Published:Updated:

சென்னைப் புத்தகக் காட்சி 2023: "மௌனியின் ஒரு கதை = 10 மணிரத்னம் படத்தின் பிரமாண்டம்"- லிங்குசாமி

இயக்குநர் லிங்குசாமி

இயக்குநர் லிங்குசாமி பரிந்துரை செய்த 5 புத்தகங்கள்

சென்னைப் புத்தகக் காட்சி 2023: "மௌனியின் ஒரு கதை = 10 மணிரத்னம் படத்தின் பிரமாண்டம்"- லிங்குசாமி

இயக்குநர் லிங்குசாமி பரிந்துரை செய்த 5 புத்தகங்கள்

Published:Updated:
இயக்குநர் லிங்குசாமி

சென்னையிலே 46வது புத்தகத் திருவிழா தொடங்கி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதையொட்டி தினமும் ஒரு ஆளுமைகளின் புத்தகப் பரிந்துரைகளை நாம் பார்த்து கொண்டிருக்கிறோம். இன்று இயக்குநர் லிங்குசாமி புத்தகப் பரிந்துரைகள் இதோ...

1. தமிழாற்றுப்படை - கவிஞர் வைரமுத்து - டிஸ்கவரி புக் பேலஸ் 

முதலில் நான் பரிந்துரை செய்வது கவிஞர் வைரமுத்து அவர்களின் தமிழாற்றுப்படை புத்தகமாகும். இந்நூல், வைரமுத்து அவர்கள் பல மேடைகளில் பல தலைவர்களைப் பற்றிப் பேசியவற்றின் எழுத்து வடிவம். அவரது ஆயிரம் பாடல்களுக்கு இந்த ஒரு புத்தகம் சரிசமமானது என்று சொல்வேன்.

தமிழாற்றுப்படை - கவிஞர் வைரமுத்து
தமிழாற்றுப்படை - கவிஞர் வைரமுத்து

இதில் நாம் அறியாத பல முக்கியமான தகவல்களை சொல்லியிருக்கிறார். ஆகப்பெரும் தலைவர்களின் வாழ்க்கைச் சுருக்கத்தை இந்நூலின் வழியே பெறலாம். நான் பயணத்தில் மீண்டும் மீண்டும் கேட்கக்  கூடிய ஒரு சொற்பொழிவாக இது இருக்கிறது. எனவே நண்பர்கள் இதைக் கேட்கவும் படிக்கவும் வேண்டும் என பரிந்துரை செய்கிறேன்.

2. உலக சரித்திரம் - ஜவஹர்லால் நேரு - அலைகள் வெளியீட்டகம்

நேரு தனது மகளான இந்திராகாந்திக்கு எழுதிய கடிதங்களாக இப்புத்தகம் தொகுக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு கடிதங்களும் மிகச் சுருக்கமாக இருந்தாலும் அதன் பயன் மிகப் பெரிதாகவுள்ளது.

உலக சரித்திரம் - ஜவஹர்லால் நேரு
உலக சரித்திரம் - ஜவஹர்லால் நேரு

ஆக இந்நூலினை நாம் படிக்கும்போது வரலாற்றையும், இந்த இந்திய தேசத்தின் நிலப்பரப்பையும் விரிவாகப் புரிந்துக்கொள்ள முடியும். வாசகர்கள் இந்நூலினை படித்துப் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

3. மிர்தாதின் புத்தகம் - மிகேய்ல் நேமி - தமிழில் கவிஞர் புவியரசு - கண்ணதாசன் பதிப்பகம்

மிர்தாதின் புத்தகத்தை புவியரசு ஐயா மொழிபெயர்த்துள்ளார். இந்தப் புத்தகத்தை பற்றி ஓஷோ கூறுகையில் "இந்த ராஸ்கல் மட்டும் இந்த புத்தகத்தை எழுதவில்லையென்றால் நான் எழுதி இருப்பேன்" என்றுப் பொறாமைப்படும் அளவிற்கு புகழ்ந்திருப்பார்.

