதை பாடப்புத்தகம் போல, ஆய்வு கட்டுரை போல எழுதி இருப்பார் ஞா.தேவநேயப்பாவாணர். உதாரணமாக ஒரு குறள் உண்டு,

திருக்குறள் - தமிழ் மரபியல் - ஞா. தேவநேயப்பாவாணர்
திருக்குறள் - தமிழ் மரபியல் - ஞா. தேவநேயப்பாவாணர்

"நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்

கெடுநீரார் காமக் கலன்"

நெடுநீர் என்றால் ஒரு காரியத்தை நீட்டித்து செய்கிறவன், மறவி என்றால் மறதி, மடி என்றால் சோம்பல், துயில் என்றால் நீண்ட தூக்கம். அடுத்து "நான்கும் கெடுநீரார் காமக் கலன்" இதற்கு பொருளாக மேலே குறிப்பிட்ட நான்கையும் ஒருவன் செய்தால் கெட்டுப்போகக் கூடிய ஒரு கப்பலில் ஏறுகிறான் என ஞா.தேவநேயப்பாவாணர் குறிப்பிடுகிறார்.

3. திருக்குறள் தெளிவுரை - நாவலர் இரா.நெடுஞ்செழியன்

அடுத்து நான் பரிந்துரை செய்வது நாவலர் நெடுஞ்செழியன் அவர்களின் திருக்குறள் உரை. நாவலர் அவர்களின் எழுத்து நாட்டுடைமை ஆக்கப்பட்டதால் அனைத்து பதிப்பகங்களும் அவரது உரையைப் புத்தகமாகப் பதிப்பிக்கின்றன.

திருக்குறள் தெளிவுரை - நாவலர் இரா.நெடுஞ்செழியன்
திருக்குறள் தெளிவுரை - நாவலர் இரா.நெடுஞ்செழியன்

குறிப்பாக நன்செய் பதிப்பகம் மலிவு விலை பதிப்பாக இதனை 50 ரூபாய்க்கு விற்பனை செய்கிறது. இதில் குறிப்பாக 15 பக்கத்திற்கு நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் ஒரு முன்னுரையை திருக்குறளைப் பற்றி எழுதியிருப்பார், மிக சிறப்பான உரையது.

4. திருக்குறள் - வ. உ. சி உரை

அடுத்து செக்கிலுத்த செம்மல் வ.உ.சி. அவர்களின் உரை . இவர் எழுதிய இவ்வுரைகளைப் பேராசிரியர் வீ.அரசு அவர்கள் தொகுத்துள்ளார். அது மட்டுமல்லாமல் 1330 குறள்களில் இவர் கடவுள் வாழ்த்து உட்பட பல அதிகாரங்களை விளக்கி 1300 குறள்களை மட்டுமே வள்ளுவர் எழுதியிருப்பார்.

திருக்குறள்  - வ. உ. சி உரை
திருக்குறள் - வ. உ. சி உரை

கடவுள் வாழ்த்து என்பன எல்லாம் பிற்பாடு வந்த இடைச்செருகல் என குறிப்பிடுகிறார். அறத்தை வழியுறுத்துகிற வள்ளுவர் நிச்சயம் கடவுள் வாழ்த்தை முதல் அதிகாரமாக வைத்திருக்க மாட்டார் என்று விளக்குகிறார்.

5. வள்ளுவ வளம் - ஆய்வு நூல் - 5 பாகங்கள் - புலவர் மு. படிக்கராமு

இன்னும் நாம் திருக்குறளை விரிவாகப் படிக்க வேண்டும் என்று விரும்பினால், புலவர் மு. படிக்கராமு எழுதிய வள்ளுவ வளம் என்னும் ஆய்வு நூலைப் படிக்கலாம். படிக்கராமு தமிழ் ஆசிரியராக பணியாற்றியவர் இவர் இந்நூலினை 5 பாகங்களாக எழுதினார். அதில் ஒவ்வொரு குறளுக்கும் விளக்கம் என்று மட்டுமில்லாமல் அந்த குறள் பிற சங்க இலக்கிய நூல்களில் எவ்வாறு வந்துள்ளது மற்றும் மேலைநாட்டு அறிஞர்கள், அவர்கள் எழுத்துக்களில் எவ்வாறு குறளைப் பயன்படுத்தியுள்ளனர் என்பதைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

வள்ளுவ வளம் - ஆய்வு நூல் - 5 பாகங்கள்
வள்ளுவ வளம் - ஆய்வு நூல் - 5 பாகங்கள்

ஆக திருக்குறள் என்பது இலக்கியம் மட்டுமல்ல அது ஒரு அறநூல். அறிவுரை கூறக்கூடிய  ஒரு நூல். இத்தனை ஆண்டுகள் கடந்தும் நம்மில் நிற்கிறது என்றால் அதனை வள்ளுவர் அழகாகச் சொன்னதனால் தான். ஆகவே அனைவரும் திருக்குறளை வாசிக்க வேண்டும். அதனை நீங்கள் முழுமையாக வாசித்து விட்டால் என்னைப்போல நீங்களும் பரிந்துரை கேட்டால் 5 நூல்களையும் திருக்குறளையே குறிப்பிடுவீர்கள்