
துறவுநிலைக்குச் சென்றுவிட்ட தம் மகனின் கல்லூரிக் கால ஆடைகளைச் சேமித்து வைத்திருக்கும் ஒரு தாயின் தவிப்பை அழுத்தமாகப் பதிவு செய்கிறது துவராடை.
சிறுகதை என்பது தந்தத்தில் பொம்மையைக் கூர்மையாகச் செதுக்குவது போன்றது என்கிறார் சுஜாதா. அந்த அளவுக்கு அது நுட்பமான வேலை. தி.ஜானகிராமன் பார்வையில் சிறுகதை என்பது, ‘சிறிது நேரத்தில் வெடித்துவிடப்போகிற ஒரு தெறிப்பும் உறுத்தாத கலைத்தன்மையும் வாசிப்பவர்களை ஆட்கொள்ள வேண்டும்.' தென்மாவட்டத்தின் எளிய குடிகளின் வாழ்க்கைக்குள்ளிருந்து உருவாகும் சிங்காரவடிவேலின் எழுத்துகள் இந்த வரையறைக்குள் அடங்குகின்றன.
மண்வாசனை, பூடகமான சொல்லாடல்கள், மொழிக்கட்டென இறுக்கமில்லாமல் நேரடிக்காட்சியாக விரிந்து வாசகனைக் களத்திலொரு பாத்திரமாக மாற்றுவது சிங்காரவடிவேலின் யுக்தியாக இருக்கிறது. இந்நூலின் முதல் சிறுகதை அரசுப்பள்ளிக்கும் தனியார் பள்ளிக்கும் இருக்கும் நுண்ணிய அரசியலை முன்னாள் மாணவர்கள் வைக்கும் ஒரு பேனர் வழியாகப் பேசுகிறது.
துறவுநிலைக்குச் சென்றுவிட்ட தம் மகனின் கல்லூரிக் கால ஆடைகளைச் சேமித்து வைத்திருக்கும் ஒரு தாயின் தவிப்பை அழுத்தமாகப் பதிவு செய்கிறது துவராடை. அந்தத் தாய் இறந்துபோன பிறகு அவள் மிகவும் நேசித்த பீரோவைத் திறந்து பார்க்கும் அந்தத் துறவி மகனுக்கு ஏற்படுகிற வெறுமை நம்மையும் கவ்வுகிறது.
அப்பாவின் அன்பு கிடைக்காமல் மறுதலிக்கும் ஒரு மகளின் மனதைக் காட்சியாக்குகிறது ‘அன்பிற்காகத்தான் அப்பா' சிறுகதை. கதைக்குள் உலவும் மகள் தன் அப்பாவுக்குக் கடிதம் வழி எழுப்பும் கேள்விகளுக்கு எல்லா அப்பாக்களும் பதில் தேடவேண்டும். இந்த நூலின் முத்தாய்ப்பான சிறுகதையென கண்ணீர் மரத்தைச் சொல்லலாம். வறுமையை வாய்ப்பாகக் கொண்டு மரம் வெட்டும் கும்பல் விரிக்கும் வலையில் வீழ்கிற ஒரு தந்தை, அப்பாவின் புதைகுழியில் ஒரு மரத்தை நட்டு இறுதியஞ்சலி செலுத்தும் மகள்... இருவருக்குமிடையில் இருக்கும் நேசத்தைத் தேடியெடுத்த வார்த்தைகளால் ஈரமாக்குகிறார் சிங்காரவடிவேல். சமகால வரலாற்றின் இழையில் பயணிக்கிறது இந்தக்கதை.
ஊர்ச்சண்டையில் கையை இழந்த கணவனைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு காலொடிந்த ஆட்டை ஊர்மொழி சொல்லித் திட்டும் சீதையை எதிர்கொள்ள முடியாமல் மறுகித் தவிக்கும் ராசு, இந்நூல் உருவாக்கிய பாத்திரங்களில் முதன்மையான சம்சாரி.
மொத்தம் 11 சிறுகதைகள். அன்றாடம் நம்மைக் கடந்து செல்கிற மனிதர்களின் நாம் பார்த்திராத உணர்வுகளைக் கதைகளாக்கியிருக்கிறார் சிங்காரவடிவேல். வாசிக்க வேண்டிய நூல்.

மாதவம் - குன்றக்குடி சிங்காரவடிவேல்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்,
41 பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்,
அம்பத்தூர், சென்னை-600050
தொடர்புக்கு: 044-26251968
பக்கங்கள்: 86
விலை: ரூ.120