மிர்தாதின் புத்தகம் - மிகேய்ல் நேமி
மிர்தாதின் புத்தகம் - மிகேய்ல் நேமி

இந்த நூலில் இருக்கும் ஒரு வாசகம் என் வாழ்நாளெல்லாம் என்னைப் பின்தொடர்ந்து கொண்டு இருக்கும் அது என்னவென்றால் "எந்த வாளாலும் காயப்படுத்த முடியாத சுதந்திரக் காற்றை போல் செயல்படுங்கள்" ஆக இப்படியான பெரிய  நம்பிக்கைகள் உண்டாக்கக்கூடிய எழுத்துக்களை தாங்கி இருக்கும் இந்த புத்தகத்தை அனைவருக்கும் பரிந்துரை செய்கிறேன்.

4. மௌனியின் சிறுகதைகள் - கி.அ.சச்சிதானந்தம் - சாகித்திய அகாதமி பதிப்பகம்

மௌனியின் ஒவ்வொரு சிறுகதையும் ஒரு வெளிச்சம். ஒரு குட்டி சூரியன் என சொல்லலாம். மௌனியின் கதைகள் பற்றி ஜெயகாந்தன் அவர்கள் சொல்லும் பொது, அவர் மனம் சங்கடப்படும் போதெல்லாம், வெறுமையாக உணரும் போதெல்லாம், மௌனியின் சிறுகதையைப் படித்ததாகவும், அதன் மூலம் ஒரு பெரும் சக்தியையும், எழுதுவதற்கான ஒரு உற்சாகத்தையும் பெற்றதாகவும் கூறியிருப்பார்.

மௌனியின் சிறுகதைகள் - கி.அ.சச்சிதானந்தம்
மௌனியின் சிறுகதைகள் - கி.அ.சச்சிதானந்தம்

ஜெயகாந்தன் எனும் பெரும் ஆளுமைக்கே உற்சாகத்தைத்  தரக்கூடிய எழுத்தாக மௌனியின் எழுத்து இருந்துள்ளது. நான் மௌனியின் ஒரு சிறுகதை, மணிரத்தினத்தின் 10  திரைப்படங்களின் காட்சியின் பிரமாண்டத்தை கண் முன் நிறுத்தும் என்பேன். ஆகையால் வாசகர்கள் அனைவரும் அவரது எழுத்துக்களை வாசிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

5. மீன்கள் உறங்கும் குளம் - பிருந்தா சாரதி - டிஸ்கவரி புக் பேலஸ்  

தூரத்தில் இருக்கும் அனைத்தையும் ரசித்துவிட்டு அருகில் இருப்பதை நாம் தவற விட்டுவிடுவோம். அப்படியான எழுத்துக்களாக நான் பிருந்தா சாரதியின் எழுத்தைக் கூறுவேன்.

மீன்கள் உறங்கும் குளம் - பிருந்தா சாரதி
மீன்கள் உறங்கும் குளம் - பிருந்தா சாரதி

சமீபத்தில் எனக்குப் பிடித்தமான எழுத்துக்களாக பிருந்தா சாரதியின் இந்த கவிதைத் தொகுப்பு உள்ளது. அதில் சில கவிதைகளை உங்களுக்குச் சொல்கிறேன்...

" உடைந்த நிலா 

 முழு நிலவாகிறது

 சலனம் அடங்கும் குளம் "

" பலூன் ஊதும் 

  சிறுமியின் உதடுகளில் 

  இரண்டு குட்டி பலூன்கள் " 

இம்மாதிரியான அருமையான ஹைக்கூக்கள் அடங்கிய தொகுப்பாக இந்நூல் உள்ளது. ஆகவே  இதனை வாசிக்க பரிந்துரை செய்கிறேன்.

இயக்குனர் லிங்குசாமி
இயக்குனர் லிங்குசாமி

புத்தகம் என்ன செய்யுமென்றால் ஒரு அறைக்குள் இருந்து கொண்டே உலகின் வெவ்வேறு  பகுதிகளுக்குச் செல்லும் ஒரு அனுபவத்தை தரும். புத்தக வாசிப்பு அனுபவம் என்பது ஒரு பயணத்தைப் போல. ஆகவே நண்பர்கள் அனைவரும் புத்தகங்களை வாங்கிப் படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.