கட்டுரைகள்
Published:Updated:

படிப்பறை

வாதி...
பிரீமியம் ஸ்டோரி
News
வாதி...

கண்ணப்பனின் பார்வையில் கதை நகர்ந்தாலும், நாவலின் நாயகன் நடராஜன்தான். உயிரைப் பணயம் வைத்து ஓடுகிற சரக்கு ரயிலில் லாகவமாகத் தாவி ஏறி, கிடைக்கிற தானிய மூட்டைகளைக் கீழே தள்ளும் சாகச நாயகன்

`கடவுள் ஒவ்வொருவரின் வாழ்க்கையை எழுதும்போதும் ஒவ்வொரு வகையான மையினால் எழுதிவிடுகிறார். போராளிகளின் வாழ்க்கையை ரத்தத்தினாலும், ஏழைகளின் வாழ்க்கையை வியர்வையினாலும், ஜமீன்தாரர்களின் வாழ்க்கையைத் தங்கத்தினாலும், சில பெண்களின் வாழ்க்கையைக் கண்ணீராலும் எழுதிவிடுகிறார்’ என இந்த நாவலில் வரும் வரிகள் மிக முக்கியமானவை. இவை எழுத்தில் காட்சிகளாக விரியும்போது நமக்கும் ரத்த வாடை அடிக்கிறது. கூலித் தொழிலாளிகளின் உடலில் பெருகும் வியர்வையின் நசநசப்பு புரிகிறது. அக்கிரம ஜமீன்தாரை ஓங்கிக் கன்னத்தில் அறைய ஆத்திரம் எழுகிறது. வன்முறைகளுக்குள்ளாகும் பெண்களின் கண்ணீர் நமக்கும் தொற்றிக்கொள்கிறது.

போராளிகளுக்கும், அவர்களை ஒடுக்க அதிகார வர்க்கத்தால் ஏவப்படும் காவல்துறைக்குமிடையிலான ஒற்றைச்சரடு கதை. அதை சுவாரஸ்யம் குறையாமல், அழுத்தமான கதாபாத்திரங்கள் வழியே காட்சிப்படுத்தியிருக்கிறார் எழுத்தாளர் நாராயணி கண்ணகி. பல ஆண்டுகளுக்கு முன்பு மூன்று போலீஸ்காரர்களை வெடிவைத்துக் கொன்ற ராமலிங்கம் என்பவரைத் தேடுகிறது காவல்துறை. அந்த விசாரணை வளையத்துக்குள் வருகிறார் பெரியவர் கண்ணப்பன். அவருக்கும் விசாரணை அதிகாரியான டி.எஸ்.பி-க்கும் இடையிலான உரையாடல் கண்ணப்பனின் இளம்பருவ நினைவுகளைக் கிளறிவிட, கதை நம் கண்முன் நகர்கிறது.

கண்ணப்பனின் பார்வையில் கதை நகர்ந்தாலும், நாவலின் நாயகன் நடராஜன்தான். உயிரைப் பணயம் வைத்து ஓடுகிற சரக்கு ரயிலில் லாகவமாகத் தாவி ஏறி, கிடைக்கிற தானிய மூட்டைகளைக் கீழே தள்ளும் சாகச நாயகன். கோதுமையோ, அரிசியோ, பருப்போ ரயிலில் கிடைப்பதை இல்லாதவர்களுக்குப் பகிர்ந்துகொடுக்கும் நல்ல மனசுக்காரன். கண்ணப்பனின் ஆதர்சம் நடராஜன். இன்னொரு பக்கம் ஊரில் அழகான அத்தனை பெண்களையும் வளைத்துப்போடும் ஜமீன்தார்... ஊரில் பருவமடையும் பெண்களை ஜமீன்தாரின் படுக்கைக்கு அனுப்பிவைத்து சீர்வரிசை பெறும் சம்பிரதாயம் என நம்மைத் திகைக்கவைக்கும் சம்பவங்கள்.

எதிர்காலம் குறித்த நினைப்பே எழாத அன்றாடங்காய்ச்சிகள்; அவர்களைச் சுரண்டி, கொழுத்து வாழும் பணக்கார வர்க்கம்; நியாயத்துக்காகப் போராடி என்கவுன்ட்டரில் உயிரிழக்கும் போராளிகள், அப்பாவிகள் என, அதிகம் பேசப்படாத ஒரு வரலாற்றின் கறுப்புப் பக்கங்களைப் புரட்டிப்போடுகிறார் நாராயணி கண்ணகி. அந்த வரலாற்றை அறிந்துகொள்ள `வாதி...’ நாவலை அவசியம் வாசிக்க வேண்டும்.

வாதி...

ஆசிரியர்: நாராயணி கண்ணகி

வெளியீடு: எழுத்து Ezhuthu Prachuram (An imprint of Zero Degree Publishing) No.55(7), R Block,6th Avenue, Anna Nagar, Chennai - 600 040.

பக்கங்கள்: 268

விலை: ரூ.320

கைப்பேசி: 89250 61999

படிப்பறை