
ஆப்கனிலிருந்து அகதிகள் முகாமுக்குள் புதிதாக வரும் அப்பாஸின் அலறல் நிலைமையின் தீவிரத்தை உணர்த்துகிறது. நீதன் என்ற இளைஞனின் வாழ்க்கை பெருந்துயரம்.
போர்ச்சூழல், உள்நாட்டுக் கலவரம், இன அழிப்பு... மனிதர்கள் அகதிகளாக இடம்பெயர்வதற்கு என்னென்னவோ காரணங்கள். பரம்பரை பரம்பரையாக வாழ்ந்தவர்களை அவர்களின் மண், `இனியும் இங்கே நீங்கள் வாழ முடியாது’ எனக் கைவிடும் துயரம் கொடூரமானது. ஏதாவது ஒரு தேசத்தில் எஞ்சிய வாழ்க்கையைக் கடத்திவிட படகுகளிலும் சிறு கப்பல்களிலும் தோணிகளிலும் இன்றைக்கும் நாடு கடக்கிறார்கள் மனிதர்கள். அடைக்கலம் கொடுக்கும் நாடு, `விசா’ கொடுத்தால்தான் அவர்களால் அங்கே வாழ முடியும். இல்லையென்றால், `அகதிகள் முகாம்’ எனப்படும் சிறை. அப்படிப்பட்ட ஒரு முகாமையும், அதற்குள் தள்ளப்பட்டவர்களின் வலி நிறைந்த வாழ்வையும் இந்த நூலில் பதிவுசெய்திருக்கிறார் எழுத்தாளர் தெய்வீகன்.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் அகதிகள் முகாமில் பணிபுரியும் ஓர் அதிகாரியின் பார்வையில் விரிகிறது நூல். `ரூடோ’ என்கிற பிரிட்டிஷ் தனியார் அமைப்பு, ஆஸ்திரேலியக் குடிவரவு அமைச்சகத்தின் அனுமதியின் பேரில் முகாமை நிர்வகிக்கிறது. அதன் முக்கியமான வேலை, எந்த அகதியும் சாகாமல் பார்த்துக்கொள்வது; உயரமான கம்பிவேலியைத் தாண்டி எந்த அகதியும் தப்பிச் சென்றுவிடாமல் பார்த்துக்கொள்வது.

ஆப்கனிலிருந்து அகதிகள் முகாமுக்குள் புதிதாக வரும் அப்பாஸின் அலறல் நிலைமையின் தீவிரத்தை உணர்த்துகிறது. நீதன் என்ற இளைஞனின் வாழ்க்கை பெருந்துயரம். சாப்பாட்டுக்கடை நடத்திவருபவனுக்கு அனீஸா என்ற பெண் காவலருடன் காதல். ஒரு குழந்தையும் பிறக்கிறது. இலங்கையில் தற்கொலைப்படைத் தாக்குதலில் ஈடுபடுவதற்குத் திட்டம் போட்டான் என்ற சந்தேகத்தின்பேரில் இந்தோனேசிய புலனாய்வுத்துறை அவனைக் கடத்திப்போகிறது. அங்கிருந்து தப்பிக்கும் நீதன், ஓர் அகதிப் படகில் ஏறி, மெல்போர்ன் முகாமுக்கு வந்து சேருகிறான்.
படகில் போகிறது ஓர் அகதிக் கும்பல். நள்ளிரவு. நடுக்கடல். படகு தீப்பிடித்துக்கொள்கிறது. விபத்தில் ஒரு குழந்தை இறந்துபோகிறது. போராளி ராதா; அகதிகள் முகாமிலிருந்து விடுதலையாகிப்போகும் குயிலனும், அவன் மனைவியும்; தனிமையும் இறுக்கமும் தாளாமல் வேலி தாண்டித் தப்பித்து ஓட முயலும் அகுனா என புத்தகம் முழுக்க வருகின்றன அழுத்தமான கதாபாத்திரங்கள். அகதிகளுக்குப் பெயர்கள் இருந்தாலும், குடிவரவு அமைச்சகம் அவர்களுக்குக் கொடுப்பது எண்கள். சிறைக் கைதிகளைப்போல அவர்கள் எண்களாலேயே அழைக்கப்படுகிறார்கள்.
உலகம் முழுக்க அகதிகளின் எண்ணிக்கை அதிகமாகிவரும் இன்றைய சூழலில், அவர்கள் குறித்து நாம் ஒவ்வொருவரும் அக்கறைகொள்ள வேண்டிய முக்கியமான தருணம் இது. இந்த நூல், அதை அழுத்தமாக முன்வைக்கிறது.
நாடற்றவர்களின் கடவுச்சீட்டு - கரை ஒதுங்கிய கடல்
ஆசிரியர்: தெய்வீகன்
வெளியீடு: விகடன் பிரசுரம்,
757, அண்ணா சாலை,
சென்னை - 600 002.
விலை: ரூ.200
பக்கங்கள்: 208
மொபைல்: 80560 46940 / 95000 68144.