Published:Updated:

சென்னைப் புத்தகக் காட்சி 2023: ஆளுமைகள் சொல்லும் 5 புத்தகங்கள் - எழுத்தாளர் இமையம்

எழுத்தாளர் இமையம்

எழுத்தாளர் இமையம் பரிந்துரைக்கும் 5 புத்தகங்கள்.

சென்னைப் புத்தகக் காட்சி 2023: ஆளுமைகள் சொல்லும் 5 புத்தகங்கள் - எழுத்தாளர் இமையம்

எழுத்தாளர் இமையம் பரிந்துரைக்கும் 5 புத்தகங்கள்.

Published:Updated:
எழுத்தாளர் இமையம்

46 வது சென்னை புத்தகக் கண்காட்சி ஜனவரி 6 தொடங்கி தினசரி காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்றுக் கொண்டிருகிறது. அதையொட்டி தினமும் ஒரு ஆளுமைகளின் புத்தகப் பரிந்துரைகளை நாம் பார்த்து கொண்டிருக்கிறோம். இன்று “செல்லாத பணம்” எனும் நாவலுக்கு சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழின் மிக முக்கியமான எழுத்தாளரான இமையம் அவர்கள் பரிந்துரை செய்த 5 புத்தகங்கள் இதோ…

Chennai Book Fair
Chennai Book Fair

1.பழைய குருடி - த.ராஜன் - எதிர் வெளியீடு

சர்வதேச புத்தகக் கண்காட்சியில் வாசகர்களுக்கு முதலாவதாக நான் பரிந்துரைக்கும் நூல், த.ராஜன் எழுதிய `பழைய குருடி' என்னும் சிறுகதைத் தொகுப்பு. இச்சிறுகதை தொகுப்பில் 5 கதைகள் உள்ளன.

அவற்றில் பாலூட்டிகள், வின்சென்டின் காதல் மிக மிக முக்கியமான கதைகளாக நான் பார்க்கிறேன்.

பழைய குருடி - த.ராஜன்
பழைய குருடி - த.ராஜன்

ராஜனுக்கு சிறுகதை எழுத்து வடிவம் சிறப்பாக வந்துள்ளது. அவருடைய எழுத்திலும்,மொழியிலும் எந்த குழப்பமும் இல்லை. கதை சொல்வதில் கைத்தேர்ந்தவராக உள்ளார். ஆகவே நண்பர்கள் இந்த நூலினை வாங்கி படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

2.தமிழுக்கு அப்பால் - க.பூர்ணசந்திரன் - உயிர்மை பதிப்பகம்

தமிழுக்கு அப்பால், மொழிபெயர்ப்புக்காக சாகித்திய அகாதமி விருது பெற்ற க.பூர்ணசந்திரன் எழுதியது. இவர் எழுபதுக்கும் மேற்பட்ட புத்தகங்களைத் தமிழில் மொழிப்பெயர்த்துள்ளார். தமிழில் மிக முக்கியமான அறிஞர். பல்வேறு உலகநாடுகளில் உள்ள நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், கவிதை தொகுப்புகள் என 49 புத்தகங்கள் பற்றிய சிறந்த அறிமுகத்தை இந்நூலில் தந்துள்ளார்.

தமிழுக்கு அப்பால் - க.பூர்ணசந்திரன்
தமிழுக்கு அப்பால் - க.பூர்ணசந்திரன்

இது புதிய வாசகர்களும் புரிந்து கொள்ளும் எளிய நடையில் அமைந்துள்ளது. இந்நூலினை இலக்கிய வாசகர்கள் மட்டுமல்லாமல் எழுத்தாளர்களும் படிக்க வேண்டிய முக்கியமான நூலாகப் பரிந்துரை செய்கிறேன்.

3.மந்திரவாதியின் சீடன் - இவால்ட் ஃப்ளிஸர் - காலச்சுவடு

சமீபத்தில் நாள் வாசித்தப் புத்தகங்களில் என்னை உலுக்கிய, நிம்மதி இழக்கச் செய்த,அமைதி இழக்கச் செய்த ஒரு புத்தகம் இது. குறிப்பாக இந்தியாவை சுற்றிப் பார்க்க வரும் வெளிநாட்டவர்களுக்கு, திபெத்தை சுற்றி இருக்கும் பனியும், இந்தியாவின் கிழக்குப் பகுதியில் இருக்கும் மாநிலங்களும், அங்கே பின்பற்றப்படும் புத்த மதமும், என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது? புத்த மதத்தைப் பின்பற்றக்கூடியவர்கள் யார்? யார்? அவர்கள் என்ன விதமாக இருக்கிறார்கள்?

மந்திரவாதியின் சீடன் - இவால்ட் ஃப்ளிஸர்
மந்திரவாதியின் சீடன் - இவால்ட் ஃப்ளிஸர்

அங்கே இருக்கும் வாழ்க்கைச் சூழல் என்ன? அங்கே வரக்கூடிய சுற்றுலா பயணிகளின் மனநிலை என்ன? எல்லாவற்றிற்கும் மேலாக வாழ்க்கை என்றால் என்ன? வாழ்க்கைக்கும் தத்துவத்திற்குமான உறவு என்ன? வாழ்க்கைக்கும் ஆன்மிகத்திற்குமான உறவு என்ன? ஆன்மிகத்தினால் ஏற்படும் நன்மைகள் என்ன? ஆன்மிகம் இந்தியாவின் அடையாளமா? புத்த மதம் இந்தியாவின் அடையாளமா? இந்து மதம் இந்தியாவின் அடையாளமா? இல்லை மனிதம் தான் இந்தியாவின் அடையாளமா? என்று நூற்றுக்கணக்கான கேள்விகளை எழுப்புகிறது இவால்ட் ஃப்ளிஸர் எழுதிய இந்நூல். இதை நீங்கள் வாசித்தால் ஒரு போதும் புத்தகத்தை மூடி வைக்க முடியாது, படித்து முடித்த பிறகும் கூட உங்கள் மனதில் இருந்து கொண்டே இருக்கும். “மந்திரவாதியின் சீடன்” எனும் இந்நூல்.

4. எல்லோரும் சமம்தானே டீச்சர் - மருத்துவர் சிவபாலன் இளங்கோவன்

இது ஒரு உளவியல் சார்ந்த புத்தகம் இந்நூலினை மருத்துவர் சிவபாலன் இளங்கோவன் எழுதியுள்ளார். இது தனிமனித உளவியல் மற்றும் சமூக உளவியல் பற்றி பேசுகிறது. குறிப்பாக கேரளாவில் சென்ற ஆண்டு இரு மாணவிகளை நரபலியிட்டுக் கொன்று தின்றவர்களின் உளவியல் பற்றியும், இடஒதுக்கீடு பற்றிய புரிதல் இல்லாமல் , சமூக நீதி என்றால் என்ன? என்று அறியாமல் , ரிசர்வேஷனை ஒழித்து விட்டால் எல்லாம் நடந்தது விடும் என்று, சமூக சமநிலையின்மை புரியாது உளறுபவர்களின் மனநிலையையும்..

எல்லோரும் சமம்தானே டீச்சர் - மருத்துவர் சிவபாலன் இளங்கோவன்
எல்லோரும் சமம்தானே டீச்சர் - மருத்துவர் சிவபாலன் இளங்கோவன்

இன்றைய நவீன சமூகத்திலும் பெண்களுக்கு கொடுமைகள் செய்பவர்களின் மனநிலை பற்றியும், மேலும் வேகமாக வண்டி ஒட்டி சென்று கூட்டம் சேர்ப்பவர்களின் மனநிலையையும், சமூக ஊடகத்தில் சீரழியும் இளைஞர்களின் உளவியலையும் பேசுகிறது. இது நம்மை நாமே புரிந்து கொள்ளவும், மக்களைப் புரிந்து கொள்ளவும் உதவுகிற ஒரு அறிவியல் புத்தகம். இதை அனைவரும் வாசிக்க பரிந்துரை செய்கிறேன்.

5.அல் கொஸாமா -கனகராஜ் பாலசுப்பிரமணியம் -

இது ஸீரோ டிகிரி பதிப்பகம் நடத்திய புத்தக போட்டியில் முதல் பரிசு வென்ற நாவல். இதனை கனகராஜ் பாலசுப்பிரமணியம் எழுதியுள்ளார். இவர் தமிழில் இருந்து கன்னட மொழிக்கும், கன்னட மொழியில் இருந்து தமிழுக்கும் மொழிபெயர்ப்பு செய்யக்கூடியவர். இப்புத்தகத்தில் சவூதி அரேபியாவிற்கு வேலை செய்யச் செல்லும் தமிழ்நாட்டுத் தொழிலாளர்களைப் பற்றிப் பேசியிருக்கிறார்.

அல் கொஸாமா -கனகராஜ் பாலசுப்பிரமணியம்
அல் கொஸாமா -கனகராஜ் பாலசுப்பிரமணியம்

மேலும் சவூதி நாட்டின் காலசாரம் என்ன? மதச்சமூகத்தின் பழக்கவழக்கங்கள் என்ன? அங்கு செல்லும் பணியாளர்கள் சந்திக்கும் நெருக்கடிகள் என்ன? என்று விரிவாகப்  பேசியுள்ளார்.இப்புத்தகத்தின் மூலம் சவூதிக்குச் செல்லும் தமிழர்களின் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆக இந்த ஐந்து புத்தகங்களை இந்த ஆண்டு நான் பரிந்துரை செய்கிறேன்.